Saturday, August 24, 2019

கண்ணனும்... கனக தாஸரும் :

கண்ணனும்... கனக தாஸரும் :

எப்போதும் எழும் ஒரு பொதுவான கேள்வி... 'பக்திக்கு என பிரத்தியோகமான வழிமுறைகள் இருக்கிறதா... ?' என்பதுதான்.

'அன்பு' ஒன்றுதான் பக்திக்கான அடிப்படை தகுதியாகிறது. அதன் வெளிப்பாடு 'பாவம்' என்பதை மூலமாகக் கொண்டது. 'பாவம்' எவ்வாறோ... அவ்வாறே 'பக்தியும்'.

இறைவனின் பேரருளையும்... அவரது கருணையையும் எப்போதும் அனுபவித்து மகிழ உருவானதே கோவில்கள். அந்தக் கோவில்களில் மூல விக்கிரகங்களாகவும்... அர்ச்சாதவரங்களாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைரூபங்களை... இறைவனின் சொரூபமாகவே பாவித்து பக்தி செய்யும் பக்தர்களுக்கு... எண்ணற்ற லீலைகளை நடத்தி தன்பால் ஈர்த்துக் கொள்கிறான் அந்த பேரருளாளன்.

கர்நாடக மாநிலத்தில்... உடுப்பி ஷேத்திரத்தில்... குழந்தையாக எழுந்தருளி அருள் பாலிக்கிறான் 'கிருஷ்ணன்'. ஒரு படகின் பாரத்தை ஈடுசெய்யும் பாரமாக... ஒரு திருமண் கட்டிக்குள் சிறைபட்டிருந்த... இந்த கிருஷ்ண விக்கிரகத்தை... தமது அந்தர்ஞான திருஷ்டியால் கண்டறிந்து... கடலில் தத்தளித்து மூழ்கவிருந்த படகுடன் மீட்டவர்... 'மத்வ மதத்தை' ஸ்தாபகம் செய்த 'மத்வ மகான்'.

'உடுப்பி' என்ற ஷேத்திரத்தை உருவாக்கி... அதில் அந்த 'குழந்தை கிருஷ்ண பகவானைப்' பிரதிஷ்டை செய்து... அதற்கான பூஜா விதிமுறைகளை உருவாக்கி... உலகெங்கும் இருக்கும் கிருஷ்ண பக்தர்களை அந்த ஷேத்திரத்தில் குவிக்க வைத்தவர்தான்... 'மத்வ மகிரிஷி'.

அந்த 'கிருஷ்ண பகவானை' தனது ஸ்தோத்திரங்களாலும்... கீர்த்தனைகளாலும்... மகிழவைப்பதையே... தனது பிறவியின் பயனாகக் கருதிய ஒரு எளிய பக்தரே... 'கனகதாஸர்'.

தனது பிறப்பின் வழியான குலம் அதற்குத் தடையாக இருப்பதைப் பற்றி கவலை கொள்ளாமல்... 'கிருஷ்ண பகவானின்' கோவிலுக்கு வெளியே இருந்து அன்றாடம் பூஜைகள் நிறைவுறும் போது...  கிருஷ்ண பகவானையும்... அவரை நாடி வரும் பக்தர்களையும்... தனது பக்திமிகு கீர்த்தனைகளால் பரவசப்படுத்திவிடுவார்... கனகதாஸர்.

அந்த எளிய பக்தரின் பக்தியை... உலகறியச் செய்ய எண்ணம் கொண்டார்... 'கிருஷ்ண பகவான்'. ஒரு நாள்... அவரின் கீதங்கள்... பூஜைக்கு இடையூராக இருப்பதாகக் கருதி... பூஜகர்கள்... அவரை கோவிலின் அருகாமையிலிருந்து விரட்டிவிட்டார்கள். கண்ணில் கண்ணீருடன்... தனது தம்பூராவில் சுருதி சேர்த்தபடி... கோவிலின் பின்புறம்... கருவறைக்கு வெளியில்... அந்த கருவறையைச் சுற்றிச்... சுற்றி... கீர்த்தனைகளின் ஒலியால் நிரப்பிக் கொண்டிருந்தார்... தாஸர்.

கோவிலுக்குள்ளே... பூஜைக்கான நிறைவு மணி ஒலித்தது. மணியின் ஒலிக்குப் பின்னர்... பூஜையின் நிறைவாக இசைக்கும் கீர்த்தனைக்குப் பின்னர்... திரையை நீக்கும் போது... அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 'கிருஷ்ண பகவான்'... கருவறை வாசலுக்கு தனது முதுகுப் புறத்தைக் காட்டிக்கொண்டிருந்ததுதான் அது.

அதிர்ச்சியுடன்... கோவிலுக்கு வெளியே அனைவரும் ஓடி... கருவறைக்குப் பின்னே சென்று பார்த்தனர். அங்கு... 'கிருஷ்ண பகவான்'... ஒரு சாரளத்தை தனது மத்தைக் கொண்டு உருவாக்கி... அதன் வழியாக... 'கனகதாஸரையும்'... அவரது கீர்த்தனையையும்... ரசித்துக் கொண்டிருந்தான். தனது வாழ்நாளில்... முதன் முறையாக... 'கிருஷ்ண பகவானின்' தரிசனத்தை பூரணமாக அனுபவித்துக் கொண்டிருந்தார்... கனகதாஸர்.

தனது லீலையை என்றென்றும் நினைவுகொள்ளும் வகையில்... இன்றும்... பிரகாரத்தின் பின்புறம் உள்ள சாளரத்தின் வழியாகவே... தனது பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறான்... இந்த மாயக் கண்ணன், கனகதாஸரின் நினைவாக...

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...