நமக்கு உறவுகள் ஏற்படுகின்றன. அவற்றைத் தேர்ந்திடுத்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைப்பதில்லை. என்றாலும், அவற்றோடுதான் இணைந்து வாழ வேண்டும்... என்ற கட்டாயம் மட்டும் இருக்கிறது. இதைத்தான்... பந்தம் என்று சொல்கிறோம்.
அவ்வாறு ஏற்படும் பந்தங்களின் மேல் நாம் வைக்கும் அன்பு... பாசம்... போன்ற உணர்வைத்தான் பற்று என்று சொல்கிறோம்.
பந்தம் ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஏனெனில் அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருப்பதில்லை. ஏனென்றால், அவற்றைத் தீர்மானிப்பது, நமது பூர்வ வாசனைகள் என்ற பூர்வ கர்ம வினைகள்தான்.
ஆனால், அவற்றின் மேல் நாம் வைக்கும் பற்று, என்பது நமது கைகளில் இருக்கிறது. அந்தப் பற்றைக் கையாளும் பக்குவம் வந்து விட்டால்... பந்தங்களினால் வெளிப்படும் இன்ப துன்பங்களையும்... அவற்றின் மீது நமக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளையும்... மிக எளிதாகக் கடந்து விடலாம்.
இந்தப் பக்குவத்தை நாம் ஏனைய அனைத்து உயிரினஙளிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம். பறவைகளில் மிக எளிதாக நாம் பார்க்கும், குருவிகளின் வாழ்வில் இருந்தும் கற்றுக் கொள்ளாலாம்.
குருவிகள் தங்களது முட்டைகளைத் தாம் கட்டிய கூட்டுக்குள்ளேயே பத்திரமாக வைத்துக் காப்பாற்றும். அடைகாக்கும் போதும், ஆண், பெண் என இருபால் குருவிகளும், தமது இரை தேடல்களுக்கிடையே, இடைவிடாது ஒன்று மாற்றி ஒன்றாக பாதுகாக்கும்.
அது போலவே குருவிகள், முட்டையிலிருந்து வெளி வரும் போதும்... அவை வளரும் போதும்.மிகக் கவனமாக அருகிலிருந்து பேணிப் பாதுகாக்கும். அவற்றிற்கான இரைகளை தேடித் தேடிக் கொண்டு வந்து, எதைக் கொடுக்க வேண்டும்... எவ்வளவு கொடுக்க வேண்டும்... எப்போது கொடுக்க வேண்டும்... என்பதை நன்கு உணர்ந்து, அறிந்து செயல்படும்.
குருவிக் குஞ்சுகள், தமது சக்தியைப் பெற்று, தாமாக தமது வாழ்வை மேற்கொள்ளும் வரையில், அருகிலிருந்து பார்த்துக் கொண்ட குருவிகள், அவை, வளர்ந்ததற்குப் பின், அந்தக் குருவிகளை தமது கூட்டத்தில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளும். அதற்குப் பின், தாய், சேய் என்ற எந்தப் பற்றுகளுமின்றி, கூட்டத்தில் ஒன்றாக வாழக் கற்றுக் கொள்ளும்.
இந்த 'பக்குவத்தைத்தான்' குருவிகளின் வாழ்க்கை மட்டுமல்ல... உலகில் வாழும் ஏனைய உயிரினங்கள் அனைத்தும் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன.
இந்தப் பக்குவத்தை நாம் அடைவதற்கு, நாம் இந்த உலக வாழின் மீது வைக்கும் பற்றை நீக்கி... நமது உள் வாழ்வின் மீது அதை வைப்பது ஒன்றே... எளிய வழி.
'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு'
ஸாய்ராம்.

No comments:
Post a Comment