Saturday, August 31, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 16. 'காலபுருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 7. சுக்கிர-புத பகவான்கள்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 16.

'காலபுருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 7. 

'சுக்கிர-புத பகவான்கள்'

காலபுருஷ இராசியில்... ஒரு கட்டுக்குள் இருக்கும் காலம்... அந்தக் கட்டிலிருந்து விடுபடுவதற்கு... 'சுக்கிர பகவான்' ஒரு காரணமாக அமைகிறார் என்பதையும்... அதை விளக்குவதற்கு... 'புத பகவானின்'... அறிவு மற்றும் புத்தி என்ற காரகத்துவங்கள் எவ்வாறு உதவுகின்றன... என்பதை ஆய்வோம்.

'சுக்கிர பகவான்'... 'குடும்பம்' மற்றும் 'தொடர்பு-களத்திரம்' என்ற ஸ்தானங்களுக்கு அதிபதியாகிறார். 'இரு மாராகாதிபதிகள் கொல்லான்...'என்ற வகையில்... காலம் என்ற கட்டுக்குள் 'பாதுகாப்பாக' இருக்கும் ஜீவர்களை... அந்தக் கட்டுக்குள் இருந்து விடுவித்து 'பாதுகாப்பு உணர்வற்ற'... தொடரும் பிறவிகளுக்குள் சிக்க வைத்துவிடுகிறார்.



'புத பகவான்'... 'தைர்யம்' மற்றும் 'ருண-ரோக-சத்ரு ஸ்தானங்கள்' என்ற... மறைவு ஸ்தானங்களுக்கு அதிபதியாகிறார். இதன் சூட்சுமம்... 'மறைந்த புதன் நிறைந்த கல்வி...' என்ற 'உலக வாழ்வின் பற்றுகளிலும்... பந்தங்களிலும்' சிக்கிக் கொள்ளாத அறிவை அவர் நல்குகிறார் என்பதே.



இந்த 'சுக்கிர பகவானின்' நிலையும்... 'புத பகவானின்' நிலையும்... எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஒன்றுபடுகிறது என்பதைஆய்வோம்.

காலபுருஷ இராசியில்... 6 ஆமிடம் என்ற 'மறைவு ஸ்தானத்தில்'... 'நிறைந்த கல்வியை' ஞானத்துடன் வழங்கும்... 'புத பகவான்'... 'உச்சம்' என்ற பலமான நிலையை அடைகிறார். அங்கு... உலக வாழ்வை நோக்கி இழுக்கும் 'சுக்கிர பகவான்'... 'நீசம்' என்ற பலமற்ற நிலையை அடைகிறார்.

காலபுருஷ இராசியில்... 12 ஆமிடம் என்ற 'சுக-சயன-விரய ஸ்தானம்'... நமக்கு ஒன்றை உணர்த்துகிறது. அது, காலம் என்ற 'பாதுகாப்புக்' கட்டுக்குள்ளிருந்து நம்மை விடுவித்து... 'இரு மாரகம்' என்ற நிலையில் நம்மை பற்றுகளிலும்... பந்தங்களிலும்... இழுத்து விடும்... 'சுக்கிர பகவான்' இந்த 12 ஆமிடத்தில் 'உச்சம்' என்ற பலமான நிலையை அடைவதுதான். அதுபோல... 'காலத்தின் கட்டுக்குள்' நம்மைக் கொண்டு சேர்க்கும் வல்லமையுள்ள புத்தியைக் கொடுக்கும்... 'நிறைவான கல்வியை' அளிக்கும் 'புத பகவான்' இந்த 12 ஆமிடத்தில் 'நீசம்' என்ற பலமற்ற நிலையை அடைவதுதான்.

காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்.

ஸாய்ராம்.




ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 15. 'காலபுருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 6. புத பகவான்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 15.

'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 6  புத பகவான்.

காலபுருஷ இராசியின் இராசியாதிபதியான... 'செவ்வாய் பகவானும்', பூர்வ புண்ணியாதிபதியுமான... 'சூரிய பகவானும்', பாக்கியாதிபதியாக... 'குரு பகவானும்'... காலத்தை 'ஒரு கட்டுக்குள்' வைத்திருக்கிறார்கள்.

காலத்தை இந்தக் கட்டுக்குள் இருந்து 'விடுவிக்கும் பணியைச்' செய்யும் 'சுக்கிர பகவானின்' அமைவினைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.

காலபுருஷ இராசியில்... 'அறிவு, புத்தி' என்ற இரு நிலைகளை உணர்த்தும்... 'புத பகவனின்' நிலையை சற்று ஆய்வோம்.

'அறிவு' என்பதை தேடி அடைவதாக நாம் நினைத்துக் கொன்டிருக்கிறோம். ஆனால் அறிவு... என்பது 'பூர்வ புண்ணியாதிபதியாகிய' ... 'சூரிய பகவானின்' எல்லையில்லாத 'ஆற்றலின்' வெளிப்பாடாக... ஒவ்வொரு ஜீவனின் மனதிலும் உதிப்பதாகும். அது உள்ளிருந்துதான் உதிக்கிறது. அதற்கான வாய்ப்புகள்தான் வெளியில் கிடைக்கிறது.

அந்த 'அறிவு'... 'புத்தியாக' செயல்படும் போதுதான்... அதன் பயனை நம்மால் அனுபவிக்க முடியும். உதாரணமாக... வாழ்வின் அனுபவத்திற்காக ஒரு கலையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறது 'அறிவு'. அந்த கலை... வாழ்வியலுக்கான ஒரு அனுபவமாகவும்... ஆதாயமாகவும் இருப்பதாக அமைத்துக் கொள்வதுதான் 'புத்தி'.

இந்த இரண்டு நிலைகளையும் கால புருஷ இராசியில் காணமுடிகிறது. கால புருஷ இராசியில்... 3 என்ற தைர்ய... வீரிய... தொடர்பு ஸ்தானத்திற்கும், 6 ஆமிடமான 'ருண - ரோக - சத்ரு ஸ்தானங்களுக்கும்' அதிபதியாகிறார்... புத பகவான்.

நமக்கு உல்ளிருந்துதான் இந்த 'அறிவுக்கான' மூலம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் போது... அதன் வழியாக அந்த அறிவை நாம் அணுகும் போது... அது உள்ளார்ந்த அறிவாக மலர்கிறது. அது ஆனந்தத்தையும்... நிம்மதியையும்... ஜீவனுக்கான வாழ்வு இலக்கையும்... நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.

அதனால்தான்... 'மறைந்த புதன் நிறைந்த கல்வி...' என்று நாம் 'புத பகவானை' அணுகுகிறோம். நிறைந்த கல்வி என்பது... எந்த எதிர்பார்ப்பும் இல்லாத... உண்மையை அறிந்து கொள்வதான... இந்த ஜீவனின் வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்வதான... கல்வி என்பதைத்தான்... மறைந்த புதன் நிறைந்ததான கல்வியை வழங்குகிறது... என்பதை... புதனின் அமைவு நமக்கு உணர்த்துகிறது.

இதில்... 'புத்தி' என்பதற்கான... 'புத பகவானின்' நிலை விளக்கம் தேவைப்படுகிறது. அதை 'சுக்கிர பகவானின்' நிலைகளையும், 'புத பகவானின்' நிலைகளுடன் ஒப்பிட்டும்... இணைத்தும்தான்... ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. அதை அடுத்த பதிவில் ஆய்வோம்.

காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்.

ஸாய்ராம்.


பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 4. மந்திராலய மஹான் நடத்திய அற்புதம்.

பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 4. 

'மந்திராலய மஹான்' நடத்திய அற்புதம்.

திருச்சியின் புற நகர் பகுதியில் வசிக்கும் ஒரு பெரியவர்... நண்பர் ஒருவரின் அறிமுகத்தோடு... அவரின் மகனின் எதிர்காலம் பற்றிய சில சந்தேகங்களைத் தெளிவாக்கிக் கொள்வதற்காக... நம்மை சந்தித்தார்.

அவரின் மகனின் ஜாதகத்தில் 'ஒரு நுட்பமான அமைவு' காணப்பட்டது. அது பிரதானமான மூன்று (3) கிரகங்கள் 'நீச நிலையில்' பலமிழந்து காணப்பட்டன. அதில் ஒரு கிரகத்திற்கு மட்டும்... 'நீச பங்கம்' ஏற்பட்டிருந்தது. 'நீச பங்கம்'... என்பது... 'நீசம் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் ஏறிடில் நீச பங்க ராஜ யோகம்...' என்ற ஒரு ஜோதிட விதியை ஒட்டியது.

அந்த அமைவையும்... பிற அமைவுகள்... தசா புத்திகள் கணக்கீடுகளின் படியும்... அவருக்கு ஒரு எதிர்கால பலன் அளிக்கப்பட்டது. அது... 'அந்த ஜாதகர் கடல் கடந்து வெளி நாடு சென்று பணிபுரிய நேரிடும்...' என்பதுதான். அதற்கு அந்தப் பெரியவர் கூறிய பதில் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது... 'அவர் வெளிநாடு செல்ல முடியாத ஒரு சூழல் நிலவுவதாகவும்... நிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லையென்பதுதான்...'. அதற்கு நாம், 'இந்த ஜாதகர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மைதான்... ஆனாலும் அந்த சங்கிலியின் பூட்டைத் திறக்க ஒருவர் வருவார்...' என்று கூறி... அவரது மகனுக்காக... 'பகவான் ஸ்ரீ ராகவேந்திரரிடம்' பிரார்த்தனை செய்து கொள்ளும் படி ஆலோசனை அளித்து அனுப்பிவைத்தோம்.

பல மாதங்களுக்குப் பிறகு, அவர் நம்மை சந்திக்க வந்தார். அவர் கேட்ட முதல் கேள்வி...' பூட்டைத் திறந்து... சங்கிலிகளின் பிணைப்பிலிருந்து விடுவிக்க ஒருவர் வருவார்... என்று கூறினீர்களே... ஆனால் அது யார் என்று ஏன் கூறவில்லை...?' என்று கேட்டார். நாமும் அந்தக் கேள்வியை ரசித்துக் கொண்டே...' இந்தக் கேள்வியை அன்று நீங்கள் எழுப்பவில்லையே...!' என்றோம்.

அவர் நடந்ததை விவரித்தார்... 'அவரின் மகன் சென்னையில் ஒரு பிரபல கணணி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் தங்கியிருந்த வீட்டின் கீழ் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் சிலர் தங்கியிருந்தனர். அதில் கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலியர் 'அமெரிக்கா' செல்வதற்கான முயற்சியில் இருந்தார். அவர் முயற்சிக்கும் பணிக்கு, துணைவருடன் சென்று தங்கக் கூடிய திருமணவானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த செவிலியரின் உதவியால்... அவரது மகனுக்கிருந்தத் தடையைக் கடந்து... அவர்கள் இருவரும் அமெரிக்கா சென்று விட்டார்கள். மகனிடம் இருந்து தகவல்கள் ஏதும் இல்லாததால்... இவர் சென்னைக்குச் சென்று பார்த்த போது... இந்த உண்மைகள் எல்லாம் தெரியவந்தது.

இந்த நிகழ்வுகள் அந்த பெரியவரின் குடும்பத்தையெ புரட்டிப் போட்டுவிட்டது. அவரின் மகன்தான் மூத்தவர். அவருக்கு இரண்டு சகோதரிகள். இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சூழல் வேறு. அவரின் துணைவியார் மகனின் மீது மிகவும் பாசம் வைத்திருந்தவர். மகனின் இந்த முடிவு தாயாரை மிகவும் பாதித்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில்தான்... நம்மை சந்திக்க வந்திருந்தார்.

நாம் அவருக்கு அளித்த உபாயம்... 'பகவான் ஸ்ரீ ராகவேந்திரப் பிரபுவிடம்' பிரார்த்தனை வைப்பதைத்தான். அந்த பிரார்த்தனையை... அவரின் துணவியார்தான் வைக்க வேண்டும் எனும்போது... மகன் மீதான் வெறுப்பில், தாயாரால்அதை செய்ய முடியாது... என்று அவர் மறுக்கும் போது... ஐந்து பிரார்த்தனைகளை வரிசைப்படுத்தி...

1. எங்கள் குடும்பத்தின் ஆதாரமே அவன்தான், அவன் எங்கிருந்தாலும்                        நன்றாக இருக்க வேண்டும்.       
2. என் மீதும், எங்கள் குடும்பத்தின் மீதும், அளவற்ற அன்பு கொண்ட மகனின்             அன்பு என்றும் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்.
3. அவனது சூழலால் அவன் ஒரு முடிவு எடுத்திருக்கிறான். அந்த முடிவு                     அவனுக்கு ஒர் அமைதியான... மகிழ்வான வாழ்வை அளிக்கட்டும்.
4. அவனின் அன்பும், ஆதரவும், பொருளாதார உதவியும், என்றும் எங்களுக்குத்         தேவைப்படுகிறது.
5. அவனின் நிலையை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். அவனின்               தொடர்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

என்பதாக வரிசைப்படுத்தி...அதை அவர் படித்துப் பார்க்கும் படியும்... அதில் நியாயம் இருந்தால் அதை... ஒவ்வொரு வியாழன் அன்றும் மாலைவேளையில்... 'பகவான் ராகவேந்திரரின்' திருவுருவப்படம் ஒன்றை ஒரு மனையில் வைத்து... திருவிளக்கேற்றி... நிவேதனம் சமர்ப்பித்து... தூப, தீப, ஆராதனைக்குப் பின், மனையை 5 முறை வலம் வந்தபின்... இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்குமாறு கூறினோம். இதை தொடர்ந்து ஒரு மூன்று வாரங்களுக்குத் தொடருமாறும் வலியுருத்தினோம்.

முதல் வியாழன் கடந்தது.  அடுத்த வியாழனுக்கு முன்னதாகவே... அந்தப் பெரியவர் மலர்ந்த... மகிழ்வான முகத்தோடு... நம்மைச் சந்திக்க வந்தார். நடந்ததை விவரித்தார்.

பிரார்த்தனைகளைப் படித்தத் தாயார்... மனம் நெகிழ்ந்து போய்... அந்த வியாழன் அன்று மிகவும் சிரத்தையுடனும்... பக்தியுடனும்... அந்த எளிய பூஜையை மேற்கொண்டார். பூஜையின் முடிவில் இந்தப் பிரார்த்தனைகளை பிரபுவின் திருப்பாதங்களில் சமர்ப்பித்தார். அன்றைய இரவு அனைவருக்கும் நிம்மதியாகக் கழிந்தது. வெள்ளியன்று காலை... அவர் வீட்டு மாடியில் இருப்பவர் வந்து... தனது அலை பேசியைக் கொண்டு வந்து கொடுத்து... அதில் அவர்களது மகன்... அமெரிக்காவிலிருந்து பேசுவதாகக் கூற... குடும்பம் மொத்தமுமே... ஆச்சரியத்திலும்... ஆனந்தத்திலும் திளைத்துத்தான் போனது. பிறகு நடந்தது அனைத்தும்... பல மாதங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தில் நிகழ்ந்த... மகிழ்வான தருணங்கள்.

அவர் கூறியதைக் கேட்டு... நாமும் 'பகவான் ஸ்ரீ ராகவேந்திரப் பிரபு' நடத்திய அற்புத லீலைகளால்... மயிர்க்கூச்செறிந்து போனோம். அப்போது அவர் ஒரு பையில் கொண்டுவந்ததை நம்மிடம் கொடுத்தார்.  நாம் எப்போதும் எதையும் பெற்றுக் கொள்வதில்லை என்பதை அறிந்திருந்த அவர்... அன்புடன் தான் கொண்டு வந்ததை ஏற்றுக் கொள்ளும்படிக் கூற... பையைத் திறந்த போது.... அவரின் வீட்டைச் சுற்றிப் பயிரிட்டிருந்த பச்சக் காய்கறிகளுடன்... ஒரு T Shirt ஒன்றும் இருந்தது... அதில்... New York City என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.

ஸாய்ராம்.


Friday, August 30, 2019

மனம் என்பது என்ன... பகுதி - 4.

மனம் என்பது என்ன... பகுதி - 4.

'எண்ணங்களற்ற மனம்', 'ஒரு அசையாத நீர் நிலையைப்' போன்றது. அதில் ஒரு கல் விழுந்தால் போதும்... ஒன்றன் பின் ஒன்றாக வளையங்கள் கரையைத் தொடும்படியாக விரியும். போடப்பட்டது ஒரு சிறிய கல்தான். ஆனால் அதன் தாக்கம் எண்ணற்ற வளையங்களைத் தோற்றுவித்து விடுகிறது.

அது போலத்தன் மனமும். எண்ணங்களற்ற மனம் என்பது மிகவும் அரிதானது. அது எப்போதும்... எவருக்கும்... வாய்த்துவிடுவதில்லை. மனித ஜீவர்களைத் தவிர... ஏனைய எந்த உலக ஜீவன்களை எடுத்துக் கொண்டாலும்... இந்த மனம் என்ற ஒன்று... இவ்வளவு சிக்கல் நிறைந்த அமைவாக அமையவில்லை. ஏன் மனித ஜீவர்களுக்கு மட்டும் இப்படி ஒரு அமைவைத் தந்தான்... படைப்பாளன்...!

ரசனை மிகுந்த... புத்தி சாதுர்யம் மிக்க... அறிவுடன் கூடிய... ஒரு ஜீவனின் படைப்புத்தான்... தனது படைப்புகளை ரசித்து, வியந்து... அதன் வழியாக தன்னையும் தேடும்... என்ற உயரிய நோக்கில்... படைப்பவரால் படைக்கப்பட்டதே... இந்த மனித ஜீவன். ஆனால் அது படைப்பவனை விட்டுவிட்டு... அவனது படைப்பின் வழியே கடந்து செல்வதுதான் காலம் நடத்தும் கோலாட்டம்.

மனித ஜீவனுக்கென ஒரு 'சிறப்பு அந்தஸ்த்து' படைப்பவரால் கொடுக்கப்பட்டது. அது... 'சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கும் தன்மைதான்'. ஏனைய... எந்த ஜீவனுக்கும் இல்லாத 'சிறப்பு அந்தஸ்த்து' இது. உதாரணமாக 'ஒரு பசுவுக்கு' பசி வருகிறது என்ற எண்ணம் எப்போது தோன்றும் என்றால்... அதற்கான உணவு தயார் நிலையில் இருக்கும் போதுதான். பசுவுக்கான உணவைத் தயார் செய்த
பின்னர்தான்... அதற்கு பசி என்ற உணர்வையே ஏற்படுத்துகிறான்... படைப்பாளன்.

மனித ஜீவனுக்கு மட்டும்... பசி என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டு... அவன் என்ன செய்கிறான்... என்று பார்த்துக் கொண்டிருக்கிறான் படைப்பாளன். 'தனக்கான உணவு நிச்சையமாக நம்மைத் தேடி வரும்' என்று நம்புகிறானா...? அல்லது... 'நாம்தான் உணவைத் தேடி போகவேண்டும்'...என்று... தாமாக உணவைத் தேடி போகிறானா...? என்ற இந்தப் பந்தயத்தில்... முதலில்; மனிதன் தோற்றதிலிருந்துதான்... 'கர்ம வினைகள்' என்ற கட்டுக்கள் ஆரம்பித்திருக்க வேண்டும்.

இந்த சிந்தனைகள் தோன்றும் இடமாக இருப்பதுதான்... மனம். நமது கர்ம வினைகளுக்கு ஏற்பத்தான்... எண்ணங்களும்... சிந்தனைகளும்... இந்த மனம் எண்ணும் மாயத் திடலில் நடக்கும் போராடங்களாக மாறுகிறது. கடலின் அலைகள் போல... ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் எண்ணங்கள்... எண்ணற்ற சூழல்களின் மாற்றங்களை நமது வாழ்வில் ஏற்படுத்திவிடுகிறது.

'கர்ம வினைகள்'... மனதில் இரண்டு விதமான எண்ணச் சூழல்களை  உருவாக்கி விடுகிறது. ஒன்று நாமாக திட்டமிட்டு ஒரு செயலைச் செய்வதற்கான எண்ணங்கள். இன்னொன்று... நமக்கு வெளியிலிருந்து ஏற்படும் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கும்படியான எண்ணங்கள். இந்த இரண்டைத் தவிர... வேறு எந்த விதமான சூழலும் மனதிற்கு ஏற்படுவதில்லை.

இந்த மனதைக் கட்டுப் படுத்த முடியுமா...? அல்லது ஒரு கட்டுகுள்ளாவது வைத்துக் கொள்ள முடியுமா...? அல்லது இதைக் கடந்துதான் போக வேண்டுமா...?

மனதின் வழியே பயணித்துப் பார்ப்போம்.

ஸாய்ராம்.





Thursday, August 29, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 14. 'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 5. சுக்கிர பகவான்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் ; பகுதி 14.

'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 5. சுக்கிர பகவான்.

கால புருஷ இராசியின் இராசியாதிபதியான... 'செவ்வாய் பகவானும்', பூர்வ புண்ணியாதிபதியான... 'சூரிய பகவானும்', பாக்கியாதிபதியாகிய... 'குரு பகவானும்'... காலத்தை 'ஒரு கட்டுக்குள்' வைத்திருக்கிறார்கள்.

காலத்தை இந்த கட்டுக்குள் இருந்து விடுவிக்கும் பணியைத்தான்... இந்த 'சுக்கிர பகவன்'... தனது 'குடும்பம்' மற்றும் 'துணை, இணை, களத்திரம்' என்ற  இரு ஆதிபத்தியங்களைக் கொண்டு நடத்துகிறார். இந்தக் காலம் என்ற சூழலுக்குள் கட்டுப்படும் அனைத்து ஜீவர்களும்... 'சுக்கிர பகவானின்' கட்டுக்குள் இருந்து விடுபட முடியாது தவித்துப் போகிறார்கள்.

தாங்கள் 'பிறந்த குடும்பம்' ஒரு புறம்... தாங்கள் 'அமைத்துக் கொள்ளும்' குடும்பம் மறுபுறம்... என இந்த இரண்டு சூழல்களுக்குள் இருந்து யாரால்தான் தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்...? இதைத்தான்... 'இரு மாராகாதிபதிகள் கொல்லான்' என்று வருணித்தார்கள்.

நாம் 'பிறந்த குடும்பத்தின் தொடர்புகளும்'... அதனால் 'உருவாகும் பற்றுகளும்'...  வாழ்வில் ஒரு நிலையில் தாமாக அற்றுப் போய்விடும். காலம் அந்த நிகழ்வை இயற்கையாகவே நடத்தி விடும். ஆனால், நாம் 'ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகளும்'... அதிலிருந்து 'விளையும் பற்றுகளும்' நம் வாழ்வின் இறுதிவரை வந்து... நம்மை 'பந்தத்தில்' ஆழ்த்தி விடுவதைத்தான்... 'இரு மாராகாதிபதிகள் கொல்லான்'... என்ற சொற்றொடர்... விளக்குகிறது.

காலம் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த 'சுக்கிர பகவானின்' சூழல்... ஜீவர்களுக்கு ஒரு சவால்தான். இந்த வலைப் பின்னல்களில் இருந்து 'ஜீவன் விடுபட்டால்'... அதற்கு 'ஒரு பெரு வாழ்வு' காத்துக் கொண்டிருக்கிறது. காலம்... 'சுக்கிர பகவானின்' மூலம் விரிக்கும் இந்த வலையில் 'சிக்கிக் கொண்டால்'... 'குறுகிய வாழ்வின்' பிடியில் இருந்து தவிக்க வேண்டியிருக்கிறது.

இந்த 'சுக்கிர பகவானின்' அமைவுக்குள்ளும்... ஒரு நுட்பமான சூட்சுமத்தை வைத்திருக்கிறது காலம். அதை 'கால புருஷ இராசியில்'... 'புத பகவானுடன்'... இந்த 'சுக்கிர பகவான்' ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு 'தொடர்பிலிருந்து' அறிந்து கொள்ளலாம். அது 'சுகமும்'... 'புத்தியும்' என்ற இணைப்பின் மூலம் ஆய்வு செய்யலாம்.

அந்த ஆய்வை 'புத பகவானின்' கால புருஷ இராசியின் விளக்கத்திற்கு பின் காணலாம்.

காலத்தின் வழியெ தொடர்ந்து பயணிப்போம்.








Wednesday, August 28, 2019

கவிஞர் கண்ணதாஸன் - ஒரு பார்வை - பகுதி 3.

கவிஞர் கண்ணதாஸன் - ஒரு பார்வை - பகுதி 3.

ஒரு தந்தை, இரண்டு சகோதரர்கள் என மிகக் கண்ணியமான குடும்பம். அந்தக் குடும்பத்தின் மூத்த சகோதரருக்குத் திருமணம் நடந்தேறுகிறது. திருமணத்தை ஏற்பாடு செய்தவரின் ஒரு சதித் திட்டத்தால்... 'நிறத்தால் வெறுக்கப்படும் ஒரு பெண்' அந்த வீட்டுக்கு மணமகளாக வர நேரிடுகிறது.

மிகவும் குணவதியான பெண்... அவள் வந்த சூழலின் காரணமாக, அந்தக் குடும்பத்தின் வெறுப்பிக்கிடையில் திண்டாடுகிறாள். தனது உள்ளக் கிடக்கை வெளிப்படுத்த தவிக்கும் நிலையில்... 'கண்ண பிரானை' நோக்கி பாடுவதாக ஒரு காட்சி... 'அந்தப் பெண்ணின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்த...' கவிஞரின் கற்பனை வரிகள் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கிறது...

'கண்ணா... கருமை நிறக் கண்ணா...
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை...' என்று அந்தப் பெண்ணின் எண்ணங்கள் வெளிப்படும்.

என்னை அவாறு படைத்ததில் தவறில்லை... அது என் விதியாக இருந்துவிட்டுப் போகட்டும்... ஆனால் என்னை கொண்டு சேர்க்கும் இடத்தையாவது, எனக்கேற்றவாறு அமைத்துக் கொடுத்திருக்கலாம் இல்லையா...? என்ற கேள்வியை...

'மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து தனியாக அமர்ந்தாய் கண்ணா...'

 இந்தக் கேள்வி... அந்தப் பெண்ணுக்கானது மட்டுமல்ல... அந்த நிலையில் இருந்து தவிக்கும் எண்ணற்ற மாந்தர்களுடையதும்தான். ஒவ்வொரு மனிதனும் தனக்கேற்ற சூழலில் இருப்பதைத்தான் விரும்புகிறான். ஆனால் காலம் வெவ்வேறு மாறுபட்ட சூழல்களுக்குள் கொண்டு சேர்த்துவிடுகிறது. அது தமது விதியாக இருந்தாலும்... அந்தத் துன்ப சூழலில் தவிக்கும் மனம்... படைப்பவனை நோக்கி கேள்வியை எழுப்பாமல் இருப்பதில்லை.

தொடரும் அந்தப் பெண்... பிறவியிலேயெ... தனக்கு இறைவன் கொடுத்திருக்கும் 'மனப்பங்கையும்'... அதில் எழும் 'தூயதான எண்ணங்களுக்கும்'... நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறாள்.

பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா 
அதில் பூப்போன்ற நினைவொன்றை வைத்தாய் கண்ணா...

ஆனால்... அத்துனை நல்ல குணங்களையும் கொடுத்துவிட்டு... அதை தன்னைச் சுற்றி இருப்பவர்கள்... காண முடியாதபடி... மறைத்துவிட்டாயே...

கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
என்ன கடன் தீர்க்க எனை இங்கு படைத்தாய் கண்ணா...?

என்று கேட்பது மட்டுமல்ல... என் விதிப்படிதான் என் வாழ்வும் அமையுமா...? என்ற மனம் குமுறும் போது... கல்லான மனமும் கரைந்து போவதில் என்ன வியப்பு இருக்க முடியும்...!

அந்தச் சூழலுக்குத்தான் பாடல்... அதை மறுப்பதற்கில்லை... ஆனால் அதுபோன்ற அனைத்துச் சூழல்களிலும் தவிக்கும் மனங்களுக்குமாக... கவிஞர் எழுதும் போதுதான்... அந்தப் பாடல்கள்... காலத்தையும் வென்று விடுகிறது.

ஸாய்ராம்.


Tuesday, August 27, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும்: பகுதி 13. 'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 4. குரு பகவான்.

ஜோதிடமும் அதன் சூட்சுமம் : பகுதி 13.

 'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 4. குரு பகவான்.

கால புருஷ இராசிக்கு 'பாக்கியம் என்ற தர்ம ஸ்தானத்திற்கும்' (9ஆமிடம்)... 'சுக சயனம் என்ற 'விரய ஸ்தானத்திற்கும்' (12 ஆமிடம்)... அதிபதியாகிறார். 'குரு பகவான்'

காலம் என்ற சக்கரம் சுழலுவதே... தர்மத்தை அடிப்படையாகக் கொண்டுதான். இந்த தர்மம்தான்... 'சூரிய பகவானையும்' (பூர்வபுண்ணிய ஸ்தானம்)... அவரின் ஆற்றலின் பிரதிபலிப்பான 'செவ்வாய் பகவானையும்' (இராசியாதிபதி)... இயக்கிக் கொண்டிருக்கிறது.

இது 'ஒரு சூரியக் குடும்பத்தைப்' பற்றிய ஆய்வு மட்டுமல்ல. அனந்த கோடி பிரமாண்டமான... பிரபஞ்சத்தில் இயங்கும்... எண்ணற்ற சூரியக் குடும்பங்களின் இயக்கத்துடனும் சம்பந்தம் பெருவதாகும். இவை அனைத்தின் இயக்கங்களும்... தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.

இந்தப் புவியின் இயக்கத்திலேயே... அதன் சுற்று வட்டப் பாதை... ஏனைய கிரகங்களுக்கிடையேயான தொலைவு...  இந்தப் பூமியின் பஞ்ச பூதங்களின் கட்டுக் கோப்பு... என அத்தனைக்கும் மூலமாக இருப்பது தர்மம் ஒன்றுதான்.

காலம் என்ற சக்கரம்... தர்மத்திற்கு உட்படும் போது... சுகம் என்ற 4 ஆமிடத்தில் அதீத பலம் பெற்று (4 ஆமிடத்தில் உச்ச பலம் பெறுவது)... சுகத்தை அள்ளித் தருவதும்... அளவுடன் பரிணமிக்கும் போது (9 மற்றும் 12 ஆமிடங்களில்)... தர்மத்தின் வெளிப்பாட்டில் அனைத்து பாக்கியங்களுடன் கடந்து போவதும்... அதுவே, 'கர்மம் என்ற கட்டுக்குள்' சிக்கும் போது... தர்மம் நிலைகுலைந்து போவதுமாக ( 10 ஆமிடமான கர்ம ஜீவன் ஸ்தானத்தில் நீசம் பெறுவது)... காலம்... தர்மத்தை வெளிப்படுத்துகிறது.

இதைத்தான்... கால புருஷ இராசியில்... 'குரு பகவான்' தர்மத்தை வெளிப்படுத்தும் 'ஞானவானாகத் திகழ்வதின்' மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்.

ஸாய்ராம்.


Monday, August 26, 2019

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 4. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

திருக்குறல் உணர்த்தும் ஞானம் - பகுதி 4.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

என்ற குறளுக்கு பொதுவானதோர் விளக்கமாக... 'ஒருவரை உயர்த்தி தேவர் கூட்டத்தில் வைத்துவிடும் அடக்கம், அதுவே, அது...மீறப்படும் போது... இருளை ஒத்த வாழ்வினில் கொண்டு போய் சேர்த்து விடும்...' என்பதான பொருளாக அமையும்.

இந்தக் குறள்... 'எண்ணற்ற சிந்தனைகளின் ஊற்றாக' அமைகிறது என்றால் அது மிகையில்லை. இந்தக் குறளின் ஒவ்வொரு சொல்லும்... அதன் கையாடலும், அந்தத் 'தெய்வப் புலவனின்'... எண்ணிலடங்கா 'அருள் ஞான வெளிப்பாடுதான்'.

'அடக்கம்'... 'அடங்காமை'... என்ற இந்த சொற்களை சற்று ஆய்ந்தால்... எந்த ஒன்று... ஒரு புள்ளிக்குள் சென்று... கண்ணுக்கும் தெரியாமல்... மறைந்து விடுகிறதோ... அதற்குத்தான் 'அடங்கும்' தன்மை என்று பெயர்.

அது போலவே... எந்த ஒன்று... கண்களின் பார்வைக்கு உட்படாததோ... கண்களால் முழுமையாக பார்க்க முடியாததோ... அதற்குத்தான் 'அடங்காமை' என்ற தன்மையின் பெயர்.

அப்படி ஒரு 'வஸ்து' இருக்கிறதா...? என்றால், ஆம், இருக்கிறது. அது 'பரமாத்ம சொரூபம்' தான். அதை வருணிக்கும் போது... 'சனாதன முனிவர்களின்' கூற்றாக... '...எல்லாமாய்... அல்லதுமாய்...' என்ற கருத்தாடல்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

அந்த பரமாத்ம சொரூபம்... இந்த ஜீவனுக்காக ஒரு 'ஆத்ம' ரூபத்தை எடுத்துக் கொள்கிறது. அது... அந்த ஜீவனுக்கான... 'ஜீவாத்மாவாக' வடிவம் பெற்றுக் கொள்கிறது. இந்த ஜீவாத்மாவுக்கு மூலம'ஆத்மாவாகவும்'... அது புறவுலகில் வெளிப்படும் இடம் 'மனமாகவும்' மாற்றம் பெறுகிறது. இந்த 'மனதின் விரிதலையும்'... 'அதன் சுருக்கத்தையுமே'... 'அடங்காமை' மற்றும் 'அடக்கம்' என்பதாக வடிவமைக்கிறார்... இந்த வார்த்தை சித்தர்.

மனம் என்பதை மூலமாகக் கொண்டே... இந்த ஜீவன் அதன் 'எண்ணங்களின் வெளிப்பாடாக'... தனது பிறவிக்கான 'கர்ம வினைகளை' அனுபவிக்கிறது.

அந்தக் 'கர்ம வினைகளின்' ஊடே பயணம் செய்யும் ஜீவன்... இந்த உலக சுகத்தில் மூழ்கி... அந்த சிற்றின்பங்களின் வழியே பயணம் செய்து... அதன் வழியேயான இன்ப-துன்ப அனுபவங்களின் விளைவுகளை மீண்டும், மீண்டும் கர்ம வினைகளின் தொகுப்பில் கொண்டு சேர்த்து... இருளை ஒத்த... எண்ணற்ற பிறவிகளில் சிக்கித் தவிப்பதையே... 'அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்...' என்ற சொல்லாடல்களால் வருணிக்கிறார்.

அது போலவே... மனதில் எழும் எண்ணங்களாகிய 'கர்ம வினைகளை' அதன் தோற்றத்திலேயே கண்டறிந்து... அதை ஆத்மா என்ற பரமாத்ம சொரூபத்தின் வலிமை கொண்டு... அதை மனதின் மூலத்திலேயே... அழித்துவிடும் அற்புத நிகழ்வைத்தான்... 'அடக்கம் அமரருள் உய்க்கும்...' என்று... பிறவிகளற்ற... பெரும் வாழ்வை... என்றும் பிறவா நிலையை அடைந்த அமரர்களின் வாழ்வுக்கு ஒப்பானதாக வருணிக்கிறார் இந்த ஞானச் செம்மல்.

ஸாய்ராம்.


Saturday, August 24, 2019

கண்ணனும்... கனக தாஸரும் :

கண்ணனும்... கனக தாஸரும் :

எப்போதும் எழும் ஒரு பொதுவான கேள்வி... 'பக்திக்கு என பிரத்தியோகமான வழிமுறைகள் இருக்கிறதா... ?' என்பதுதான்.

'அன்பு' ஒன்றுதான் பக்திக்கான அடிப்படை தகுதியாகிறது. அதன் வெளிப்பாடு 'பாவம்' என்பதை மூலமாகக் கொண்டது. 'பாவம்' எவ்வாறோ... அவ்வாறே 'பக்தியும்'.

இறைவனின் பேரருளையும்... அவரது கருணையையும் எப்போதும் அனுபவித்து மகிழ உருவானதே கோவில்கள். அந்தக் கோவில்களில் மூல விக்கிரகங்களாகவும்... அர்ச்சாதவரங்களாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைரூபங்களை... இறைவனின் சொரூபமாகவே பாவித்து பக்தி செய்யும் பக்தர்களுக்கு... எண்ணற்ற லீலைகளை நடத்தி தன்பால் ஈர்த்துக் கொள்கிறான் அந்த பேரருளாளன்.

கர்நாடக மாநிலத்தில்... உடுப்பி ஷேத்திரத்தில்... குழந்தையாக எழுந்தருளி அருள் பாலிக்கிறான் 'கிருஷ்ணன்'. ஒரு படகின் பாரத்தை ஈடுசெய்யும் பாரமாக... ஒரு திருமண் கட்டிக்குள் சிறைபட்டிருந்த... இந்த கிருஷ்ண விக்கிரகத்தை... தமது அந்தர்ஞான திருஷ்டியால் கண்டறிந்து... கடலில் தத்தளித்து மூழ்கவிருந்த படகுடன் மீட்டவர்... 'மத்வ மதத்தை' ஸ்தாபகம் செய்த 'மத்வ மகான்'.

'உடுப்பி' என்ற ஷேத்திரத்தை உருவாக்கி... அதில் அந்த 'குழந்தை கிருஷ்ண பகவானைப்' பிரதிஷ்டை செய்து... அதற்கான பூஜா விதிமுறைகளை உருவாக்கி... உலகெங்கும் இருக்கும் கிருஷ்ண பக்தர்களை அந்த ஷேத்திரத்தில் குவிக்க வைத்தவர்தான்... 'மத்வ மகிரிஷி'.

அந்த 'கிருஷ்ண பகவானை' தனது ஸ்தோத்திரங்களாலும்... கீர்த்தனைகளாலும்... மகிழவைப்பதையே... தனது பிறவியின் பயனாகக் கருதிய ஒரு எளிய பக்தரே... 'கனகதாஸர்'.

தனது பிறப்பின் வழியான குலம் அதற்குத் தடையாக இருப்பதைப் பற்றி கவலை கொள்ளாமல்... 'கிருஷ்ண பகவானின்' கோவிலுக்கு வெளியே இருந்து அன்றாடம் பூஜைகள் நிறைவுறும் போது...  கிருஷ்ண பகவானையும்... அவரை நாடி வரும் பக்தர்களையும்... தனது பக்திமிகு கீர்த்தனைகளால் பரவசப்படுத்திவிடுவார்... கனகதாஸர்.

அந்த எளிய பக்தரின் பக்தியை... உலகறியச் செய்ய எண்ணம் கொண்டார்... 'கிருஷ்ண பகவான்'. ஒரு நாள்... அவரின் கீதங்கள்... பூஜைக்கு இடையூராக இருப்பதாகக் கருதி... பூஜகர்கள்... அவரை கோவிலின் அருகாமையிலிருந்து விரட்டிவிட்டார்கள். கண்ணில் கண்ணீருடன்... தனது தம்பூராவில் சுருதி சேர்த்தபடி... கோவிலின் பின்புறம்... கருவறைக்கு வெளியில்... அந்த கருவறையைச் சுற்றிச்... சுற்றி... கீர்த்தனைகளின் ஒலியால் நிரப்பிக் கொண்டிருந்தார்... தாஸர்.

கோவிலுக்குள்ளே... பூஜைக்கான நிறைவு மணி ஒலித்தது. மணியின் ஒலிக்குப் பின்னர்... பூஜையின் நிறைவாக இசைக்கும் கீர்த்தனைக்குப் பின்னர்... திரையை நீக்கும் போது... அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 'கிருஷ்ண பகவான்'... கருவறை வாசலுக்கு தனது முதுகுப் புறத்தைக் காட்டிக்கொண்டிருந்ததுதான் அது.

அதிர்ச்சியுடன்... கோவிலுக்கு வெளியே அனைவரும் ஓடி... கருவறைக்குப் பின்னே சென்று பார்த்தனர். அங்கு... 'கிருஷ்ண பகவான்'... ஒரு சாரளத்தை தனது மத்தைக் கொண்டு உருவாக்கி... அதன் வழியாக... 'கனகதாஸரையும்'... அவரது கீர்த்தனையையும்... ரசித்துக் கொண்டிருந்தான். தனது வாழ்நாளில்... முதன் முறையாக... 'கிருஷ்ண பகவானின்' தரிசனத்தை பூரணமாக அனுபவித்துக் கொண்டிருந்தார்... கனகதாஸர்.

தனது லீலையை என்றென்றும் நினைவுகொள்ளும் வகையில்... இன்றும்... பிரகாரத்தின் பின்புறம் உள்ள சாளரத்தின் வழியாகவே... தனது பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறான்... இந்த மாயக் கண்ணன், கனகதாஸரின் நினைவாக...

ஸாய்ராம்.



ஜோதிடமும் அதன் சூட்சுமம் : பகுதி 12. 'கால புருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 3. சூரிய பகவான்

ஜோதிடமும் அதன் சூட்சுமங்களும் : பகுதி 12.

'கால புருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 3. சூரிய பகவான்.


கால புருஷ இராசிக்கு 'பூர்வ புண்ணியாதிபதியாகிறார்'... 'சூரிய பகவான்'... இந்த பூமியில் பிறந்திருக்கும் ஜீவன்கள் அனைத்தும், அதனதன் பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்பை அடைகின்றன.

அது போலவே காலம் என்ற நிலையின் மாறுதல்களுக்கு... அதன் மூலமான... 'பூர்வ புண்ணியத்தை' வழங்குபவராக... 'சூரிய பகவான்' இருக்கிறார். அவரின் ஆற்றலும்...சக்தியும்தான்... இந்த 'சூரியக் குடும்பத்தையே' உருவாக்கியும்... அதனை வழிநடத்துவதுமாக இருக்கிறது.

அவரின் பார்வை... 'லாப ஸ்தானமும்... பாதக ஸ்தானமுமான'... 11 ஆமிடத்திற்கு விரவுகிறது. இந்த பார்வை, இரண்டு விதமான விளைவுகளைக் குறிப்பிடுகிறது. அந்த ஆற்றல் 'மிதமானதாக' இருக்கும் போது... காலத்தின் 'விருத்தியும்'...  அந்த ஆற்றல் 'கடுமையாக' மாறும் போது... காலத்தின் 'அழிவும் ... சிதைவும்'... ஏற்படுகிறது.

'சூரிய பகவானின்' ஆற்றல்... கால புருஷ இராசியில், 'உச்ச பலத்தைப்' பெற்று இராசியாதிபதியான 'செவ்வாய் பகவானின்' பலத்துடன் இணைந்து 'கட்டுப்பாடுடன்'... இந்த ஆற்றலை... காலம் முழுவதுமாக விரவவிடுகிறது.

அதுவே... கால புருஷ இராசிக்கு 'தொடர்பு மற்றும்... இணைவு ஸ்தானமான'... 7 ஆமிடத்தில்... தனது 'ஆற்றலைக் குறைத்துக்' கொண்டு... தனக்கும்... தன்னோடு பயணிக்கும்... ஜீவன்களுக்குமிடையே... ஒரு ஒத்திசைவை ஏற்படுத்துகிறது.

காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்.

ஸாய்ராம்.




Monday, August 19, 2019

கவிதைத் தொகுப்பு : வெண்ணை திருடும் கண்ணன்.

கவிதத் தொகுப்பு :

'வெண்ணை திருடும் கண்ணன்'

ஆயர்குடி பசுக்கள் செய்த
அரும் தவம்... அவை
கண்ணன் குழலிசை கேட்டு
பசும் தளிர் மேய்ந்ததுதான்

அன்புக்கு கட்டுப்பட்டு
ஆசையில் அவன் பின் கூடி
ஆயர் குடி சேர்ந்து
கன்றுக்கு சேர்த்து வைத்து
மிகுதியை குடம் நிரப்பி
பால் மணம் பரப்பியது - அந்த
ஆயர் குடியும் உயர்ந்தது

கறந்த பால் சேர்த்து வைத்து
பக்குவமாய் காய்ச்சி வைத்து
முன்னமே சேர்த்து வைத்த
தயிரதனை சிறிது சேர்த்து
பாங்காய் பராமரிக்க
பால் புளித்து தயிராகும்

கோபியர்கள் ஒன்று கூடி
பானையிலே தயிரை வைத்து
மத்ததனை கயறு கொண்டு
முன்பின்னாய் கடைந்து கொள்ள
தயிரதுவும் வெண்ணையாகும்
வெண்மோரில் திரண்டு நிற்கும்

பக்குவமாய் வெண்ணை எடுத்து
உரியதனில் சேர்த்து வைக்க
பாலகிருஷ்ணன் தலைமையிலே
பாலர் படை ஒன்று சேரும்

மாயவன் துணையுடனே
மாதவன் நண்பர்குலாம்
உள்புகுந்து உறியேறி
திருடி வெண்ணை பங்கிடுவர்

பாங்காய் உறியதனை
எடுத்தாற் போல் வைத்துவிட்டு
விரல் துடைத்து கை துடைத்து
ஒன்றுமறியாப் போலே

வெளியே ஆடிடுவர்
களைத்து பின் மீண்டும்
பிற வீடு புகுந்து அங்கே
வெண்ணையை திருடித் திண்பர்

வெண்ணையை சேர்த்து வைத்து
நெய்யாக ஆக்கு முன்பே
கண்ணன் தலைமையிலே
திருட்டு வேட்டை ஆடிவிட்டு

எல்லோரும் வரும் முன்பே
வீடு சேர்ந்து... மாயக் கண்ணன்
யசோதா மடி சாய்ந்து
பொய்த் தூக்கம் தூங்கிடுவான்

பெண்களெல்லாம் ஒன்று கூடி
குறை சொல்ல வரும் போது
ஒரு கண்ணால் கண் இமைத்து
குறும்பு செய்வான்... கோபியர் கண்ணன்.

கண்ணனை கள்வன் என்பர்
துடித்திடுவாள் யசோதா
அவனை இங்கே மிரட்டி வைத்தால்
இவள் கண்ணில் மண்ணைத்தூவி
மீண்டும் மறைவான் வெண்ணை தேடி

கண்ணனைக் கள்வன் என்றால்
அதைத் தவிர வேரொன்றும்
அவன் செய்யப் போவதில்லை
இப்படி ஒரு அடையாளம்
ஏன் சுமந்தான் பரந்தாமன்

உடம்பை பால் என்றால்
உயர்ந்தோர் சொல் பழம் தயிராம்
அதைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள
உடம்பு தயிராகும்
இது சிறிது நாளாகும்
இடையே விட்டு விட்டால்
இவை புளித்து வீணாகும்

பக்குவமாய் பாங்காக
அறம் கூறி கடைந்து விட்டால்
மெல்ல மெல்ல கடைபட்டு
உள்ளத்தே வெண்ணை திரளும்
வெண்மோராய் உடல் மாறும்

வெண்ணையது திரண்டு விட்டால்
அழையாமல் அவன் வருவான்
கள்வனென உள் புகுவான்
ருசித்து வெண்ணை உண்டிடுவான்

ஆன்மீக அறம் சேர்க்க
உள்ளத்து களை நீக்கி
பக்தியெனும் மணம் பரப்பி
அருள் வெள்ளம் தொடர்ந்து வர
உள்ளமெலாம் அருள் நிறையும்,

அருளதுவும் நிறைந்து விட்டால்
அழைக்காமல் அவன் வருவான்
அறியாமல் மனம் நுழைவான்
அனுபவித்து அருள் சுவைப்பான்
உள்ளம் கவர் கள்வன்.














Saturday, August 17, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமம் : பகுதி 11. 'கால புருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 2. செவ்வாய் பகவான்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் :

பகுதி 11. 'கால புருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 2. செவ்வாய் பகவான்.

கால புருஷ இராசிக்கு... இராசியாதிபதியாகிறார்... ஆற்றலின் நாயகரான 'செவ்வாய் பகவான்'. இவர் 'பூமிக்கு' காரகத்துவமாகிறார்.

ஒன்றாக இருக்கும் ஒரு வஸ்து... ஒரு வடிவத்தைப் பெறும் போது இரண்டாகிறது. எவ்வாறு...'1'... என்ற எண்ணை ஒரு வடிவத்துக்குள் கொண்டு வரும் போது, அது 'அடி'.... 'முடி' என்ற இரு நிலைகளை அடைகிறதோ... அது போலவே... இந்த பிரபஞ்சத்தில், 'பூமி' என்றொரு 'கிரக அமைவு' ஏற்படும் போது... அது 'பூமி என்ற அடியையும்'... 'பிரபஞ்சம் என்ற வானையும்' உள்ளடக்கியதாகிறது.

பூமியின் காரகத்துவமகிற 'செவ்வாய் பகவான்'... கால புருஷ இராசிக்கு 'இராசியதியாவதற்குக்' காரணம்... 'சூரிய பகவானுக்கு' அடுத்தபடியாக... 'அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் கிரகமாக' இந்த 'செவ்வாய் பகவான்' இருப்பதால்தான். கிரகங்களின் வரிசையில்... 'சூரிய பகவானுக்கு' வழங்கப்படும் அதே 'சிவப்பு வண்ணமே'... இந்த 'செவ்வாய் பகவானுக்கும்'... வழங்கப்படுகிறது.

மேலும்... இந்த 'சூரிய பகவான்'... கால புருஷ இராசிக்கு... 'பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுமாகிறார்'. இவரின் அளவில்லா ஆற்றலை... தனது பூர்வமாகக் கொண்டுதான்... 'செவ்வாய் பகவான்'... தனது இராசியாதிபத்தியத்தை வழி நடத்துகிறார்... என்றால் மிகையில்லை.

'சூரிய பகவானின்' ஆற்றலை உள்வாங்கி... அதைத் தன் இராசியாதிபத்தியத்தின் மூலமாக... காலத்தை வழி நடத்தும் 'ஆற்றல் நாயகனாக'... இந்த 'செவ்வாய் பகவான்' திகழ்கிறார்.

இவரின் 'ஆற்றல் அளவுடன் இருக்கும் போது'... தனது 4 ஆம் பார்வையால்... 'சுக ஸ்தானத்தை' (4 ஆமிடமான 'கடக இராசி'...) பார்வை செய்து... காலத்தை 'சுகப்பட வைப்பதும்'... தனது 7 ஆம் பார்வையால்... 'தொடர்பு ஸ்தானத்தை' (7 ஆமிடமான 'துலா இராசி'...) பார்வை செய்து... காலத்தை 'இணைவுடனும், இசைவுடனும்' நடத்துவதும்... 8 ஆம் பார்வையால்... 'ஆயுள் ஸ்தானத்தை' (8 ஆமிடமான 'விருச்சிக இராசி'...) ஒரு 'நீண்ட நெடிய' சுகானுபவத்தையும் அளிப்பவராக இருக்கிறார்.

அதுவே... 'இவரின் ஆற்றல் அளவீடுகளை மீறும் போது'... சுகத்திற்கு எதிரான... துன்பத்தையும், இணைவுக்கு எதிரான எதிர்ப்புகளையும், நீண்ட நெடிய பயணத்திற்கு எதிரான குறுகிய காலத்தையும் அளிப்பதிலும் வல்லவராக இருக்கிறார்.

'காலத்திற்கான நோக்கத்தை' நிறைவேற்றுவதுதான்... இந்த காலபுருஷ இராசிநாதனின் கடமை. அதனை 'கடமை உணர்வுடன்' முழுமையாக முடிப்பதைக் குறிக்கும் வகையில்தான்... கர்ம ஸ்தானம் என்னும் 'ஜீவன ஸ்தானத்தில்'... 'உச்ச பலத்தைப்' பெறுகிறார்...  இந்த பயணத்தில்... காலம் அதன் 'சுகங்களை' இழக்க நேரிடும் என்பதைத்தான்... 'சுக ஸ்தானத்தில்' ... தனது 'நீச நிலையை' சுட்டிக் காட்டுகிறார்... இந்த 'செவ்வாய் பகவான்'.

காலத்தின் வழியே தொடர்ந்து பயணிப்போம்...

ஸாய்ராம்.


Monday, August 12, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 10. 'காலபுருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி1.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் பகுதி - 10

'காலபுருஷ இராசியும்'... அதன் சூட்சுமங்களும்-பகுதி 1.

இந்த பூமியின் அனைத்து நிகழ்வுகளும் 'காலம், நேரம் மற்றும் இடம்' என்ற மூன்று நிலைகளை அடிப்படையாகக்  கொண்டே பதிவிடப்படுகிறது.

இதில் 'இடம்' என்ற நிலையை... 'பூமியின் புவிவியல் அமைப்பு' உறுதி செய்கிறது. அது இந்த புவியின் அமைவை... ஐந்து கண்டங்களாகவும்... சமுத்திரங்களாகவும் பகுத்து அதற்கான வடிவத்தை அடைகிறது. கண்டங்கள்... நாடுகள்... அதன் உள் பிரிவான மாநிலங்கள்... நகரங்கள்... கிராமங்கள்... என எண்ணற்ற பகுதிகளாக வரையறுக்கப்படுகிறது.

'காலம்' என்ற நிலையின் பதிவுகள்... பல நிலைகளில் வளர்ச்சியடைந்து இன்று... பொதுவாக 'ஆங்கிலேயர்கள்' பின்பற்றும் வழிமுறையான... 'காலண்டர்' என்ற பகுப்பு முறையில்... 'வருடமாக... மாதங்களாக... வாரங்களாக... நாட்களாக... கிழமைகளாக'... நடைமுறையில் பதிவு செய்யப்படுகிறது.

இது போல 'நேரம்' என்ற நிலையை... 'கடிகாரத்தின்' உதவியுடன்... 'மணி... நிமிடம்... விநாடி...' என்ற முறையில் பதிவு செய்யும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது.

காலங்களுகெல்லாம் முந்தையதாகவும்... அப்பாற்பட்டதாகவும்... 'அனாதி' (காலவறைகளுக்கு உட்படாதது ) என்று  வரையறுக்கப்படும்... 'வேதங்களின்' ஒரு பகுதியாக இருக்கும் 'ஜோதிடக் கலை'... இந்த கண்டுபிடிப்புகளுக்கு முன்பேயே... 'இந்த காலம்... நேரம்... இடம்...' என்ற நிலைகளை... நமது பூர்வ ரிஷிகள்... தமது 'அந்தர் ஞானம்'... என்ற உள் நோக்குப் பார்வையால்... அறிந்து, அவற்றில் 'இடம்' என்ற நிலையை அன்றைய புவியல் அமைப்புடனும்... 'காலம் மற்றும் நேரத்தை... 'நாள்... நட்சத்திரம்... திதி... கரணம்... யோகம்' என்ற... ஐந்து நிலைகளை மூலமாகக் கொண்டு... 'பஞ்சாங்கம்' என்ற ஒரு அறிய கண்டுபிடிப்பின் மூலம்... என்றென்றும் அழியாத ஒரு 'தொடர் பதிவுக்கான' வித்தாக புவி வாழ் மாந்தருக்கு அளித்திருக்கிறார்கள்.

ஜோதிடக் கலை... இந்த 'கால... நேர... இட...' வரையரைகளை 'ஜோதிடச் சித்திரத்தின்' மூலமே வரையறுத்திருக்கிறது. அதன் பரிணாமமே... இன்று ஒவ்வொரு ஜீவனின் கைகளிலும்... அது ஒரு 'ஜோதிடச் சித்திரமாக' வடிவம் பெறுகிறது. அது... அந்த சித்திரத்தில்... அந்த ஜீவன் 'பிறந்த நேரத்தின்... இடத்தின்...' அடிப்படையில்... அன்றைய பிரபஞ்ச கிரக சுழற்சிகளை பதிவிடுகிறது. 'காலத்தை'... 'சந்திர பகவான்' கடக்கும்... 'நட்சத்திரத்தின் சாரமான'... கிரகத்தின் வழியாகக் கணித்து... அதை 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பாக'... வருடம், மாதம், நாள், மணி, நாழிகை, விநாடி... என ஒரு துல்லிய கணிப்புக்குள் அடக்குகிறது.

காலம்... 'கடந்ததாகவும், நிகழ்வதாகவும், வருவதாகவும்' இருக்கிறது. அதை ஒரு வடிவத்துள் அடக்கியதில்தான்... ஜோதிடக் கலையின் பெருமை அடங்கியிருக்கிறது. ஜோதிடச் சித்திரத்தில்... பன்னிரு இராசிகளாக... பகுக்கப்பட்டிருக்கும் இராசிகளில்... முதல் இராசியான... 'மேஷ இராசி' காலத்தைக் குறிக்கும்... 'கால புருஷனின்'... 'இராசியாக' வகுக்கப் பட்டிருக்கிறது.

இந்த 'மேஷ இராசியை' மூலமாகக் கொண்டு... இனி காலத்தையும்... அதன் வழியிலான ஜீவனின் பயணத்தின் சூட்சுமத்தையும்... படிப்படியாகப் பார்ப்போம்...

ஸாய்ராம்.






Friday, August 9, 2019

கவிதைத் தொகுப்பு : சித்தர் பாரதி

கவிதைத் தொகுப்பு

சித்தர் பாரதி

சுய நல வாழ்வை எதிர்த்தவன்
ஏடுகளைவிட இயற்கையைப் படித்தவன்
அறிவார்ந்தவற்றை சுவர்களுக்குள்
அறிய விருப்பமின்றி
சுவர்களை தகர்த்து
ஞானம் கற்றவன்

சராசரி வாழ்வில் போராடி
கர்ம யோகியாய், அஞ்ஞானம் களைந்தவன்
பிறந்த பூமியின் பெருமை உணர்ந்தவன்
சுதந்திரத்தை சுவாசமாக்கியவன்
சுவாசம் மூலம் சக்தியை அறிந்தவன்

நெருப்பை அணைத்தவன்
நீரில் கரைந்தவன்
வெளியில் பிறந்தவன்
உடலை முழுவதும் மூச்சால் நிறைத்தவன்

மண்ணில் படுத்து வாசம் நுகர்ந்தவன்
பாறையில், அருவியில், மரத்தில்,
பூவில், குயிலில், காகத்தில், குருவியில்,
விலங்கில், பூவுலக வாசிகள்
அனைத்திலும் சக்தியைக் கண்டவன்

புரிந்தவன், அறிந்தவன், தெளிந்தவன்,
ஒன்றாய் கலந்தவன்
சம்பிரதாய வாழ்வினுள்ளே
சடங்குகள் முறிந்து
நெஞ்சு நிமிர்த்தியவன்

ஞான முகத்தில் கோபத்தீயை
கண்களில் மூட்டியவன்
காட்சிக்கு கண்களையும்
காட்சிக்குள் பார்வையையும் திருப்பி
புருவமத்தியில் ஞானப் பொட்டிட்டவன்

வீரத்தை மீசையாய் முறுக்கி விட்டவன்
எண்ணங்களை கவிதையாய் கொட்டி விட்டவன்
மரண வாழ்வை எட்டி உதைத்தவன்
ஞான மண்ணில்... சித்தர்கள் உலகில்...
ஒன்றெனக் கலந்தவன்.

ஸாய்ராம்.

( 15.2.2002 அன்று... மனதில் உதித்தது )

Wednesday, August 7, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 9. கர்மவினை - விஞ்ஞான, மெய்ஞான ஆய்வு.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 9.

கர்ம வினை - விஞ்ஞான, மெய்ஞான ஆய்வு

'கர்ம வினைகள்' என்ற... ஒவ்வொரு மனித ஜீவனுக்குமிடையேயான எண்ணற்ற வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள்... என்ற 'மெய்ஞ்ஞானக்' கூற்றை... 'ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்குமிடையேயான குணம் மற்றும் பண்புகளின் வித்தியாசம்' என்பதன் அடிப்படியில்... 'விஞ்ஞானம்' பகுத்துப் பார்க்க விளைந்தது.

மெய்ஞானம் உணர்த்திய, மனித ஜீவர்களுக்கிடையேயான முரண்பட்ட பண்புகள் மற்றும் குண மாறுபாடுகளுக்கான காரணம்... அந்தந்த ஜீவர்களின் 'கர்ம வினைகள் என்பதுதான்.

கர்மவினைகள் என்பதை, பகுக்கும் போது, ஒரு ஜீவனுக்கு இரண்டு விதமான செயல் வடிவங்கள் இருப்பதை காண முடிகிறது. ஒன்று... 'தான் திட்டமிட்டு செயல்படுத்தும் செயல்கள்'. மற்றொன்று... தனக்கு 'வெளியிலிருந்து நேரும் சூழல்களுக்கு ஏற்ப எதிர்செயலை' மேற்கொள்வது.

இதன் இரண்டு வடிவ செயல்களுக்கும் 'விளைவுகள்' என்பது இருக்கவே செய்யும். இந்த விளைவுகள்தான் அந்த ஜீவனின் 'தற்கால வாழ்வையும்... 'தொடரும் பிறவிகளையும்'... நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு ஜீவனும் அதன் மனதில் உருவாக்கிக் கொள்ளும் 'எதிர்பார்ப்புகளுக்கு' ஏற்பவே. 'செயல்களிலும்... எதிர் செயல்களிலும்' ஈடுபடுகிறது. அதனால்தான்... அதன் 'விளைவுகளின் தொகுப்பான'... கர்ம வினைகள்... ஜீவனுக்கு ஜீவன் மாறுபடுகிறது.

இந்த அடிப்படையின் மூலமாக... ஒரே நேரத்தில், ஒரே காலத்தில் பிறந்த இரு வேறு ஜீவர்களின் வாழ்க்கைப் பயணத்தை... அதன் எண்ணற்ற மாறுபாடுகளை... குணங்களாக, பண்புகளாக, வாழ்வின் சூழலின் ஏற்றத் தாழ்வுகளாக, இன்ப-துன்ப நிகழ்வுகளாக மெலும் எண்ணற்ற வகைகளில் பகுத்து ஆராய... உருவாக்கப்பட்டதுதான் 'ஜோதிடக் கலை' என்ற இந்த 'வேதத்தின் அங்கம்'.

ஒவ்வொரு ஜீவனது வாழ்வையும்... நாள், நட்சத்திரம், திதி, கரணம், யோகம் என்ற ஐந்து அங்கங்களின் மூலமான 'ப்ஞ்சாங்கத்தின்' அடிப்படையில்...  ஜனனக் குறிப்பு, இராசி, நவாம்ஸம், கிரக பாத சாரங்கள், கர்ப்ப செல் நீக்கிய தசா இருப்பு.. என்ற அடிப்படை அமைப்புகளைக் கொண்ட... 'ஜோதிட சித்திரமாக்கி'... அதை 'ஒவ்வொரு ஜீவனின் கையிலும்' கொடுத்திருக்கிறது... மெய்ஞானம் வழங்கிய... ஜோதிடக் கலை.

இந்த ஜோதிடச் சித்திரத்தின் மூலமான 'பஞ்சாங்கம்' என்ற நாட்குறிப்பை... அன்றைய 'ரிஷிகள்' தமது 'அந்தர் ஞான திருஷ்டியின்' மூலமாக... 'வானியல் சாஸ்த்திரத்தின்' கூறுகளான 'கிரகங்களையும்... நட்சத்திரங்களையும்' அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள். அதன் மூலமாக உருவாக்கப்படும் 'ஜோதிட சித்திரத்தின்' வாயிலாக ஒவ்வொரு ஜீவனின் வாழ்வு நிலை மாறுபாடுகளை மிகத் துல்லியமாகக் கணித்து... அதை 'ஜோதிட விதிகளாக' உருவாக்கியிருக்கிறார்கள்.



விஞ்ஞானம் இதனை... ஜீவனுக்கு ஜீவன் என்ற முறையில் ஆய்வுக்கு உட்படுத்தும் போது... ஒவ்வொரு ஜீவனும் அதனதன் 'பண்புகளையும்... குணங்களையும்'... தனது 'பரம்பரையின் கூறுகளாக' எடுத்து வருகிறது... என்று வரையறுத்தது.

இந்தப் பண்புகளும்... குணங்களும் வெளிப்படுத்தும் மூலமாக... ஒவ்வொரு 'ஜீவனின் உடலிலும்' அமைந்த 'திசுக்கள்' என்ற 'செல்களை' மூலமாகக் கொண்டு... அந்த 'செல்களுக்குள்' இருக்கும் 'உட்கருவுக்குள்'... அமைந்திருக்கும்... இழைக்கற்றைகளான 'குரோமோசோம்களை' அதன் எண்ணிக்கை... அதனுள் அமைந்திருந்த 'ஜீன்கள்' என்ற மரபு அணுக்களின் வரிசை... என்பதை ஆதரமாகக் கொண்டு... ஒவ்வொரு ஜீவனின் 'பண்பு... குண வேறுபாடுகளை' ஆய்வுக்கு உட்படுத்தினர்.

இந்த ஆய்வு... 'வெவ்வேறு வகையான'... ஜீவன்களுக்கிடையாயான வேறுபாடுகளைத்தான் உறுதி செய்தது. உதாரணமாக 'மனிதர்களின் உடலில்' அமைந்த செல்களில் உள்ள 'குரோமோசோம்களின் எண்ணிக்கை 46' என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது 'இரண்டு 23 இழைவடிவங்களாக' அமைந்திருந்ததும் உறுதி செய்யப் பட்டது. அது போலவே 'சிம்பன்ஸி' போன்ற மனித இனத்தை ஒட்டிய பழக்க வழக்கங்களுடன் ஒப்பிடப்பட்ட 'ஒருவகை இனத்தின்'... 'குரோமோசோம்களின் எண்ணிக்கை'... 'இரண்டு 24 இழைக்கற்றைகளாக'... '48 குரோமோசோம்களைக்' கொண்டதாக அமைந்தது.

அப்படியென்றால்... 'ஒரே எண்ணிக்கை' கொண்ட 'ஏனைய ஜீவன்கள்' ஏறத்தாள 'ஒரே குண... பண்பு நலன்களைக்' கொண்டிருக்கும் போது... 'ஒரே எண்ணிக்கையைக் கொண்ட மனித இனத்தின் பண்புகளும்... குணங்களும் மட்டும் ஜீவனுக்கு ஜீவன் மாறுவது எவ்வாறு...? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்தக் கேள்விக்கு விடையாக தொடர்ந்த ஆய்வில்... 'இருவேறு மனிதர்களின்' குரோமோசோம்களின்... ஜீன்களின் அடுக்கை... ஒவ்வொன்றாக ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். நிச்சியமாக இந்த ஆய்வு ஒரு உன்னத முடிவைக் கொண்டு வரும் என்று நம்பினார்கள். இந்த ஆய்வு மட்டும் வெற்றி பெற்றால்... தற்போது இருக்கும் 'ஆதார் அட்டை' போல ஒவ்வொருவர் கையிலும் ஒரு 'ஜீன்களின் அட்டவணை' இருந்திருக்கும். அது அந்த மனிதனின் அனைத்து குண... பண்புகளைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக இந்த ஆய்வு... 'ஒரு எதிர்பாராத முடிவை' அளித்தது. அது... அந்த இருவேறு மனிதர்களின்... ஜீன்கள் ஒவ்வொன்றும்... 99% விகிதம் ஒத்துப் போனது. ஒரே 1% விகிதத்தில்தான் மாறுபட்டது. அந்த 'ஜீன்களின் அட்டவணை அமைப்புக்கான ஆய்வு'... இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த 1% விகித வித்தியாசத்தில்தான்... இந்த 'பிரப்ஞ்சப் படைப்பாளன்'... இவ்வளவு இரகசியமான... 'குண... பண்பு மாறுபாடடுகளை'...  புதைத்து வைத்திருக்கிறான்.



இதைத்தான் 'ஜோதிடம்' என்ற அரிய கலையின் மூலமாக... மெய்ஞானம் அன்றே வெளிப்படுத்தியது.

ஸாய்ராம்.



Monday, August 5, 2019

கவிதைத் தொகுப்பு : மனம் ஒரு குரங்கு

கவிதத் தொகுப்பு : மனம் ஒரு குரங்கு

ஒரு நிலையில் நில்லாது
ஒரு கையில் கிளை பிடித்து
மறு கையில் ஒன்றை வளைத்து
பின்னொரு கிளை அமர்ந்து
புதிதொன்றில் கால் பதிக்கும்.

இவையாவும் ஓர் நொடியில்
நிகழ்ந்தே போகும் ;
உணவே அதன் நோக்கம்
உறுமியாயினும் அதை சேர்க்கும்.

உணட உணவு செரிக்க
ஓயாமால் அலை பாயும்
புதுப்புது கிளை தாவும்;
கனியிங்கள் சுவைத்துவிட
பூ மரங்கள் உலுக்கிவிடும்
காய்கள் இங்கே நாசமாகும்.

உண்டும் உறங்கியும்
இனவிருத்தி செய்தும்
ஒன்று போல அனைத்தையும்
ஒரே அச்சாய் உருவாக்கும்.

நம் மனமும் அவ்வாறே
இதன் வேகம் ஒளியை மிஞ்சும்
ஒரே நிமிடம் ஓராயிரம்
சிறகுகள் விரிக்கும்.

குரங்கைப் போல ஒரே மரத்தில்
கிளைகள் பல தாவாமல்
மரத்திற்கு மரம் தாவும்
இடத்திற்கு இடம் தாவும்
கண்டம் விட்டு கண்டம்
பூமியும் வானம் தாண்டும்
அதற்கப்பாலும் விரைந்து செல்லும்.
திடீரென் பூமியில் விழுந்து
ஒன்றும் அறியா பிள்ளை போலே
தூசு தட்டி எழுந்து நடக்கும்.

ஒன்றைப் பார்க்கும்
பிரிதொன்றை சிந்திக்கும்
அதிலேயும் நிலைக்காமல்
இன்னொன்றில் போய் நிற்கும்.

உடலைக் களைக்க வைக்கும்
ஓய்வெடுத்து உறங்க வைக்கும்
கனவில் வலம் வந்து
திடுக்கிட்டே விழிக்க வைக்கும்.

ஆசைக்கு வித்திட்டு
அதற்கு நெய் ஊற்றி
கொழுந்துவிட்டு எரிய வைக்கும்
உடல் ஆற்றல் விரயாமாக்கும்
உள்ளம் சோர்ந்து ஆசை விட்டால்
அடுத்தொன்றை வளர்த்து விட்டு
மறு போர்க்குத் தயாராக்கும்.

ஆசையே மீண்டும் பிறப்பெடுக்கும்
ஆண்டவனைச் சேராமல் தடுத்து வைக்கும்
மனம் மட்டும் வழி விட்டால்
ஆசை களைந்து போகும்
அழிவில்லா ஆனந்தம் கைகூடும்.

சுறு சுறுப்பும் நுண்ணறிவும்
உடல் வலுவும் ஒற்றுமையும்
ஒருங்கே உள்ள குரங்கினம்
ஒரு நிமிடம் அமைதியானால் ;

வலது காலை மடக்கி வைத்து
இடது காலால் குத்திட்டு
தலயுடன் உடல் சாய்த்து
கை கூப்பி பாதம் நோக்கும்.
குரங்கினமே அனுமனாகும்.

அனைத்து குரங்கினமும்
ஆர்ப்பாட்ட கூச்சலிட
இவன் மட்டும் அமைதியானான்
அறிவுடன் சிந்தித்தான்.

அவையடக்கம் அறிந்து கொண்டான்
இவன் இனத்தின் சேஷ்டை நீக்கி
அருள் வடிவாய் அமர்ந்து விட்டான்
அய்யனின் அடிகளிளே.

அய்யனவன் திருவடியை
ஆழ்ந்துள்ளே நோக்கும் பாங்கு
தெய்வாம்சம் முகம் காட்டும்
இவன் பிறவி பயனடையும்.

இது போலே மனம் இங்கே
ஒரு நிலையில் அமைதி பெற
மனம் முழுதும் இறை நிலையை
முழுவதுமாய் நிறைத்து வைப்போம்.

ஐம்புலனை அடக்கிவைத்து
ஆசைகளை குறைத்துக் கொண்டு
மரம் தாவும் குரங்கினைக் கொஞ்சம்
மடக்கி இங்கே அமர வைப்போம்.

அமர்ந்து விட்டால்
துயரமில்லை
மீண்டும் ஒரு பிறவியில்லை
அஞ்ஞானத் திரை விலகும்
மெய்ஞ்ஞானம் கைகூடும்
ஆனந்த நிலையில்
மனமிங்கே கூத்தாடும்.

ஆஞ்சனேயர் நிலை போலே
மனமிங்கே அமைதியாகும்.

ஸாய்ராம்.



(( 23.4.2002 அன்று மனதில் உதித்த கவிதை)



Thursday, August 1, 2019

பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 3. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வர ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தியின் அருள் கருணை

பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 3.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வர ஸ்ரீ தக்ஷ்ணமூர்த்தியின் அருள் கருணை :

தஞ்சையில் இருக்கும் நண்பர் ஒருவரின் அறிமுகத்துடன் வந்தவர், தான் வெளி நாடு செல்ல முயற்சி எடுத்திருப்பதாகவும்... அது தாமதமாகிக் கொண்டிருப்பதால்... அதற்கான பரிகாரங்கள் ஏதாவது உண்டா... என்பதை அறிந்து கொள்ளுவதற்காக வந்திருப்பதாகக் கூறினார்.

அவரது ஜாதகத்தை ஆய்ந்த போது... அவர் இருக்கும் இடத்தை விட்டு ஜீவனத்திற்காக... வெளி ஊருக்கோ அல்லது வெளி நாட்டிற்கோ செல்வதற்கான சூழல்... தற்போது இல்லை என்பதையும், ஒரு வருடத்திற்குள்ளாக... இருக்கும் இடத்திலேயே... ஒரு தொழில் செய்யும் வாய்ப்பும் கூடிவரும் என்பதைத் தெரிவித்தோம்.

சென்னையில் இருக்கும் நண்பர் ஒருவரின் மூலம்தான் இந்த வெளி நாட்டு முயற்சி செய்யப் பட்டிருக்கிறதென்றும்... அந்த நண்பர் மிகவும் நம்பிக்கையானவர் என்றும்... எவ்வகையிலும் பணத்திற்கோ, அல்லது பயணத்திற்கோ இடையூறு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும்... சற்று தாமதமாகிக் கொண்டிருப்பதால்... ஏதாவது பரிகாரம்... செய்து, அந்தத் தாமதத்தை தவிர்த்து விடலாம் என்ற நோக்கத்திலேயே... நம்மைச் சந்திக்கவந்ததாகக் கூறினார்.

அவரின் நம்பிக்கைக்கு இடையூராகாமல்... அவருக்கு ஒரு பக்திப் பரிகாரத்தைக் கூறினோம். அது... கும்பகோணம், ஆலங்குடியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் 'ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்' சென்று... 'சுவாமியையும், தாயாரையும் வழிபட்டு பின்னர் பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தக்ஷ்ணமூர்த்தி பகவானையும்' வழிபட்டு... அங்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் தீபத்தில் சிறிது நெய் சேர்த்து விட்டு வருமாறு... ஆலோசனை வழங்கினோம்.

மாதங்கள் உருண்டோடின... ஒரு நாள் மதிய வேளை... அதே நபர் மீண்டும் நம்மைச் சந்திக்க வந்தார். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு... என்னிடம் ஒரு அழைப்பிதழைக் கொடுத்தார். அது, அதற்கு முதல் மாதத்தில்... சென்னையில், ஒரு அரங்கத்தில் நடந்த... 'ஸ்ரீ புட்டபர்த்தி சாயி பகவானின்' பஜனை, மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ். அதைப் பார்த்த்தற்குப் பின்... அந்த அழைப்பிதழுக்குப் பின்னால் நிகழ்ந்த ஒரு அற்புதத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அது... நம்மைச் சந்திததற்குப் பின், ஆலங்குடி சென்று 'சர்வேஸ்வரர்... தாயார்... ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகளைத்' தரிசனம் செய்துவிட்டு... பயணத்திற்கான பிரார்த்தனைகளை சமர்ப்பித்து விட்டு சென்னை சென்று விட்டார். பயணத்திற்கான நாட்களும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன. கையில் இருந்த பணமும்... தஞ்சையில் குடும்பத்தினருக்கென கொடுத்த வந்த பணமும் கரைந்து கொண்டே போனது.

திருவல்லிக்கேணியில், ஒரு மேன்ஷனில் தங்கியிருந்த அவருக்கு... ஆறுதலெல்லாம்... அருகில் பழகிய நண்பர்கள் மட்டுமே. ஒரு நாள்... ஏஜென்டான அவரின் நண்பர்... மேன்ஷனுக்கு தொலைபேசியில் பேசுகையில்... வெளிநாட்டில் அவரது ஏஜென்ட்.... தமக்குக் கொடுத்திருந்த காண்ட்ராக்ட்டை கேன்சல் செய்து விட்டதாகவும்... ஆதலால், தற்போது உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யமுடியாத சூழலில் அவர் இருப்பதாகவும்... இவரை தஞ்சைக்கு கிளம்புமாறும்.. மாற்று ஏற்பாடுகளுக்குப் பின்னர்...  இவருக்கு, விபரம் தெரிவிப்பதாகவும் கூற... அதிர்ச்சி அடைந்து போனார்... இவர்.

அந்த நாள் முழுவதுமாக யோசித்து விட்டு... ஏஜென்டை நேரில் சந்திக்கச் சென்றார். அவரிடம் தனது சூழலை விளக்கி... பயணமே வேண்டாம் என்றும்... இதுவரை இந்த முயற்சிக்காக  செலவழித்தத் தொகையைக் கழித்துக் கொண்டு... மிகுதியைக் கொடுத்துவிடுமாறும் கூறினார். ஏஜென்டோ... தனது சூழலை விளக்கி... தற்போதைய நிலையில், தம்மால் இது விடயமாக எதுவும் செய்ய முடியாது என்று கூற... விரக்தியின் விளிம்பில் விடுதி வந்து சேர்ந்தார்.

மேன்ஷன் நண்பர்களிடம் எதுவும் கூறாமல் ஓய்வெடுக்கச் சென்றவர் மனதில் ஒரு திட்டம் உருவானது... அது, கையில் பணமில்லாமலும்... வெளி நாடு செல்ல முடியாமலும்... ஊருக்குத் திரும்பமுடியாது. எனவே, அடுத்த நாள் காலை... மேன்ஷனில் உள்ளவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்ற பின்... தனது உயிரை மாய்த்துக் கொள்வது... என்பதுதான்.

அடுத்த நாள் காலை எழுந்து, வழக்கம் போல தனது கடமைகளை முடித்து விட்டு, மேன்ஷன் அமைதியாவதற்காக காத்திருந்த வேளை... அடுத்த அறையிலிருந்த நண்பர்... இவரிடம் வந்து, இந்த அழைப்பிதழைக் கொடுத்து... தான் 'புட்டபர்த்தி மஹானின்' பக்தர் என்றும்... தனக்கு இரண்டு அழைப்பிதழ்கள் வந்ததாகவும்... அதில் ஒன்றை, இவருக்குக் கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்ததாகக் கூறினார். இவரின் வெளி நாட்டுப் பயணத் தாமதத்தை அவர் அறிந்தவராதலால்... இன்று மாலையில் நடக்கும்  கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டால்... அது, இவருக்கு ஒரு வாய்ப்பாக அமையலாமே... என்ற எண்ணத்தில்தான்... இந்த அழைப்பிதழைக் கொடுப்பதாகக் கூற... இவருக்கு ஒரு சிறு நம்பிக்கை உள்ளத்தில் ஒளிர் விட்டது.

தனது முடிவை, ஒரு நாள் தள்ளிப் போட்டுவிட்டு, நண்பருடன் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பகவானைத் துதிக்கும் பஜனைப் பாடல்களும்... பக்தர்களின் பக்தி கோஷங்களும்... பிரசாதங்களும்... இவரைச் சற்று ஆறுதல் படுத்தின. இறுதியில் நிகழ்ந்த கூட்டுப் பிரார்த்தனையின் போது... இவரின் பெயரைக் குறிப்பிடாது... இவரது நிலையை பிரார்த்தனையாக ஒலி பெருக்கியில் அறிவித்ததும்... அதனை நிறைவேற்றித் தருமாறு பக்தர்கள் அனைவரும் பிரார்த்தித்ததும்... இவரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. நன்றியுடன் நண்பரின் கைகளைப் பற்றிக் கொண்டார்.

அடுத்த நாள் காலை வேளையிலேயே... இவருக்கு தொலை பேசியில் அழைப்பு  வந்திருப்பதாக மேன்ஷன் ஊழியர் வந்து கூற... சற்று பதட்டத்துடன் சென்று தொலை பேசியை எடுக்க... மறு முனையில் சென்னை ஏஜென்ட் பேசினார். சற்று முன்னர்தான்... வெளி நாட்டில் இருக்கும் தனது ஏஜென்ட்... கேன்சல் செய்த கான்ட்ராக்டுக்கான முன்தொகை முழுவதையும் அனுப்பிவிட்டதாகவும்... இவர் வந்தால்... இவருக்குச் சேர வேண்டிய தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்... என்று கூற...  மகிழ்ச்சியில் திளைத்தவராக... உடனே கிளம்பிச் சென்று... தொகை முழுவதையும் பெற்றுக் கொண்டு... நண்பர்களிடமும் இதைத் தெரிவித்துவிட்டு... ஊர் வந்து சேர்ந்திருக்கிறார்.

வந்ததும்... உடனே, ஆலங்குடி சென்று... சுவாமியையும்... தாயாரையும்... ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தியையும் நன்றியுடன் வழிபட்டுவிட்டு... இந்த அழைப்பிதழையும் எடுத்துக் கொண்டு நம்மை வந்து சந்தித்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டுக் கொண்டே... அந்த அழைப்பிதழை எடுக்கும் போது... அதனுடன் ஒரு 'ஸ்டிக்கர்' வந்து விழுந்தது. அதனை, இதுவரை அந்த நண்பரும் பார்த்திருக்கவில்லை. ஆந்த ஸ்டிக்கரில் இருந்தது 'புட்டபர்த்தி மஹானின் திருவுருவப் படம்'... அதனைச் சுற்றி ஒரு வாசகம்... அது... WHY FEAR WHEN I AM HERE என்பதுதான்.

அந்த ஸ்டிக்கரை அவர் எனது அலுவலக தடுப்புக் கண்ணாடியில் ஒட்டிவிட்டுச் சென்றார். தொடர்ந்த மாதங்களில்... நண்பர்களுடன் இணைந்து ஒரு தொழிலிலும் ஈடுபட்டார்.

ஆம்... பக்திதான் பரிகாரங்களிலேலேயே சிறந்தது.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...