Monday, January 4, 2021

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'சாலமன் அண்ணா'


ஜன்னலில் இருந்து தூரத்தில் தெரியும், சர்ச் கோபுரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சர்ச்சிலில்தான், சாலமன் அண்ணனுக்கு அன்று திருமணம். எங்களையெல்லாம் விட்டு விட்டு, அம்மாவும், அப்பாவும் மட்டும் போயிருந்தார்கள். அப்படியானால், சாலமன் அண்ணா எங்களுடன் பிறந்தவர் இல்லையா... ?

எங்களது கடையில், தையல் வேலை செய்து கொண்டிருந்தவர்தான் சாலமன் அண்ணா. வேலைகளுக்கு இடையில், அம்மாவுக்கு வீட்டு வேலைகள் அனைத்திலும் மிகவும் ஒத்துழைப்பாக இருப்பார். கீழே இருந்து குறுகிய படிகளில் அம்மா, ஒரு பெரிய பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வருவதை, எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால், சாலமன் அண்ணா, அம்மா கீழே படிகளில் ஏறும் சப்தத்தைக் கேட்டவுடனேயே, என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியே போட்டு விட்டு, பாத்திரத்தை வாங்க படிகளில் இறங்கி ஓடுவார்.

குடும்பத்தில் நிலவும் அனைத்து சம்பாஷனைகளிலும் அவரது பங்கு இருக்கும். அப்பாவிடம் மட்டும், மிகப் பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வார். அப்பாவுக்கு முன்னால், எப்போதும் நின்று கொண்டே பேசும் அண்ணா, அவரது வார்த்தைகளை முழுமையாக கேட்ட பின், அவரின் கருத்துக்களை முன் வைப்பார். அந்தக் கருத்துக்களுக்கு அப்பா கொடுத்த மரியாதை இப்போதும் எனது மனதில் நிழலாடுகிறது.

எங்களது வீட்டின் முதல் சுப நிகழ்வாக நடந்தது எங்களது மூத்த சகோதரியின் திருமணம், அந்தத் திருமணத்தில் அவரின் அர்ப்பணிப்பும்... முதல் மருகனாக வந்த எங்கள் மாமாவிடம், அவர் கொண்டிருந்த அன்பும்... அவரிடம்,  அக்காவைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும், எடுத்துக் கூறிய பண்பு மிக்க வார்த்தைகள், எங்கள் மாமாவை குடும்பத்தில் ஒருவராக, மூத்தவராக, நாங்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக் கொள்வதாக அமைந்தது.

ஒரு முறை, விடுமுறையின் போது, அக்காவின் வீட்டிற்கு கடைக் குட்டிகளான எங்கள் மூவரையும் அழைத்துச் சென்றார். மலைகளைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் பேருந்துப் பயணம் எங்களுக்கு மிகவும் புதியது. பயணத்தில் மகிழ்ச்சி இருந்தாலும், தலைச் சுற்றி, குமட்டி வாயில் இருந்து வெளியேறியவற்றை, அவர் முன்னதாகவே கொண்டு வந்திருந்த, பிளாஸ்டிக் பைகளில், கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் சேகரித்ததும், பேருந்து நிற்கும் இடங்களில் எல்லாம், எங்களை இறங்க வைத்து, சுத்தம் செய்து, பாலில்லா தேநீரையும், ரொட்டிகளையும் வாங்கிக் கொடுத்து அழைத்துச் சென்றது, இன்றும் என் மனதில் நிழலாடுகிறது.

இன்று, திருமணம் முடித்து, சாலமன் அண்ணா, அண்ணியாருடன் வீட்டுக்கு வந்தார். எங்கள் அனைவருடனும் கண்ணீருடன் விடைபெற்று, அருகில் இருக்கும் எங்கள் மாமாவின் வீட்டில் குடியேறினார். எங்கள் மாமாவும் தையல் வேலை செய்பவர். அவரின் கடையும், வீடும் இணைந்தே இருந்தது.மாமாவுடன் இணைந்து தனது வாழ்வைத் துவக்கினார், சாலமன் அண்ணா.ஆனால், தினமும் அவரின் வருகையும், அவரது அர்ப்பணிப்பும் எங்கள் குடும்பத்தைச் சுற்றியே இருந்தது.

அவர் சென்ற பின், அந்தக் காலியான தையல் மிஷினின் நாற்காலி வெறிச்சோடியே இருந்தது. அதற்குப் பின், அப்பா கடையில் தையல் தொழிலையே நிறுத்தி விட்டார். ஆர்டர்கள் அனைத்தையும், சாலமன் அண்ணனிடம் அனுப்பி விடுவார்.

காலங்கள் கடந்தன. 12 வயதில் ஊரை விட்டு வந்த நான்.. 11 வருடங்கள் கழித்து, ஊருக்குத் திரும்பிச் சென்ற போது, சாலமன் அண்ணாவைப் பார்க்கச் சென்றேன். என்னை அவர் எதிர் பார்க்கவில்லையாதலால்... உடனே அடையாளம் கண்டு கொள்ளவும் இல்லை. நான் சிரித்த படியே, சாலமன் அண்ணாவைக் கட்டிக் கொண்டு என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது... வார்த்தைகளின்றி... கண்களில் கண்ணீர் பொங்க... என்னை அணைத்துக் கொண்டு உச்சி முகந்தார். அண்ணியாரையும் , குழந்தைகளையும் பார்த்து விட்டு அவர்களுக்காக நான் வாங்கிச் சென்ற ஆடைகளையும், பரிசுப் பொருள்களையும் கொடுத்து விட்டு, தேநீர் அருந்தி விட்டு, கிளம்பும் போது, வாசலில் குடும்பத்துடன் நின்று கையசைத்து என்னை வழி அனுப்பியது... இன்றும் எனது மனதில் நிழலாடுகிறது.

எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி, அன்பு செலுத்தும் நல்ல உள்ளங்களை எனது வாழ்வு முழுவதுமாக, இறைவன் எனக்கு அளித்திருக்கிறான். அவையெல்லாம் உடன் பிறந்த உறவுகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான், காலம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

அன்பிற்கும் உண்டோ... அடைக்கும் தாழ்... !

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...