Sunday, June 30, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 3. (ராகு மற்றும் கேது பகவான்களைப் பற்றிய சூட்சுமம்)

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 3 :

ராகு மற்றும் கேது பகவான்களைப் பற்றிய சூட்சுமம் :

ஜோதிடம் வேதத்தின் ஒரு அங்கம். ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பயணம் பற்றிய ரகசியம். அது கிரகங்களின் வாயிலாக இந்த ஜீவனின் ரகசியத்தை... அந்த ஜீவனின் நலம் கருதி... வெளிப்படுத்தும் ஒரு அற்புதக் கலை.

தர்மம் என்பதுதான் வாழ்வின் மூலம். இந்த தர்மத்தின் வழியே நடப்பதுதான் ஜீவ வாழ்வின் நோக்கம். யுகங்கள் நான்கில்... முதல் யுகமான, 'கிருத யுகத்தில்'... தர்மம்... நான்கு கால்களில் இருந்தது. இரண்டாவது யுகமான 'திரேதா யுகத்தில்'... தர்மம்... மூன்று கால்களில் இருந்தது. மூன்றாவது யுகமான 'துவாபர யுகத்தில்'... தர்மம்... இரண்டு கால்களில் இருந்தது. இறுதி யுகமான... 'கலி யுகத்தில்'... தர்மம்... ஒரு காலில் நின்று கொண்டிருக்கிறது.

தர்மமே... வாழ்வு நெறியாக இருக்கும் போது, ஏழு கிரகங்களின் வழியாக ஒரு ஜீவனின் வாழ்வு முறையை அணுகுவது... முறையானதாக இருந்தது.  ஏனெனில், எல்லா ஜீவனின் வாழ்வு முறைகள் ஒரே மாதிரியாகவும்... அவைகளின் நோக்கமும் ஒரே மாதிரியாகவும் இருந்ததால்... ஜோதிடத்தின் பணி... அந்த ஜீவனை... அதனதன் பாதையில் வழிநடத்தி... அதன் மூலமான இறைவனின் திருவடியில் சேர்ப்பது எளிதாக இருந்தது.

அடுத்தடுத்த யுகங்களில்... தர்மத்தின் வழியிலான வாழ்வில்... பயணம் செய்வதில் ஜீவனுக்கு... ஏற்பட்ட மாறுபாடான வாழ்வியலில்... அது மிக ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தது. அதற்குக் காரணம்... அந்த ஜீவனின் வாழ்வியலில் அது 'எதிர்கொண்ட நிகழ்வுகளும்', அதற்கு அந்த ஜீவன் 'வெளிப்படுத்திய' வெளிப்பாடுகளும்தான்.

இந்த நிகழ்வுகளும்... வெளிப்பாடுகளும்... 'கர்மம்' என்ற தொகுப்பில் சேர்ந்து... 'கர்ம வினைகள்' என்ற மூலமாகியது. இந்த கர்ம வினைகளே... ஜீவனின் மறு பிறப்புக்கும் காரணமானது. மறுபிறப்பிலும்... அந்த ஜீவனின் வாழ்வின் பாதை... தனது முந்தைய பிறவியின்... கர்ம வினைகளின் படி நடந்ததும்... அதற்கேற்றவாறே... அந்த ஜீவன் தனது வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியதும்... அந்த ஜீவனின்... அடுத்தடுத்த பிறவிகளுக்கு ஆதாரமானது.

இவ்வாறு தொடர்ந்து, பிறவிகளின் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் ஜீவனை... அந்த சுழற்சியிலிருந்து விடுவிக்க... ஜோதிடத்தின் அமைப்பில்... இந்த 'கர்ம வினைகளையும்'   அதிலிருந்து 'விடுவிக்கும் வழியையும்'...  இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கான வடிவமே... 'ராகு பகவானும்'... 'கேது பகவானும்'.

'ராகு பகவான்'... கர்ம வினைகளின் மூலத்தையும்... 'கேது பகவான்'... அதிலிருந்து விடுபடுவதையும்... உணர்த்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான்... 'ஏழு கிரகங்களும்'... அதன் சுழற்சியை... இடமிருந்து - வலமாகவும், இந்த இரண்டு 'நிழல் கிரகங்கள்' மட்டும்... தமது சுழற்சியை... வலமிருந்து - இடமாகவும் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு கிரகத்தின் ஆதிபத்தியத்தின் மீதும்... இந்த 'பூர்வ வினையின் நிழல்'... ராகு பகவானின் மூலமாக... தனது  ஆளுமையைப் பதிக்கிறது. அதே நேரத்தில் அதற்கு எதிரில்... இந்த 'பூர்வ வினையைக் களையும் யுக்தியின் நிழல்'... கேது பகவானின் மூலமாக... தனது விடுவிப்பையும் அளிக்கிறது.

அதனால்தான்... ராகு பகவானுக்கு... அதிதேவதையாக, 'துர்க்கா தேவியையும்'... கேது பகவானுக்கு... அதிதேவதையாக... விக்னங்களை நீக்கும் 'விக்னேஸவரரையும்' அனுமானித்திருக்கிறார்கள் பூர்வ ரிஷிகள்.

மேலும்... ராகு பகவானின் காரகத்துவத்தை விளக்கும் போது...'போகக் காரகன்' என்றும்... கேது பகவானின் காரகத்துவத்தை விளக்கும் போது... ' மோக்ஷக் காரகன்' என்றும் வருணிக்கிறது... ஜோதிடம்.

ஸாய்ராம்.


Saturday, June 22, 2019

தேரோட்டம்

தேரோட்டம் :

ஆலயங்களைச் சுற்றிலும் அமைந்த நான்கு மாட வீதிகள் வெகு பிரசித்தமானவை. அவை... நான்கு புற கோபுர வாயில்களை... இணைக்கும் பாலங்களாக அமையும். மேலும் இறைவன் தனது திருவுலாவை நடத்தும் அரங்கமாக இருக்கும். பல்லக்கு முதல் திருத்தேர்கள் வரை வலம் வரும் பாதைகளாகவும் அமையும்.

தேரோட்டம் ஒரு ஆலயத்தின் மிக முக்கியமான நிகழ்வு. அந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட தேரில் இறைவன் எழுந்தருளி... நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து... குவிந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் தனது தரிசனத்தை வழங்குவார்.

கருவறையில்... கருவறை விமானத்திற்குக் கீழ் அமர்ந்து... நமக்குக் காட்சி கொடுப்பது போல... மிக உயர்ந்த தேரின் உள் அமர்ந்து... பெரிய சக்கரங்கள் மெதுவாக சுழன்று முன்னேற... பக்தர்கள் தேரின் இருபுறமும் இருந்து வடம் பிடித்து இழுக்க... கொடிகள் அசைந்தாட... மெதுவாக நகர்ந்து வரும் தேரைப் பார்க்கும் போது... அந்த கருவறையே... நம்மை நோக்கி... மூலவரை அழைத்துக் கொண்டு வருவது போல தோன்றும்.

இந்தத் தேரோட்டம் நமக்கு உணர்த்தும் பாடம்... 'ஒரு தேரின் பயணம்... அது புறப்பட்ட இடத்தை மீண்டும் வந்து அடைவதே...!'. அதற்காக, அந்தத் தேர் நான்கு மாட வீதிகளில்... மூன்று இடங்களில் திரும்ப வேண்டி இருக்கிறது. தேரைத் திருப்புவதற்கு... அதன் சக்கரத்தின் அடியில்... 'சன்னக் கட்டை' என்ற ஒரு தடையை வைத்து... தேரைத் திருப்ப வேண்டியிருக்கிறது. அது மிக ஆபத்தான ஒரு பணி... அதற்காக தேர்ந்த ஒரு குழுவே... ஓய்வில்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும். அந்த கடுமையான பணி... தேரை சரியான கட்டங்களில் திருப்பி... அது புறப்பட்ட இடத்தில் கொண்டு வந்து சேர்க்கும்.



அது போலத்தான்... மனித வாழ்வும். மனிதனின் வாழ்வின் பாதையும் தேரோட்டத்தைப் போலத்தான், இறைவனின் அருள் கருணையை மூலமாகக் கொண்டு பிறக்கும் மனிதன்... மீண்டும் அந்த இறைவனின் திருவடியை அடைவதே... வாழ்வின் நோக்கம்.

பால பருவம்... இளமை என்ற பிரம்மச்சரியம்... இல்வாழ்வு என்ற கடமை பருவம்... வானப்பிரஸ்தம் என்ற துறவு பருவம். இந்த நான்கு பருவத்தையும் கடந்தே ஒரு மனிதன்... தன் வாழ்வு நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது.

இந்த நான்கு நிலைகளையும்... தக்கத் தருணங்களில் கடந்து போக... நமது கர்மவினைகளைக் கொண்டு... இறைவன் போடும் முட்டுக் கட்டைகளே... நமது வாழ்வில் முக்கியமான தருணங்களில் ஏற்படும்... திருப்பங்கள். இந்தத் திருப்பங்களே, நம்மை சரியான பாதையில் வழி நடத்தி... மீண்டும் பிறவாமை என்ற இறைவனின் திருவடியில் கொண்டு... நமை சேர்க்கும்.



மனித வாழ்வின் இந்தப் பயணத்தை... மீண்டும், மீண்டும் நமக்கு உணர்த்தும் பாடமே... தேரோட்டம் என்ற இறைவனின் திருவுலா.

ஸாய்ராம்.




Thursday, June 20, 2019

நதி மூலம்... ரிஷி மூலம்

நதி மூலம்... ரிஷி மூலம் :

எப்போதும் உள்ள ஒரு வழக்கமான மொழிதான்... 'நதி மூலமும்... ரிஷி மூலமும்... பார்க்கக் கூடாது...!' என்பது.

நதியின் உற்பத்தி... ஒரு மலைத் தொடரிலிருந்து நிகழ்கிறது.  அதன் பாதை மலையிலிருந்து ஆரம்பித்து... அதன் வழியே இறங்கி... பள்ளத்தாக்குகளில் பயணம் செய்து... காடுகள்... சமவெளிகள் என பயணித்து... உலகத்து ஜீவன்கள் அனைத்திற்கும் உணவாகி... இறுதியில் அதன் இலக்கான சாகரத்தில் சென்று சங்கமமாகிறது.

கடலில் சங்கமிக்கும் இடத்தில்... அந்த நதியின் பேரமைதியையும்... அதற்கு முன் அந்த நதியின் அகண்ட விரிவையும்... அதன் மீதமைந்த எண்ணற்ற பாலங்களையும்... பின்னோக்கிய சமவெளிகளில் அதன் ஆர்ப்பரிப்பையும்... காடுகளில் அதன் சளசளப்பையும்... மலையிலிருந்து இறங்கும் போது ஆர்ப்பரிப்புடனும் இறங்கும் நதியின் மூலம் அந்த மலைத் தொடரின் ஊடே... எவ்வாறு இருக்கும்...?

இந்தத் தேடுதல் நம்மை மலைகளின் ஊடே அழைத்துச் செல்லும். அது மெதுவாக உயர்ந்து... மலைஇடுக்குகளில் நம்மை அழைத்துச் சென்று... பாறைகளின் வழியைக் கடந்து... ஒரு 'சிறிய ஊற்றுக்கு' கொண்டு சேர்க்கும். அந்த ஊற்றிலிருந்து ... ஒரு சிறிய நீர் ஊற்று... தொடர்ந்து... ஊறிக் கொண்டு இருக்கும்.

அந்த நீர் ஊற்றை... பார்க்கும் போது... இந்த சிறிய ஊற்றா... இவ்வளவு நிகழ்வுகளையும்... நிகழ்த்தியிருக்கிறது...? என்ற ஆச்சரியமும்... இது நிஜமா...? என்ற சந்தேகமும் எழும். அதனால்தான்... நதி மூலத்தைப் பார்க்க வேண்டாம்... என்ற வழக்கம் எழுந்தது.



அது போலவேதான்... ஒரு ரிஷியின் மூலமும். நமக்கு முன் இருக்கும் ஒரு ரிஷியின் வாழ்வின் நிலையும்... நதியைப் போலவே... ஒரு சிறிய சூக்ஷுமத்திலிருந்துதான்... ஆரம்பித்திருக்கும்.

அது அவரின் பிறப்பின் ரகசியமாக இருக்கலாம். வளரும் பிராயத்தில் நிகழ்ந்த... ஒரு நிகழ்வின் மாற்றத்தால் இருக்கலாம். இறைவனின் இடைப்படல் அவரின் வாழ்வின் எந்த நிலையில் ஏற்பட்டது என்பதைப் பொருத்தும் இருக்கலாம்.

தற்போது நமக்கு முன் இருந்து... அருளும்... அந்த ரிஷி பகவானின் அருள் கருணையைப் பெற்றுக் கொள்வதே... புத்திசாலித்தனம். அதை விடுத்து அவரின் பூர்வத்தை நோக்கிப் பின்னோக்கி சென்றால்... நமக்கு மிஞ்சுவது... ஆச்சரியமாகவோ அல்லது சந்தேகமாகவோதான் இருக்கும்.



இந்த சூக்ஷுமத்தை உணர்ந்ததால்தான்... நதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் முழுப் பலனையும் அடந்து அனுபவிக்கலாம். அதைப் போலவே... ரிஷி பகவானின் முக்கியவத்தை உணர்ந்து... அவரின் வழிகாட்டுதல் படி நம் வாழ்வை அமைத்துக் கொண்டு... இறைவனின் இணையடி நிழலை அனுபவிக்கலாம்.

நதி மூலம்... ரிஷி மூலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ஸாய்ராம்.



Tuesday, June 18, 2019

குரு தேடல் - பகுதி 3. அன்னை.

குரு தேடல் - பகுதி 3 :

'மிரா அல்பாசா'... தனது பதினான்காவது வயதில்... 'பிரான்ஸ் நாட்டில்' குடியேறிய சிறுமி. இவளது இளைமைப் பருவம்... பள்ளிகளில் கற்றுக் கொடுக்கும் 'உலகக் கல்வியை'' நோக்கியதாக இல்லாமல்... வாழ்வின் உண்மையை நோக்கிய உள் கல்வித்' தேடலாகவே அமைந்தது.

இந்த உள்வாழ்வின் பயணத்திற்கு... ஒரு வழிகாட்டியைத் தேடி... இவரது பயணம்... இவரைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றது. இவ்வாறு ஒரு முறை... இவர் அல்ஜீரிய நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போதுதான்... தனது உள்ளுணர்வு... உலகத்தின் தென் புறமாக தன்னை இழுப்பதை உணர்ந்தார்.

ஒரு நாள் இரவு... தனது ஆழ்ந்த உறக்கத்தில்... முதன் முறையாக... 'ஸ்ரீ கிருஷ்ண பகவானைத்' தனது கனவில் காண்கிறார். குழந்தை வடிவினனாக... புன் சிரிப்புடன்... தன் இரு கைகளையும் நீட்டி... அரவணைப்பதைப் போலக் கண்டு... விழிக்கிறார். அந்தக் கனவின் உணர்வு... தன்னை ஒரு 'ஆழ்ந்த அமைதிக்கு' இட்டுச் செல்வதை உணர்ந்தார். இது அவரடைந்த முதல் அனுபவமாகும்.

அந்த அனுபவம்... அவரை, பிரான்சு தேசத்தின் ஆளுமையில் இருந்த... 'பாண்டிச்சேரிக்கு'... இழுத்து வந்தது.

பாண்டிச்சேரி மண்ணிலிருந்து தமது ஆன்ம வீச்சுகளை உலகெங்கும் பரப்பி வந்த ';அரவிந்தம்' என்ற காந்த மலர்... இந்த மிரா என்ற வண்டையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டது. 'பகவான் அரவிந்தரை' கண்டதுமே... பரவசமடைந்தார் மிரா. தான் கண்ட கனவில் ஸ்ரீ கிருஷ்ண பகவான், தனக்கருளிய அதே ஆனந்த உணர்வினை... இந்த அற்புத மகானைக் கண்டதுமே பெற்றார்.

இவர்தான் தான் இது வரை தேடி வந்த 'சத்குரு'... என்பதை உணர்ந்து... அவரது திருவடி நிழலியே தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார். பகவான் அரவிந்தர்... இந்த 'பேரன்பாளரை'... 'அன்னை' என்று அழைத்தார். பகவானின் பேரின்ப சமாதிக்குப் பின்... அவரின் பக்தர்கள்... சீடர்கள்... சாதனையாளர்கள்... அனைவருக்குமே... அன்னையானார்... இந்த மிரா.

ஸாய்ராம்.










Monday, June 17, 2019

ஞானப்பழம்

ஞானப்பழம்

ஒரு மாம்பழத்தைக் கொண்டு வந்து 'சர்வேஸ்வரனிடம்' அளிக்கிறார் 'நாரத மகிரிஷி'. அது 'ஞானப்பழம்' என்றும்... அதைப் புசிப்பவருக்கு ஞானம் கைகூடும் என்றும்... மகிரிஷி தெரிவிக்க... இந்த லீலையை நடத்தும் சர்வேஸ்வரன்... அந்தக் கனியை 'சக்தி தேவியியிடம்' அளிக்கிறார். சக்தி தேவியோ... இந்தத் திருவிளையாட்டின் சூக்ஷுமத்தை அறிந்து... அந்தக் கனியை தமது பிள்ளைகளுக்கு அளிக்கலாம் எனக் கூறுகிறார்.

சர்வேஸ்வரன் தமது பிள்ளைகளான 'விக்னேஸ்வரனையும்'... 'கார்த்திகேயனையும்'... அழைத்து, நாரதர் கொண்டு வந்த ஞானப்பழத்தின் பெருமையைக் கூறி... அதைப் பெருவதற்கு...  'இந்த உலகத்தை எவர் முதலில் சுற்றி வருகிறாரோ... அவருக்கே இந்தக் கனி...!' என்பதான... ஒரு போட்டியை வைக்கிறார்.

தனது 'வாகனமான மயிலின்' மீது ஏறி 'உலகத்தைச் சுற்றிவர' கார்த்திகேயன் புறப்பட... தனது 'தாய், தந்தையரே உலகம்' என்பதை அவர்களின் வழியாகவே உறுதி செய்து... அவர்களை திருவலம் வந்து அந்தக் கனியை எடுத்துக் கொள்கிறார் விக்னேஸ்வரன்.

திரும்பி வந்து நிகழ்வுகளை அறிந்த கார்த்திகேயன்... தனக்கு அநீதி இழைத்துவிட்டதாகக் கருதி... சந்யாசியாக தனது வாழ்வை மாற்றி அமைத்துக் கொண்டார்... என இந்தக் கதை முடியும்.

இந்தக் கதை சொல்லும் சூக்ஷுமத்தை அறிந்து கொண்டால்... ஞானத்தின் பாதையைப் பற்றிய ஒரு தெளிவு பிறக்க ஏதுவாக இருக்கும். எப்போதுமே நமது புரதான ரிஷிகள்... ஞானத்தின் படிமுறைகளை... சிறு சிறு நிகழ்வுகளாக... கதையம்சத்துடன் கூடியதாக அமைத்துத் தருவார்கள்.

'மாம்பழம்' தானே... கதையின் மூலம்.  அதை ஏன் 'ஞானப்பழம்' என்று கூற வேண்டும்...? அறியாமை என்பது 'காய்' போன்றது. அறியாமை நீங்கி... ஞானம் பெறுவது 'பழம்' போன்றது. காய்... கனியாவதைப் போலத்தான்... அறியாமை நீங்கி... ஞானமடைவதும்.

எனவேதான் ஞானத்தை அடைவதற்கு உண்டான வழிமுறைகளை... இந்தக் கதையின் கருவாக வைத்திருக்கிறார்கள் ரிஷிகள். ஞானம் பெறுவது எதற்காக...? என்ற கேள்விக்கு...தமது சொரூபமான... ஆத்மத்தில் என்றென்றும் திளைத்திருப்பதற்காகத்தான்... என்பதே பதிலாகும். இந்த அனுபவத்தை இருவழிகளில் அடையலாம்.

ஒன்று... தமது 'கர்மவினைகளை அனுபவிப்பதன்' மூலமாக... அதாவது, இந்த உலக வாழ்வில் ஈடுபட்டு... கர்ம வினைகளை... 'பற்றற்று' முடித்து... ஞானத்தைப் பெறலாம். இதற்கு, அதிக காலமும்... அதிக அனுபவங்களையும் ஏற்க நேரிடும். இதைத்தான்... கார்த்திகேயன்... பெற்ற அனுபவமாக... இந்தக் கதை விவரணம் செய்கிறது.

இரண்டாவது... 'ஞானத்திற்கான சாதனையில்' ஈடுபடுவது. அதாவது, இந்த உலக வாழ்வின் உழல்விலிருந்து மீண்டு... உள்வாழ்வான 'ஆத்ம சாதனையில்' ஈடுபடுவது. இந்த ஜீவனை... அதன் மூலமான ஆத்மாவில் கொண்டு போய் சேர்ப்பது. அதற்கு இந்த கர்ம வினைகளின் உற்பத்தி ஸ்தானமான மனத்தை... ஜீவனில் ஒடுக்கி... அந்த ஜீவனை... ஆத்மாவில் ஒடுக்கும் சாதனை. இதைத்தான்... விக்னேஸ்வரன்... சக்தியையும், சிவத்தையும் வணங்கி... அதன் மூலமாக... அந்த ஞானத்தைப் பெற்றுக் கொண்ட அனுபவமாக... இந்தக் கதை விவரணம் செய்கிறது.

ஸாய்ராம்.




திருவண்ணாமலையில் யோகினீஸ்வரி. சிவசக்தி அம்மையார்.

திருவண்ணாமலையில் யோகினீஸ்வரி :

உலகமெங்கும் இருக்கும் ஆத்ம சாதகர்களை தன்னில் ஈர்த்துக் கொள்ளும் அற்புத ஸ்தலமே திருவண்ணாமலை. ஒவ்வொரு ஸ்தலத்தின் பெருமைகளைக் கூறும் போது... 'நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக' திருவண்ணாமலை திகழ்கிறது.


மேற்கத்திய நாடுகளில் தமது அறிவைக் கொண்டு... தாமாகத் தம்மை உயர்த்திக் கொண்ட ஆத்மாக்கள்... அடுத்தத்த நிலைகளை அடைய முடியாது தவிக்கும் போது... இமயத்தின் அடிவாரத்தில் இருக்கும்... பாரதம்... தமது ஒப்பற்ற மகான்களின் துணையுடன்... அவர்களைக் கடை தேற்றம் செய்திருக்கிறது.


'ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரின்' அருள் கருணை... 'சுவாமி விவேகானந்தரை'... அவர்களுக்குத் துணையாக அனுப்பியது. 'ஸ்ரீ பாபாஜி' அவர்களின் அருள் கருணை... 'பரமஹம்ஸ யோகானந்தரை'... அவர்களுக்குத் துணையாக அனுப்பியது.


அதுமட்டுமல்லாமல்... திருவண்ணாமலையில் உறைந்திருக்கும் எண்ணற்ற மகான்கள்... அந்த சாதகர்களை... தமது அருள் வட்டத்திற்குள் ஈர்த்து... அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப... அவர்களை... அவர்களது  'ஆன்ம சாதனைப்' பாதையில் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.


சென்ற நூற்றாண்டில்... அந்த மகத்தான பணியை... 'பகவான்  ஸ்ரீ ரமண மகிரிஷி' நிறைவேற்றினார். அவரைத் தேடி வந்த எண்ணற்ற மேற்கத்திய பக்தர்கள்... தமது பாதையில் மேன்மை அடைந்து... இறைவனின் பேரானந்தத்தில் திளைத்ததை... தமது நாடுகளுக்குத் திரும்பிய பின்... கட்டுரைகளாக, புத்தகங்களாக பதிவு செய்திருப்பதே... இந்த அரிய பேருதவிக்கான சாட்சிகளாக அமையும்.

இந்த நூற்றாண்டில்... இன்று... திருவண்ணாமலயில் இருந்து... உலகெங்குமிருந்தும் ஆத்ம சாதனையின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்... சாதகர்களை, தனது அருள் கடாக்ஷத்தால்... தன்னில் ஈர்த்து... அவர்கள் தடங்கி நிற்கும் நிலையிலிருந்து மீட்டு... சரியான பாதையில் வழி நடத்தி... சாதகர்களை வழி நடத்தும் அற்புதப் பணியை... இந்த யோகினீஸ்வரி... இருபத்தைந்து ஆண்டுகளாக... சப்தமின்றி செய்து கொண்டிருக்கிறார்.

அவர்தான்... 'தாயார் சிவசக்தி அம்மையார்'.  வாழும் யோனீஸ்வரியின் அருள் கடாக்ஷம் இன்றும்... அண்ணாமலயாரின் ஜோதியாக... சாதகர்கள் அனைவரையும்... திருவண்ணாமலையை நோக்கி ஈர்க்கிறது.

மாதாமாதம்... பௌர்ணமி தோறும்... தாயாரின் அருள் கருணை... தன்னை நாடி வரும் சாதகர்களுக்கு மட்டுமல்ல... பக்தர்களின் திருவுள்ளங்களிலும் பக்தியையும்... அன்பையும்... வளர்க்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஸாய்ராம்.


Sunday, June 16, 2019

குரு தேடல் - பகுதி 2. மதுரகவி ஆழ்வார்.

குரு தேடல் - பகுதி 2 :

பன்னிரு ஆழ்வார்களில்... 'மதுரகவி ஆழ்வார்'... தனித்துவம் பெற்றவர்.

ஏனைய ஆழ்வார்கள் எல்லாம், பரம் பொருளான 'திருமாலின் பெருமைகளைப்' பாடிப் பரவசம் அடைந்தனர். ஆனால், இந்த ஆழ்வாரோ... பரம் பொருளின் அவதரமான... 'நம்மாழ்வாரின் திருவடிகளில்' தஞ்சம் அடைந்து... அவருக்குச் சேவை செய்து... அவரின் புகழைப் பாடி... தனது ஒப்பில்லா குருவின் திருவடிகளில் ஒன்று கலந்து... அடியார்க்கும் அடியாரானார்.

நம்மாழ்வார் அவதாரம் செய்த... 'திருக்குருக்கூரிற்கு' வெகு அருகிலேயே... 'திருக்கோளூரில்' பிறந்த இந்த சாதகர்... தனது சாதனைக்கான... குரு தேடலில்... வடக்கு நோக்கி பயணம் செய்தபடி இருந்தார். ஆனால், அவருக்கான 'சத்குரு' திருக்குருக்கூரில் எழுந்தருளியிருப்பதை... அவரறியார்.

திருவரங்கனின் கருணை... இந்த சாதகரை... தனது 'ஒளிப் பிழம்பால்' வழி நடத்தி... திருக்குருக்கூருக்கு அழைத்து வந்தது. அவ்வூருக்கு வந்தவர், இந்த ஊரில் ஏதோ ஒரு அற்புதம் இருப்பதை உணர்ந்தார். ஆனால், அது என்ன என்பதை அறிந்திடாது அலைந்து திரிந்தார்.

அந்த ஊரில் இருப்பவர்களின் வழியே... இங்கு ஒரு மகான்... பிறந்தது முதல் தற்போது வரை... ஒரு புளியமரப் பொந்தில்... ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதை அறிந்து... அந்த மரத்திற்கு அருகே வந்து நின்றார். அங்கு வந்து நின்ற நொடியே... தனது உள்ளுணர்வின் உணர்வு... தனது தேடலின் முடிவு இந்த இடத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்த்தியது.

ஆடாது... அசையாது... ஒரு கற்சிலைபோல் அமர்ந்திருக்கும்... தனது 'சத்குருவை' வணங்கி... தனது மனதில் என்றும் நீங்காதிருந்த சந்தேகத்தை...  'சுவாமி...!, செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்...?'... என்று, ஒரு கேள்வியாக்கினார்... கூடி நிற்பவர்களின் ஆச்சரியத்திற்கிடையே... இதுவரை... மௌனமாக இருந்த ஞானச் செம்மல்... தனது திருவாய் மலர்ந்து அருளினார்... ' அத்தைத் தின்று அங்கே கிடக்கும்...!' என்று.

தனது, என்றும் நீங்காத சந்தேகத்திற்கு... இன்று விடை கிடைத்தது கண்டு... அந்த இடத்திலேயே ஆனந்தக் கூத்தாடினார் இந்த பக்தர்.

 'இந்த இறந்து போகும் உடலில்... என்றும் நிலைத்திருக்கும்... ஆத்மாவை மூலமாகக் கொண்ட ஜீவன்... வசிக்க நேரும் போது... அது எதைக் கொண்டு உயிர் வாழ்கிறது...?' என்ற சந்தேகத்திற்கு... மகான் அருளிய பதில்...' அந்த ஜீவன் தனது கர்ம வினைகளையே... ஆதரமான மூலமாகக் கொண்டு... உயிர் வாழ்கிறது...!' என்ற உயர்ந்த 'ரகசியத்தை' அருளினார்.

அன்றிலிருந்து... தனது குருவின் திருவடியிலேயே... தனது சேவையைக் காணிக்கையாக்கி... தனது குருவிற்காக... 'பத்து பாடல்களை' அர்ப்பணித்தார். 'கண்ணின் நுன்சிறுத்தாம்பு...' என்று தொடங்கும் பாடல்கள்... நம்மாழ்வாரின் புகழை இந்த அவனிக்கு உணர்த்தியது மட்டுமல்ல... இந்த அடியாரை... அரங்கனின் திருவடி நிழலில் சேர்த்து... பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக மலரவைத்தது.

ஸாய்ராம்.


Saturday, June 15, 2019

மனம் என்பது என்ன... பகுதி - 3

மனம் என்பது என்ன... பகுதி - 3 :

நாம் உருவாக்கிக் கொள்ளும் எண்ணங்களுக்கு ஏற்பவும் இந்த மனம் செயல்படுவதுதான் ஆச்சரியம். இந்த விளைவுக்கு... நம் எதிர்பார்ப்புகளே காரணமாக அமைந்து விடுகிறது. எந்த ஒரு சிறு எதிர்பார்ப்பும்... மகிழ்ச்சியையும்... ஏமாற்றத்தையும்... தந்து விடும் அளவிற்கு ஆபத்தானதுதான்.

புத்தர் பெருமானாரிடம்,  அவரது அத்யந்த சிஷ்யர் ஒருவர்... ' சுவாமி...! மனிதனின் இன்பத்திற்கும்... துன்பத்திற்கும்... காரணம் எது...?' என்ற கேள்வியை வைத்தார். சிறிது மௌனம் காத்த புத்தர்... 'அந்தக் காரணத்தைத் தக்கத் தருணத்தில் உனக்கு அனுபவமாகக் காட்டுகிறேன்...' என்று பகிர்ந்தார்.

ஒரு முறை தனது சஞ்சாரத்தின் போது... புத்தர் தன்னிடம் இருந்த ஒரே விலைமதிப்பான... அக்ஷயபாத்திரத்தை... அந்த அத்யந்த சிஷ்யனிடம் கொடுத்து... 'இதை கொஞ்ச நேரம் வைத்திரு...!' என்று கூறினார். அதைப் பெற்றுக் கொண்டு தனது கைகளில் பத்திரமாக வைத்துக் கொண்டான் சிஷ்யன். சிறிது நேரப் பயணத்திற்குப் பின்... புத்தர், 'அந்தப் பாத்திரத்தைக் கொடு...!' என்றதும்... சிஷ்யன் உடனடியாகப் பணிவுடன் அந்தப் பாத்திரத்தை... புத்தரிடம் திருப்பிக் கொடுத்தான்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் புத்தர்... சிஷ்யனிடம், ' இதை வைத்துக் கொள்...!' என்று கூறி அக்ஷய பாத்திரத்தை அளிக்க... மிகவும் மனம் மகிழ்ச்சியுடன்... தனது இருகரங்களையும் நீட்டி... அந்தப் பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டு... அதைத் தன் சோலிக்குள் வைத்து முடிந்து கொண்டான். முன்னெப்போதும் இல்லாத சந்தோஷம் அவனைத் தொற்றிக் கொண்டது.

பயணத்தைத் தொடர்ந்த புத்தர்... மீண்டும் சிஷ்யனிடம்...'அந்தப் பாத்திரத்தைக் கொடு...!' என்று கூறியதும்... திகைத்துப் போன சிஷ்யனின் முகத்தில் அதுவரை நிலவி வந்த மகிழ்வு நீங்கி... சோகம் கவ்விக் கொண்டது. மிக மெதுவாக தனது சோலியை அவிழ்த்து... அந்த அக்ஷய பாத்திரத்தை எடுத்து... குனிந்த தலையுடன்... புத்தர் பெருமானாரின் கைகளில் கொடுத்தான்.

அக்ஷய பாத்திரத்தைப் பெற்றுக் கொண்ட புத்தர் பெருமானார்... சிஷ்யனிடம்... 'அன்று ஒரு கேள்வி கேட்டாயே... ஞாபகமிருக்கிறதா...? மனிதனின் இன்பத்திற்கும்... துன்பத்திற்கும்... காரணம் எது... என்று... இதுதான் காரணம்...' என்று புன்னகையுடன் பதிலளித்தார். ஏதும் புரியாமல்... திகைத்து நின்ற சிஷ்யனுக்கு புத்தர் அளித்த உபதேசம்தான்... நமக்கும்.

'முதலில் அந்தப் பாத்திரத்தைக் கொடுக்கும் போது... 'இதை கொஞ்ச நேரம் வைத்திரு...!' என்று கூறினேன். அப்போது நீ... இந்தப் பாத்திரம் நமது குருவினுடையது... அதைப் பத்திரமாக வைத்திருந்து ... குரு கேட்கும் போது கொடுக்க வேண்டும்... என்று உனது மனத்தில் ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டாய். நான் கேட்கும் போது... மிக மகிழ்வுடனும்... பணிவுடனும்... அதை ஒரு சேவையாகக் கருதி... என்னிடம் உடனடியாகத் திருப்பிக் கொடுத்தாய்.'

'இரண்டாவது முறை நான் அந்தப் பாத்திரத்தைக் கொடுக்கும் போது...  ' இதை வைத்துக் கொள்...!' என்று நான் கூற... நீ இந்தப் பாத்திரத்தை குரு நமக்கே கொடுத்துவிட்டார்... அதை நான் பத்திரமாக... குருவின் நினைவாக... என்றும் வைத்துக் கொள்வேன்... என்று, உனது மனதில் ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டாய். அதனால்தான் நான் கேட்கும் போது... உனக்கு ஒரு அதிர்ச்சியும்... சோகமும் உண்டாகி... மிகத் தாமதமாகவும்... வேண்டா வெறுப்புடனும்... அதை என்னிடம் திருப்பிக் கொடுத்தாய்.'

'பார்த்தாயா...! நீ வளர்த்த எண்ணங்களே... உனக்கு முதலில் மகிழ்ச்சியையும், பின்னர் சோகத்தையும் கொடுத்தது. மனதில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் எதிர்பார்ப்புகளே... நமக்கு இன்பத்தையும்... துன்பத்தையும் தருகின்றன. இதுதான்... நீ அன்று, ' மனிதனின் இன்பத்திற்கும்... துன்பத்திற்கும்... காரணம் எது...?' என்று... என்னடம் கேட்ட கேள்விக்கான பதில்.'

அந்த சிஷ்யனுக்கு புத்தர் அருளிய ஞான அனுபவம்... நம் எல்லோருக்குமானதுதான்.

ஸாய்ராம்.


நால்வர் : சம்பந்தர்-நாவுக்கரசர்-சுந்தரர்- மாணிக்க வாசகர்.

நால்வர் :

'திருஞான சம்பந்தர்... திருநாவுக்கரசர்... சுந்தர மூர்த்தி நாயனார்... மாணிக்க வாசகர்...' என்ற இந்த நால்வரை முன்னிருத்தி, அறுபத்து மூவரான நாயன்மார்களின் பட்டியல் 'சிவ தரிசனத்தை' அருள்கிறது.

இவர்கள் ஒவ்வொருவரையும்... ஒவ்வொரு சூழலைக் கொண்டு இறைவன் ஆட்கொண்டிருக்கிறான்.

'திருஞான சம்பந்தரின்' பெயரிலேயே... இந்த 'ஞானத்திற்கான சம்பந்தம்' இருப்பதை அறியலாம். அந்த குழந்தையை ஆட்கொள்ள ஒரு நிறைவான நாளைத் தேர்ந்தெடுக்கும் சர்வேஸ்வரன்... நிரிலே மூழ்கிக் குளிக்கும் தந்தையைக் காணாமல் அழும் குழந்தைக்கு... பாலமுது கொடுக்க தேவியை அனுப்புகிறான். அதுவரை உலகத்தோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்த குழந்தை... இப்போது உள்ளுணர்வாய் இருக்கும் ஈஸ்வரனிடம் சம்பந்தம் வைத்துக் கொள்கிறது. அந்த சம்பந்தம்... 'திரு ஞான சம்பந்தமாக' மலர்கிறது.

இறை தொண்டுக்கு ஒரு பேருதாரணமானவரே... 'திருநாவுக்கரசர்'. உழவாரப் பணியே இவரின் தொண்டு. எந்தவித பிரதிபலனும் இல்லாது... இந்தத் தொண்டு புரியும் இவரை ஆட்கொள்ளும் சர்வேஸ்வரன்... இவரை அரசனாக்குகிறார். தூய எண்ணமே... வார்த்தைகளாகிறது. அர்த்தம் பொதிந்த வார்த்தைகளே... செயல்களாக மலர்கிறது. அந்த வார்த்தைகளின் அடுக்கிற்கு ஆதரமான நாவை... ஆளும் அரசனாக... இந்த அடியவரை மாற்றும் ஈசன்... இவரை... 'திருநாவுக்கரசராக' உயர்த்தியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது...!

தனது பிம்பத்தை ஒரு முறை பார்த்து வியந்த சர்வேஸ்வரன்... அந்த பிம்பத்திற்கு உயிர் கொடுத்தார். அந்த சுந்தரமான  பிம்பம் உயிரோவியமானது. இந்த உயிரோவியம்... தனது பாதையிலேயே... இந்த உலகத்தோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்தது... சர்வேஸ்வரன் இடைபடும் வரை. அவரின் இடைபடுதல் நிகழ்ந்த இடமோ... ஒரு ஆலயம். சூழலோ... இந்த பெருமகனாரின் திருமண வேளை... அப்போது ஒரு திருவிளையாடலை நிகழ்த்தி இவரை ஆட்கொண்டு... சுந்தரரை... மூர்த்தியுடன் இணைத்துக் கொண்டு... நாயனாராக உயர்த்திவிட்டார்... ஈசன்.

நவரத்தினங்களிலேயே உயர்ந்த ரத்தினமான... மாணிக்கத்தை, ஒரு மனிதரிடமிருந்து... வரும் வார்த்தைக்கு ஒப்பீடாக வைத்தால்... அதைத்தான் ஈசன் அருளினார். இந்த மாணிக்கம்... அன்றைய நாளில் வீறுகொண்டிருந்த சமண மதத்தில் ஈடுபாடு கொண்டிருந்தது. அவரவருக்கு உரிய மார்க்கத்திலேயே... அவரவர் பயணம் செய்து உய்ய வேண்டும் என்பதுதான் வழிமுறை. அதற்காக அவரின் தமக்கையார் ஈசனிடம் பிரார்த்திக்க... தக்க தருணத்தில்... அவருக்கு ஒரு உடல் உபாதையைக் கொடுத்து... தன்னிடம் ஈர்த்துக் கொண்டான் ஈசன். தன் முன் அமர்ந்து... அடியெடுத்துக் கொடுத்து... அவரைப் பாடவைத்ததன் விளைவால்... நமக்குக் கிடைத்த மாணிக்கம்தான் 'சிவபுராணம்'. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி...' என்றும்... 'சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை... முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்...' என்று அருளும் 'மாணிக்க வாசகரின்'... வாசகத்திற்கு ஈடு... இணைதான் ஏது உண்டு இந்த அவனியில்...!

 ஸாய்ராம்.



Thursday, June 13, 2019

குரு தேடல் - பகுதி 1. சுவாமி விவேகானந்தர்.

குரு தேடல் - பகுதி 1

நரேந்திரன்...  கல்கத்தா நகரில், இரண்டடுக்கு மாளிகையில், பிறந்ததிலிருந்தே சுகமான வாழ்வு வாழ்ந்து வந்த சிறுவன். நேர்மையான வழக்குரைஞரான தந்தை... நன்கு படித்த... ஆன்மீகத்தில் திளைத்த தாயார்... சிறந்த பள்ளியில் கல்வி... சென்று வர சாரட் வண்டி... என வாழ்ந்து வந்த நரேந்திரனின் வாழ்வில் புயல் வீசியது.

தந்தையின் திடீர் மறைவு, நரேந்திரனின் வாழ்வையே புரட்டிப் போட்டது. நேர்மையே துணை என வாழ்ந்த தந்தை... நல்ல பெயரைச் சம்பாதித்தாரே தவிர பொருளையல்ல. கையில் இருக்கும் சொற்பத்தை வைத்து தாயார் குடும்பத்தை நடத்தி வந்தார். கல்லூரியில் முதல் ஆண்டின் இறுதியில் இருந்த நரேந்திரனுக்கு... குடும்பத்தின் சூழல புரிய ஆரம்பித்தது.

சாரட் வண்டிப் பயணம்... நடை பயணமானது. குடும்பச் செலவுக்கு தாயார் அவ்வப்போது கடன் பெரும் சூழலுக்கும் தள்ளப்பட்டார்.  மிஞ்சியிருந்த வீட்டின் மீதும்... பங்காளிகளின் பார்வை திரும்பியது. அதைத் தக்க வைத்துக் கொள்ள நிதிமன்றம் செல்லும் சூழலும் ஏற்பட்டது.

வாழ்வு என்பது இப்படியும் மாறிப் போவதா...? என்ற கேள்வி... நரேந்திரனின் மனதில் எழுந்து... இந்தத் துன்பத்திலிருந்து விடுபட... சாதாரண மனிதர்களைப் போல... நரேந்திரனின் மனமும்... தேடலில் ஈடுபட்டடது. அந்தத் தேடல் ஜோதிடம்... ஆருடம்... என மாறி... மாறி... இறுதியில் இறைவனின் திருவடியில் கொண்டு வந்து சேர்த்தது.

நரேந்திரனின் வாழ்வில் இந்த சூறாவளியை ஏற்படுத்தியது... கர்ம வினையா...? அல்லது இறைவன் தன் பக்தனை ஆட்கொள்ள நடத்தும்... திருவிளையாடலா...?

இறைவனின் கருணை... நரேந்திரனை தக்க குருவுடன் சேர்க்க கனிந்தது. அந்தக் குரு தேடல் பயணத்தில்... கல்கத்தாவில் இருந்த எண்ணற்ற குருமார்களை நரேந்திரன் சந்திக்க நேர்ந்தது. எல்லா குருமார்களிடமும்... நரேந்திரன் கேட்ட கேள்வி ஒன்றுதான்... ' இறைவன் இருக்கின்றானா...?'... 'அவனை... நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா... அவரை எனக்குக் காட்ட முடியுமா...?'

இந்த நேரடியான கேள்விக்கான பதில்... எங்கும் கிடைக்காத சூழலில்தான்... நரேந்திரனின் நண்பன் ஒருவன்... 'உனது கேள்விக்கு பதிலளிக்கும் ஒருவர் இருக்கிறார். அவர் காளி கோவிலின் பூஜாரி... காளி மாதாவிடம் எப்போதும் முகம் மலர பேசிக் கொண்டிருப்பவர்... வா, அவரிடம் செல்லலாம்...' என்ற போதும்... நம்பிக்கையின்றியே... நரேந்திரன்... நண்பனுடன்... அந்த பூஜாரியைச் சந்திப்பதற்காகச் சென்றான்.

இந்த சந்திப்புதான்... இறைவனின் திருவருள்... காளி மாதாவின் அருள் கருணை. தான் சந்திக்கப் போவது யாரை... என்பதைக் கூட அறியாத நிலையில்தான்... நரேந்திரனின் பயணம் இருந்தது. ஆனால் அந்த பூஜாரியாரோ... இந்த பக்தனுக்காகத்தான் இத்தனைக் காலமாகக் காத்துக் கொண்டிருந்தார்... அவரது... கனிந்த பக்தி... திரண்டிருந்த தவம்... எல்லையில்லாத அன்பு... இவையெல்லாவற்றையும் அள்ளி... அள்ளித்தரக் காத்துக் கொண்டிருந்தார்.

இதையேதுமறியாத நரேந்திரன்... சந்தேகங் கொண்ட மனதினனாய்... அந்த மகானின் முன் சென்று நின்றார். அதுவரை... கண்களை மூடியபடி நிஷ்டையில் இருந்த அந்த மகான்... தனது கண்களைத் திறந்து...' வா, என் அன்பு மகனே நரேந்திரா... உனக்காகத்தான் நான் இவ்வளவு நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்...!' என்று கூறியதும்... நரேந்திரனின் முதுகெழும்பு சில்லிட்டது. உடல் சிலிர்க்க... மயிர்க் கூச்செரிய... கண்களில் வழிந்த நீருடன்... அந்த மகானின் திருவடியில்... தானாக வீழ்ந்து வணங்கினான்.

கண்களில் நீர்வழிய... தனக்கு முன்னால் கருணையுடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்... அந்தக் கண்களை விட்டுத் தன் கண்கள் அகலாமல் இருப்பதை உணர்ந்தான். இதுவரை அல்லல் பட்டுக் கொண்டிருந்த தனது வாழ்விலிருந்து... விடுதலையடைந்த உணர்வைப் பெற்றான். கடலலையைப் போல கொந்தளிப்பாக இருந்த தனது மனம்... இந்த மகானின் சான்னியத்தில்... ஆழ்ந்து அமைதியானதை உணர்ந்தான்.

தனக்கு முன்னால் இருக்கும் அந்த மகான்... 'ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்' என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டான். இந்த சத்குருதான் தன்னை காந்தமென இங்கு இழுத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்தான். தொடர்ந்த மௌனத்தை... பர்மஹம்ஸரே கலைத்தார்...'நரேந்திரா... உன்னிடம் இருக்கும் கேள்விகளைக் கேட்கலாமே...!' என்ற போதுதான்... நினைவலைகளில் இருந்து விடுபட்டு நிதர்சன உலகிற்கு வந்தான் நரேந்திரன்.

இதுவரை... வெறும் கேள்வியாக இருந்தது... இப்போதுதான்... தேடலாக மாறியது... மிகவும் பவ்யத்துடன்... தனது சத்குருவை நோக்கி... 'சுவாமி... இறைவன் இருக்கிறாரா...?... அவரை நீங்கள் கண்டதுண்டா...? அவரை எனக்குக் காட்ட முடியுமா...?' என்று பணிவுடன் கேட்க... புன்முருவலுடன் பகவான்... பதிலளித்தார்... 'இறைவன் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. அவரை நான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரோடுதான் நான் வாழ்கிறேன்... அவரை உனக்கும் காட்டுகிறேன்... வா..!' என்ற போதுதான்... நரேந்திரனின் தேடல் ஒரு முடிவுக்கு வந்தது. நரேந்திரன்... 'சுவாமி விவேகானந்தனாக' மாறிய அற்புதமும் நிகழ்ந்தது.

ஸாய்ராம்.




Monday, June 10, 2019

மனம் என்பது என்ன...? பகுதி - 2.

மனம் என்பது என்ன...?  பகுதி - 2.

மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பவே இந்த உடல் செயல்படுகிறது. மனம் சுறு சுறுப்படையும் போது... உடலும் அதற்கேற்ற சுறு சுறுப்பை அடைகிறது. மனம் சோர்வாக இருக்கும் போது... இந்த உடலும் சோர்வை அடைகிறது.

மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்பதை அறிவோம். அந்த எண்ணங்களுக்கு மூலம் எது... என்பதை அறியும் போதுதான்... மனதின் சூட்சுமம் புரிகிறது. எண்ணங்களுக்கு மூலம் வாசனை. அந்த வாசனையின் மூலம் 'கர்ம வினைகள்'.

ஒரு ஜீவனின் கர்ம வினைகளுக்கு ஏற்ப... அடுத்தடுத்ததான எண்ணம் உற்பத்தியாகிறது. அந்த எண்ணத்திற்கு ஏற்பவே செயல்களும் அமைந்து போகிறது. இப்படி இயங்கும் மனதினை... அதாவது... இடையறாது எண்ண அலைகளை உற்பத்தி செய்யும்... வற்றாத சாகரத்தை... எந்த அணை கொண்டு தடுக்க முடியும்... ?

உடலின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு உறுப்பைக் மூலமாகக் கொள்ளலாம். உதரணமாக... சுவாசப் போக்கு -  இதற்கு ஆதாரனமான உறுப்பு... நுரையீரல் ; ரத்த ஓட்டம் -  இதயம் ; உணவின் செரிமானம் - இரைப்பை ; உறுப்புகளின் அசைவு - மூளை ; உடலின் கழிவுகள் - சிறு நீரகம் ... என ஒவ்வொரு உறுப்பாக ஆராய்ந்து... அதனதன் செயல்பாடுகள் இந்த உடலை எவ்வாறு இயக்குகிறது... என்பதை அறிந்து கொள்ளலாம்.

உடலில் ஏற்படும் அந்தந்த குறைபாடுகளை... அந்தந்த உறுப்புகளின் செயல்பாட்டை ஒழுங்கு செய்வதன் மூலம்... சரி செய்து கொள்ளலாம்.

ஆனால்... கோபம்; மகிழ்வு ; ஆச்சர்யம் ; அச்சம் ; பயம் ; நாணம் ; பச்சாதாபம் ; கலக்கம் ; குழப்பம் ; அமைதி... போன்ற அவஸ்தைகளை இந்த உடல் அனுபவிக்கும் போது... அதற்கு மூலமாகவோ அல்லது ஆதராமாகவோ... எந்த உறுப்பைச் சுட்டிக் காட்டுவது...?

அதுதான்... மனம். அந்த மனம் இந்த எண்ணற்ற அவஸ்தைகளை... அந்த ஜீவனின் கர்ம வினைகளுக்கு ஒப்ப... எண்ணங்களாக்கி... அதன் மூலமாக இந்த அனுபவங்களை... இந்த உடலுக்கு அளிக்கிறது. இந்த அவஸ்தைகளை மனம்... தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்... ஒன்பது நாளமில்லாச் சுரபிகளைக் கொண்டே... வழி நடத்துகிறது. 

ஸாய்ராம்.


Tuesday, June 4, 2019

கவிதைத் தொகுப்பு : சத்தியமும்... தர்மமும் :

சத்தியமும்... தர்மமும் :

உலகம் என்ற உருண்டைப் பந்து
ஒட்டிக் கொண்டது வானத்தில்
தர்மம் என்ற சத்யக் கோட்டில்
சுற்றி வந்தது சூர்யனை ;

வட்டப் பாதை சுற்றும் பூமி முப்பரப்பின் மேலே
சொட்டும் நீரும் ஒட்டிக் கொள்ளும் சிந்திடாமலேயே
எஞ்சி நிற்கும் புவியின் மேலே விஞ்சும் மலையின் சிகரமும்
சொல்லும் சத்ய வார்த்தை யொன்று தர்மம் நிற்கும் உலகிலே ;

பரமன் வகுத்த பாதை ஒன்றில் சுழலும் பூமிப் பந்தினில்
நான்கில் மூன்று பங்கு நீரும் நிற்கும் எல்லைக் கோட்டிலே
காவல் இன்றி தடுப்பும் இன்றி சீறும் கடலின் அலைகளை
சப்தம் இன்றி கடலின் உள்ளே திருப்பும் ஆற்றல் சத்யமே ;

கடலின் நீரை ஆவியாக்கி மேகத்துள்ளே வைப்பதும்
மேகம் கருத்து வானம் மின்னி மழையாய் மீண்டும் பொழிவதும்
ஜீவன் இங்கு உயிராய் வாழ மூச்சுக் காற்றாய் இருப்பதும்
நச்சுக் காற்றை நல்ல காற்றாய் ஆக்கும் ஆற்றல் சத்யமே ;

மண்ணில் ஊன்றும் சிறியவித்தும் விருட்சமாக வளர்வதும்
வண்ணபூக்கள் கனியினங்கள் பூத்து காய்த்து நிற்பதும்
இலையுதிர்ந்து மீண்டும் ஓர் நாள் பசும் தளிர்கள் முளைப்பதும்
வியக்க வைக்கும் இயற்கை ஆற்றல் சொல்லும் வார்த்தை சத்யமே ;

சுக்கிலமும் சுரோணிதமும் சேர்ந்து கருவாவதும்
சிறிய கருப் பையில் ஜீவன் உயிருடனே இருப்பதும்
பனிக்குடம் உடைந்து உயிர் பத்திரமாய் ஜனிப்பதும்
பத்து மாதம் தாய் சுமக்கும் ஆற்றலென்ன சத்யமே ;

இத்தனையும் அறிந்த மனிதன் நெறிமுறைகள் தவர்வதும்
சுயநலத்தின் பெயரால் சத்யம் அழிந்து மண்ணில் வாழ்வதும்
அருளப்பட்ட மனித ஆற்றல் தனக்கே என்று கணப்பதும்
முடிவில் சத்யம் ஒன்றுதான் நிலைக்கும் என்று உணர்வதும் ;

என்னே இந்த விந்தை...!
வியக்க வைக்கும் மாயை...!!

ஸாய்ராம்.










கவிஞர் கண்ணதாசன் - ஒரு பார்வை - பகுதி 2 :

கவிஞர் கண்ணதாசன் - ஒரு பார்வை - பகுதி 2 :

ஒரு ஜீவனாகப் பிறப்பெடுக்கும் மனிதன் இரண்டு நிலைகளால் அவஸ்தைக்குள்ளாகிறான். ஒன்று... 'நான்' என்ற 'அஹங்காரம்'. இன்னொன்று 'என்னுடையது' என்ற 'மமகாரம்'.

இந்த இரண்டு அவஸ்தைகள்தான் இந்த  பிரபஞ்சத்தில் பிறப்பு... இறப்பு என்ற தொடர் ஓட்டத்திற்குக் காரணமாகிறது.

என்றும் நிலைத்திராத... அழியக்கூடிய... நாமம்-ரூபம் தாங்கிய...இந்த உடல்தான் 'நான்' என்ற அறியாமைதான்... அஹங்காரம்.

உடலை நிலையில்லாதது என்று அறியாது இந்த உடலுடன் தொடர்புடைய அனைத்தையும் என்னுடையது என்று நினைக்கும் நிலையே 'மமகாரம்'.

இந்த இரண்டு நிலைகள்தான்... இந்த ஜீவனை இந்த உலகவாழ்வில் பந்தப்படுத்துகிறது. பற்றுதலுக்கு உள்ளாக்குகிறது.

அறியாமையாகிய இந்த இரண்டு அவஸ்தைகளில் இருந்து, இந்த ஜீவன் என்று விடுபடுகிறதோ... அப்போதே அது ஞானத்தின் பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறது. பற்றை விடுத்து... பந்தத்திலிருந்து விடுதலை அடைகிறது.

இந்த ஞானம் பெருக்கெடுப்பது ஒரு ஜீவன் அடையும் துன்ப அனுபவத்தில்தான். இந்த உலக சுகங்களில் மூழ்கி... உறவுகளின் சங்கமத்தால் சூழப்பட்டு... அதன் பற்றுதல்காளால் துன்பப்படும் ஜீவனுக்குத்தான் இந்த ஞானத்தின் பாதை திறக்கிறது.

தந்தைக்கும்... மகனுக்கும் இடையேயான ஒரு உணர்வுப் போராட்டத்தில்... மகனது நடத்தைகளால்... துன்பத்தின் சூழலுக்குள் தள்ளப்படும் தந்தையின் நிலையை... வெளிப்படுத்துவதுதான் சூழல். அந்த சூழலுக்கு... கவிஞர்...

                                             
                                         '... சோதனை மேல் சோதனை
                                              போதுமடா சாமி...
                                              வேதனைதான் வாழ்க்கை என்றால்
                                              தாங்காது பூமி... '

... என்று தந்தையின் நிலையை வெளிப்படுத்துவார்.

இந்த துன்பத்தின் வெளிப்பாடு... அவருக்குள் ஒரு ஞானத்தை வெளிப்படுத்தும். அந்த ஞானத்தை...

                                           '... சொந்தம் ஒரு கைவிலங்கு
                                                நீ போட்டது... அதில்
                                                பந்தம் ஒரு கால்விலங்கு
                                                நான் போட்டது...

என்று... வேதனையையும்... விரக்தியையும்... அதிலிருந்து பெறும் ஞானம் என்பதாகவும்...தொடரும் வரிகளில் அமைப்பார்.

நாம் பிறக்கும் போது எதையும் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருந்ததில்லை. தந்தை - தாய் என்று அனைத்து உறவுகளும் தாமகவே... தமது வினைகளின் உறவுகளாக... வந்து சேருகிறது. அந்த உறவுகளின் வழியேயான ஜீவனின் பயணத்தைதான்...

                                           '... சொந்தம் ஒரு கைவிலங்கு
                                                நீ போட்டது ...'

என்றும்... அந்த 'கை விலங்கு' ஒரு ஜீவனை... எவ்வாறு கைதியாக்கிறது என்பதையும்... எப்போது அந்த கை விலங்கு நீங்குகிறதோ... அப்போதே அது சுதந்திராமாகிறது என்பதையும்... இரு வரிகளில் உணர்த்தி விடுகிறார்.

இறைவன் போட்டிருக்கும் இந்தக் கை விலங்கு என்ற பந்தம்... சிறுது சிறிதாக...
அந்த பற்றிலிருந்து விடுபட்டு விடுகிறது. தந்தை - தாயாரின் மறைவு... ஏனைய உறவுகளின் பிரிவுகள்... என காலம் ஒரு நிலையில் இந்த ஜீவனை முழுவதுமாக... இந்த பற்றிலிருந்து விடுவித்து... ஜீவனை சுதந்திரமாக்கி விடுகிறது.

இந்த விடுதலைக்கான காலத்திற்கு இடம் கொடாது...இந்த கை விலங்கு இந்த உடலிலிருந்து நீங்குவதற்கு முன்னரே... இந்த ஜீவன் தனக்கு ஒரு 'கால் விலங்கை' போட்டுக் கொள்கிறது. அது... இந்த ஜீவன் இந்த உலகத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளான மனைவி... குழந்தைகள்... நட்பு... போன்ற பந்தங்களும்... அதன் மூலம் ஏற்படுத்திக் கொள்ளும் பற்றுதல்களும்தான். அதைத்தான் கவிஞர்...

                                                'பந்தம் ஒரு கால்விலங்கு
                                                நான் போட்டது...'

என்று வருணிப்பார்.

ஒரு ஜீவனின் அறியாமையை... இரண்டு விதமாக கவிஞர் சுட்டிக் காட்டுகிறார். ஒன்று... நமது வினைகளின் விளைவுகளான கைவிலங்கு... மற்றொன்று நாமாக போட்டுக் கொள்ளும்... பந்தங்கள் என்ற கால் விலங்கு.

இந்த இரண்டு விலங்குகளிலும் இருந்து விடுபடும் ஜீவனே...ஆனந்த உணர்வில் சங்கமிக்கும்... என்ற ஞானத்தை அளிக்கும்... கவிஞரின் சிந்தனைதான் என்னே...!

ஸாய்ராம்.







              

பெயர் சூட்டுதல் - ஒரு பார்வை

பெயர் சூட்டுதல் - ஒரு பார்வை

இருந்தது... இழந்ததும் :

இந்த ஜீவனுக்கு இரண்டு விதமான அவஸ்தைகள் உண்டு. ஒன்று 'நாமம்'... இன்னொன்று 'ரூபம்'.

ரூபம்... பிறப்பின் போது அமைவது. பிறப்பிலிருந்து மரணபரியந்தம் வரை மாறிக் கொண்டே இருப்பது. எல்லா பருவங்களிலிலும்... அந்த ஜீவனை ரூபத்தைக் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால், பெயர்... என்ற நாமம் இந்த ஜீவன் பிறந்ததிற்குப் பின் அடையாளப் படுத்துவதற்காக சூட்டப்படுவது. இந்தப் பெயரே நம்மை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டுகிறது.

எப்போது இந்தப் பெயர், ரூபத்துடன் இணைகிறதோ... அப்போது இந்த ஜீவனால்... இந்த கட்டமைப்பை விட்டு நீங்க முடியாததாக்குகிறது.

இந்த பெயரமைக்கும் வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் நமது முன்னோர்கள் சரியாக பயன்படுத்தி... ஒரு நிலையான... முறையான... சமூகக் கட்டமைப்பாக... உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

நமது மண்ணில் பிறந்த அனைத்து ஜீவர்களும் ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்களே. இதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை. இந்த உண்மையை 'பாகவதம்' நமக்கு உணர்த்துகிறது. அந்த ரிஷி பரம்பரையில் வந்த பாரதத்து மாந்தர்களை பொதுவான இரண்டு பிரிவுகளாக நமது முன்னோர்கள் பிரித்தனர்.

அவை சைவ மரபினர்... வைணவ மரபினர். சிவபெருமானை வணங்கி விபூதி தரிப்பவர்களை சிவகுலமாகவும்... திருமாளை வணங்கி திருநாமமிடும் வைணவர்களை... வைணவ குலமாகவும் பிரித்தனர். ஒரெ குலத்தில் பிறந்தவர்களிடையே மணம் புரிவதில்லை என்ற வரையரையை வகுத்தனர் பெரியோர்.

அதனால்சிவகுலத்தில் பிறக்கும் ஆன்களுக்கு, சிவகுல அம்சமாக... உலகநாதன்... கணபதி... சண்முகம்... என்றும், இதே குலத்தில் பிறக்கும் பெண்களுக்கு, மகாலட்சுமி... ரெங்கநாயகி... பத்மாவதி... என்றும் பெயரிட்டனர்.

குலம் மாற்றி திருமணம் செய்யும் போது சிவகுலத்தில் பிறந்த 'ரெங்கநாயகியை'... வைணவ குலத்தில் பிறந்த 'ரெங்கநாதன்' மணம் புரிந்தான். வைணவ குலத்தில் பிறந்த 'லோகநாயகியை' சிவகுலத்தில் பிறந்த 'உலகநாதன்' மணம் புரிந்தான்.

இந்த இணைவு இரண்டு குலங்களையும் இணைத்தது. அதனால் வரன்களை சேர்ப்பது மிக எளிதாக அமைய... பெயர்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது. பெயர் பொருத்தம் மட்டுமே... திருமணம் அமைய பெரும் காரணமாக அமைந்தது.

ஸாய்ராம்












திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 3 : தம்பொருள் என்பதம் மக்கள் அவர் பொருள் தம்தம் வினையான் வரும்.

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 3 :

தம்பொருள் என்பதம் மக்கள் அவர் பொருள்

தம்தம் வினையான் வரும்

... என்ற அறம் கூறும் குறலுக்கு பொதுவாக...தம் மைந்தர்களே தமக்குப் பொருளாவார்கள் என்றும்... அந்த மக்களின் வழியே வரும் நல்வினைகளின் பொருள்கள் தாமாக தம்மை வந்து அடையுமென்று அமையும்.

ஆனால் வள்ளுவப் பெருந்தகை இந்த இரண்டு அடிகளில்... கர்ம வினைகளின் கட்டமைப்பை  சூட்சுமமாக விவரிக்கிறார். இந்தக் குறளின் சூட்சுமம் 'தம்தம்' என்ற சொல்லாடலில் மறைந்திருக்கிறது. 'தம்' என்ற ஒரு சொல்லே...

தம்பொருள் என்பதம் மக்கள் அவர் பொருள்
தம் வினையான் வரும்


... பொதுவான அர்த்தத்தை விவரிக்கப் போதுமானது. ஆனால் இந்த சொல்லை இருமுறை இணைத்து 'தம்தம்' என்று பயன்படுத்தும் போதுதான்... அதில் கர்ம வினைகள் என்ற தேவ ரகசியத்தை பொதித்து வைக்கிறார்.

ஒவ்வொரு ஜீவனும் அதனதன் கர்மவினைகள அனுபவிக்க பிறவி எடுக்கிறது. அந்த கர்ம வினைகளின் விளைவுக்கு ஏற்பவே... இந்த வாழ்வில் தொடர்புகளும் ஏற்படுகிறது. அந்த தொடர்புகளாக தாய்... தந்தை... புத்திரம்... பௌத்திரம் என அமைவுகளும் ஏற்படுகிறது. நம்மோடு தொடர்பு பெறும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இதே போல கர்ம வினைச் சூழல்கள்தான் அமைந்திருக்கும்.

எனவே ஒருவருக்கு இந்தப் பிறவியில் அமையும் உறவான மக்கட்பேறு... அவரவரின் கர்ம வினைகளுக்கு ஏற்பவும்... அந்த மக்கட்பேறுவின் தொடர்பும் அதனதன் கர்ம வினைகளுக்கு ஏற்பவுமே அமைகிறது. இந்த ரகசியத்தைத்தான்... 'தம்தம்' என்ற சொல்லால் உணர்த்துகிறார் இந்த வார்த்தை சித்தர்.

இந்த ரகசியம் புரியும் போது, 'எனது மக்களின் பிறப்புக்கு எனது கர்மவினைகள்தான் காரணம்'... என்று பெற்றோரும்... 'இந்தக் குடும்பத்திற்குள்ளான எனது பிறப்புக்குக் காரணம் எனது பூர்வ வினைகளே'... என்று குழந்தைகளும் உணர்ந்து கொள்ளும்.

இந்தக் குறளில் வரும் 'பொருள்' என்ற சொல்லுக்கு 'வினைகளின் விளைவுகள்'... என்ற பொருளாக மலரும்.

இந்த சூட்சுமத்தை உணரவைத்து... தமது வினையின் விளைவுகள்தான் தமது மக்கட் பேறு... அவர்களின் வினைகளின் விளைவுகள்தான் தத்தமது குழந்தைகளால் அனுபவிக்கும் அனுபவமென்ற... பிறவி ரகசியத்தை இந்தக் குறளில் அமைத்திருக்கிறார்... இந்த ஞானச் செம்மல்.

ஸாய்ராம்.







Monday, June 3, 2019

சிவசக்தித் தாயார் - திருவண்ணாமலை

சிவசக்தித் தாயார் - திருவண்ணாமலை :

'அசலம்' என்பது அசையாத தன்மையைக் குறிக்கும். அந்த அசையாத மலைதான் அருணாசலேஸ்வரராக, திருவண்ணாமலையில் என்றும் நிலைத்திருக்கிறது.

அந்தக் காந்த மலையால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற மகன்னீயர்கள்... தபஸ்விகள்... ஞானிகள்... யோகிகள் வரிசையில்... இன்று அந்த காந்த மலையால் ஈர்க்கப்பட்டு 25 வருடங்களுக்கு மேலாக... தொடர்ந்து அந்த மலையடிவாரத்தில்... மௌன யோகினீஸ்வரியாக அருள்பவர்தான்... 'அன்னை சிவசக்தித் தாயார்'.

வெறும் காற்றையே... தமது பிராணனாகக் கொண்டு வாழும்... இந்த தபஸ்வினி... நாமறிந்த வரையில் எந்த உணவையும் தம் உயிர் வாழ்விற்கு ஏற்றுக் கொள்வதில்லை. காற்றில் பறக்கும் சருகு போல தன் வாழ்வை நடத்தும் அன்னையின் தீட்க்ஷண்யமான பார்வையை தாங்கும் சக்திதான் நமக்கு இருப்பதில்லை.

அந்த அருள் கண்கள் நம்மை ஊடுருவிப் பார்க்கும் போது... ஒரு எல்லையற்ற சக்தி நமக்குள் புகுந்து... நம்மை அங்குலம்... அங்குலமாக கூறுபோட்டுப் பார்ப்பதை நம்மால் உணரமுடியும். நம் மனதின்... இண்டு... இடுக்குகளில்... ஒளிந்திருக்கும் எத்தனையோ ரகசியங்கள்... நமது கட்டுப் பாட்டையும் மீறி... அவரின் அருட் பார்வைக்கு இலக்காவதை நம்மால் தடுக்க முடிவதில்லை.

அவரின் தரிசனம் முடிந்து... அந்தத் தாயார் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல சிறகை விரித்து கடந்து போனதற்குப் பின்னரும்... அந்த தரிசன மகிமையின் அற்புதம் நம்மை விட்டு நிங்குவதில்லை.

ஆம்... அவர் பார்த்தது... நமது உடலை அல்ல... கர்மாவை சுமந்திருக்கும் நமது ஜீவனை அல்ல... என்றும் நிலைத்திருக்கும் ஆத்மாவை. அதுதான் தீக்ஷை என்பதை நாம் அறிந்து கொள்ளும் முன்னரே... அதை நமக்கு அளிக்கும் கருணை வள்ளலே... சிவ சக்தித் தாயார்.

வாழும் மனன்னீயர்களின் தொடர்பைப் பெறுவது... எத்தனையோ கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்களின் தொகுப்பே. அந்த புண்ணியம் முழுவதும் தாயாரின் வடிவமாக... திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கிறது. ஆனந்தம் பெறுவோம். வாரீர்.

ஸாய்ராம்.






கவிஞர் கண்ணதாசன் - ஒரு பார்வை - பகுதி 1 :

கவிஞர் கண்ணதாசன் - ஒரு பார்வை - பகுதி 1 :

நமக்குள் இருக்கும் இறைவனை, தியானம் என்ற உள் முக தரிசனத்தாலும்... இறைவனுக்காக ஒரு ஆலயத்தை எழுப்பி, அதில் அவரது திருவுருவத்தை வடித்து, அதை வழிபடுவதன் மூலமும்... அனுபவித்து வருகிறோம். இந்த அனுபவம் கனிந்து ஒரு பூரணத்துவத்தை அடையும் போது... காணும் அனைத்திலும் அந்த இறைவனைக் கண்டு மகிழ்கிறது மனம்.

அது போலவே, இந்த புவியில் இயற்கை, தனது அழகை எண்ணற்ற வளங்களாக வெளிப்படுத்தும் போது... கண்களால் கண்டும்... மனதினால் ரசித்தும்... ஆத்மார்த்தமாக அனுபவிக்கும்... கவிஞர்...

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக - அன்னை
மடியை விரித்தாள் எனக்காக...

... என்று  மடியை விரித்த இயற்கையின் செல்வங்களாக... ஓடும் நதியையும்... அதன் கரையிலிருந்து பூத்துக் குழுங்கி மணம் பரப்பும் மலர்களையும்... நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி... அவருடன் நம்மையும் சேர்ந்து அனுபவிக்க வைக்கிறார்.

அந்த அனுபவத்தின் பூரணம் கனியும் போது... அதன் பின்னனியில் இருந்து இயக்கும் இறைவனை...

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்...

... என்று தனது உள்ளுணர்வால் அனுபவிக்கும் போது... நமது மனமும் அவரின் உள்ளுணர்வுடன் இணைந்து விடுகிறது.

இறைவனை நாம் அறிவது ஒரு அற்புதம்... அந்த இறைவன் நம்மை அணைத்துக் கொள்வது ஒரு ஆனந்த அனுபவம்... இந்த அனுபவத்தைத்தான்... மாணிக்கவாசகர், '...அவனருளாளே... அவன் தாள் வணங்கி...' என்று 'சிவபுராணமாக்கினார்'. அந்த அனுபவத்தை கவிஞர்... இந்தப் பாடலில்...

'...என்னை... அவனே தானறிவான்...'

...என்ற... இறுதி வரியாக்கி... அந்த ஆனந்த அனுபவத்தில் நம்மையும் திளைக்க வைக்கிறார்.

திரைக் கதையின் சூழலுக்குத்தான் பாடல்... ஆனால் அந்த சூழலுக்காக எழுதும் பாடலுக்குள்... இந்த சூட்சுமத்தை வைக்கும் கவிஞரின் ஞானம்தான் என்ன...!

ஸாய்ராம்.


Sunday, June 2, 2019

ஜோதிடமும் அதன் அணுகுமுறையும் :



ஜோதிடமும் அதன் அணுகுமுறையும் :

'இரு குடும்பங்களின் இணைவுக்குப்' பாலமாக இருந்த 'திருமணம்'... இன்று, 'இருவரின் இணவைப்' பற்றி மட்டுமே... பேசும் நிலைக்கு வந்துவிட்டது.

இது 'காலத்தின் கட்டாயம்'. நல்ல குடும்பம் -> குணம் -> கல்வி-> கல்வியுடனான
வேலை -> தனிக் குடும்ப அமைவு -> நிறைந்த பொருளாதார நிலை -> வசதியான வாழ்வு... என எதிர்பார்ப்புகள் படிப்படியாக மாற்றம் பெற்றுவிட்டன.

இந்த மாற்றம் 'மணமக்களிடம்' மட்டுமல்ல... 'மணமக்களின் குடும்பத்தினரிடமும்' விரவி விட்டது. எனவேதான்... பொருத்தம் என்பது... 'நட்சத்திரத்திரத்தை' மட்டும் அடிப்படையாகக் கொண்ட நிலையிலிருந்து... 'ஜாதக ரீதியிலான' இணைப்பை... நோக்கி நகர்ந்து விட்டது.

'ஜாதக ரீதியிலான பொருத்தமே'... இந்த 'எதிர்பார்ப்புகளின் உண்மை நிலையையும்'... 'யதார்த்தத்தையும்'... அந்த வரன்களுக்கு உணர்த்த முடியும்.
இப்போதுதான்... 'ஜோதிடர்களின்'... 'ஆத்மார்த்தமான ஆலோசனை'... இந்த வரன்களுக்குத் தேவைப்படுகிறது. அதற்கு வரன்களும்... வரன்களின் பெற்றோர்களும்... ஜோதிடர்களும் முன்வர வேண்டும்.

ஜோதிடப் பணி... 'இன்றைய சமுதாயத்திற்கான'... 'ஆக்கப் பூர்வமான பணியாகவும்' ஆகிவிட்டது. இது காலத்தின் கட்டாயம்.

ஸாய்ராம்.


Saturday, June 1, 2019

ஸ்ரீரங்கம் - பூலோக வைகுந்தம் - பகுதி 2. ஆண்டாள் தாயார்.

ஸ்ரீரங்கம் - பூலோக வைகுந்தம் - பகுதி 2. ஆண்டாள் தாயார்.

வடபத்ரசாயியின் திருக்கோவில் அமைந்துள்ள வில்லிப்புத்தூரில்... 'விஷ்ணுசித்தர்' என்ற திருத்தொண்டரின் தொண்டுக்கு மனமிரங்கிய திருவரங்கன்... தனது லீலையைக் கொண்டு... அவரை 'பெரியாழ்வாராக' மாற்றிய அற்புதம்தான்...  பூமிப் பிராட்டியை, 'கோதையாகப்' பிறக்க வைத்த லீலை.

திருமாலுக்கு... திருமாலை புனைவதையே தொண்டாகக் கொண்ட விஷ்ணுசித்தர்... பூக்களைக் கொய்வதற்காக நந்தவனம் சென்ற போது... அங்கு துளசிச் செடிகளுக்கிடையே... ஒரு குழந்தையைக் கண்டார். அந்த பெண் குழந்தைய வாரி அணைத்து... அதற்கு 'கோதை' என்ற நாமம் சூட்டி வளர்த்து வந்தார்.

திருக்கோவிலையே வலம் வந்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு தெரிந்ததெல்லாம் அரங்கனை ஒட்டிய விளையாடல்களே. தனது சின்னஞ்சிறு கைகளைக் கொண்டு... பூக்களை சேர்த்து மாலையாக்கி... அதை அரங்கனின் திருவடியில் சமர்ப்பிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தது... அந்தக் குழந்தை. ஆலயத்திற்கு வரும் அனைவரையும் ஈர்க்கும் அந்த குழந்தைக்குப் பிடித்ததெல்லாம்... தனிமையே.

அரங்கனுக்கென மாலை கட்டி அதை கூடையில் வைத்துவிட்டு... விஷ்ணு சித்தர் சற்று நகர்ந்ததும்... அதை எடுத்து தான் சூட்டி அழகு பார்ப்பதுதான் இந்தக் குழந்தையின் வாடிக்கையாக இருந்தது. அதை ஒரு முறை கண்டு... கண்டித்த விஷ்ணுசித்தர்... ஒரு புது மாலையைக் கட்டி... அரங்கனுக்கு சமர்ப்பித்த போது... அதை அவிழச்செய்து... கோதை சூட்டிய மாலையையே...தனக்குச் சூட்டி மகிழ்ந்திருந்தான் அரங்கன்.

குழந்தைதானே... என்று நினைத்து வந்த விஷ்ணுசித்தர்... பருவமடைந்த பின்னர்... கோதையின் பக்தி கனிந்து... அரங்கனின் மேல் காதல் என்றானதும்... பதறிப் போய் விட்டார். 

ஒரு முறை கூட திருவரங்கனின் தரிசனத்தைக் காணாத கோதை... அரங்கனைஅடைந்தேயாக வேண்டும்... என்ற வைராக்யத்தில் மார்கழி மாதத்து முப்பது நாட்களும் நோன்பு நோட்க ஆரம்பித்தாள்.

கோதையின் வைராக்கியத்தையும்... விஷ்ணுசித்தரின் கவலையயும் தீர்க்க... அரங்கன், விஷ்ணு சித்தரின் கனவிலும்... திருவரங்கத்து தலைமை பட்டரின் கனவிலும் வந்து... கோதை யார் என்பதையும்... அவளின் அவதார நோக்கத்தையும் தெளிவுபடுத்தி... கோதையை அழைத்துக் கொண்டு தனது திருவடிக்கு வரும்படி பணித்தான்.

அரங்கனின் திருவுள்ளப்படி... விஷ்ணுசித்தர், தான் அன்புடன் வளர்த்த குழந்தையை, திருமாலின் திருவடி சேர்க்க திருவரங்கம் வந்து அரங்கனின் திருமுன்னர் நின்றார். வில்லிப்புத்தூர் பக்தர்கள்... திருவரங்கத்து பக்தர்கள்... என குழுமியிருந்த எண்ணற்ற பக்தர்களின் முன்னிலையில்...

              ...இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
                 எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
                 உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
                 மற்றைய நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்...

 ...என்ற கோதையின் பாடல் வரிகளுக்கொப்ப...அரங்கனின் திருவடிகளிலேயே... தனது கண்களையும், மனதினையும் பதித்திருந்த கோதையை... தனது இன்னடிகளில் சேர்த்துக் கொண்டான்... திருவரங்கத்து இன்னமுதன். 

கோதை... ஆண்டாளானாள். விஷ்ணுசித்தர்... பெரியாழ்வாரனார்.   இந்த இருவரது தேனினும் இனிய பாசுரங்களை... திவ்வியப் பிரபந்தங்களாக என்றும் கேட்டு ரசித்துக் கொன்டிருக்கிறன்... வைகுந்தபதியான அரங்கநாதன்.

ஸாய்ராம்.



ஸ்ரீரங்கம் - பூலோக வைகுந்தம் - பகுதி 1. திருப்பாணாழ்வார்.

ஸ்ரீரங்கம் - பூலோக வைகுந்தம் - பகுதி 1. திருபாணாழ்வார்.

இவர் ஒரு முறையேனும் திருவரங்கனை தரிசித்ததில்லை. ஆனாலும் இவருக்கு அரங்கன் மேல் ஆற்றவொண்ணா காதல். இந்த அன்புதான் அவரை அன்றாடம் திருவரங்கத்திற்கு ஈர்த்தது.

ஆலயத்திற்குள் பிரவேசிக்க அன்பும்... பக்தியும்... மட்டும் போதாது, அதற்கான வர்ணமும் தேவையான காலமாக அன்றைய சூழல் இருந்தது. அதற்காக கலங்காமல் இவர் அம்மாமண்டபம், காவேரிக் கரையோரம் வந்து காலையிலேயே அமர்ந்துவிடுவார். கையில் தம்பூரா... மனதில் அரங்கனின் தரிசனம்... வாயிலோ அரங்கனின் திருநாமம்... என அவரின் வாழ்நாட்கள் கடந்தன. அவரின் அன்புக்கும்... பக்திக்கும் மனமிரங்கிய அரங்கன் அன்றைய நாளில்... அந்த எளிய பக்தனுக்கு தன் இன்னருளைக் காட்ட எண்ணினான்.

அரங்கனின் திருமஞ்சனத்திற்கு அன்றாடம் அம்மாமண்டபக் காவேரிக் கரைக்கு நீர் எடுக்க வரும் பட்டரின் வழியில் இந்த பக்தர் அமர்ந்து... கண்மூடி அரங்கனின் தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரை விலகச் செய்வதற்காக... ஒரு சிறு கல்லை எடுத்து, பட்டர் அவர் மீது வீசினார். அது அவரின் நெற்றியில் சென்று பட்டுவிட... கண்விழித்த பக்தர் சூழலைப் புரிந்து கொண்டு... தன் வலியைக் கூட பொருட்படுத்தாமல்... அரங்கனின் தொண்டுக்குத் தான் இடையூராக இருந்துவிட்டோமே என்ற வருத்தத்தில்... வலிந்து, வலிந்து பட்டரிடம் மன்னிப்பைக் கோரினார்.

சற்று நேரத்திற்கெல்லாம்... திருமஞ்சனத்திற்கான நீர் கருவரையின் வாயிலைச் சென்று அடைந்தது. அங்குதான் தனது லீலையை ஆரம்பித்தான் திருவரங்க இன்னமுதன். கருவறையின் கதவுகளை இறுக மூடிக் கொண்டான். என்ன முயற்சி செய்தாலும் திறக்க முடியவில்லை என்னும் நிலையில்... தலைமைப் பட்டர், ஏதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கலாம் என்று உணர்ந்து... அரங்கனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தார். அரங்கனின் பதில் அசரீரியாக கருவறை உள்ளே இருந்து வந்தது.

'எனது அந்தரங்க பக்தனை காயப்படுத்தி எடுத்த வந்த இந்த நீர் எனது திருமஞனத்திற்கு உகந்ததல்ல...!' என்ற அரங்கனின் கூற்றைக் கேட்ட பட்டர்... 'சுவாமி...! நான் தவறு செய்துவிட்டேன்... என்னை மன்னித்தருளுங்கள்...!' என்று கண்ணீருடன் மன்றாடினார். 'அந்த பக்தனை உமது தோளில் சுமந்து கொண்டு வந்து எனது திருவடியில்... சேர்த்துவிடு...!' என்பதுதான் அரங்கனின் ஆணையாக அமைந்தது.

அரங்கனின் ஆணைக்கு இணங்கி... காவேரிக் கரைக்குச் சென்ற பட்டர்... இரத்தம் வடிந்து காய்ந்த நெற்றியுடன், கண்மூடி தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரை வலிந்து... தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்டு... அரங்கனின் திருவாயிலில் வந்து நிற்க... கருவறையின் கதவுகள் தாமாகத் திறந்தன.

அப்போதுதான் கண்விழித்த பக்தர்... சூழ்நிலையின் விழிப்புணர்வுக்கு வந்து... தான் காண்பது கனவா... இல்லை நனவா... என்ற ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார். இத்தனை நாள்  கற்பனையிலேயே இருந்த தனது 'உளம் கவர் கள்வனின்' தரிசனத்தால்... ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிப் போன பக்தரின் வாயிலிருந்து... பக்தியின் ஊற்றாக பத்துப் பாடல்கள் வெளிவந்தது. அந்த இறுதிப் பாடல்...
       
                 கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
                 உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
                 அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
                 கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே

... என்று ஒலித்த அடுத்த க்ஷணம்... தன்னை அறியாமல் கருவறையின் உள்ளே ஈர்க்கப்பட்ட பக்தர்... அரங்கனின் திருவடியில் ஒன்று கலந்துவிட்டார். 'தேகவியோகம்' என்ற உயர்ந்த கதியான... தேகத்துடனான வைகுந்தப் பயணத்தில்... அரங்கனுடன் இணைந்தே விட்டார்.

அந்த பக்தனை... ஆழ்வார்களில் ஒருவராக்கி... 'திருப்பாணாழ்வார்' என்ற திருநாமத்துடன்... அன்றும்... இன்றும்... என்றும்... தனது திருச்சன்னதியில்... பிரபந்தமாக... அரையரிகளின் மூலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறான் அரங்கன்.

திருவரங்கம்... பூலோக வைகுந்தம்தான்.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...