Monday, January 4, 2021

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'அழகி'

                                                                                                                                                                                                                                                                                     

அழகி... அதுதான், அவரது உண்மைப்  பெயர். ஆனால், அப்போதெல்லாம்... அவர் 'அழவி' என்றுதான் அழைக்கப்பட்டார். 

பின் கொசுவம் வைத்த சேலை... கைகளில் வெள்ளிக் காப்புகள்... தொங்கும் காதுகளில் லோலாக்குகள்...வாரிச் சுற்றி முடிக்கப்பட்ட கொண்டை முடி... வெற்றிலைச் சாற்றின் காரை பற்றிய உறுதியான பற்கள்... மூக்குத்தி... அறுபது வயதிற்கு மேலான அனுபவங்களை வெளிப்படுத்தும் முகச் சுருக்கங்கள்... நெற்றி நிறைந்த விபூதி... இதுதான், நான் பார்த்த 'அழவி'.

எங்களது ஊரின் ஒரே மருத்துவச்சி... அழவிதான். என் வரையிலான என் குடும்பத்து 12 பிரசவங்களுக்கும், மருத்துவச்சி. அனைத்துமே சுகப் பிரசவங்கள்தான். பிரசவம் மட்டுமல்ல... தொடரும் குழந்தை வளர்ப்பிலும் அவரின் பங்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. 

எப்போதும் சுறு சுறுப்புடன் இயங்கும், அழவியின் குரல் மட்டும்தான்... கர, கரப்பானதாக இருக்கும். அது, என்னைப் போன்ற அன்றைய சிறுவர்களுக்கு அவரிடம் ஒரு பயத்தையே ஏற்படுத்தும். அழவி வந்தாலே, அவர், சங்கில்         ஊற்றிக் கொடுக்கப் போகும் மருந்துகளை நினைத்தும்... சுழுக்கு நீவி விடும் அழுத்தங்களை நினைத்தும்... குழந்தைகளான எங்களுக்கெல்லாம், ஓடி ஒளியத்தான் தோன்றும்.

ஆனால், அவரது வருகை, எப்போதும் வீட்டில் அம்மாவுக்கு மிக மிக உதவிகரமாக இருக்கும். அம்மாவின் வேலைகள் அனைத்தையுமே, இழுத்துப் போட்டுக் கொண்டு, செய்து முடிப்பார். அவ்வளவு வேலைகளையும் தனித்தே செய்யும் அம்மாவுக்கு, அழவியின் வருகை எப்போதும், பூரிப்பாக இருக்கும். 

வெகு நாட்களுக்குப் பின்னர்தான், அவரது பெயர்... 'அழகி' என்றே எனக்குத் தெரிய வந்தது, ஆனால், அது நான் ஊரை விட்டு வெளியேறப் போகும் காலமாக அமைந்தது. அதற்குப் பின்னால், எப்போதும் நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனால், அவரின் நினைவுகள் எப்போதும் எனது மனதுக்குள் பொதிந்தே இருக்கிறது.

எனது மகன் பிறக்கப் போகும் நாளன்றைய முதல் நாள் இரவில், மனைவி மருத்துவமனையில் இருக்கும் போது, குழந்தை பிறந்துவிட்டது, என்ற சேதி வரும் வரை, விழித்துக் கொண்டிருந்த போதும்... மகளின் பிறப்பின் போது, அது அறுவை சிகிச்சையாக இருக்கப் போகிறது என்று மருத்துவர் முடிவு செய்த போதும்... எனது மனதில், நிழலாடியவர்...அந்த அழகிய 'அழகிதான்'

We Miss You 'Azhahi'mma'... !

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...