Monday, August 19, 2019

கவிதைத் தொகுப்பு : வெண்ணை திருடும் கண்ணன்.

கவிதத் தொகுப்பு :

'வெண்ணை திருடும் கண்ணன்'

ஆயர்குடி பசுக்கள் செய்த
அரும் தவம்... அவை
கண்ணன் குழலிசை கேட்டு
பசும் தளிர் மேய்ந்ததுதான்

அன்புக்கு கட்டுப்பட்டு
ஆசையில் அவன் பின் கூடி
ஆயர் குடி சேர்ந்து
கன்றுக்கு சேர்த்து வைத்து
மிகுதியை குடம் நிரப்பி
பால் மணம் பரப்பியது - அந்த
ஆயர் குடியும் உயர்ந்தது

கறந்த பால் சேர்த்து வைத்து
பக்குவமாய் காய்ச்சி வைத்து
முன்னமே சேர்த்து வைத்த
தயிரதனை சிறிது சேர்த்து
பாங்காய் பராமரிக்க
பால் புளித்து தயிராகும்

கோபியர்கள் ஒன்று கூடி
பானையிலே தயிரை வைத்து
மத்ததனை கயறு கொண்டு
முன்பின்னாய் கடைந்து கொள்ள
தயிரதுவும் வெண்ணையாகும்
வெண்மோரில் திரண்டு நிற்கும்

பக்குவமாய் வெண்ணை எடுத்து
உரியதனில் சேர்த்து வைக்க
பாலகிருஷ்ணன் தலைமையிலே
பாலர் படை ஒன்று சேரும்

மாயவன் துணையுடனே
மாதவன் நண்பர்குலாம்
உள்புகுந்து உறியேறி
திருடி வெண்ணை பங்கிடுவர்

பாங்காய் உறியதனை
எடுத்தாற் போல் வைத்துவிட்டு
விரல் துடைத்து கை துடைத்து
ஒன்றுமறியாப் போலே

வெளியே ஆடிடுவர்
களைத்து பின் மீண்டும்
பிற வீடு புகுந்து அங்கே
வெண்ணையை திருடித் திண்பர்

வெண்ணையை சேர்த்து வைத்து
நெய்யாக ஆக்கு முன்பே
கண்ணன் தலைமையிலே
திருட்டு வேட்டை ஆடிவிட்டு

எல்லோரும் வரும் முன்பே
வீடு சேர்ந்து... மாயக் கண்ணன்
யசோதா மடி சாய்ந்து
பொய்த் தூக்கம் தூங்கிடுவான்

பெண்களெல்லாம் ஒன்று கூடி
குறை சொல்ல வரும் போது
ஒரு கண்ணால் கண் இமைத்து
குறும்பு செய்வான்... கோபியர் கண்ணன்.

கண்ணனை கள்வன் என்பர்
துடித்திடுவாள் யசோதா
அவனை இங்கே மிரட்டி வைத்தால்
இவள் கண்ணில் மண்ணைத்தூவி
மீண்டும் மறைவான் வெண்ணை தேடி

கண்ணனைக் கள்வன் என்றால்
அதைத் தவிர வேரொன்றும்
அவன் செய்யப் போவதில்லை
இப்படி ஒரு அடையாளம்
ஏன் சுமந்தான் பரந்தாமன்

உடம்பை பால் என்றால்
உயர்ந்தோர் சொல் பழம் தயிராம்
அதைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள
உடம்பு தயிராகும்
இது சிறிது நாளாகும்
இடையே விட்டு விட்டால்
இவை புளித்து வீணாகும்

பக்குவமாய் பாங்காக
அறம் கூறி கடைந்து விட்டால்
மெல்ல மெல்ல கடைபட்டு
உள்ளத்தே வெண்ணை திரளும்
வெண்மோராய் உடல் மாறும்

வெண்ணையது திரண்டு விட்டால்
அழையாமல் அவன் வருவான்
கள்வனென உள் புகுவான்
ருசித்து வெண்ணை உண்டிடுவான்

ஆன்மீக அறம் சேர்க்க
உள்ளத்து களை நீக்கி
பக்தியெனும் மணம் பரப்பி
அருள் வெள்ளம் தொடர்ந்து வர
உள்ளமெலாம் அருள் நிறையும்,

அருளதுவும் நிறைந்து விட்டால்
அழைக்காமல் அவன் வருவான்
அறியாமல் மனம் நுழைவான்
அனுபவித்து அருள் சுவைப்பான்
உள்ளம் கவர் கள்வன்.














No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...