Thursday, April 30, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 4.





சற்சங்கப் பேராற் சனத்திரளைக் கூட்டினால்,
விற்பன்னர் பேச்சில், மிகப்படித்தோர் - கற்பனை
மெட்டேட் டபரவித்தை யேன்றோ ரிவர்கூட்டம் !
சற்சங்க மன்றிதனைத் தள்ளு.

சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

சத்சங்கப் பேரால் ஜனத்திரளைக் கூட்டினால்,
விற்பன்னர் பேச்சில், மிகப் படித்தோர் - கற்பனை
மெட்டேல் பரவித்தை என்றோர் இவர் கூட்டம் !
சத்சங்கம் அன்றி இதனைத் தள்ளு.

பொருள் :

சத்சங்கம் என்று ஒரு ஜனத்திரளைக் கூட்டி... அந்த ஜனத்திரளுக்கு மத்தியில் ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்ள முற்பட்டால்... பேச்சில் விற்பன்னராகவும்... மிகப் படித்தவராகவும்... பரவித்தை என்ற ஆத்ம ஞான அறிவில் கற்பனைகள் செய்யக் கூடியவர்களாகவும்... மாறுவோமே தவிர... சத்சங்கம் என்ற ஆத்மஞான இணைவில் நிலைக்க மாட்டோம். ஆதலால்... அந்தக் கூட்டத்தை தவிர்த்துவிடு.

ஸாய்ராம்.

Tuesday, April 28, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 3.




அத்தகைய நூற்களெவை ?  "யான்மாவே மெய், யதனா
னித்தமு மான்மாவி நிட்டையடை - சத்விசார
மொன்றே செய், யின்றேசெய், யுள்ளே போ" வென்றுன்னை
நன் றுறுத்து (ம்) நூலே அவை.

சற்று... இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

அத்தகைய நூல்கள் எவை ?  "ஆன்மாவே மெய். அதனால்
நித்தமும் ஆன்மாவில் நிஷ்டை அடை. சத்விசாரம்
ஒன்றே செய், இன்றே செய், உள்ளே போ" என்று உன்னை
நன்று உறுத்தும் நூலே அவை.

பொருள் :

சாதுக்களினிடத்தும்... மகான்களிடத்தும் அணுக முடியாத போது... அவர்களின் அனுபவ நூலகளின் வழியே ஆத்ம அனுபவத்தை பெறலாம் எனில்... அத்தகைய நூல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் ? அந்த நூல்கள் எதை உறுதியிட்ட் சொல்ல வேண்டுமெனில்... ஆன்மாவே மெய். அதனால் நித்தமும் ஆன்மாவில் நிஷ்டையுற வேண்டும். அந்த சத் சங்கம் ஒன்றைத்தான் செய்ய வேண்டும். அதையும் இன்றே செய்ய வேண்டும். ஆதலால் மனமே உள் திரும்பு... என்று உணர்த்தும் நூல்களாக இருக்க வேண்டும்.

ஸாய்ராம்.

Monday, April 27, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 2.




சத்திலுன்னா நிற்பதற்குச் சக்தியில்லை யென்றாற் போய்
சத்தறிந்த சாதுக்க டம்பக்க(ம்) - நத்தி நில்
அப்பாக் கியமு மடைகிலையே லன்னோர்முன்
செப்பியநூ லோடேனுஞ் சேர்.

சற்று இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

சத்தில் உன்னால் நிற்பதற்குச் சக்தியில்லை என்றால் போய்
சந்தறிந்த சாதுக்களின் பக்கம் நத்தி நில்
அப் பாக்கியமும் அடைகிலையேல் அன்னோர் முன்
செப்பிய நூலோடேனும் சேர்.

பொருள் :

சத்து என்ற ஆன்மாவில் உன்னால் நிற்பதற்குச் சக்தியில்லை எனில்... அந்த ஆன்மாவில் ஒன்றிய சாதுக்கள் என்ற மகான்களின் அருகில்... அவர்களை அணுகி நிற்கலாம். அந்த பாக்கியமும் கிடைக்க வில்லயெனில்... அந்த மகான்கள் அருளிய அனுபவங்களாகிய அவர்களின் நூல்களின் மூலமாக ஆத்ம அனுபவத்தை அடையலாம்.

ஸாய்ராம்.

Sunday, April 26, 2020

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் ஸ்ரீ ரமண வழி, 'சாதனை சாரம்' : சற்சங்கம் - பாடல் 1.






'சத்தொடுநஞ் சங்கமே சற்சங்க மான்மாவே
சத்ததனி னிற்றலே சற்சங்கம் - சத்தினைச்
சாட்சாற் கரித்தமகா சாதுக் களுஞ்சத்தே
யாட்பட் டவர்பா லிரு.'

சற்று இந்தப் பாடலை எளிமையாக்கினால்...

சத்தொடு நம் சங்கமே சத்சங்கம் ஆன்மாவே
சத்து அதனில் நிற்றலே சத்சங்கம் - சத்தினைச்
சாட்சாற்கரித்த மகா சாதுக்களும் சத்தே
ஆட்பட்டவர் பால் இரு.

பொருள் :

ஜீவனாகிய நமக்கு நமது ஆன்மாவே 'சத்' என்கிற 'சத்தியம்'. அதோடும் நாம் கொள்ளும் உறவுதான் சத்சங்கம். ஆன்மாவில் நம்மால் சங்கமம் ஆவதற்கு சற்று சிரமாமாக இருக்கும் பட்சத்தில்... அந்த ஆன்மாவிலேயே தன்னை சங்கமமாக்கிக் கொண்ட சாதுக்களின் சங்கமத்தில் இருப்பதும் சத்சங்கம்தான்.

ஸாய்ராம்.

Saturday, April 25, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 117 'வர்க்கோத்துமம்' ஒரு பார்வை..




வர்க்கோத்துமம் என்பது ஜோதிடக் கலையில்... பலன்களை அறிந்து கொள்ளும் போது... வெகுவாக பயன்படுத்தும் ஒரு பதமாக அமைகிறது.

இராசியில் ஒரு வீட்டில் அமரும் கிரகம்... நவாம்ஸத்திலும் அதே வீட்டில் அமரும் போது... அந்தக் குறிப்பிட்டக் கிரகம் 'வர்க்கோத்தும நிலையை' அடைந்திருக்கிறது என்று கூறலாம்.

உதாரணமாக...  இராசிச் சக்கரத்தில், மேஷ இராசி யில், அசுவினி நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தில், செவ்வாய் பகவான் அமர்கிறார். அந்த 'செவ்வாய் பகவான்' நவாம்ஸச் சக்கரத்திலும், அதே மேஷ இராசியில்தான் அமர்வார். ஆதலால், இந்த ஜாதகருக்கு... 'செவ்வாய் பகவான் வர்க்கோத்துமம் பெற்று அமைந்திருக்கிறார் எனக் கொள்ளலாம். இந்த வர்க்கோத்தும நிலையில் 'செவ்வாய் பகவான்' அதீத பலத்தைப் பெற்றவறாகக் கருதப்படுவார்.

இதற்கான பலனை ஜாதகருக்கு அளிக்கும் போது... வர்க்கோத்துமம் பெற்று வலுத்துள்ள கிரகம்... அது தான் பெற்றுள்ள ஆதிபத்தியத்தின் அடிப்படையிலேயே... ஜாதகரின்  'கர்ம வினைகளின் விளைவுகளுக்கு' ஏற்ப பலன்களை அளிக்கிறது.

'சுக்கிர பகவானின்' காரகத்துவமாக... 'உலக சுகங்களை அள்ளித் தருபவனாக'... அவர் வருணிக்கப்படுகிறார். அவர் வர்க்கோத்துமம் என்ற அதீத பலத்தைப் பெறும் போது, ஆதிபத்திய ரீதியாக எவ்வாறு தனது பலன்களை வெளிப்படுத்துகிறார் என்பதை ஆய்வோம்.

உதாரணம் 1 :

மகர லக்ன ஜாதகருக்கு, 'சுக்கிர பகவான்' பூர்வ புண்ணியாதிபதியாகவும் (5 ஆம் பாவம்)... ஜீவானாதிபதியாகவும் (10 ஆம் பாவம்) ஆதிபத்தியம் பெறுகிறார். ஆகவே, இந்த லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு, அவர் 'நிறைந்த புண்ணிய பலன்களை' அளிப்பவராகவும்... மிகவும் ரசனை மிக்க ஆடம்பரமான தொழில் துறைகளில் செல்வம் ஈட்டும் பாக்கிய முடையவராகவும்... அமைகிறார்.

ஆனால், அவர் இந்த ஜாதகத்தில் 'பாக்கிய மற்றும் தர்ம ஸ்தானமான' 9 ஆம் பாவத்தில்... கன்னி இராசியில்...சித்திரை நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்தில் அமைகிறார். நவாம்ஸத்திலும் அதே இராசி வீடான கன்னியில் அமர்ந்து வர்க்கோத்துமம் என்ற நிலையைப் பெறுகிறார்.

இந்த அமைவு வெளிப்படுத்தும் பலன்களாக... கன்னி இராசியில் 'சுக்கிர பகவான்' பலமற்று நீச நிலையில் சஞ்சரிப்பதால்... அவரின் பலம் இயல்பாகவே குறைந்து விடுகிறது. ஆதலால்... அவர் தனது பூர்வத்தின் புண்ணிய பலன்களை இந்த 'சுக்கிர பகவானின்' தசா... புத்தி... அந்தரக் காலங்களில் அனுபவிக்க முடியாதவாராகிறார் என்பதே பொது விதி.

ஆனால், சுக்கிர பகவானின் வர்க்கோத்தும நிலையால்... அவர் பலம் பெற்று... பூர்வ புண்ணியத்தால் பெற முடியாத பாக்கியங்கள் அனைத்தையும்... இந்தப் பிறவியில் அவருக்கு அமையும் சூழல்களால் பெற்று... அவரின் தசா... புத்தி... அந்தரக் காலங்களில் அனுபவிப்பார்.

உதாரணம் 2 :

மீன லகன ஜாதகருக்கு... 'சுக்கிர பகவான்' தைர்ய, பூமி, சகோதர பாவங்களுக்கும் (3 ஆம் பாவம்)... ஆயுள் மற்றும் அட்டமம் என்ற (6 ஆம் பாவம்) ஸ்தானங்களுக்கும் ஆதிபத்தியம் பெறுகிறார். ஆகவே, இந்த லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு... சுக்கிர பகவான் அவரின் சுக வாழ்வுக்கு மிகவும் பங்கத்தை அளிப்பவராக... தாரித்திரியத்தில் உழல வைப்பவராக அமைகிறார்.

அவர் இந்த ஜாதகத்தில்... களத்திரம் மற்றும் துணைவரின் ஸ்தானமான 7 ஆம் பாவமான... கன்னி இராசியில்... சித்திரை நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்தில் அமர்வதால்... நவாம்ஸத்திலும் அதே விட்டில் அமர்ந்து வர்க்கோத்துமம் அடைகிறார்.

இந்த அமைவு உணர்த்தும் பலன்களாக நீசம் பெற்ற 'சுக்கிர பகவான்' 7 அம் பாவத்தில் அமர்ந்ததின் விளைவாக பங்குதாரர்கள்... நட்பு வட்டாரம்... துணைவர்கள்... என, அனைவரிடம் இருந்து எந்த ஒத்துழைப்பையும் பெற முடியாத நிலைக்குத் தள்ளப் படுவார். அதே நேரத்தில் வர்க்கோத்துமம் பெற்று வலுத்ததால்... பங்குதாரர்கள்... நட்பு... துணைவர் என அனைத்து நிலைகளிலும் அவர்களிடமிருந்து இவருக்கு பெரும் எதிர்ப்பும்... பாதகங்களும் வந்து சேரும் என்பதும்... இந்த தொடர்புகளிலெல்லாம்... அவர் மிகவும் எச்சரிக்கையாக இருந்து... சுக்கிர பகவானின் தசா... புத்தி... அந்தரக் காலங்களைக் கடக்க வேண்டியும் இருக்கும்.

ஸாய்ராம்.

Wednesday, April 22, 2020

குரு தேடல் - பகுதி 4. யோகானந்த பரமஹம்ஸரது சீடரான டிகின்ஸனின் அனுபவம்..



1936 ஆம் வருடம், டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி... கிருஸ்துமஸ்த்திற்கு முதல் நாள்... அமெரிக்காவின் கலிஃபோர்னியாமாநிலத்தில் அமைந்துள்ள மௌண்ட் வாஷிங்டன், யோகதா சத் சங்க மையத்தில்... ஒரு கூட்டுத் தியானத்திற்கு பின்னர்... பரிசளிக்கும் நேரம் வந்தது.

அமெரிக்காவிலிருந்து... கடந்த 16 மாதங்களாக 'யோகானந்தர்' மேற்கொண்ட இந்திய தேச பயணத்திர்குப் பின்னர், நடக்கும் முதல் கொண்டாட்டம் என்பதால்... அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சிஷ்யர்களின் குலாம் மையத்தில் ஆவலுடன் கூடியிருந்தது.

இந்தியாவிலிருந்தும்... வரும் வழியில் பயணித்த பாலஸ்தீனம்... எகிப்து... இங்கிலாந்து... ஃபிரான்ஸ்... இத்தாலி போன்ற நாடுகளிலிருந்தெல்லாம்... தனது ஒவ்வொரு சிஷ்யருக்குமாகத் தேடித் தேடி வாங்கி வந்த பரிசுகள் கிரிஸ்த்துமஸ் மரத்தைச் சுற்றிக் குவிந்திருந்தன.

அதிலிருந்து ஒரு பரிசை எடுத்து... கடந்த 11 வருடங்களாக இந்த மையத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்...'கிரியா யோகியான' டிகின்ஸன் அவர்களுக்கு யோகானந்தர் கொடுத்தார். இந்தப் பதினோராவது வருடாந்திரக் கொண்டாட்டத்தில்... தனக்குக் கிடைத்தப் பரிசைப் பிரித்துப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்... அந்தப் பரிசு 'ஒரு வெள்ளிக் கிண்ணம்'.

உணர்ச்சிப் பெருக்கில் தவித்துப் போன டிக்கின்ஸன்...'ஐயா. இந்த வெள்ளிக் கிண்ணத்திற்காக தயவு செய்து இப்பொழுது என்னை நன்றி கூற விடுங்கள். கிருஸ்துமஸ் இரவென்று எனக்கு வார்த்தைகளே அகப்படவில்லை.' என்றார்.

யோகானந்தரோ புன்னகைத்தபடியே... 'நான் அந்தப் பரிசை உங்களுக்காகவே வாங்கி வந்தேன்.' என்றார்.

'43 வருடங்களாக நான் இந்த வெள்ளிக் கிண்ணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்... நான் எனக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த நீண்ட கதை அது...' என்றார் டிக்கின்ஸன்.

 டிக்கின்ஸனின் 5 ஆவது வயதில், அவரது தமையன் அவரை வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு 15 அடி ஆழமுள்ள குளத்தில் விளையாட்டாகத் தள்ளிவிட்டான். இரண்டாவது தடவையாக அவர் மூழுகும்போது... 'ஜொலிக்கும் பல வண்ண ஒளியும் அதன் மத்தியில் நம்பிக்கையளிக்கும் புன்னகையுடன் கூடிய சாந்தமான ஒரு மனித முகமும் தோன்றியது.' மூன்றாவது முறை மூழ்கும் போது தோழன் ஒருவன் நீட்டிய ஒரு அலரி மரக் கொப்பைப் பிடித்துக் கொண்ட அவரை... அவர்கள் தூக்கிக் கரையில் போட்டுக் காப்பாற்றினர்.

12 வருடங்களுக்குப் பின்னர்...1893 ல் 17 வயதான டிக்கின்ஸன், தனது தாயாருடன் சிக்காக்கோவிற்கு விஜயம் செய்தார். அது செப்டம்பர் மாதம்...  அப்போது அங்கு 'உலக சர்வ மத மகா சபைக் கூட்டம்' நடந்து கொண்டிருந்தது. ஒரு முக்கிய வீதியில் அவர்கள் நடந்து சென்ற போது, அவர்களுக்கு முன்னால் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். டிக்கின்ஸனின் உள்ளுணர்வில் மூழிகிக் கிடந்த அந்த ஒளி வெள்ளம் மீண்டும் அவரைச் சூழ்ந்தது. அவர்களை அறியாமலேயே... அவர்கள் அந்த மனிதரைத் தொடர்ந்தார்கள்... அந்த மனிதர்... மகா சபை நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தார்.

இவர்கள் இருவரும் உள்ளே சென்று பார்க்கும் போது அவரின் 'ஆன்மாவைத் தூண்டக் கூடிய சொற்பொழிவு' நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போதுதான், அந்தத் துறவிதான் இந்தியாவிலிருந்து வந்திருந்த உயர் நிலைத் துறவியான 'சுவாமி விவேகானந்தர்' என்பதை அறிந்தனர். அவரது சொற்பொழிவு முடிந்த பின்னர் அவரைச் சந்தித்து போது... அவர் உதிர்த்த வார்த்தைகளால் ஆச்சரியத்தால் முழ்கிப்போனார் டிக்கின்ஸன். அது...'இளஞனே...நீ தண்ணீரை விட்டு விலகி இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்...' என்பதுதான்.

தன்னை ஒரு சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற டிக்கின்ஸனின் பிரார்த்தனைகளுக்கு...  விவேகானந்தர், 'இல்லை, என் மகனே, நான் உன் குரு அல்ல. உன் குரு பின்னால் வருவார், அவர் உனக்கு வெள்ளிக் கிண்ணம் ஒன்றை அளிப்பார்.... இப்பொழுது நீ தாங்கிக் கொள்ள முடிவதை விட அதிகமான அருளாசிகளை அவர் உன் மிது பொழிவார்.' என்று கூறினார்.

ஆனால் வருடங்கள் கழிந்தன... ஓர் நாளிரவில் டிக்கின்ஸனின் கனவில் விண்ணுலகத்தைச் சேர்ந்தவர்கள் தோன்றி அந்த இரவுப் பொழுதை இன்னிசையால் நிறைத்தார்கள். அதற்கு மறுநாள் மாலை முதன் முதலாக... லாஸ் ஏன்ஞ்சலீஸில் யோகானந்தரின் சொற்பொழிவைக் கேட்டார். அன்றே அவரிடம் சரணடைந்தார். அதற்குப் பின்னார் 11 வருடங்களுக்குப் பின்னார்... விவேகானந்த குறிப்பிட்டபடி அந்த வெள்ளிக் கிண்ணமும் அவர் கைக்குக் கிடைத்தது.

குரு தேடல் என்பது... தேடல் நம்மிடமிருந்தாலும்... அது அவரின் அருளினால்தான் நிறைவேறுகிறது.

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 116. 'அணுகுமுறை' பகுதி - 3.





'கணித முறைகளின்' அடிப்படையான கணக்கீடுகள் 'முதல் படி நிலையாகவும்'... 'வானவியல் சாஸ்த்திரத்தின்' வழியான கணக்கீடுகள் 'இரண்டாவது படி நிலையாகவும்'... 'ஜோதிடச் சித்திரம்' என்ற ஜாதகக் கணக்கீடுகள் 'மூன்றாவது படி நிலையாகவும்'... 'ஜீவனின் பிறப்பு இரகசியம்' என்ற 'கர்ம வினைகளை' வெளிப்படுத்துதல் 'நான்காவது படி நிலையாகவும்'.. இருப்பதைக் கண்டோம்...

இனி, இந்த நான்கு படிநிலைகள் வழியாக பயணித்து 'ஜீவனின் வாழ்வு இரகசியத்தை' அறிந்து கொள்ளும் நுடபமான 'ஐந்தாவது படி நிலையை' ஆய்வோம்.

ஜோதிடச் சித்திரத்தில்... நமது ஜனன காலத்தில் அமைந்திருக்கிற கிரகங்கள் உணர்த்துவது... அந்த ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்'. கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் 'காரகத்துவங்கள்' என்ற வெவ்வேறான 'குண நலன்கள்' இருக்கின்றன. ஆனால், அவை ஒரு ஜீவனின் ஜனன கால ஜாதகத்தில் அமையும் போது... அதன் காரகத்துவங்களைக் கடந்து... அந்த ஜாதகத்தில் அவை அமைந்திருக்கிற 'ஆதிபத்திய ரீதியான'... 'கர்ம வினைகளை' வெளிப்படுத்துதாகவே அமைகின்றன.

ஜீவனின் கர்ம வினைகள்தான்... அந்த ஜீவனின் வாழ்க்கை இரகசியங்கள். அவற்றை அந்த ஜீவனுக்கே... மலரப்போகும் அடுத்தடுத்த நொடிகளில்தான் இறைவன் வெளிப்படுத்துகிறான். அப்படியிருக்கும் போது... அந்த வாழ்க்கை இரகசியத்தை... இன்னொருவருக்கு வெளிப்படுத்த வேண்டுமெனில்... அதற்கான அவசியம் இருக்க வேண்டும்.

அந்த அவசியத்துடன் ஜோதிடக்கலையை அறிந்த ஜோதிடர் ஒருவரை ஒரு ஜாதகர் அணுகும் போது... அந்தக் கலையின் மகத்துவத்தை உணர்ந்த ஜோதிடர்... அந்த மகத்துவத்திற்கு பங்கம் வாராதவாறு அந்த ஜாதகத்தை அணுக வேண்டும்.

ஜோதிடர் இந்தக் கலையை நன்கு அறிந்தவராக இருக்கலாம்... இந்தத் துறையில் மிகவும் அனுபவப்பட்டவராகவும் இருக்கலாம்... இருப்பினும், தன்னை அணுகும் ஒவ்வொருவரையும்... இறைவனின் பேரருள் கருணைதான் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறது... என்ற உண்மையை உணர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஜோதிடர்... தனது குலதெய்வத்தின் அனுக்கிரகத்தையும்... இறைவனின் கருணையையும்... தனது குருவின் வழிகாட்டுதலையும்... முதலில் வேண்டி, பிரார்த்திக்க வேண்டும்.

பின்னர்... தன்னை அணுகியிருக்கும் ஜாதகரின் குலதெய்வத்தை மானசீகமாகப் பிரார்த்தித்து... அந்த ஜீவனை இந்தப் பிறவிக்குக் கொண்டு வந்த சேர்த்த இறைவனின் திருவடிகளையும் வணங்கி... அந்த ஜாதகத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

நம் முன்னால் அமர்ந்திருக்கும் ஜாதகர்... நாம் என்ன சொல்லப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பார். நாம் சொல்லப் போகும் கணிப்புதான் அவரை வழி நடத்தப் போகிறது... என்பதை உணர்ந்து... தற்போது அவர் வந்திருக்கும் நிலையையும்... அதற்கான தீர்வையும் முதலில் கண்டறிந்து கொள்ள வேண்டும்.

பின்னர்... ஜாதகரின் வயது... அவர் கடந்து வந்த தசாக்களும், அதில் அவர் அனுபவித்த அனுபவங்களையும்... தற்போதைய தசா மற்றும் புத்தியையும் தெரிவித்து... தற்போதைய அனுபவங்களை அவரின் மனதிற்கு இதமாக இருக்கும் வகையில் வார்த்தைகளாக வெளிப்படுத்த வேண்டும்.

நாம் ஏற்கனவே, கணித்தறிந்துள்ள தற்போதைய சூழ்நிலையை அவருக்கு விவரித்து... அது கடந்து போகும் காலத்தையும்... அதிலிருந்து அவர் விடுபடும் காலத்தையும்... 'அந்தரம்' சுத்தமாகக் கணித்துக் குறிப்பிடுவதுதான் அவருக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும்.அந்தக் காலம் வரையில்... அவர் நம்பிக்கையுடன் கடந்து செல்ல... அந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு... தக்க 'தெய்வத்தின் திருவடிகளுக்கு' வழிகாட்ட வேண்டும்.

ஜாதகத்தில் அமைந்திருக்கிற கிரகங்கள்... எத்தனையோ இன்னல்களையும்... துயரங்களையும் சுட்டிக் காட்டலாம்... ஆனால் 'அவசியமின்றி' அவற்றை வெளிப்படுத்தக் கூடாது. இது ஜோதிட தர்மம். ஜாதகத்தின் நுட்பமானத் தேடல் என்பது... அந்த ஜாதகரின் இக லோக வாழ்வுக்கும்... பர லோக வாழ்வுக்குமான வழிகளைக் கண்டறிவதுதான். அதனால்தான், ஜோதிடரை 'தெய்வக்ஞ்யன்' என்று அழைக்கிறார்கள்.

இந்த ஐந்து படி நிலைகளையும்... இறைவனின் கருணையோடு... அணுகும் போதுதான் இந்தக் கலை அதன் புனிதத்தை அடைகிறது.

ஸாய்ராம்.

Tuesday, April 21, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 115. 'அணுகுமுறை' பகுதி - 2.





'கணித முறைகளின் துணை' என்பது... முதல் படியாகவும், 'வானவியல் சாஸ்திரத்தின் துணையென்பது'... இரண்டாவது படியாகவும், இவற்றை மூலமாகக் கொண்டு கணிக்கப்பெறும் ஒரு ஜீவனின் 'ஜோதிடச் சித்திரம்' என்ற 'ஜாதகம்' என்பது... மூன்றாவது படியாகவும்... இருப்பதை சென்ற பகுதியில் பார்த்தோம்...

தற்போது நான்காவது படி நிலையாகிய... அந்த ஜீவனின் 'பிறவிகளின் இரகசியம்' என்பதை ஆய்வோம்.

ஒவ்வொரு ஜீவனும் இறைவனிடமிருந்து தோன்றுவதும்... மீண்டும் இறைவனின் திருவடியிலேயே கலந்துவிடுவதும்தான்... ஜீவனுக்கான வாழ்வியலின் நோக்கமாக இருக்கிறது. இப்பூவுலகில் வாழும் 84 லட்ச உயிரினங்களில்... மனிதன் ஒருவனுக்குத்தான்... தனது ஒவ்வொரு செயல்களுக்கும்... முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த முடிவை... 'இறைவனை' முன்னிட்டு... தன்னை 'இறைவனின் ஒரு கைக்கருவி' என்ற எண்ணத்தோடு... கடமையுணர்வுடன் எதிர்கொள்ளும் போது, அந்த ஜீவனது வாழ்வை முழுமையாக்கி... தன்னுடன் இணைத்துக் கொள்ளும் இறைவன்... அந்த ஜீவனுக்கும் 'மீண்டும் பிறவியில்லா பெரு வாழ்வு' என்ற பரிசினை அளிக்கிறான்.

அதுவே, 'நான்தான்' செய்கிறேன்... என்ற எண்ணத்தோடு செயல்படும் ஜீவன்... அந்த செயல்களின் விளைவாக வெளிப்படும் 'இன்ப-துன்பங்களுக்கு' (கர்ம வினைகள்) தாமே பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. அதனால், அந்த ஜீவன் தனது வாழ்வு நிர்ணய காலத்தையும் கடந்து... அடுதடுத்த பிறவிகளில்... அதன் 'கர்ம வினைகளை' அனுபவிக்க வேண்டியுள்ளது. அடுத்தடுத்த பிறவிகளிலும்... இதே நிலை தொடர்ந்தால்... மீண்டும் 'பிறவிப் பிணி' என்ற மீளாத் துயரில் இருந்து மீள முடியாது தவிக்கிறது.

இந்தப் பிறவித் தளைகளைக் குறிப்பிடும் வண்ணம் அமைவதுதான் இராசி என்ற 'சந்திர பகவானின்' நிலை. ஒரு ஜீவனின் பிறப்பு நிகழும் நேரத்தில்... சந்திர பகவான் உலவும் 'நட்சத்திர மண்டலம்' இராசியாகவும்... அதுவே ஜீவனுக்குறிய 'நட்சத்திரமாகவும்'... அந்த நட்சத்திரத்தின் 'சாரம் பெற்ற கிரகத்திற்கான' கால அளவில்... எந்தப் பகுதியில் பிறப்பு நிகழ்கிறதோ... அதற்கு எஞ்சிய பகுதியே... ஜீவன் முதலில் கடக்கும் 'தசா' என்ற 'வாழ்க்கைப் பாதையாகவும்' அமைகிறது.

இந்த 'தசா' என்ற வாழ்க்கபிப் பாதையின் சாரத்தைத்தான்... 'கர்ப்ப செல் நீக்கி இருப்பு' என்ற ஜீவனின் பிறப்பு இரகசியமாகக் கொள்கிறது...ஜோதிடம் என்ற கலை. அதாவது இந்த 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பாகக்' கணக்கிடப்படும் கிரகத்தின் எஞ்சிய காலமான... 'வருடங்கள்... மாதங்கள்... நாட்கள்...' என்பவை, இரண்டு முக்கிய நிகழ்வுகளை உறுதி செய்கின்றது.

ஒன்று... அந்த ஜீவனின் 'கர்ப்ப செல் நீக்கிய இருப்புக்கு' முந்தைய காலங்கள்... ஜீவனது சென்ற பிறவியாகக் கணக்கிடப்படுகிறது.

இரண்டு... அந்த ஜீவனது 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பின் 'எஞ்சிய காலங்கள்' அந்த ஜீவனது நடப்புப் பிறவியாகக் கணக்கிடப்படுகிறது.

'ஜீவனின் பிறவிச் சுழற்சியை' நிர்ணயிக்கும் வழிவகையை இந்த ஜோதிடக் கலை ஒன்றே உலகிறகு வழங்கியிருக்கிறது. உலகில் வழங்கி வரும் வேறு எந்தக் கலையும்... இந்த ஜீவனின் 'முன் ஜென்மம்' என்ற 'முந்தைய பிறப்புகளின்' சூட்சுமமான 'ஜீவனின் வாழ்க்கைப் பயணத்தை' இது போன்று துல்லியமாக வரையறுத்துக் கூறுவதில்லை.

ஆகவேதான்... இறைவனின் அருளினால்... நமது புரதான பாரதத்தின் 'ரிஷி புங்கவர்களான' மகா முனிவர்களின் 'அந்தர் ஞானத்தால்' உருவாக்கப்பட்ட இந்த 'ஜோதிடக் கலை'... பாரதம் உலகுக்கு வழங்கிய மிகப் பெரும் 'அறிவுக் கழஞ்சியமாகப்' போற்றப்படுகிறது.

அணுகுமுறை என்ற இந்த பேரறிவுப் பாதையில் நாம் கடக்க விருப்பது... இந்தக் கலையைக் கொண்டு... ஜீவனின் வாழ்வு இரகசியமான... கர்ம வினைகளைக் கண்டறியும் 'ஐந்தாவது படி நிலை'... இந்தப் படி நிலையையும்... இறைவனின் அருளால் தொடர்ந்து பயணித்துக் கடப்போம்...

ஸாய்ராம்.

Monday, April 20, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 114. 'அணுகுமுறை' பகுதி - 1.




அணுகுமுறை... என்பது, எந்த ஒரு கலையையும் கற்றுக் கொண்ட பின், அந்தக் கலையின் மூலமாக... அந்தக் கலையால் விளையும் பயன்களை... பயனாளர்கள் அனுபவிக்கும்படியாக... எவ்வாறு அந்தக் கலையைக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்தது.

ஜோதிடக் கலையும் அவ்வாறானதே, காலம் என்ற சக்கரத்தை அளவீடுகளாகப் பகுத்து...அதை வருடங்கள்... மாதங்கள்... திதிகள்... நட்சத்திரங்கள்... கரணங்கள்... யோகங்கள்... நாழிகைகள்... நொடிகள்... விநாடிகள்... எனத் துல்லியமாக 'பஞ்சாங்கம்' என்ற ஒரு அமைப்புக்குள் கொண்டு வருவது 'முதல் படி'. இதற்கு 'கணக்கீடுகள்' என்ற 'கணித அறிவு' முக்கிய பங்கை ஆற்றுகிறது.

பூமியில் இருந்தபடி... பூமியைச் சுற்றிவருகிற உப கோளான சந்திர பகவானை மையப் படுத்தி... அதன் வழியாக... பிரபஞ்சத்தை இயக்கும் 'சூரிய பகவானைச்' சுற்றி வரும்...  புத பகவான்... சுக்கிர பகவான்... செவ்வாய் பகவான்... வியாழன் என்ற குரு பகவான்... சனி பகவான் என்ற கிரகங்களையும்... நிழல் கிரகங்கள் என்ற ராகு, கேது பகவான்களையும்... மேற்கூறிய காலக் கூறுகளுக்குள் கொண்டு வருவது 'இரண்டாவது படி'. இதற்கு 'வான சாஸ்த்திரம்' என்ற 'பிரபஞ்ச அறிவு' முக்கிய பங்கை அளிக்கிறது.

இந்த இரண்டையும்... அதாவது கணக்கீடுகளையும், வான சாஸ்த்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்டுள்ள 'பஞ்சாங்கத்தின்' வழியாக... நாம் கடக்கும் ஒவ்வொரு நாளையும் துல்லியமாகப் பகுத்து அறியலாம்.

உதாரணமாக... இன்றைய நாளான 20.4.2020 ஐ...
~ 20.2.2020 என்ற ஆங்கில மாதமான ஏபரல் மாதமாகவும்...
~ தமிழ் வருடமான சார்வரி வருடத்து சித்திரை மாதமாகவும்...
~ திங்கள் கிழமையாகவும்...
~ சந்திர பகவான் பயணிக்கும் நட்சத்திரமான பூரட்டாதி காலை 7.41 நாழிகை வரையிலும் (காலை 9.08 நிமிடம் வரை)... பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரமாகவும்...
~ திதி... தேய்பிறை திரயோதசி திதி 56.54 நாழிகை வரையிலும் (21.4.2020 அதிகாலை 4.48 வரை)...
~ கரணம் தியாஜ் 34.10 நாழிகை வரையாகவும்...
~ யோகம்... பூரட்டாதி நட்சத்திர காலம் வரையில் மரன யோகமாகவும்... பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம் முழுவது சித்த யோகமாகவும்...

பஞ்சாங்கம் பகுத்து விடுகிறது.

இப்படி பகுக்கப்படும் பஞ்சாங்கத்தை மூலமாகக் கொண்டு... ஒரு ஜீவனது பிறப்புக் காலத்தைக் கணிப்பதும்... அந்தக் காலத்தை 'லக்னமாகக்' கொண்டு... அதைச் சுற்றிலும் பிரபஞ்சத்தில் உலவும் கிரகங்களை... நிழல் கிரகங்களான 'ராகு - கேது பகவான்கள் உட்பட... ஒரு 'ஜோதிடச் சக்கரத்திற்குள்' கொண்டு வருவதுதான் முக்கியமான... 'மூன்றாவது படி'.

மிகுதி இருக்கும் படிநிலைகளையும்... இறைவனின் அருளோடு... ஒவ்வொன்றாகக் கடந்து செல்வோம்... அதன்பின் 'அணுகுமுறை' என்ற 'நுட்பம்' தானாக நமக்குப் புலப்படும்.

ஸாய்ராம்.

Saturday, April 18, 2020

'ஸாயீயின் கீதங்கள்'



(கடந்த 25.05.2004 அன்று...  ஸாயீ பாவின் அருளால்... அடியேனின் மனதில் உருவான இந்த கீதம்... ஸாயீ மஹானின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.)

பாபா நீயே துணை எனக்கு - இந்த 
சாகரத்தை நான் கடப்பதற்கு
எத்தனை காலம் சுழல் நடுவில் - நான்
சுழன்றே இருப்பது நடுக்கடலில்.

அலைகடல் நடுவே வந்து விடு
எனக்குன் கையைத் தந்து விடு
இங்கொரு பிறவி இனி வேண்டேன்
இனி பிறவா வரத்தைத் தந்துவிடு.

பிறவி பெரும் சுமையானதிங்கு - அதை
சுமந்தே வளைந்தன தோள்கள் ரெண்டு
பிறவிகள் தோறும் வினைகள் ரெண்டு - அதன்
விளைவால் மீண்டும் பிறவி இங்கு.

வினைகளை நீயே அளித்துவிடு 
சுமைகளை நீயே இறக்கி விடு
மோக வலையை அறுத்து விடு
சுகமாய் வானில் பறக்கவிடு.

ஸாய்ராம்.


Friday, April 17, 2020

கடமையும் அதை எதிர்கொள்ளும் பக்குவமும்...



விதிக்கப்பட்ட செயல்களை... எந்த வித எதிர்பார்ப்புமின்றி... அந்த செயல்களின் பூரணத்துவத்தில் மற்றும் தமது கவனத்தை செலுத்துவதைத்தான்... 'செயல்களின் பக்குவம்' அல்லது 'பற்றற்று கடமைகளை முடித்தல்' அல்லது கர்ம யோகம் என்று அழைக்கிறோம்.

இந்த வகையாக கடமைகளை எதிர்கொள்ளும் போது 'இரண்டு முக்கிய விளைவுகளக்' கடந்து செல்ல வேண்டியிருக்கும்.

ஒன்று, இவ்வாறு கடமைகளை எதிர்கொண்டு செய்ல்களை கடந்து போகும் போது... ஈடுபடும் நமக்கு எந்த விதமான உலக லாபமும் கிடைப்பதில்லை.

இரண்டாவது, பற்றற்ற முறையில் ஈடுபடும் நமக்கு... நம்மை அறியாமலேயே நமது பூர்வ வினைகளின் பெரும் பகுதி கழிந்தும் போகிறது.

முதலாவதில், நாம் உலக ரீதியான பலன்களை இழக்கிறோம். அது மட்டுமல்ல... நாம் எதிர்கொள்ளும் செயலில்... யாருக்காகவெல்லாம் கடமைகளைச் செய்கிறோமோ... அவர்களிடமிருந்து நாம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் அனுபவித்துக் கடக்க வேண்டியிருக்கும்.

அவைகளாவன...

1) யாரை முன்னிட்டு நாம் கடமைகளைச் செய்கிறோமோ அவர்களிடமிருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது.

2) அவர்களிடமிருந்து ஒரு குறைந்த பட்ச அன்பு கூட கிடைக்காது.

3) மாறாக, அவர்களிடமிருந்து வெறுப்பு உணர்வுகள் வெளி வந்த வண்ணமாக இருக்கும்.

4) இறுதியாக... யாருக்காக நாம் கடமைகளைச் செய்கிறோமோ... அவர்களே அதற்கு எதிராகச் செயல்படுவதையும் பார்க்க முடியும்.

இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு... கடமைகளைப் பூர்த்தி செய்து... அதிலிருந்து வெளிவருபவருக்கே... இரண்டாவதான 'கர்ம வினைகளின் கழிவு' என்ற விலைமதிப்பில்லாத பரிசு கிடைக்கின்றது,

இதுதான்... கர்ம யோகம்.

ஸாய்ராம்.

Wednesday, April 15, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'மீன் விற்கும் பெண்ணும்... அவளது மீன் கூடையும்...'




ஒரு மீன் விற்கும் பெண், சந்தையில், தனது மீன்களை எல்லாம் விற்றுத் தீர்த்தபோது இரவாகி விட்டிருந்தது. அன்றைய இரவுப் பொழுதை, தனது பூ விற்கும் தோழியின் வீட்டில் கழிக்க வேண்டியிருந்தது.

மீன் கூடையை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு... பூக் கூடைகளிருந்த அறையில்... தனது தோழியுடன் படுத்து உறங்கச் சென்றாள். ஆனால், பூக்களின் வாசனையால்அவளுக்குத் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள். அதைக் கவனித்த, தோழி, 'ஏன், புரண்டு... புரண்டு... படுத்துக் கொண்டிருக்கிறாய்... ஏதாவது சிரமாக இருக்கிறதா...?' என்று கேட்டாள்.

'எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, இந்தப் பூக்களின் வாசனைதான் என்னைத் தூங்கவிடாது தடுக்கிறது போலும். எனது மீன் கூடையைக் கொஞ்சம் தருகிறாயா...? அந்த வாசனை என்னைத் தூங்க வைக்கும் என்று நினைக்கிறேன்'' என்றாள். அதைக் கேட்ட தோழி, மீன் கூடையைக் கொண்டு வந்து கொடுத்தாள். அந்தக் கூடையில் சிறிது தண்ணீரைத் தெளித்ததும்... அதிலிருந்து மீன் வாசம் வந்தது. அந்தக் கூடையைத்  தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டதும்... ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்து போனாள்.

அது போலத்தான்... 'இறைதேடலும்'. அந்த தேடுதலின் பாதையில்... தனக்கு ஏற்படும் புதிய அனுபவங்களை... ஏற்றுக் கொள்ளாத மனம்... மீண்டும் 'உலகவாழ்வு' என்ற 'பழைய வாசனைக்கே' திரும்பிவிடுகிறது.

ஸாய்ராம்.

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'எண்ணங்களைப் பார்க்கும் இறைவன்...'



இரண்டு நண்பர்கள்... இரண்டு மாறுபட்ட இடங்களை நோக்கி தமது பயணத்தைத் தொடர்ந்தனர். ஒருவன் 'பாகவத உபன்யாசத்தைக்' கேட்பதற்கும்... மற்றொருவன் 'ஒரு விலைமாதுவின் வீட்டை' நோக்கியும் பயணித்தனர்.

விலை மாதுவின் வீட்டுக்குச் சென்ற நண்பனின் மனது... உபன்யாசத்தில் அமர்ந்திருக்கிற நண்பனைப் பற்றிய நினைவிலேயே இருந்தது...'எனது செயலைக் கண்டு வெட்கப்படுகிறேன்... அங்கு எனது நண்பன், பகவான் அருளிய பாகவதத்தைக் கேட்டுக் கொண்டிருப்பான்... ஆனால், நானோ... இங்கு வந்து... அந்த புனித வாய்ப்பை இழந்தவனாக... பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறேன்...' என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தான்.

பாகவத உபன்யாசத்தைக் கேட்டுக் கொன்டிருந்த நண்பனின் மனதோ... விலைமாதுவின் வீட்டிற்குச் சென்றிருக்கும் நண்பனைப் பற்றிய நினைவிலேயே நிலைத்திருந்தது. 'உபன்யாசகர் ஏதோ உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்டுக் கொண்டு... நான் இங்கு அமர்ந்திருக்கிறேன். ஆனால், என் நண்பனோ... இந்த வேளையில்... அங்கு அளவற்ற சுகத்தில் திளைத்துக் கொண்டிருப்பான்...' என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.

வாழ்வின் இறுதிக் காலத்தில் நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணத்தைத் தழுவினார்கள். மரணத்தின் தூதுவர்கள் வந்து பாகவதத்தைக் கேட்ட நண்பனை நரகத்திற்கும்... விலை மாதுவின் வீட்டிற்குச் சென்ற நண்பனை சொர்க்கத்திற்கும் அழைத்துச் சென்றனர்.

ஆம், இறைவன்... ஒவ்வொரு மனிதனது மனதினைத்தான் பார்க்கிறான். அவன் எங்கு வாழ்கிறான்... என்ன செய்து கொண்டிருக்கிறான்... என்பதை விட... அவனது மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களே... இறைவன் குடி கொள்ளும் கோவிலாக மாறுகிறது.

ஸாய்ராம்.

Tuesday, April 14, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'செடிகளுக்கு வேலி அமைத்தல்'





சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் செடிகளுக்கு... அதன் ஆரம்ப காலங்களில் முள்வேலிச் சுற்று அமைக்கப்படுகிறது. இல்லையெனில், அந்தச் செடிகள், கால்நடைகளுக்கு உணவாக மாறி... செடிகளின் வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

அதுவே, அந்த செடிகள் நன்றாக வளர்ந்து... அதன் வேர்கள் ஆழமாக வேர் விட்டு... அதன் தண்டின் அடிப்பகுதி நன்றாகப் பருத்து... ஒரு மரமாக மாறியதற்குப் பின், அந்த முள்வேலி தேவையில்லாததாகிறது. அது மட்டுமல்ல, அதன் பருத்த அடிப்பகுதியில், ஒரு யானையைக் கூட சங்கிலி கொண்டு இணைத்துவிட முடியும்.

அது போலத்தான், ஆன்மீக வாழ்வுக்கும்... உலக வாழ்வுக்கும்... இடையே சரிசமானமாக வாழும் பக்குவ நிலையை... மனித மனம் எளிதில் அடைந்து விடுவதில்லை. அதுவரை... மனிதனின் மனம்... 'இறைவனின் கருணை' என்ற 'அன்பு வேலிக்குள்' பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு, படிபடியாக பக்குவப்பட்ட மனது... உலக வாழ்வில் ஈடுபட்டாலும், அதன் தன்மை மாறாது... மரத்தினைப் போல உறுதியாக மாறிவிடும்.

ஸாய்ராம்.


Monday, April 13, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'பலாச் சுளைகளை எடுப்பது போல...''





ஒரு கனிந்த பலாப் பழத்திலிருந்து... அதன் சுளைகளை ஒவ்வொன்றாக எடுப்பது என்பது... ஒரு அனுபவம்தான். ஏனெனில், அந்தச் சுளைகள் அதன் பிசுபிசுப்பான பாலுக்குள்தான் மூழ்கி இருக்கும். அதை அப்படியே எடுத்தால்... நமது கைகளில் அந்த பிசுபிசுப்பான பால் ஒட்டிக் கொண்டு... அந்த சுளைகளை எடுப்பது மிகவும் கடினமானதாகிவிடும்.

முதலில் நமது கைகளை எண்ணையில் தோய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர், அந்த பழத்தை வெட்டி, ஒவ்வொரு சுளையாக பிரித்தெடுக்க வேண்டும். கைகளில் தோய்க்கப்பட்ட எண்ணை... பிசுபிசுப்பான பால்... கைகளில் ஒட்டிக் கொள்ளாமல் காத்து... அனைத்துச் சுளைகளையும் சுலபமாக எடுக்க உதவும்.

அது போலத்தான்...இந்த உலக வாழ்வில் நாம் உழலுவது என்பது, அது... ஆபத்துக்களும்... துன்பங்களும்... துயரங்களும்... நிறைந்தது. அதில் நாமாக ஈடுபடுவது.. வெறும் கைகளில் பலாப் பழத்திலிருந்து சுளைகளை எடுப்பது போலாகிவிடும். உலக வாழ்வின் பற்றுகளுக்குள்ளும்... பந்தங்களுக்குள்ளும்... சிக்கிக் கொண்டு மீளமுடியாத துன்பத்தில் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.

அதுவே, முதலில் இறைவனுடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டு... பின்னர் உலக வாழ்வில் ஈடுபடுவது என்பது... கைகளில் எண்ணையை தோய்த்துக் கொண்டு, பலாச் சுளைகளை எடுப்பது போல... உலக வாழ்வின் பந்தங்களில் சிக்கிக் கொள்ளாமல்... வாழ்வை கடந்து போக உதவும்.

ஸாய்ராம்.


Saturday, April 11, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 113. 'எண்கணிதம் (Numerology) மற்றும் பெயரியலின் (Nameology) சூட்சுமம். - பகுதி 6.





முன் தொடர்ச்சி...

... இந்தப் 'பாரம்பரியப் பெயரிடலை' மீட்டெடுப்பது என்பது ஒரு சவாலான முயற்சிதான்...

தொடர்கிறது...

கோத்திரம் (ரிஷிகளின் பூர்வம்)... குலம் ( சிவ குலம்... வைணவ குலம்)... குடி (குல தெய்வம்)... என வகைப்படுத்துவதில்தான்... நமது முதல் முயற்சி தொடங்குகிறது.

நீங்கள் ஒரு 'ஜோதிட வழிகாட்டியாக' இருக்கும் பக்ஷத்தில்... உங்களிடம் தனது குழந்தைக்கு பெயரிடுவதற்காக, வரும் ஒருவருக்கு... இந்த 'பாரம்பரிய முறையில்' எவ்வாறு வழி காட்டப் போகிறீர்கள்...?

அதற்கான சில 'வழி முறைகளை' இங்கே வகைப்படுத்துகிறோம்... (கவனிக்க வேண்டியது : இவையனைத்தும் விதி விலக்குகளே...!)

1) முதலில் தந்தை, தாயாரின்... 'கோத்திரத்தை' உறுதி செய்து கொள்ள வேண்டும்.

# அவர்களின் இணைவில் 'கோத்திரக் கலப்பு இல்லாமல்' இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

# ஒரு வேளை 'கோத்திரக் கலப்பு இருக்கும்' பக்ஷத்தில்... பிறந்த குழந்தை 'ஆணாக' இருந்தால்... 'தந்தையின் கோத்திரத்தை' மூலமாகக் கொள்ளலாம்.

# 'கோத்திரக் கலப்பில்' பிறந்த பெண் குழந்தையாக இருக்கும் பக்ஷத்தில்... 'தாயாரின் கோத்திரத்தை' மூலமாகக் கொள்ளலாம்.

2) இரண்டாவதாக தந்தை, தாயாரின்... 'குலத்தை' உறுதி செய்து கொள்ள வேண்டும்.

#  அவர்களின் இணைவில் 'குலக் கலப்பு' இல்லாது இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

# ஒரு வேளை 'குலக் கலப்பு' இருக்கும் பக்ஷத்தில்... பிறந்த குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால்... தந்தையின் குலத்தை மூலமாகக் கொள்ளலாம்.

# 'குலக் கலப்பில்' பிறந்த பெண் குழந்தையாக இருக்கும் பக்ஷத்தில்... தாயாரின் குலத்தை மூலமாகக் கொள்ளலாம்.

3) மூன்றாவதாக 'தந்தை, தாயாரின் 'குடி' (குலதெய்வங்களை) உறுதி செய்து கொள்வதுடன்...  உறவு முறைகளில் அவர்களின் இணைவு 'மாமன், மைத்துனன்' என்ற வழியில் வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

# அவர்கள் இணைவில் 'குடிக் கலப்பு' இல்லாது இருப்பதை உறுதி செய்து கொள்ள வேன்டும்.

# 'குடிக் கலப்பு' இருக்கும் பக்ஷத்தில்... பிறந்த குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால்... 'தந்தையின் குடியை' மூலமாகக் கொள்ளலாம்.

# 'குடிக் கலப்பில்' பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பக்ஷத்தில்... 'தாயாரின் குடியை' மூல்மாகக் கொள்ளலாம்.

மேற்கண்ட 'மூன்று முக்கிய அம்சங்களை' முதலில் உறுதி செய்து கொண்டு... அவைகளின் நிலைகளையொட்டி... பிறந்த குழந்தையின் 'பாரம்பரிய வழியை' முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு முறைப்படுத்திவிட்டுத்தான், 'பெயர் வைப்பதற்குள்' நுழைய வேண்டும்.

அடுத்த கட்டம்தான்... 'ஜோதிடக் கலையின்' துணையைக் கொண்டு... பிறந்த குழந்தையின் 'ஜனன ஜாதகத்தைக் கணித்து'... 'பெயர் வைப்பதற்கான' (Namology) வழி முறையில்...

~ குழந்தையின் 'ஜென்ம நட்சத்திரம்'... அதன் பாதம்...

~ நட்சத்திரத்திற்குண்டான நாம எழுத்துக்கள்...

~ ஜென்ம லக்னம்...

~ நவாம்ஸ லக்னம்...

~ தசா புத்தி இருப்பு...

... என, இவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டியது.

மேற்படி கணித்த 'ஜாதகத்தின்' துணையைக் கொண்டு... கிரக அமைவுகளை நன்றாக ஆய்ந்து... ஜாதகருக்கு மிகவும் உகந்த... யோகமுள்ள... கிரகத்தினை கண்டறிய வேண்டும்.

இறுதிக் கட்டமாகத்தான்... எண் கணிதம் (Numerology) என்ற கலையைக் கைக் கொள்ள வேண்டும்.

~ ஜாதகத்தின் வழியாகக் கண்டறிந்த 'யோகக் கிரகத்தின்'... 'எண் கணித எண்ணை' உறுதி செய்து கொள்ள வேண்டும்.

~ ஜாதகத்தின் வழியாக உறுதி செய்து கொண்ட 'நட்சத்திரத்தின்' நாம எழுத்துக்களின் அடிப்படையாக... அதை பொதுவான 'ஆங்கில எழுத்துக்களின்' மூலத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

~ கோத்திரம்... குலம்... குடி என்ற குல தெய்வம்... என்ற 'பாரம்பரிய முறையில்'... தேர்ந்தெடுத்த பெயரை... ஆங்கிலத்தில் எழுதி... அதற்குண்டான எண்களைக் கூட்டி... அதன் மொத்தக் கூட்டு எண்... முன்பு ஜாதகத்தின் வழியாக கண்டறிந்த 'யோகக் கிரகத்தின்' எண்ணுடன்... சமமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, பாரம்பரிய முறையில்... கோத்திரம், குலம், குடி, பெயரியல், எண்கணிதம்... என இவையனைத்தையும்... 'ஜோதிடக் கலையின்' மூலமாக இணைப்பதுதான்... பெயரியலின் சூக்ஷுமம்.

இந்த அனுபவ வழியே பயணித்து... மீண்டும் பாரம்பரிய முறையை மிட்டெடுப்போம்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.








ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...