Saturday, June 22, 2019

தேரோட்டம்

தேரோட்டம் :

ஆலயங்களைச் சுற்றிலும் அமைந்த நான்கு மாட வீதிகள் வெகு பிரசித்தமானவை. அவை... நான்கு புற கோபுர வாயில்களை... இணைக்கும் பாலங்களாக அமையும். மேலும் இறைவன் தனது திருவுலாவை நடத்தும் அரங்கமாக இருக்கும். பல்லக்கு முதல் திருத்தேர்கள் வரை வலம் வரும் பாதைகளாகவும் அமையும்.

தேரோட்டம் ஒரு ஆலயத்தின் மிக முக்கியமான நிகழ்வு. அந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட தேரில் இறைவன் எழுந்தருளி... நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து... குவிந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் தனது தரிசனத்தை வழங்குவார்.

கருவறையில்... கருவறை விமானத்திற்குக் கீழ் அமர்ந்து... நமக்குக் காட்சி கொடுப்பது போல... மிக உயர்ந்த தேரின் உள் அமர்ந்து... பெரிய சக்கரங்கள் மெதுவாக சுழன்று முன்னேற... பக்தர்கள் தேரின் இருபுறமும் இருந்து வடம் பிடித்து இழுக்க... கொடிகள் அசைந்தாட... மெதுவாக நகர்ந்து வரும் தேரைப் பார்க்கும் போது... அந்த கருவறையே... நம்மை நோக்கி... மூலவரை அழைத்துக் கொண்டு வருவது போல தோன்றும்.

இந்தத் தேரோட்டம் நமக்கு உணர்த்தும் பாடம்... 'ஒரு தேரின் பயணம்... அது புறப்பட்ட இடத்தை மீண்டும் வந்து அடைவதே...!'. அதற்காக, அந்தத் தேர் நான்கு மாட வீதிகளில்... மூன்று இடங்களில் திரும்ப வேண்டி இருக்கிறது. தேரைத் திருப்புவதற்கு... அதன் சக்கரத்தின் அடியில்... 'சன்னக் கட்டை' என்ற ஒரு தடையை வைத்து... தேரைத் திருப்ப வேண்டியிருக்கிறது. அது மிக ஆபத்தான ஒரு பணி... அதற்காக தேர்ந்த ஒரு குழுவே... ஓய்வில்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும். அந்த கடுமையான பணி... தேரை சரியான கட்டங்களில் திருப்பி... அது புறப்பட்ட இடத்தில் கொண்டு வந்து சேர்க்கும்.



அது போலத்தான்... மனித வாழ்வும். மனிதனின் வாழ்வின் பாதையும் தேரோட்டத்தைப் போலத்தான், இறைவனின் அருள் கருணையை மூலமாகக் கொண்டு பிறக்கும் மனிதன்... மீண்டும் அந்த இறைவனின் திருவடியை அடைவதே... வாழ்வின் நோக்கம்.

பால பருவம்... இளமை என்ற பிரம்மச்சரியம்... இல்வாழ்வு என்ற கடமை பருவம்... வானப்பிரஸ்தம் என்ற துறவு பருவம். இந்த நான்கு பருவத்தையும் கடந்தே ஒரு மனிதன்... தன் வாழ்வு நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது.

இந்த நான்கு நிலைகளையும்... தக்கத் தருணங்களில் கடந்து போக... நமது கர்மவினைகளைக் கொண்டு... இறைவன் போடும் முட்டுக் கட்டைகளே... நமது வாழ்வில் முக்கியமான தருணங்களில் ஏற்படும்... திருப்பங்கள். இந்தத் திருப்பங்களே, நம்மை சரியான பாதையில் வழி நடத்தி... மீண்டும் பிறவாமை என்ற இறைவனின் திருவடியில் கொண்டு... நமை சேர்க்கும்.



மனித வாழ்வின் இந்தப் பயணத்தை... மீண்டும், மீண்டும் நமக்கு உணர்த்தும் பாடமே... தேரோட்டம் என்ற இறைவனின் திருவுலா.

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...