Saturday, June 1, 2019

ஸ்ரீரங்கம் - பூலோக வைகுந்தம் - பகுதி 2. ஆண்டாள் தாயார்.

ஸ்ரீரங்கம் - பூலோக வைகுந்தம் - பகுதி 2. ஆண்டாள் தாயார்.

வடபத்ரசாயியின் திருக்கோவில் அமைந்துள்ள வில்லிப்புத்தூரில்... 'விஷ்ணுசித்தர்' என்ற திருத்தொண்டரின் தொண்டுக்கு மனமிரங்கிய திருவரங்கன்... தனது லீலையைக் கொண்டு... அவரை 'பெரியாழ்வாராக' மாற்றிய அற்புதம்தான்...  பூமிப் பிராட்டியை, 'கோதையாகப்' பிறக்க வைத்த லீலை.

திருமாலுக்கு... திருமாலை புனைவதையே தொண்டாகக் கொண்ட விஷ்ணுசித்தர்... பூக்களைக் கொய்வதற்காக நந்தவனம் சென்ற போது... அங்கு துளசிச் செடிகளுக்கிடையே... ஒரு குழந்தையைக் கண்டார். அந்த பெண் குழந்தைய வாரி அணைத்து... அதற்கு 'கோதை' என்ற நாமம் சூட்டி வளர்த்து வந்தார்.

திருக்கோவிலையே வலம் வந்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு தெரிந்ததெல்லாம் அரங்கனை ஒட்டிய விளையாடல்களே. தனது சின்னஞ்சிறு கைகளைக் கொண்டு... பூக்களை சேர்த்து மாலையாக்கி... அதை அரங்கனின் திருவடியில் சமர்ப்பிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தது... அந்தக் குழந்தை. ஆலயத்திற்கு வரும் அனைவரையும் ஈர்க்கும் அந்த குழந்தைக்குப் பிடித்ததெல்லாம்... தனிமையே.

அரங்கனுக்கென மாலை கட்டி அதை கூடையில் வைத்துவிட்டு... விஷ்ணு சித்தர் சற்று நகர்ந்ததும்... அதை எடுத்து தான் சூட்டி அழகு பார்ப்பதுதான் இந்தக் குழந்தையின் வாடிக்கையாக இருந்தது. அதை ஒரு முறை கண்டு... கண்டித்த விஷ்ணுசித்தர்... ஒரு புது மாலையைக் கட்டி... அரங்கனுக்கு சமர்ப்பித்த போது... அதை அவிழச்செய்து... கோதை சூட்டிய மாலையையே...தனக்குச் சூட்டி மகிழ்ந்திருந்தான் அரங்கன்.

குழந்தைதானே... என்று நினைத்து வந்த விஷ்ணுசித்தர்... பருவமடைந்த பின்னர்... கோதையின் பக்தி கனிந்து... அரங்கனின் மேல் காதல் என்றானதும்... பதறிப் போய் விட்டார். 

ஒரு முறை கூட திருவரங்கனின் தரிசனத்தைக் காணாத கோதை... அரங்கனைஅடைந்தேயாக வேண்டும்... என்ற வைராக்யத்தில் மார்கழி மாதத்து முப்பது நாட்களும் நோன்பு நோட்க ஆரம்பித்தாள்.

கோதையின் வைராக்கியத்தையும்... விஷ்ணுசித்தரின் கவலையயும் தீர்க்க... அரங்கன், விஷ்ணு சித்தரின் கனவிலும்... திருவரங்கத்து தலைமை பட்டரின் கனவிலும் வந்து... கோதை யார் என்பதையும்... அவளின் அவதார நோக்கத்தையும் தெளிவுபடுத்தி... கோதையை அழைத்துக் கொண்டு தனது திருவடிக்கு வரும்படி பணித்தான்.

அரங்கனின் திருவுள்ளப்படி... விஷ்ணுசித்தர், தான் அன்புடன் வளர்த்த குழந்தையை, திருமாலின் திருவடி சேர்க்க திருவரங்கம் வந்து அரங்கனின் திருமுன்னர் நின்றார். வில்லிப்புத்தூர் பக்தர்கள்... திருவரங்கத்து பக்தர்கள்... என குழுமியிருந்த எண்ணற்ற பக்தர்களின் முன்னிலையில்...

              ...இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
                 எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
                 உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
                 மற்றைய நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்...

 ...என்ற கோதையின் பாடல் வரிகளுக்கொப்ப...அரங்கனின் திருவடிகளிலேயே... தனது கண்களையும், மனதினையும் பதித்திருந்த கோதையை... தனது இன்னடிகளில் சேர்த்துக் கொண்டான்... திருவரங்கத்து இன்னமுதன். 

கோதை... ஆண்டாளானாள். விஷ்ணுசித்தர்... பெரியாழ்வாரனார்.   இந்த இருவரது தேனினும் இனிய பாசுரங்களை... திவ்வியப் பிரபந்தங்களாக என்றும் கேட்டு ரசித்துக் கொன்டிருக்கிறன்... வைகுந்தபதியான அரங்கநாதன்.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...