'க. இராசதுரை...', எனது ஐந்தாம் வகுப்பு வரைக்கான வகுப்பாசிரியர். சற்று உயரம் குறைந்த தோற்றம்... வெண்மை நிற ஜிப்பா, வேஷ்டி, தோளில் துண்டு... கையில் குடை... என பார்த்தவுடன் பளிச்சென்று இருப்பார்.
அருகில் பார்க்கும் போது, நன்கு மழிக்கப்பட்ட தேஜஸான முகம்... வெண்மையான, நெருங்கிய, சிறிய பல் வரிசை... எப்போதும் புன் சிரிப்பை உதிர்க்கும் உதடுகள்... சுத்தமாக, நறுக்கப்பட்ட நகங்களுடன் கூடிய விரல்கள்... என, சுத்தம் என்பதன் வடிவமாகவே இருப்பார்.
அவருடைய தமிழ் உச்சரிப்பும்... கையெழுத்தும்... முத்து முத்தாக இருக்கும். எனது அட்டை போடப்பட்ட நோட்டுகளுக்கும், புத்தகங்களுக்கும் அவர்தான் பெயர், பாடங்கள் மற்றும் எது வகுப்பு என்பதையெல்லாம், முத்து முத்தான தமிழ் எழுத்துக்களில், அழகாக எழுதித் தருவார். அவர், எவரையும் ஒரு முறையெனும் கடிந்து கொண்டதை, நான் பார்த்ததில்லை.
இவ்வளவு அன்பு நிறைந்த ஆசிரியரை நான் பிரிய நேர்ந்த போது, அழுது கொண்டே அவர் முன் நின்றதும், அவர் என்னைத் தட்டிக் கொடுத்து விட்டு, நான் நீட்டிய 'ஆட்டோக்ராஃபில்' ,'அன்பு கொண்ட நெஞ்சம்... ஆசை வேண்டும் கொஞ்சம்... இன்பம் ஒன்றே தஞ்சம்.. அது, ஈடில்லா வாழ்வின் சொந்தம்... !', என்று எழுதிக் கொடுத்தது இன்றும் எனது மனதில் பதிந்திருக்கிறது.
11 வயதில் அவரைப் பிரிந்து, பின்னர்... எனது 34 ஆவது வயதில்தான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் எனது திருமணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். எங்களது குடும்பத்தை நன்கு அறிந்தவராக இருந்த அவர்... எனது திருமணத்திற்காக எழுதியிருந்த 'வாழ்த்துக் கடிதத்தில்'... எனது பொருப்புகளையும், கடமைகளையும் நன்கு உணர்ந்தவாக... அவர் பாராட்டி எழுதியிருந்தது, எனது கண்களில் கண்ணீரை வர வரவழைத்தது.என்னையும், அவரையும்... காலமும், தேசமும் பிரித்திருக்கலாம்...ஆனால், அவர் என் மிது வைத்திருந்த அன்பையும், அக்கரையையும்... அவை பிரித்து விடவில்லை என்பதை... அவரின் முத்து முத்தான கடித வரிகள், உணர்த்திவிட்டன.
அன்பான ஆசிரியருக்கு... பணிவான மாணவனின் வணக்கங்களும், நன்றியும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment