Sunday, June 16, 2019

குரு தேடல் - பகுதி 2. மதுரகவி ஆழ்வார்.

குரு தேடல் - பகுதி 2 :

பன்னிரு ஆழ்வார்களில்... 'மதுரகவி ஆழ்வார்'... தனித்துவம் பெற்றவர்.

ஏனைய ஆழ்வார்கள் எல்லாம், பரம் பொருளான 'திருமாலின் பெருமைகளைப்' பாடிப் பரவசம் அடைந்தனர். ஆனால், இந்த ஆழ்வாரோ... பரம் பொருளின் அவதரமான... 'நம்மாழ்வாரின் திருவடிகளில்' தஞ்சம் அடைந்து... அவருக்குச் சேவை செய்து... அவரின் புகழைப் பாடி... தனது ஒப்பில்லா குருவின் திருவடிகளில் ஒன்று கலந்து... அடியார்க்கும் அடியாரானார்.

நம்மாழ்வார் அவதாரம் செய்த... 'திருக்குருக்கூரிற்கு' வெகு அருகிலேயே... 'திருக்கோளூரில்' பிறந்த இந்த சாதகர்... தனது சாதனைக்கான... குரு தேடலில்... வடக்கு நோக்கி பயணம் செய்தபடி இருந்தார். ஆனால், அவருக்கான 'சத்குரு' திருக்குருக்கூரில் எழுந்தருளியிருப்பதை... அவரறியார்.

திருவரங்கனின் கருணை... இந்த சாதகரை... தனது 'ஒளிப் பிழம்பால்' வழி நடத்தி... திருக்குருக்கூருக்கு அழைத்து வந்தது. அவ்வூருக்கு வந்தவர், இந்த ஊரில் ஏதோ ஒரு அற்புதம் இருப்பதை உணர்ந்தார். ஆனால், அது என்ன என்பதை அறிந்திடாது அலைந்து திரிந்தார்.

அந்த ஊரில் இருப்பவர்களின் வழியே... இங்கு ஒரு மகான்... பிறந்தது முதல் தற்போது வரை... ஒரு புளியமரப் பொந்தில்... ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதை அறிந்து... அந்த மரத்திற்கு அருகே வந்து நின்றார். அங்கு வந்து நின்ற நொடியே... தனது உள்ளுணர்வின் உணர்வு... தனது தேடலின் முடிவு இந்த இடத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்த்தியது.

ஆடாது... அசையாது... ஒரு கற்சிலைபோல் அமர்ந்திருக்கும்... தனது 'சத்குருவை' வணங்கி... தனது மனதில் என்றும் நீங்காதிருந்த சந்தேகத்தை...  'சுவாமி...!, செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்...?'... என்று, ஒரு கேள்வியாக்கினார்... கூடி நிற்பவர்களின் ஆச்சரியத்திற்கிடையே... இதுவரை... மௌனமாக இருந்த ஞானச் செம்மல்... தனது திருவாய் மலர்ந்து அருளினார்... ' அத்தைத் தின்று அங்கே கிடக்கும்...!' என்று.

தனது, என்றும் நீங்காத சந்தேகத்திற்கு... இன்று விடை கிடைத்தது கண்டு... அந்த இடத்திலேயே ஆனந்தக் கூத்தாடினார் இந்த பக்தர்.

 'இந்த இறந்து போகும் உடலில்... என்றும் நிலைத்திருக்கும்... ஆத்மாவை மூலமாகக் கொண்ட ஜீவன்... வசிக்க நேரும் போது... அது எதைக் கொண்டு உயிர் வாழ்கிறது...?' என்ற சந்தேகத்திற்கு... மகான் அருளிய பதில்...' அந்த ஜீவன் தனது கர்ம வினைகளையே... ஆதரமான மூலமாகக் கொண்டு... உயிர் வாழ்கிறது...!' என்ற உயர்ந்த 'ரகசியத்தை' அருளினார்.

அன்றிலிருந்து... தனது குருவின் திருவடியிலேயே... தனது சேவையைக் காணிக்கையாக்கி... தனது குருவிற்காக... 'பத்து பாடல்களை' அர்ப்பணித்தார். 'கண்ணின் நுன்சிறுத்தாம்பு...' என்று தொடங்கும் பாடல்கள்... நம்மாழ்வாரின் புகழை இந்த அவனிக்கு உணர்த்தியது மட்டுமல்ல... இந்த அடியாரை... அரங்கனின் திருவடி நிழலில் சேர்த்து... பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக மலரவைத்தது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...