Tuesday, June 4, 2019

கவிஞர் கண்ணதாசன் - ஒரு பார்வை - பகுதி 2 :

கவிஞர் கண்ணதாசன் - ஒரு பார்வை - பகுதி 2 :

ஒரு ஜீவனாகப் பிறப்பெடுக்கும் மனிதன் இரண்டு நிலைகளால் அவஸ்தைக்குள்ளாகிறான். ஒன்று... 'நான்' என்ற 'அஹங்காரம்'. இன்னொன்று 'என்னுடையது' என்ற 'மமகாரம்'.

இந்த இரண்டு அவஸ்தைகள்தான் இந்த  பிரபஞ்சத்தில் பிறப்பு... இறப்பு என்ற தொடர் ஓட்டத்திற்குக் காரணமாகிறது.

என்றும் நிலைத்திராத... அழியக்கூடிய... நாமம்-ரூபம் தாங்கிய...இந்த உடல்தான் 'நான்' என்ற அறியாமைதான்... அஹங்காரம்.

உடலை நிலையில்லாதது என்று அறியாது இந்த உடலுடன் தொடர்புடைய அனைத்தையும் என்னுடையது என்று நினைக்கும் நிலையே 'மமகாரம்'.

இந்த இரண்டு நிலைகள்தான்... இந்த ஜீவனை இந்த உலகவாழ்வில் பந்தப்படுத்துகிறது. பற்றுதலுக்கு உள்ளாக்குகிறது.

அறியாமையாகிய இந்த இரண்டு அவஸ்தைகளில் இருந்து, இந்த ஜீவன் என்று விடுபடுகிறதோ... அப்போதே அது ஞானத்தின் பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறது. பற்றை விடுத்து... பந்தத்திலிருந்து விடுதலை அடைகிறது.

இந்த ஞானம் பெருக்கெடுப்பது ஒரு ஜீவன் அடையும் துன்ப அனுபவத்தில்தான். இந்த உலக சுகங்களில் மூழ்கி... உறவுகளின் சங்கமத்தால் சூழப்பட்டு... அதன் பற்றுதல்காளால் துன்பப்படும் ஜீவனுக்குத்தான் இந்த ஞானத்தின் பாதை திறக்கிறது.

தந்தைக்கும்... மகனுக்கும் இடையேயான ஒரு உணர்வுப் போராட்டத்தில்... மகனது நடத்தைகளால்... துன்பத்தின் சூழலுக்குள் தள்ளப்படும் தந்தையின் நிலையை... வெளிப்படுத்துவதுதான் சூழல். அந்த சூழலுக்கு... கவிஞர்...

                                             
                                         '... சோதனை மேல் சோதனை
                                              போதுமடா சாமி...
                                              வேதனைதான் வாழ்க்கை என்றால்
                                              தாங்காது பூமி... '

... என்று தந்தையின் நிலையை வெளிப்படுத்துவார்.

இந்த துன்பத்தின் வெளிப்பாடு... அவருக்குள் ஒரு ஞானத்தை வெளிப்படுத்தும். அந்த ஞானத்தை...

                                           '... சொந்தம் ஒரு கைவிலங்கு
                                                நீ போட்டது... அதில்
                                                பந்தம் ஒரு கால்விலங்கு
                                                நான் போட்டது...

என்று... வேதனையையும்... விரக்தியையும்... அதிலிருந்து பெறும் ஞானம் என்பதாகவும்...தொடரும் வரிகளில் அமைப்பார்.

நாம் பிறக்கும் போது எதையும் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருந்ததில்லை. தந்தை - தாய் என்று அனைத்து உறவுகளும் தாமகவே... தமது வினைகளின் உறவுகளாக... வந்து சேருகிறது. அந்த உறவுகளின் வழியேயான ஜீவனின் பயணத்தைதான்...

                                           '... சொந்தம் ஒரு கைவிலங்கு
                                                நீ போட்டது ...'

என்றும்... அந்த 'கை விலங்கு' ஒரு ஜீவனை... எவ்வாறு கைதியாக்கிறது என்பதையும்... எப்போது அந்த கை விலங்கு நீங்குகிறதோ... அப்போதே அது சுதந்திராமாகிறது என்பதையும்... இரு வரிகளில் உணர்த்தி விடுகிறார்.

இறைவன் போட்டிருக்கும் இந்தக் கை விலங்கு என்ற பந்தம்... சிறுது சிறிதாக...
அந்த பற்றிலிருந்து விடுபட்டு விடுகிறது. தந்தை - தாயாரின் மறைவு... ஏனைய உறவுகளின் பிரிவுகள்... என காலம் ஒரு நிலையில் இந்த ஜீவனை முழுவதுமாக... இந்த பற்றிலிருந்து விடுவித்து... ஜீவனை சுதந்திரமாக்கி விடுகிறது.

இந்த விடுதலைக்கான காலத்திற்கு இடம் கொடாது...இந்த கை விலங்கு இந்த உடலிலிருந்து நீங்குவதற்கு முன்னரே... இந்த ஜீவன் தனக்கு ஒரு 'கால் விலங்கை' போட்டுக் கொள்கிறது. அது... இந்த ஜீவன் இந்த உலகத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளான மனைவி... குழந்தைகள்... நட்பு... போன்ற பந்தங்களும்... அதன் மூலம் ஏற்படுத்திக் கொள்ளும் பற்றுதல்களும்தான். அதைத்தான் கவிஞர்...

                                                'பந்தம் ஒரு கால்விலங்கு
                                                நான் போட்டது...'

என்று வருணிப்பார்.

ஒரு ஜீவனின் அறியாமையை... இரண்டு விதமாக கவிஞர் சுட்டிக் காட்டுகிறார். ஒன்று... நமது வினைகளின் விளைவுகளான கைவிலங்கு... மற்றொன்று நாமாக போட்டுக் கொள்ளும்... பந்தங்கள் என்ற கால் விலங்கு.

இந்த இரண்டு விலங்குகளிலும் இருந்து விடுபடும் ஜீவனே...ஆனந்த உணர்வில் சங்கமிக்கும்... என்ற ஞானத்தை அளிக்கும்... கவிஞரின் சிந்தனைதான் என்னே...!

ஸாய்ராம்.







              

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...