Monday, June 17, 2019

ஞானப்பழம்

ஞானப்பழம்

ஒரு மாம்பழத்தைக் கொண்டு வந்து 'சர்வேஸ்வரனிடம்' அளிக்கிறார் 'நாரத மகிரிஷி'. அது 'ஞானப்பழம்' என்றும்... அதைப் புசிப்பவருக்கு ஞானம் கைகூடும் என்றும்... மகிரிஷி தெரிவிக்க... இந்த லீலையை நடத்தும் சர்வேஸ்வரன்... அந்தக் கனியை 'சக்தி தேவியியிடம்' அளிக்கிறார். சக்தி தேவியோ... இந்தத் திருவிளையாட்டின் சூக்ஷுமத்தை அறிந்து... அந்தக் கனியை தமது பிள்ளைகளுக்கு அளிக்கலாம் எனக் கூறுகிறார்.

சர்வேஸ்வரன் தமது பிள்ளைகளான 'விக்னேஸ்வரனையும்'... 'கார்த்திகேயனையும்'... அழைத்து, நாரதர் கொண்டு வந்த ஞானப்பழத்தின் பெருமையைக் கூறி... அதைப் பெருவதற்கு...  'இந்த உலகத்தை எவர் முதலில் சுற்றி வருகிறாரோ... அவருக்கே இந்தக் கனி...!' என்பதான... ஒரு போட்டியை வைக்கிறார்.

தனது 'வாகனமான மயிலின்' மீது ஏறி 'உலகத்தைச் சுற்றிவர' கார்த்திகேயன் புறப்பட... தனது 'தாய், தந்தையரே உலகம்' என்பதை அவர்களின் வழியாகவே உறுதி செய்து... அவர்களை திருவலம் வந்து அந்தக் கனியை எடுத்துக் கொள்கிறார் விக்னேஸ்வரன்.

திரும்பி வந்து நிகழ்வுகளை அறிந்த கார்த்திகேயன்... தனக்கு அநீதி இழைத்துவிட்டதாகக் கருதி... சந்யாசியாக தனது வாழ்வை மாற்றி அமைத்துக் கொண்டார்... என இந்தக் கதை முடியும்.

இந்தக் கதை சொல்லும் சூக்ஷுமத்தை அறிந்து கொண்டால்... ஞானத்தின் பாதையைப் பற்றிய ஒரு தெளிவு பிறக்க ஏதுவாக இருக்கும். எப்போதுமே நமது புரதான ரிஷிகள்... ஞானத்தின் படிமுறைகளை... சிறு சிறு நிகழ்வுகளாக... கதையம்சத்துடன் கூடியதாக அமைத்துத் தருவார்கள்.

'மாம்பழம்' தானே... கதையின் மூலம்.  அதை ஏன் 'ஞானப்பழம்' என்று கூற வேண்டும்...? அறியாமை என்பது 'காய்' போன்றது. அறியாமை நீங்கி... ஞானம் பெறுவது 'பழம்' போன்றது. காய்... கனியாவதைப் போலத்தான்... அறியாமை நீங்கி... ஞானமடைவதும்.

எனவேதான் ஞானத்தை அடைவதற்கு உண்டான வழிமுறைகளை... இந்தக் கதையின் கருவாக வைத்திருக்கிறார்கள் ரிஷிகள். ஞானம் பெறுவது எதற்காக...? என்ற கேள்விக்கு...தமது சொரூபமான... ஆத்மத்தில் என்றென்றும் திளைத்திருப்பதற்காகத்தான்... என்பதே பதிலாகும். இந்த அனுபவத்தை இருவழிகளில் அடையலாம்.

ஒன்று... தமது 'கர்மவினைகளை அனுபவிப்பதன்' மூலமாக... அதாவது, இந்த உலக வாழ்வில் ஈடுபட்டு... கர்ம வினைகளை... 'பற்றற்று' முடித்து... ஞானத்தைப் பெறலாம். இதற்கு, அதிக காலமும்... அதிக அனுபவங்களையும் ஏற்க நேரிடும். இதைத்தான்... கார்த்திகேயன்... பெற்ற அனுபவமாக... இந்தக் கதை விவரணம் செய்கிறது.

இரண்டாவது... 'ஞானத்திற்கான சாதனையில்' ஈடுபடுவது. அதாவது, இந்த உலக வாழ்வின் உழல்விலிருந்து மீண்டு... உள்வாழ்வான 'ஆத்ம சாதனையில்' ஈடுபடுவது. இந்த ஜீவனை... அதன் மூலமான ஆத்மாவில் கொண்டு போய் சேர்ப்பது. அதற்கு இந்த கர்ம வினைகளின் உற்பத்தி ஸ்தானமான மனத்தை... ஜீவனில் ஒடுக்கி... அந்த ஜீவனை... ஆத்மாவில் ஒடுக்கும் சாதனை. இதைத்தான்... விக்னேஸ்வரன்... சக்தியையும், சிவத்தையும் வணங்கி... அதன் மூலமாக... அந்த ஞானத்தைப் பெற்றுக் கொண்ட அனுபவமாக... இந்தக் கதை விவரணம் செய்கிறது.

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...