மோக்ஷம்... என்பது, 'பிறவிப் பிணி' என்ற நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதுதான்.
'பரப் பிரம்ம சொரூபம்'... 'சத்து-சித்து-ஆனந்தம்' என்ற 'ஆத்ம சொரூபத்தை' ஏற்றுக் கொள்வதன் நோக்கமே.. 'ஜீவனின் வாழ்க்கைக்கு' ஆதரமாக இருப்பதற்காகத்தான்..
ஜீவன்... எந்த சொரூபத்திலிருந்து தனது வாழ்விற்கான ஆதாரத்தை ஏற்றுக் கொள்கிறதோ... அந்த வாழ்வை பூரணமாக்கி... மீண்டும் அந்த ஆதாரமான 'ஆத்ம சொரூபத்திலேயே' மூழ்கிக் கலந்து விடுவதற்குப் பெயர்தான்... மோக்ஷம் என்ற முக்தி.
ஆனால், ஜீவனின் வாழ்வு அவ்வாறு இருந்து விடுவதில்லை. தான் சுமந்து கொண்டு வந்திருக்கும் 'கர்ம வினைகளின்' விளைவுகளான பாப புண்ணியங்களுக்கு' ஏற்ப, தான் மேற்கொள்ளும் அல்லது தான் எதிர் கொள்ளும் செயல்களால், தான் தேடிக் கொள்ளும் கர்ம வினைகளின் சுமை' கூடி... அவற்றை அனுபவிக்க மீண்டும்... மீண்டும்... பிறந்து, 'பிறவிப் பிணி' என்ற நீங்க முடியாத சுழலுலுக்குள் சிக்கிக் கொள்கிறது.
அந்த சிக்கலுக்குள், சிக்கிக் கொண்டு மீள முடியாது தவிக்கும் ஜீவன் எப்போது, இந்த உண்மையை உணர்ந்து கொள்கிறதோ... அப்போதுதான், அந்த ஜீவன், தனது 'மோக்ஷத்தின் பாதையில்' பயணிக்க ஆரம்பிக்கிறது.
இந்தப் பயணம்... தான், இதுவரை வாழ்ந்த 'உலகியல் பயணத்திற்கு', நேரெதிரான பயணம். உலக வாழ்வில் இருக்கும் பந்தங்களிலிருந்தும்... அந்த பந்தங்களில் வைத்திருக்கும் பற்றுக்களிலிருந்தும்... முற்றிலுமாக விடுபடுவதற்கான பயணம்.
இந்தப் பயணத்தில் பயணிக்கும் ஜீவனின் பயணம் எவ்வாறு இருக்கும்... ? என்பதை 'ஜோதிடக் கலை' துல்லியமாக விளக்கியிருக்கிறது.
* ஜீவன் முதலில் உலகியல் வாழ்வு நிலையானதல்ல... என்பதை உணர்ந்து கொள்ளும் ஞானத்தைப் பெற வேண்டும். அதற்கு ஜீவனின் லக்னம் மறைவு ஸ்தானங்களில் வலுப்பெற்று அமைந்திருக்கும்.
* அந்த ஞானத்தை அடைவதற்கான பாதையில்... தான் இந்த வாழ்வில் மேற்கொள்ளும் மற்றும் எதிர் கொள்ளும் செயல்களிலான 'பற்றுகளிலிருந்து ' விடுபட்டு... கடமைகளை பற்றற்று, முழுமையான, பூரணமாக, செயல் புரியும் யுக்தியக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு பூர்வ புண்ணியாதிபதியான 5 ஆம் பாவாதிபதியும்... தர்ம ஸ்தானாதிபதியான 9 ஆம் பாவாதிபதியும் மறைவு ஸ்தானங்களில் வலுப்பெற்று அமைந்திருக்கும்.
* மேற்கண்ட நெடும் பயணத்திற்கு, ஜீவன் கடந்து போக வேண்டிய பாதை பக்தியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதற்கு ஜீவனின், ஜீவனம் மற்றும் கர்ம பாவமான 10 ஆம் பாவாதிபதியும், மறைவு ஸ்தானங்களில் வலிமையுடன் அமைந்து, தர்மம் என்ற 9 ஆம் பாவத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.
* ஜீவனின் குடும்ப பாவமான 2 ஆம் பாவமும்... சுகபாவமான 4 ஆம் பாவமும்... களத்திர பாவமான 7 ஆம் பாவமும் வலிமை குன்றி... அந்த பாவாதிபதிபதிகள் மறைவு ஸ்தானங்களில் அமைந்து, லக்னாதிபதியுடன் சம்பந்தம் பெற்றிருக்கும்.
* ஆத்மகாரகனான 'சூரிய பகவானுக்கும்'... மனோகாரகரான சந்திர பகவானுக்கும்... புத்திக் காரகனான 'புத பகவானுக்கும்'... வலிம பெற்ற 'ஞானக் காரகரான 'குரு பகவானின்' அருள் பார்வை கிடைத்திருக்கும்.
* சுகக்காரகரான 'சுக்கிர பகவானும்'... போகக் காரகனான 'ராகு பகவானும்'... தங்களது வலிமையை இழந்திருப்பார்கள்.
* ஆற்றல் காரகரான 'செவ்வாய் பகவான்' வலிமை பெற்று ஜீவன கர்ம பாவத்துடன் தொடர்பைப் பெற்றிருப்பார்.
* ஆயுள் காரகரான 'சனி பகவான்' தனது ஆட்சி மற்றும் உச்ச வீடுகளில் அமைந்து, பலம் பெற்றிருப்பார்.
* மேற்கண்ட அமைவுகள் வலுத்து... மோட்சக் காரகரான 'கேது பகவானோ'... ஞானக்காரகனான 'குரு பகவானோ'... துறவிக் காரகரான 'சனி பகவானோ'... 12 ஆம் பாவத்தில் அமர்ந்திருந்தால்... 'மோக்ஷம்' என்ற வாக்கு பலிதமாகும்.
எப்போது, ஒரு ஜீவனின் வாழ்வு 'தர்மத்துடன் இணைந்த கர்மமாக மலர்கிறதோ'/// அப்போதுதான் மேற்கண்ட அமைவுகளை அந்த ஜீவனின் ஜனன ஜாதகத்தில் நம்மால் கவனிக்க முடியும்.
அதற்கு, ஜோதிடக் கலையை அணுகும், அணுகு முறையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அந்த அணுகுமுறை, 'ஒரு ஜீவனின் வாழ்வு, நிலையற்ற உலக வாழ்வை சார்ந்தது மட்டுமல்ல... அந்த உலக வாழ்வை பூரணமாக்கி, மீண்டும் நிலையான 'இறைவனின் திருவடி' என்ற மோக்ஷ வாழ்வையும் சார்ந்தது...' என்ற முறையிலாக இருக்க வேண்டும்.
இதற்கான பாதையில் 'ஜோதிடர்கள்' மட்டுமல்ல... 'ஜாதகர்களும்' பயணிக்க வேண்டும். அப்போதுதான், 'ஜோதிடக் கலை' என்ற 'புரதான ரிஷிகளின்' வழிகாட்டுதல்... அதன் இலக்கான பூரணத்துவத்தை நோக்கிப் பயணிக்கும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment