Monday, January 11, 2021

'சொல்லின் செல்வன்'


 சொற்கள்... விலை மதிக்க முடியாதவை. இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை.

'சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனில்லாச் சொல்'

... என்று, சொற்களின் மகத்துவத்தைப் போற்றியிருப்பார்.

'ஹநுமந்தப் பிரபுவின்' வாயில் இருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு சொல்லும், அர்த்தங்கள் பொதிந்ததாகவும்... அவசியமானதாகவும்... 'பகவான் ஸ்ரீ இராமருடைய' அம்புகள் போல... குறி தவறாததாகவும் இருக்கின்றன.

அசோகவனத்தில், 'சீதாதேவித் தாயார்', அரக்கிகளின் கட்டுப் பாட்டில், சொல்லவண்ணா துயரில் மூழ்கித் தத்தளித்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்.கொடுங்கோலனான 'இராவணன்' ஒவ்வொரு நாளும் தாயாரிடம் வந்து, தாயாரின் மனதை மாற்ற எண்ணற்ற சூழ்ச்சி வார்த்தைகளைப் பேசி, அவரை மேலும் சோகத்துள்ளாக்கிக் கொண்டிருக்கிறான்.

இந்தத் துன்பத்திற்கெல்லாம், ஒரு முடிவு கட்டி விடலாம்... என்ற எண்ணத்துடன், தாயார் தன்னையே மாய்த்துக் கொள்ள எத்தனிக்கிறார். இந்த சூழலில்தான், ஹநுமந்தப் பிரபு, தாயாரைத் தேடியபடி, அசோக வனத்திற்குள் நுழைந்து... அவரமர்ந்திருக்கும் சிம்சுபா மரத்தின் மீதிருந்து, அவர் படும் அவஸ்தைகள் அனைத்தையும் பார்த்து கண்ணீர் உகுத்தபடி... தாயாரை சந்திக்கத் தக்கத் தருணத்தை நோக்கியபடிஅமர்ந்திருக்கிறார்.

தாயாரின் உச்ச கட்டச் சோதனையின் விளிம்பில்... இதுதான் தக்கத் தருணம் என்பதை உணர்ந்து, மிகச் சிறியதான தோற்றத்திற்குள் தன்னை சுருக்கிக் கொண்ட ஹநுமந்தப் பிரபு சிந்திக்க ஆரம்பித்தார்....

~ வானரராக இருப்பதால், தன்னைக் கண்டு, தாயார் பயந்து விடக் கூடும்...

~ அரக்கனான இராவணன், பல ரூபங்களை எடுக்கக் கூடிய மாயாவியாதலால், தன்னையும் அவனாக நினைக்க்கக் கூடும்..

~ ஆகவே, தான் பகவான் ஸ்ரீ இராம பிரானாரால் அனுப்பப் பட்ட தூதுவன் என்பதை முதலில் தாயாருக்கு உணர்த்த வேண்டும். அதற்குப் பின்னர்தான், பகவான் சொல்லியனுப்பிய செய்திகளையும், அவரளித்த சூடாமணியையும், தாயாரிடம் சமர்ப்பிக்க முடியும்...

... என்றெல்லாம் சிந்தித்து, ஒரு முடிவுக்கு வருகிறார்.

முதலில் எண்ணம்... பிறகு சொற்கள்... அதன் பிறகுதான் செயல், என்ற நிலையில் செயல் படும் வீரரான பிரபு, மரக்கிளைகளில் மறைந்த படியே, விழுதுகளைப் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிற தாயார் கேட்கும் படி, 'பகவான் இரமரது சரித்திரத்தைச்' சொல்ல ஆரம்பிக்கிறார்.

மதுரமான குரலில் ஒலிக்கும், தனது நாதரான பகவான் இராமரது சரித்திரத்தைக் கேட்ட தாயாரின் உள்ளம் களிப்பில் ஆழ்ந்தது... கவலைகளை மறந்தது அப்போதுதான்... மிகவும் பணிவாக, தனது உடலை வளைத்துக் குனிந்த படியே, இரு கைகளையும் தலை மிது கூப்பியபடியே, ஹநுமந்தப் பிரபு, தாயாரின் முன்னிலையில் தோன்றினார்.

பின் என்ன... ! தாயாரின் மனக் கவலைகள் அனைத்தும் தீர்ந்து போயின... என்பதைச் சொல்லவும் வேண்டுமோ...!

ஆம்,' சொல்லின் செல்வன்' என்றால், அது 'பகவான் ஆஞ்சநேயப் பிரபுதான்'.

'ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸகஸ்ராம தத்துல்யம் ஸ்ரீ ராம ராம வரானனே... !'

ஸாய்ராம்.

w


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...