Wednesday, April 15, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'எண்ணங்களைப் பார்க்கும் இறைவன்...'



இரண்டு நண்பர்கள்... இரண்டு மாறுபட்ட இடங்களை நோக்கி தமது பயணத்தைத் தொடர்ந்தனர். ஒருவன் 'பாகவத உபன்யாசத்தைக்' கேட்பதற்கும்... மற்றொருவன் 'ஒரு விலைமாதுவின் வீட்டை' நோக்கியும் பயணித்தனர்.

விலை மாதுவின் வீட்டுக்குச் சென்ற நண்பனின் மனது... உபன்யாசத்தில் அமர்ந்திருக்கிற நண்பனைப் பற்றிய நினைவிலேயே இருந்தது...'எனது செயலைக் கண்டு வெட்கப்படுகிறேன்... அங்கு எனது நண்பன், பகவான் அருளிய பாகவதத்தைக் கேட்டுக் கொண்டிருப்பான்... ஆனால், நானோ... இங்கு வந்து... அந்த புனித வாய்ப்பை இழந்தவனாக... பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறேன்...' என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தான்.

பாகவத உபன்யாசத்தைக் கேட்டுக் கொன்டிருந்த நண்பனின் மனதோ... விலைமாதுவின் வீட்டிற்குச் சென்றிருக்கும் நண்பனைப் பற்றிய நினைவிலேயே நிலைத்திருந்தது. 'உபன்யாசகர் ஏதோ உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்டுக் கொண்டு... நான் இங்கு அமர்ந்திருக்கிறேன். ஆனால், என் நண்பனோ... இந்த வேளையில்... அங்கு அளவற்ற சுகத்தில் திளைத்துக் கொண்டிருப்பான்...' என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.

வாழ்வின் இறுதிக் காலத்தில் நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணத்தைத் தழுவினார்கள். மரணத்தின் தூதுவர்கள் வந்து பாகவதத்தைக் கேட்ட நண்பனை நரகத்திற்கும்... விலை மாதுவின் வீட்டிற்குச் சென்ற நண்பனை சொர்க்கத்திற்கும் அழைத்துச் சென்றனர்.

ஆம், இறைவன்... ஒவ்வொரு மனிதனது மனதினைத்தான் பார்க்கிறான். அவன் எங்கு வாழ்கிறான்... என்ன செய்து கொண்டிருக்கிறான்... என்பதை விட... அவனது மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களே... இறைவன் குடி கொள்ளும் கோவிலாக மாறுகிறது.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...