'கணித முறைகளின்' அடிப்படையான கணக்கீடுகள் 'முதல் படி நிலையாகவும்'... 'வானவியல் சாஸ்த்திரத்தின்' வழியான கணக்கீடுகள் 'இரண்டாவது படி நிலையாகவும்'... 'ஜோதிடச் சித்திரம்' என்ற ஜாதகக் கணக்கீடுகள் 'மூன்றாவது படி நிலையாகவும்'... 'ஜீவனின் பிறப்பு இரகசியம்' என்ற 'கர்ம வினைகளை' வெளிப்படுத்துதல் 'நான்காவது படி நிலையாகவும்'.. இருப்பதைக் கண்டோம்...
இனி, இந்த நான்கு படிநிலைகள் வழியாக பயணித்து 'ஜீவனின் வாழ்வு இரகசியத்தை' அறிந்து கொள்ளும் நுடபமான 'ஐந்தாவது படி நிலையை' ஆய்வோம்.
ஜோதிடச் சித்திரத்தில்... நமது ஜனன காலத்தில் அமைந்திருக்கிற கிரகங்கள் உணர்த்துவது... அந்த ஜீவனின் 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்'. கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் 'காரகத்துவங்கள்' என்ற வெவ்வேறான 'குண நலன்கள்' இருக்கின்றன. ஆனால், அவை ஒரு ஜீவனின் ஜனன கால ஜாதகத்தில் அமையும் போது... அதன் காரகத்துவங்களைக் கடந்து... அந்த ஜாதகத்தில் அவை அமைந்திருக்கிற 'ஆதிபத்திய ரீதியான'... 'கர்ம வினைகளை' வெளிப்படுத்துதாகவே அமைகின்றன.
ஜீவனின் கர்ம வினைகள்தான்... அந்த ஜீவனின் வாழ்க்கை இரகசியங்கள். அவற்றை அந்த ஜீவனுக்கே... மலரப்போகும் அடுத்தடுத்த நொடிகளில்தான் இறைவன் வெளிப்படுத்துகிறான். அப்படியிருக்கும் போது... அந்த வாழ்க்கை இரகசியத்தை... இன்னொருவருக்கு வெளிப்படுத்த வேண்டுமெனில்... அதற்கான அவசியம் இருக்க வேண்டும்.
அந்த அவசியத்துடன் ஜோதிடக்கலையை அறிந்த ஜோதிடர் ஒருவரை ஒரு ஜாதகர் அணுகும் போது... அந்தக் கலையின் மகத்துவத்தை உணர்ந்த ஜோதிடர்... அந்த மகத்துவத்திற்கு பங்கம் வாராதவாறு அந்த ஜாதகத்தை அணுக வேண்டும்.
ஜோதிடர் இந்தக் கலையை நன்கு அறிந்தவராக இருக்கலாம்... இந்தத் துறையில் மிகவும் அனுபவப்பட்டவராகவும் இருக்கலாம்... இருப்பினும், தன்னை அணுகும் ஒவ்வொருவரையும்... இறைவனின் பேரருள் கருணைதான் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறது... என்ற உண்மையை உணர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஜோதிடர்... தனது குலதெய்வத்தின் அனுக்கிரகத்தையும்... இறைவனின் கருணையையும்... தனது குருவின் வழிகாட்டுதலையும்... முதலில் வேண்டி, பிரார்த்திக்க வேண்டும்.
பின்னர்... தன்னை அணுகியிருக்கும் ஜாதகரின் குலதெய்வத்தை மானசீகமாகப் பிரார்த்தித்து... அந்த ஜீவனை இந்தப் பிறவிக்குக் கொண்டு வந்த சேர்த்த இறைவனின் திருவடிகளையும் வணங்கி... அந்த ஜாதகத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
நம் முன்னால் அமர்ந்திருக்கும் ஜாதகர்... நாம் என்ன சொல்லப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பார். நாம் சொல்லப் போகும் கணிப்புதான் அவரை வழி நடத்தப் போகிறது... என்பதை உணர்ந்து... தற்போது அவர் வந்திருக்கும் நிலையையும்... அதற்கான தீர்வையும் முதலில் கண்டறிந்து கொள்ள வேண்டும்.
பின்னர்... ஜாதகரின் வயது... அவர் கடந்து வந்த தசாக்களும், அதில் அவர் அனுபவித்த அனுபவங்களையும்... தற்போதைய தசா மற்றும் புத்தியையும் தெரிவித்து... தற்போதைய அனுபவங்களை அவரின் மனதிற்கு இதமாக இருக்கும் வகையில் வார்த்தைகளாக வெளிப்படுத்த வேண்டும்.
நாம் ஏற்கனவே, கணித்தறிந்துள்ள தற்போதைய சூழ்நிலையை அவருக்கு விவரித்து... அது கடந்து போகும் காலத்தையும்... அதிலிருந்து அவர் விடுபடும் காலத்தையும்... 'அந்தரம்' சுத்தமாகக் கணித்துக் குறிப்பிடுவதுதான் அவருக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும்.அந்தக் காலம் வரையில்... அவர் நம்பிக்கையுடன் கடந்து செல்ல... அந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு... தக்க 'தெய்வத்தின் திருவடிகளுக்கு' வழிகாட்ட வேண்டும்.
ஜாதகத்தில் அமைந்திருக்கிற கிரகங்கள்... எத்தனையோ இன்னல்களையும்... துயரங்களையும் சுட்டிக் காட்டலாம்... ஆனால் 'அவசியமின்றி' அவற்றை வெளிப்படுத்தக் கூடாது. இது ஜோதிட தர்மம். ஜாதகத்தின் நுட்பமானத் தேடல் என்பது... அந்த ஜாதகரின் இக லோக வாழ்வுக்கும்... பர லோக வாழ்வுக்குமான வழிகளைக் கண்டறிவதுதான். அதனால்தான், ஜோதிடரை 'தெய்வக்ஞ்யன்' என்று அழைக்கிறார்கள்.
இந்த ஐந்து படி நிலைகளையும்... இறைவனின் கருணையோடு... அணுகும் போதுதான் இந்தக் கலை அதன் புனிதத்தை அடைகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment