Thursday, August 1, 2019

பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 3. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வர ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தியின் அருள் கருணை

பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 3.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வர ஸ்ரீ தக்ஷ்ணமூர்த்தியின் அருள் கருணை :

தஞ்சையில் இருக்கும் நண்பர் ஒருவரின் அறிமுகத்துடன் வந்தவர், தான் வெளி நாடு செல்ல முயற்சி எடுத்திருப்பதாகவும்... அது தாமதமாகிக் கொண்டிருப்பதால்... அதற்கான பரிகாரங்கள் ஏதாவது உண்டா... என்பதை அறிந்து கொள்ளுவதற்காக வந்திருப்பதாகக் கூறினார்.

அவரது ஜாதகத்தை ஆய்ந்த போது... அவர் இருக்கும் இடத்தை விட்டு ஜீவனத்திற்காக... வெளி ஊருக்கோ அல்லது வெளி நாட்டிற்கோ செல்வதற்கான சூழல்... தற்போது இல்லை என்பதையும், ஒரு வருடத்திற்குள்ளாக... இருக்கும் இடத்திலேயே... ஒரு தொழில் செய்யும் வாய்ப்பும் கூடிவரும் என்பதைத் தெரிவித்தோம்.

சென்னையில் இருக்கும் நண்பர் ஒருவரின் மூலம்தான் இந்த வெளி நாட்டு முயற்சி செய்யப் பட்டிருக்கிறதென்றும்... அந்த நண்பர் மிகவும் நம்பிக்கையானவர் என்றும்... எவ்வகையிலும் பணத்திற்கோ, அல்லது பயணத்திற்கோ இடையூறு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும்... சற்று தாமதமாகிக் கொண்டிருப்பதால்... ஏதாவது பரிகாரம்... செய்து, அந்தத் தாமதத்தை தவிர்த்து விடலாம் என்ற நோக்கத்திலேயே... நம்மைச் சந்திக்கவந்ததாகக் கூறினார்.

அவரின் நம்பிக்கைக்கு இடையூராகாமல்... அவருக்கு ஒரு பக்திப் பரிகாரத்தைக் கூறினோம். அது... கும்பகோணம், ஆலங்குடியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் 'ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்' சென்று... 'சுவாமியையும், தாயாரையும் வழிபட்டு பின்னர் பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தக்ஷ்ணமூர்த்தி பகவானையும்' வழிபட்டு... அங்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் தீபத்தில் சிறிது நெய் சேர்த்து விட்டு வருமாறு... ஆலோசனை வழங்கினோம்.

மாதங்கள் உருண்டோடின... ஒரு நாள் மதிய வேளை... அதே நபர் மீண்டும் நம்மைச் சந்திக்க வந்தார். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு... என்னிடம் ஒரு அழைப்பிதழைக் கொடுத்தார். அது, அதற்கு முதல் மாதத்தில்... சென்னையில், ஒரு அரங்கத்தில் நடந்த... 'ஸ்ரீ புட்டபர்த்தி சாயி பகவானின்' பஜனை, மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ். அதைப் பார்த்த்தற்குப் பின்... அந்த அழைப்பிதழுக்குப் பின்னால் நிகழ்ந்த ஒரு அற்புதத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அது... நம்மைச் சந்திததற்குப் பின், ஆலங்குடி சென்று 'சர்வேஸ்வரர்... தாயார்... ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகளைத்' தரிசனம் செய்துவிட்டு... பயணத்திற்கான பிரார்த்தனைகளை சமர்ப்பித்து விட்டு சென்னை சென்று விட்டார். பயணத்திற்கான நாட்களும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன. கையில் இருந்த பணமும்... தஞ்சையில் குடும்பத்தினருக்கென கொடுத்த வந்த பணமும் கரைந்து கொண்டே போனது.

திருவல்லிக்கேணியில், ஒரு மேன்ஷனில் தங்கியிருந்த அவருக்கு... ஆறுதலெல்லாம்... அருகில் பழகிய நண்பர்கள் மட்டுமே. ஒரு நாள்... ஏஜென்டான அவரின் நண்பர்... மேன்ஷனுக்கு தொலைபேசியில் பேசுகையில்... வெளிநாட்டில் அவரது ஏஜென்ட்.... தமக்குக் கொடுத்திருந்த காண்ட்ராக்ட்டை கேன்சல் செய்து விட்டதாகவும்... ஆதலால், தற்போது உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யமுடியாத சூழலில் அவர் இருப்பதாகவும்... இவரை தஞ்சைக்கு கிளம்புமாறும்.. மாற்று ஏற்பாடுகளுக்குப் பின்னர்...  இவருக்கு, விபரம் தெரிவிப்பதாகவும் கூற... அதிர்ச்சி அடைந்து போனார்... இவர்.

அந்த நாள் முழுவதுமாக யோசித்து விட்டு... ஏஜென்டை நேரில் சந்திக்கச் சென்றார். அவரிடம் தனது சூழலை விளக்கி... பயணமே வேண்டாம் என்றும்... இதுவரை இந்த முயற்சிக்காக  செலவழித்தத் தொகையைக் கழித்துக் கொண்டு... மிகுதியைக் கொடுத்துவிடுமாறும் கூறினார். ஏஜென்டோ... தனது சூழலை விளக்கி... தற்போதைய நிலையில், தம்மால் இது விடயமாக எதுவும் செய்ய முடியாது என்று கூற... விரக்தியின் விளிம்பில் விடுதி வந்து சேர்ந்தார்.

மேன்ஷன் நண்பர்களிடம் எதுவும் கூறாமல் ஓய்வெடுக்கச் சென்றவர் மனதில் ஒரு திட்டம் உருவானது... அது, கையில் பணமில்லாமலும்... வெளி நாடு செல்ல முடியாமலும்... ஊருக்குத் திரும்பமுடியாது. எனவே, அடுத்த நாள் காலை... மேன்ஷனில் உள்ளவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்ற பின்... தனது உயிரை மாய்த்துக் கொள்வது... என்பதுதான்.

அடுத்த நாள் காலை எழுந்து, வழக்கம் போல தனது கடமைகளை முடித்து விட்டு, மேன்ஷன் அமைதியாவதற்காக காத்திருந்த வேளை... அடுத்த அறையிலிருந்த நண்பர்... இவரிடம் வந்து, இந்த அழைப்பிதழைக் கொடுத்து... தான் 'புட்டபர்த்தி மஹானின்' பக்தர் என்றும்... தனக்கு இரண்டு அழைப்பிதழ்கள் வந்ததாகவும்... அதில் ஒன்றை, இவருக்குக் கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்ததாகக் கூறினார். இவரின் வெளி நாட்டுப் பயணத் தாமதத்தை அவர் அறிந்தவராதலால்... இன்று மாலையில் நடக்கும்  கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டால்... அது, இவருக்கு ஒரு வாய்ப்பாக அமையலாமே... என்ற எண்ணத்தில்தான்... இந்த அழைப்பிதழைக் கொடுப்பதாகக் கூற... இவருக்கு ஒரு சிறு நம்பிக்கை உள்ளத்தில் ஒளிர் விட்டது.

தனது முடிவை, ஒரு நாள் தள்ளிப் போட்டுவிட்டு, நண்பருடன் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பகவானைத் துதிக்கும் பஜனைப் பாடல்களும்... பக்தர்களின் பக்தி கோஷங்களும்... பிரசாதங்களும்... இவரைச் சற்று ஆறுதல் படுத்தின. இறுதியில் நிகழ்ந்த கூட்டுப் பிரார்த்தனையின் போது... இவரின் பெயரைக் குறிப்பிடாது... இவரது நிலையை பிரார்த்தனையாக ஒலி பெருக்கியில் அறிவித்ததும்... அதனை நிறைவேற்றித் தருமாறு பக்தர்கள் அனைவரும் பிரார்த்தித்ததும்... இவரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. நன்றியுடன் நண்பரின் கைகளைப் பற்றிக் கொண்டார்.

அடுத்த நாள் காலை வேளையிலேயே... இவருக்கு தொலை பேசியில் அழைப்பு  வந்திருப்பதாக மேன்ஷன் ஊழியர் வந்து கூற... சற்று பதட்டத்துடன் சென்று தொலை பேசியை எடுக்க... மறு முனையில் சென்னை ஏஜென்ட் பேசினார். சற்று முன்னர்தான்... வெளி நாட்டில் இருக்கும் தனது ஏஜென்ட்... கேன்சல் செய்த கான்ட்ராக்டுக்கான முன்தொகை முழுவதையும் அனுப்பிவிட்டதாகவும்... இவர் வந்தால்... இவருக்குச் சேர வேண்டிய தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்... என்று கூற...  மகிழ்ச்சியில் திளைத்தவராக... உடனே கிளம்பிச் சென்று... தொகை முழுவதையும் பெற்றுக் கொண்டு... நண்பர்களிடமும் இதைத் தெரிவித்துவிட்டு... ஊர் வந்து சேர்ந்திருக்கிறார்.

வந்ததும்... உடனே, ஆலங்குடி சென்று... சுவாமியையும்... தாயாரையும்... ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தியையும் நன்றியுடன் வழிபட்டுவிட்டு... இந்த அழைப்பிதழையும் எடுத்துக் கொண்டு நம்மை வந்து சந்தித்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டுக் கொண்டே... அந்த அழைப்பிதழை எடுக்கும் போது... அதனுடன் ஒரு 'ஸ்டிக்கர்' வந்து விழுந்தது. அதனை, இதுவரை அந்த நண்பரும் பார்த்திருக்கவில்லை. ஆந்த ஸ்டிக்கரில் இருந்தது 'புட்டபர்த்தி மஹானின் திருவுருவப் படம்'... அதனைச் சுற்றி ஒரு வாசகம்... அது... WHY FEAR WHEN I AM HERE என்பதுதான்.

அந்த ஸ்டிக்கரை அவர் எனது அலுவலக தடுப்புக் கண்ணாடியில் ஒட்டிவிட்டுச் சென்றார். தொடர்ந்த மாதங்களில்... நண்பர்களுடன் இணைந்து ஒரு தொழிலிலும் ஈடுபட்டார்.

ஆம்... பக்திதான் பரிகாரங்களிலேலேயே சிறந்தது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...