Sunday, June 30, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 3. (ராகு மற்றும் கேது பகவான்களைப் பற்றிய சூட்சுமம்)

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 3 :

ராகு மற்றும் கேது பகவான்களைப் பற்றிய சூட்சுமம் :

ஜோதிடம் வேதத்தின் ஒரு அங்கம். ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பயணம் பற்றிய ரகசியம். அது கிரகங்களின் வாயிலாக இந்த ஜீவனின் ரகசியத்தை... அந்த ஜீவனின் நலம் கருதி... வெளிப்படுத்தும் ஒரு அற்புதக் கலை.

தர்மம் என்பதுதான் வாழ்வின் மூலம். இந்த தர்மத்தின் வழியே நடப்பதுதான் ஜீவ வாழ்வின் நோக்கம். யுகங்கள் நான்கில்... முதல் யுகமான, 'கிருத யுகத்தில்'... தர்மம்... நான்கு கால்களில் இருந்தது. இரண்டாவது யுகமான 'திரேதா யுகத்தில்'... தர்மம்... மூன்று கால்களில் இருந்தது. மூன்றாவது யுகமான 'துவாபர யுகத்தில்'... தர்மம்... இரண்டு கால்களில் இருந்தது. இறுதி யுகமான... 'கலி யுகத்தில்'... தர்மம்... ஒரு காலில் நின்று கொண்டிருக்கிறது.

தர்மமே... வாழ்வு நெறியாக இருக்கும் போது, ஏழு கிரகங்களின் வழியாக ஒரு ஜீவனின் வாழ்வு முறையை அணுகுவது... முறையானதாக இருந்தது.  ஏனெனில், எல்லா ஜீவனின் வாழ்வு முறைகள் ஒரே மாதிரியாகவும்... அவைகளின் நோக்கமும் ஒரே மாதிரியாகவும் இருந்ததால்... ஜோதிடத்தின் பணி... அந்த ஜீவனை... அதனதன் பாதையில் வழிநடத்தி... அதன் மூலமான இறைவனின் திருவடியில் சேர்ப்பது எளிதாக இருந்தது.

அடுத்தடுத்த யுகங்களில்... தர்மத்தின் வழியிலான வாழ்வில்... பயணம் செய்வதில் ஜீவனுக்கு... ஏற்பட்ட மாறுபாடான வாழ்வியலில்... அது மிக ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தது. அதற்குக் காரணம்... அந்த ஜீவனின் வாழ்வியலில் அது 'எதிர்கொண்ட நிகழ்வுகளும்', அதற்கு அந்த ஜீவன் 'வெளிப்படுத்திய' வெளிப்பாடுகளும்தான்.

இந்த நிகழ்வுகளும்... வெளிப்பாடுகளும்... 'கர்மம்' என்ற தொகுப்பில் சேர்ந்து... 'கர்ம வினைகள்' என்ற மூலமாகியது. இந்த கர்ம வினைகளே... ஜீவனின் மறு பிறப்புக்கும் காரணமானது. மறுபிறப்பிலும்... அந்த ஜீவனின் வாழ்வின் பாதை... தனது முந்தைய பிறவியின்... கர்ம வினைகளின் படி நடந்ததும்... அதற்கேற்றவாறே... அந்த ஜீவன் தனது வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியதும்... அந்த ஜீவனின்... அடுத்தடுத்த பிறவிகளுக்கு ஆதாரமானது.

இவ்வாறு தொடர்ந்து, பிறவிகளின் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் ஜீவனை... அந்த சுழற்சியிலிருந்து விடுவிக்க... ஜோதிடத்தின் அமைப்பில்... இந்த 'கர்ம வினைகளையும்'   அதிலிருந்து 'விடுவிக்கும் வழியையும்'...  இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கான வடிவமே... 'ராகு பகவானும்'... 'கேது பகவானும்'.

'ராகு பகவான்'... கர்ம வினைகளின் மூலத்தையும்... 'கேது பகவான்'... அதிலிருந்து விடுபடுவதையும்... உணர்த்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான்... 'ஏழு கிரகங்களும்'... அதன் சுழற்சியை... இடமிருந்து - வலமாகவும், இந்த இரண்டு 'நிழல் கிரகங்கள்' மட்டும்... தமது சுழற்சியை... வலமிருந்து - இடமாகவும் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு கிரகத்தின் ஆதிபத்தியத்தின் மீதும்... இந்த 'பூர்வ வினையின் நிழல்'... ராகு பகவானின் மூலமாக... தனது  ஆளுமையைப் பதிக்கிறது. அதே நேரத்தில் அதற்கு எதிரில்... இந்த 'பூர்வ வினையைக் களையும் யுக்தியின் நிழல்'... கேது பகவானின் மூலமாக... தனது விடுவிப்பையும் அளிக்கிறது.

அதனால்தான்... ராகு பகவானுக்கு... அதிதேவதையாக, 'துர்க்கா தேவியையும்'... கேது பகவானுக்கு... அதிதேவதையாக... விக்னங்களை நீக்கும் 'விக்னேஸவரரையும்' அனுமானித்திருக்கிறார்கள் பூர்வ ரிஷிகள்.

மேலும்... ராகு பகவானின் காரகத்துவத்தை விளக்கும் போது...'போகக் காரகன்' என்றும்... கேது பகவானின் காரகத்துவத்தை விளக்கும் போது... ' மோக்ஷக் காரகன்' என்றும் வருணிக்கிறது... ஜோதிடம்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...