பிரபஞ்ச நாயகரான 'சூரிய பகவானைச்' சுற்றி வரும் 'புத பகவான், சுக்கிர பகவான், செவ்வாய் பகவான், குரு பகவான், சனி பகவான்', இவர்களுக்கிடையே 'உயிரினங்களைத் தாங்கியிருக்கும் ஒரே கோளான 'பூமித் தாயாரைச்' சுற்றி வரும் உப கோளான 'சந்திர பகவான்'... உட்பட்ட 7 கிரகங்களின் ஈர்ப்புகள்... பூமிக்கும், பூமியில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் தாக்கங்களை, வேதத்தின் அங்கமான 'ஜோதிடக் கலை' விவரிக்கிறது.
இந்த 'ஜோதிடக் கலை', கணக்கியலையும், வானியல் சாஸ்த்திரத்தையும் உள்ளடக்கிய கலையாக இருந்ததினால், நமது புரதான ரிஷிகள் தங்களது 'அந்தர் ஞானம்' என்ற 'உள்ளுணர்வின்' மூலமாக, முழுமையான விதிகள் அடங்கிய கலை வடிவமாகவும், துல்லியமான கணக்கீடுகள் கொண்ட 'நாட் குறிப்பு' என்ற 'பஞ்சாங்கமாகவும்' வகுத்தளித்தார்கள்.
ரிஷிகளின் காலம் 'கிருத யுகமாக' இருந்ததனால், ஜீவர்களின் வாழ்வு தர்மத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. ஜீவர்கள் அனைவரும் தர்மத்தின் வழியேயே வாழ்க்கை நடத்தினர். தர்மத்தின் வழியேயான வாழ்வு... ஜீவர்களை மீண்டும் பிறப்பற்ற நிலைக்குக் கொண்டு சென்றது. ஆதலால், ஜோதிடக் கலையின்' பங்கு, இறைவனை சென்றடையும் பாதையை மட்டும் காட்டுவதாக இருந்தது. அதற்கு 7 கிரகங்களின் வழியேயான கணிப்புகள் மட்டுமே போதுமானதாக இருந்தது.
தொடர்ந்த 'திரேதா யுகம்... துவாபர யுகம்... கலியுகங்களில்...' தர்மத்தின் வழியேயான வாழ்வில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. முழுமையான தர்மவாழ்வு, நான்கில் மூன்று பங்காகவும், பின் இரண்டு பங்காகவும் இறுதியில் கலியுகத்தில், தர்மத்தின் வழியேயான வாழ்வு நான்கில் ஒரே பங்காகவும் மாறுதல் அடைந்திருக்கிறது.
அதற்குக் காரணம், ஜீவர்கள் தர்மம் என்ற 'இறைவழிப் பாதையிலிருந்து' விலகி... அதர்மத்திற்கு வழி வகுக்கும் 'இரட்டைச் சூழல்கள்' நிறைந்த, 'உலக வாழ்வில் மூழ்கிதினால்தான். இன்பத்தை துய்க்கும் பாதையிலேயே சென்றதால்... தர்மத்தை விட்டு விலகினர். அதனால், 'பாப - புண்ணியங்கள்' என்ற'கர்ம வினைகளின்' கணக்கிற்கு 'அச்சாரம்' இட்டனர்.
'கர்ம வினைகளின் சுழற்சிகளினால்', மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கும் 'பிறவிப் பிணியில்' சிக்கித் தவித்து... இறைவனை அடையும் பாதையிலிருந்து வெகு தூரம் விலகினர். கண்களைத் திறந்து, பின் கண்மூடும் வரையிலான காலம் முழுவதும். நம்மைத் தொடரும் நிழல் போலவே... பிறவிகள் தோறும் தொடரும் 'கர்ம வினைகளும்' ஜீவனை, 'நிழல் போல' தொடர ஆரம்பித்தது.
இவ்வாறு நிழல் போலத் தொடரும் 'கர்ம வினைகளைத்தான்'... ஜோதிடக் கலையில்,'நிழல் கிரகங்களான'... 'ராகு பகவானும் - கேது பகவானும்.. ஏனைய 7 கிரகங்களுடன் இணைந்து... ஜீவனின் ஒவ்வொரு பிறவியிலும் பிரதிபலிக்கிறார்கள். 'கர்ம வினைகளின் சுமையை'... ராகு பகவானும், அதிலிருந்து 'விடுபட்டு இறைவனை அடையும் மோக்ஷத்தின்' பாதையை... கேது பகவானும்... சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆதலால்தான், 'ராகு - கேது பகாவான்களை'... 'நிழல் கிரகங்கள்' என்று வருணித்து... ஏனைய 7 கிரகங்களுடன் இணைத்து... 'நவக்கிரகங்களாக்கி'... அவைகளின் அமைவுகளுக்கு ஏற்ப, ஜீவனை 'உலக வாழ்விலிருந்து' மீட்டு... என்றும் உறையும் 'இறைவாழ்வில்' இணைப்பதுதான்... ஜோதிடக் கலையின் நோக்கமாக இருக்கிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment