மேகங்கள் வானில், ஒரே ஒழுங்கில் போவதில்லை
கரைபுரளும் அலைகள் யாவும், ஒரே ஒழுங்கில் வருவதில்லை
வீசும் காற்றும், காய்க்கும் கனலும்
ஓடும் நதியும், பொழியும் மழையும்
எப்போதும் ஓர் ஒழுங்கில் இருப்பதில்லை - ஆனாலும்
இயற்கையின் அழகென்றும் குறைவதில்லை !
தலை வாரிக் கொள்ளாத மலர்களும்
முகப் பூச்சு இல்லாத மலர்களும்
ஆடைகள் மாற்றாத உயிரினங்களும்
மெத்தை விரிக்கும் சருகுகளின் பாதைகளும்
எப்போதும் ஓர் ஒழுங்கில் இருப்பதில்லை - ஆனாலும்
இயற்கையின் அழகென்றும் குறைவதில்ல !
முயன்று, முயன்று ஒழுங்கு படுத்தும் நம்வாழ்வு
சீட்டுக் கட்டுக் கோபுரம் போல
ஒரே கணத்தில் களையும் போது
சீராக இருப்பதும், சீரற்று இருப்பதும்
வாழ்வியலின் இரு நிலைகள் என்ற பேருண்மை புலப்படும்
ஒழுங்காக இருப்பதும், ஒழுங்கு குலைந்து இருப்பதும்
அழகியலின் இரு வடிவம் என்ற அனுபவமும் கை கூடும்.
ஆம்,
எப்போதும் ஓர் ஒழுங்கில் இருப்பதில்லை - ஆனாலும்
இயற்கையின் அழகென்றும் குறைவதில்லை
ஸாய்ராம்
!

No comments:
Post a Comment