Tuesday, July 28, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 135. 'தசா, புத்தி, அந்தரம்;



ஒரு ஜீவனின் ஜாதக சித்திரம், அந்த ஜீவனின் இந்தப் பிறவிக்கான வாழ்க்கையை விவரிக்கும் ஒரு திறந்த புத்தகம். ஆனால், அதைப் படித்து புரிந்துகொள்ள, அந்தப் படைப்பவனின் அனுமதி தேவையாக இருக்கிறது.
ஏனெனில், அந்த ஜீவனின் வாழ்வில் மலரும் ஒவ்வொரு நிகழ்வையும், அந்த ஜீவனே அறியாமலிருக்குமாறு, மர்மமாக வைத்திருப்பதுதான், இறைவன் நடத்தும் நாடகம். 

இறைவனின் அனுமதியின்றி, அந்த ஜீவனின் வாழ்க்கை இரகசியத்தை, எவரும் அறியா வண்ணம்தான், இந்தப் படைப்பின் இரகசியம் வகுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு ஜோதிடன் என்ற 'தெய்வக்ஞயனுக்கு' மட்டுமே, இந்த வாழ்வின் இரகசியத்தை, தேவன் திறந்து காட்டுகிறார்... அதுவும் அந்த ஜீவனின் நல்வாழ்வு கருதி மட்டுமே. இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டுதான், ஒரு ஜீவனின் ஜாதகத்தை அணுகவேண்டும்.

ஒரு ஜாதகச் சித்திரத்தில், லக்னம் முதல் விரயம் வரையிலான 12 பாவங்களும்... லக்னதிற்கு சுபமாக அமையும் ஆதிபத்தியங்களான திரிகோணாதிபதிகள் என்ற லக்னம், பூர்வம் மற்றும் பாக்கிய ஸ்தானங்களும்... கேந்திராதிபதிகள் என்ற லக்னம், சுகம், களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானங்களும்... பண பர ஸ்தானங்கள் என்ற தனம் மற்றும் லாப ஸ்தானங்களும்... மறைவு ஸ்தானங்களான தைர்யம், சத்ரு, ஆயுள் மற்றும் விரய ஸ்தானங்களும்... இவற்றில் அமையும் நவ கோள்களும்... அந்த நவ கோள்களை சூட்சுமமாக வழி நடத்தும் நட்சத்திரங்களும்... அந்த ஜீவனின் வாழ்க்கை இரகசியங்களை முழுவதுமாக வெளிப்படுத்துகின்றன.

ஆனால், அந்த வாழ்க்கை இரகசியங்களான 'கர்ம வினைக்ளின் விளைவுகள்', அந்த ஜீவனின் வாழ்வின் எந்தக் கட்டத்தில் நிகழப் போகிறது... ? என்பதை, அந்த ஜீவனின் 'கர்ப்ப செல் நீக்கி இருப்பு'... என்ற, நட்சத்திர நாயகனை சூட்சுமமாக இயக்கும், கிரகத்தின் தசா என்ற கால அளவும்... அதன் பிரிவான புத்தியும்... அதன் உட்பிரிவான அந்தரமும்தான் நிர்ணயம் செய்கின்றன. இதைத்தான் 'வாழ்வின் பாதை' (Direction of life) என்ற... தசா, புத்தி, இருப்பு வெளிப்படுத்துகிறது.

இந்த 'கர்ப்ப செல் நீக்கி இருப்பு' என்ற பதம் விளக்கும் சூட்சுமம்தான், 'கர்ம வினைகளின் விளைவு' என்ற ஜீவனின் பூர்வ புண்ணிய கர்மாவாகும். ஒவ்வொரு ஜீவனும் அதன் மொத்தக் கர்மாவின் தொகுப்பான 'சஞ்சித கர்மா'விலிருந்து, இந்தப் பிறவிக்கான 'பிராரப்தக் கர்மாவான' வினைத் தொகுப்பைச் சுமந்து கொண்டு வருகிறது. மேலும், இந்தப் பிறவியில் அது சேர்க்கும் வினைகளின் தொகுப்பான 'ஆகாமியக் கர்மாவையும்' சுமந்து கொண்டு, அடுத்தப் பிறவியை நோக்கி நகர்கிறது.

இந்தக் கர்மாக்களின் கால நிர்ணயங்களை, நிர்ணயிப்பதுதான் 'தசா, புத்தி, இருப்பு என்ற, 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பு...' என்ற ஜோதிடக் கலையின் சூட்சும அமைப்பு.

ஸாய்ராம்.

Monday, July 27, 2020

'மனது வைக்கணும்...' என்ற பதத்திற்கு, குருநாதர் அளித்த விளக்கக் கதை :




நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல் வழக்கு... 'நீங்க மனது வைத்தால், இந்த காரியம் நடந்து விடும்... !' என்று சொல்வது.

நாம், ஒரு காரியமாக நாமறிந்த ஒருவரிடம் செல்லும் போது, அவரிடம் நாம் சொல்லும் இறுதி வாசகம் இதுவாகத்தான் இருக்கும். எங்களது குருநாதரிடம் நாங்கள் சத்சங்கத்திலிருந்த போது, இந்த வாசகத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. இதை எங்களுக்கு ஒரு சிறு கதை மூலம் அவர் விளக்கினார்.

'ஒரு புலவன், அவன் அந்த நாட்டு ராஜாவுடன் ஒரே குருகுலத்தில் படித்தவன். அன்றைய மாணவனாக இருந்த இளவரசன், இன்று தேசத்திற்கு ராஜாவாகி விட்டான். இவனோ, இறைவனைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றி, அவற்றை, ஆலயத்தில் உறையும் இறைவனுக்குச் சமர்ப்பித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். 

இறைவனைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாடுவதில்லை என்ற சங்கல்பத்திலிருந்த புலவனை, வறுமை வாட்ட ஆரம்பித்தது. புலவனின் துணைவி, 'நமது ராஜா உங்களது நண்பர்தானே. அவரைச் சென்று பார்த்தால்... அவர் மனது வைத்தால்... நமது வறுமைக்கு ஒரு வழி பிறக்கலாம்.' என்று கூறினாள்.

வெகு நேர யோஜனைக்குப் பின், மனைவியின் சொற்படியே, ராஜாவைப் பார்க்கப் புறப்பட்டான். அரண்மனையை அடைந்து, ராஜாவைப் பார்க்க வரிசையில் நின்றான். தூரத்திலிருந்தே இவனைப் பார்த்து விட்ட ராஜா, பழைய பழக்கத்தை மறந்து விடாமல், மந்திரியை விட்டு இவனை அருகில் அழைத்தான். வெகு நாட்களுக்குப் பின் பார்க்கும் தனது குருகுலத் தோழனை அன்புடன் விசாரித்து விட்டு, 'எப்போதும் இறைவனைப் பற்றிய ஸ்துதிகளையே, இயற்றிப் பாடுவாய், என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது, ஏதாவது புதிய கீர்த்தனைகளை இயற்றியிருந்தால் அதைப் பாடினால், அனைவரும் கேட்கலாம்' என்று கூறினான்.

தான வந்த வேலை சுலபமாக அரங்கேறுவதைக் கண்டு மகிழ்ந்து, தான் புதிதாக இயற்றியிருந்த ஒரு கீர்த்தனையைப் பாடினான் புலவன். அரண்மனையில் இருந்த அனைவரும் அதைக் கேட்டு மகிழ்ந்ததற்குப் பின், ராஜா, மந்திரியைப் பார்த்து, 'புலவரை நீங்களே அழைத்துச் சென்று, கஜானா அறையில் புலவர் என்ன விரும்புகிறாரோ, அவற்றுடன், புலவரை அவரது வீட்டில் கொண்டு விட்டு விட்டு வாருங்கள்' என்று பணித்தான்.

மந்திரியுடன், கஜானா அறைக்குச் சென்ற புலவன், தர்ம சங்கடத்தில் நெழிய ஆரம்பித்தான். காரணம் கஜானா அறை முழுவதும் பொக்கிஷங்களால் நிறைந்திருந்தது. அதில், எதை எடுப்பது என்பதில் சிக்கல் எழுந்தது. கண்ணுக்குத் தென்படும் பொக்கிஷத்தை எடுத்தால், கூட வந்திருக்கும் மந்திரிக்கு அது தெரிந்து விடும். அதனால், ராஜாவுடனான நட்பு கொச்சைப் படுத்தப்படும். 

ஆகவே, கஜானாவின் மூலையில் இருந்த, ஒரு மூடிய மரப் பெட்டியைச் சுட்டிக் காட்ட, மகிழ்வுடன் மந்திரி அந்தப் பெட்டியுடன் புலவனையும் கொண்டு வந்து, புலவனின் வீட்டிலே சேர்த்தார். மந்திரி பிரதானிகள் சென்றவுடன், வீட்டின் கதைவைச் சாத்தி விட்டு, மனைவியுடன் இணைந்து, அந்த மரப் பெட்டியைத் திறந்து பார்த்த புலவனுக்கு, அதிர்ச்சிதான் காத்திருந்தது. காரணம், அந்த மரப்பெட்டி முழுவதும் 'வெடி உப்பு'  நிறைந்திருந்தது.

தலையில் கை வைத்தபடி உட்கார்ந்த புலவன், 'சாதாரண உப்பாக இருந்தால் சமையலுக்காவது உபயோகப்படும். ஆனால், இந்த வெடி உப்பு எதற்கும் உபயோகமில்லாமல் ஆகிவிட்டதே.. !' என்று புலம்பினான்.'

இந்தக் கதையைக் கூறிய குருநாதர், 'பார்த்தாயா அப்பா, மனசு வைக்கணும்னு சொன்னீயே... அந்த ராஜா மனசு வைத்திருந்தால், புலவன் பாடி முடித்தவுடனேயே, தனக்கு அருகிலிருக்கும் தட்டிலிருந்து ஒரு 'பொன் முடிப்பைக்' கொடுத்திருக்கலாம். புலவனின் வறுமை முழுவதும் தீர்ந்திருக்கும்,' என்றார்.

குருநாதரின் திருவடிகளுக்கு சமர்ப்பணம்.

ஸாய்ராம்.

பகவத் கீதையின் ஒரு சுலோகத்திற்கு, பாபா அளித்த விஷேச விளக்கம்.



பாபாவின் அத்யந்த பகதர்களில் ஒருவரான, நானா சாஹேப் சந்தோர்க்கர்' என்ற நானா, சப் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணிபுரிந்து வந்தவர், ஒரு சமயம், அவர் துவாரகமாயியில், பாபாவின் பாதங்களைப் பிடித்து விட்டவாறு, கீதையின் சுலோகங்களை முணு முணுத்துக் கொண்டிருந்தார்.

கீதையில், 'ஞான கர்ம சன்யாச யோகம்' என்ற தலைப்பில், 4 ஆவது அத்தியாத்தின், 34 ஆவது சுலோகத்தை ஸ்மரிக்கும் போது, பாபா, 'நானா, நீர் என்ன முணுமுணுக்கிறீர் ?நீர் மெல்லிய குரலில் ஓதுவதைத் தெளிவாகவும் உரத்த குரலிலும் ஓதி என் காதுகளுக்குக் கேட்குமாறு செய்வீராக.' என்றார்.

அதற்கேற்ப, 'தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா I உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வதர்சினஹ II' என்ற சுலோகத்தை, நானா ஓதினார்.

இதற்கான விளக்கத்தை பாபா கேட்க, நானா, 'குருவின் பாதங்களில் பணிவுடன் நமஸ்காரம் செய்து அவருடைய சேவையில் வாழ்நாள் முழுவதையும் கழிக்கத் தயாராகி, மரியாதையுடன் அவரைக் கேள்விக் கேட்பவனுக்கு ஞானிகள் தத்துவ விளக்கத்தை அளிக்கின்றனர்' என்று விளக்கினார்.

சுற்றியிருந்த அனைவரும், நானா, பாபாவுக்கு கீதையை விளக்கியதாக நினைத்தனர். ஆனால், பிரம்மத்தை அறிந்தவர் சகலத்தையும் அறிந்தவராகிறார் என்பதும், சதா பிரம்மத்திலேயே ஒன்றியிருக்கும் இந்த மகா சத்குருவுக்கு பிரம்மம், அதன் ரகசியங்கள் அனைத்தையும், உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிப்படுத்திவிடும்... என்பதையும், இவர்கள் அறிந்திருக்க வில்லை.

பாபா, நானாவிடம் சில கேள்விகளை முன் வைத்த போதுதான், பாபாவின் அனைத்தும் அறியும் ஞானம் அனைவருக்குக் வெளிச்சமானது.

பாபா, நானாவிடம் கேட்ட கேள்விகள் ;

~ கிருஷ்ண பகவானே ஒரு குருவாக இருந்து அர்ஜுனனுக்கு, ஞானத்தை அருளியிருக்கலாமே... அவர் ஏன் அர்ஜுனனை  ஞானிகளிடம் அனுப்புகிறார்  ?

~ அதுவும், ஞானிகளிடன் சென்று, அவர்களை பணிவதையும், சேவை செய்வதையும், பணிவோடு அவர்களைக் கேட்டு ஞானத்தைப் பெறுவதையும். கிருஷ்ண பகவான் ஏன் வற்புருத்துகிறார்  ?

~ 'பரி' என்றாலும் 'ப்ரச்னா' என்றாலும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக கேள்விகளை எழுப்புவதுதான்... என்றால், வியாஸ மகிரிஷி ஏன் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும் இரண்டு சொற்களைப் பயன் படுத்தியிருக்கிறார்  ?'

~ சமஸ்கிருத மொழி பிரயோகத்தில், சில பிரத்தியோக வார்த்தைகளுக்கு முன் 'அ' என்ற எழுத்தைப் பிரயோகிப்பது வழக்கம். அது போல, இந்த சுலோகத்தில், 'ஞானம்' என்ற சொல்லுக்கு முன்னால், 'அ' என்ற எழுத்தைச் சேர்த்து, 'அஞ்ஞானம்' என்ற சொல்லைப் பிரயோகித்தால், அந்த சுலோகத்தின் உண்மையான அர்த்தம் எவ்வாறு வெளிப்படுகிறது...  என்பதை அறிவாயா ?

இந்த அடுக்கடுக்கான கேள்விகள், நானாவை மட்டுமல்ல, அங்கு குழுமியிருந்த அனைவரையுமே, ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அனைவரது கவனமும், நானாவின் பக்கம் திரும்பியது. நானாவோ, பாபாவின் பாதங்களைப் பிடித்தவறே, 'பாபா, இது மாதிரியான அர்த்த வெளிப்பாடுகளுடன், நான் இதுவரை கீதையைப் படித்ததில்லை... !' என்று பணிவுடன் கூறினார்.

புன்னகைத்தவாறே, பாபா பதிலளிக்கத் துவங்கினார்.

'~ அனுபவித்து அறியாத எது ஒன்றும், வெறும் ஏட்டுச் சுரைக்காயகத்தான் இருக்கும். அனுபவித்து அறியும் போதுதான் அதன் அனுபவம் கைகூடும். அது போல, ஞானத்தை, வெறும் அறிவாக அல்ல, அதன் சோரூபமாகவே இருந்து அனுபவிக்கும், மகான்களிடமிருந்து பெறுவதே உத்தமமாக இருக்கும்.

அதனால்தான் பகவான், அர்ஜுனனை ஞானிகளிடம் அனுப்புகிறார்.

~ அவர்களிடம் சென்று பணிவதையும், சேவை செய்வதையும், வெறும் சடங்காகக் கொள்ளாமல், ஆத்மார்த்த அன்போடு செய்யும் போதுதான், அவர்களின் மனம் கனிந்து, அன்பாகி, ஞானத்தின் வாசல்களை நமக்குத் திறந்து விடுவார்கள்.

~ கேள்வி கேட்பது என்பது வெறும் அறிவுத் தேடல் கொண்ட சடங்காக இருந்து விடக் கூடாது. நான் அறிந்தவன்... என்ற அகங்கார நிலையில் இல்லாமல், அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்பதாக இருக்க வேண்டும்.

~ ஞானம் என்பது அடைய வேண்டிய வஸ்து அல்ல. ஜீவன், ஏற்கனவே ஞான சொரூபியாகத்தான் இருக்கிறது. ஜீவன் அறிந்து கொள்ள வேண்டியது ஞானத்தை அல்ல. அஞ்ஞாத்தைத்தான் அது அறிந்து கொள்ள வேண்டும். 

எது அஞ்ஞானம் என்று அறிந்து கொள்ளும் போது, அந்த அஞ்ஞானம் நீங்கி, ஞானம் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறது.

நீரை, பாசி மூடியிருக்கிறது. அந்தப் பாசியை நீக்கும் போது, நீர் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிறது.

அது போலத்தான், அஞ்ஞானம் நீக்கப் படும் பொது, ஞானம் சுயமாக வெளிப்படுகிறது.'

இந்த விளக்கங்கள், பாபாவின் திருமுகத்திலிருந்து வெளிப்பட்ட போதுதான், மறை பொருளாக பகவான் உதிர்த்த கீதையின் உள்ளர்த்தங்கள், ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படத் துவங்கின.

ஸாய்ராம்.

Friday, July 24, 2020

ஆதி யோகி



தியானத்திற்கு எது மூலம்... ?

ஆதி யோகியாகிய சிவபெருமானாரை, நாம் தியானிக்க வேண்டுமெனில், அந்த ஆதியோகி, யாரை தியானிக்கிறார்... ?

தியானத்திற்கு மூலமாக இருப்பது... நமது மனதின் உற்பத்தி ஸ்தானம்தான். அந்த உற்பத்தி ஸ்தானத்தில் நம் கவனத்தை வைப்பதே, பூரண தியானமாகும்.

எண்ணங்கள், ஜீவனின் சக்தியாகிய வாயுவின் மீது பயணம் செய்கிறது. எண்ணங்கள் உற்பத்தியாவது மனதில்தான். அந்த மனதின் உற்பத்தி ஸ்தானத்திற்கு, நமது கவனம் திரும்பும் போது, ஜீவ சக்தியாகிய வாயுவும்... அந்த முலத்தில் ஒடுங்கிவிடுவதை உணரலாம்.

ஆம், ஜீவனின் மூலமாக இருப்பது ஜீவ சக்தியாகிய வாயுதான்.

ஸாய்ராம்.


ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிய பேரருளாளன்.



காஞ்சீபுரத்தில் ராமானுஜர், 'அதவைத சிங்கம்' என்றழைக்கப்பட்ட, யாதவப் பிரகாசரிடம் கல்வி கற்று வந்த நேரம்... 

'உருவமற்ற அருவமாக இருப்பவரே இறைவன்' என்று, தத்துவரீதியாகவும், தர்க்கரீதியாகவும், நிர்ணயம் செய்வதிலேயே மிகக் கவனமாக இருந்தவர்தான், யாதவப் பிரகாசர். அவரின் தத்துவ விளக்கங்களில் எப்போதெல்லாம், தவறு இருந்ததோ, அதை, அப்போதே சுட்டிக் காட்டி, அதற்குத் தனது விளக்கங்களை அளித்து, ஆசிரியரின் கோபத்துக்கு ஆளானார், ராமானுஜர்.

'சத்யம் - ஞானம் - அனந்தம்' என்ற பரப்பிரம்மத்தின் வருணணையை, யாதவப் பிரகாசர் விளக்கும் பொது, 'பரப்பிரம்மம் சத்தியமானது... அறிவுமயமானது... இறுதியற்றது... என்று பொருளுரைத்தார்.'.\ அதை மறுத்த, ராமானுஜர் ' இவை பரப்பிரம்மத்தின் பண்புகளே அன்றி... இவை பரப்பிரம்மல்ல, என்று வரையருத்தார். 

இதனால், போபமுற்ற யாதவப் பிரகாசர், ராமானுஜரின் வளர்ச்சி, 'அத்வைத சித்தானந்தத்த்தை' அழித்து 'துவைத பாவத்தை' வளர்த்துவிடும் என்று கருதி, ராமானுஜரை அழித்துவிடுவதற்கே தயாரானார். அதற்காக திட்டம் ஒன்றை வகுத்து, ராமானுஜர் உட்பட்ட தனது சீடர் குழுவுடன் 'கங்கை  யாத்திரைக்குப்' புறப்பட்டார்.

யாத்திரையின் போது, ஒரு தனிமையான இடத்தில், ராமானுஜரை கொலை செய்யவும் துணிந்து விட்டார் யாதவப் பிரகாசர். தனது திட்டத்தை நிறைவேற்றத் தக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவரின் பயணம், விந்திய மலையின் அடிவாரத்தில், கோதாண்டாரண்யத்தில், ஜனசந்தடியே இல்லாத ஒரு இடத்தில் நிறைவேறவிருந்தது. தனது சகோதரரான, கோவிந்தரிடமிருந்து இந்தத் திட்டத்தைத் தெரிந்து கொண்ட ராமானுஜர், கோவிந்தரது வற்புருத்தலால், தன்னைக் காத்துக் கொள்ள, தென் திசையை நோக்கி வெகு, வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

ஒரு சில மணி நேர நடைப் பயணத்திற்குப் பின், பசியாலும், தாகத்தாலும், களைத்துப் போய், ஒரு மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டார். ஆழ்ந்த தூக்கத்தின் பின் விழித்தெழுந்த போது, ஒரு வேட்டுவத் தம்பதிகள், தனது விழிப்பிற்காகக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அதிர்ச்சியுற்று எழுந்து அமர்ந்தார். அவரை ஆசுவாசப்படுத்திய வேட்டுவத் தம்பதிகள், தாங்களும் விந்திய பார்வதத்தின் அடிவாரத்திலிருக்கும் கிராமத்திலிருந்து தெற்கே, தனுஷ்கோடி வரைக்கான யாத்திரைக்குச் செல்வதாகவும்... ராமானுஜரைப் பார்த்தால், அவரும் தென் திசைக்குச் செல்வதாகத் தோன்றுவதால், அவரும் தங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம்... என்றும் கூறினர்.

பார்வைக்கு அச்சமூட்டும் தோற்றமுடையவர்களாக இருந்தாலும், அவர்களிடம் இருந்து வெளிப்பட்ட அன்பினால், தனது பயத்திலிருந்து நீங்கியவராக, அவர்களுடன் பயணப்பட்டார், ராமானுஜர். ஒரு சில மணி நேரப் பயணத்திற்குப் பின், ஒரு ஓடைக்கு அருகில் வந்து சேர்ந்தனர். அன்றைய இரவுப் பொழுதை, அந்த மணற் பரப்பிலேயே கழிக்கத் திட்டமிட்டனர். 

சரியான இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மணலச் சமன்படுத்தி. ராமானுஜரை படுக்கச் செய்த வேடுவர், அவருக்கு அருகே, சுள்ளிகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, விடியும் வரை, குளிரிலிருந்தும், கொடிய விலங்குகளிடமிருந்தும் விலகிப் பாதுகாப்பாகத் தூங்குவதற்கு வழி செய்தார். அதற்குப் பின், தானும் தனது மனைவியுடன் சற்றுத் தள்ளி, ஓய்வெடுத்துக் கொண்டார். அப்போது, அந்த வேடுவரின் மனைவி, தனக்குத் தண்ணீர் தாகமாக இருப்பதாகக் கூறியதற்கு, விடிந்த பிறகு அருகிலிருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்... என்று கூறி விட்டு... ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கிப் போனார் வேடுவர்.

விடிந்ததும், வேட்டுவத் தம்பதிகளுக்கு முன்னரே எழுந்து, தனது காலைக் கடன்களை முடித்துவிட்டு, முதல் நாள் இரவு, வேடுவர் சொன்ன கிணற்றுக்கு அருகில் சென்று, அந்தக் கிணற்றிலிருந்து தூய குடி நீரை எடுத்துக் கொண்டு வந்து, வேடுவரின் மனைவிக்குக் கொடுத்தார் ராமானுஜர். தனது தாகம் தீர ஆவலாகக் குடித்தவருக்காக, மீண்டும் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தார். இவ்வாறாக மூன்று முறை தண்ணீர் கொடுத்து விட்டு... நான்காம் முறை மேலே ஏறி வந்தவருக்கு, ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த வேடுவத் தம்பதிகளைக் காணதுதான்... அந்த ஆச்சர்யம். சுற்றும் முற்றும் தேடிப் பார்த்து, அழைந்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. சிறிது நேரத்தில், அவ்வழியே வந்த ஒருவரிடம், இது எந்த ஊர்... ? என்று ராமானுஜர் கேட்டதற்கு, அந்த வழிப் போக்கர், ஆச்சரியம் கலந்த குரலில், 'தாங்கள் யாதவப் பிரகாசகரின் மாணவர்தானே... உங்களை அவரின் சீடர்  குழாத்துடன் பார்த்திருக்கிறேன். இது காஞ்சீபுரம்,, நீங்கள் இருக்குமிடம் 'சாலக் கிணற்றுக்கு' அருகில். அதனால்தான் உங்களுக்கு இந்த இடம் தெரியாமல் போயிருக்கிறது. இந்தக் கிணற்று நீர், அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது.' என்றார்.

அப்போதுதான், ராமானுஜருக்கு அனைத்தும் புரிய ஆரம்பித்தது. அந்த விந்திய மலையின் அடிவாரத்திலிருந்து, இந்த நொடி வரையிலும், தன்னைக் காத்து, இரட்சித்து, அழைத்து வந்து, தனது திருவடியில் சேர்த்துக் கொண்டது... 'பெருந்தேவித் தாயாரும், பேரருளாளனான வரதாரஜப் பெருமாளும்தான்'... என்பதை உணர்ந்து கொண்டு, தனது இரு கைகளைத் தலை மீது தூக்கி வைத்து... பெருமானைக்  கண்ணீர் மழ்க, பேரானந்தத்துடன் வணங்கி மகிழ்ந்தார் ராமானுஜர்.

ஹரி ஓம் நாரயணாய நமஹ,

ஸாய்ராம்.

Monday, July 20, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 134. 'ஜாதகங்களின் இணைவில் தோஷங்களின் பங்கு'



ஜாதக ரீதியாக பொருத்தங்களைப் பார்த்து, வரன்களை இணைக்கும் போது, தோஷங்களைப் பற்றிய சந்தேகங்கள் நிலவுவது வழக்கமானதுதான்.

இரண்டு விதமான கருத்துக்கள், ஜோதிடர்களிடையேயும்... ஜோதிட ஆர்வலர்களிடையேயும்... வரன்களைத் தேடும் பெற்றோர்களிடையேயும்... நிலவிவருகிறது.

1. வரனின் ஜாதகத்தில், தோஷம் என்று கருதப்படும் ஒரு அமைப்பு இருக்கும் பட்சத்தில்... அதே அமைப்புள்ள வரனின் ஜாதகத்துடன்தான், இந்த வரனை இணைக்க வேண்டும்.

2. தோஷம் என்று கருதப்படும் அமைப்புள்ள வரனின் ஜாதகத்தை... தோஷம் ஏதும் இல்லாத அமைப்புள்ள வரனின் ஜாதகத்துடன்தான் இணைக்க வேண்டும்.

இந்த இருவேறு மாறுபட்ட கருத்துக்களால், மேலும் குழப்பங்கள் எழுவதற்கே வாய்ப்பு உண்டாகும். இதனை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இதை ஒரு உதாரணம் கொண்டு விளக்குவோம் :

உதாரணமாக, ஒரு பெண்ணின் ஜாதகத்தில், 'துலாம் லக்னமாகி', 2 ஆம் பாவமாகிய... 'தனம்-வாக்கு-குடும்பம்' என்ற ஸ்தானத்திற்கும், 7 ஆம் பாவமாகிய... 'களத்திரம்-நட்பு-துணை மற்றும் இணை' என்ற ஸ்தானத்திற்கும் அதிபதியாகிய 'செவ்வாய் பகவான்'... 4 ஆம் பாவமான, 'மகர இராசியில்'... அவிட்டம் 1 ஆம் பாதத்தில் அமைவதாகக் கொள்வோம்.

இந்த அமைவைத்தான், 'செவ்வாய் தோஷம்' என்று கருதுகிறார்கள். 

இதை சற்று ஆழமாக ஆய்ந்தால், 'துலா லகனத்திற்கு', 'செவ்வாய் பகவான்' ...

~ இரு மாராகாதிபதிகளாகிறார்.
~ மேலும், சுக ஸ்தானத்தில். தனது சுய நட்சத்திர சாரத்திலேயே, உச்சம் பெற்று வலுத்துக் காணப்படுகிறார்.
~ சுக ஸ்தானத்திலிருந்து, தனது நான்காம் பார்வையாய், களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

இந்த 'செவ்வாய் பகவானின்', அமைவின் பலன்கள்...

~ இந்த அமைவினால், இந்த வரனுக்கு இல்வாழ்வில் போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் கூடி வரும்.
~ சற்று பிடிவாதமும், முன் கோபமும் உள்ள அமைவினால், இவருக்கு அமையும் துணைவருக்கு, இவரால் துன்பங்கள் வந்து சேர வாய்ப்புகள் உருவாகும்.
~ இதனால், இவரது, இல்வாழ்வில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

இந்த பலன்களெல்லாம், கிரகங்களின் அமைவின் படியான பலன்களேயானாலும், நாம் இந்த ஜாதகத்தை மற்றொரு ஜாதகத்துடன் இணைக்க முற்படும் போது, மேலும் சில ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அவை...

~ இந்த செவ்வாய் பகவானின் தசாவை, இந்த வரன்... எப்போது, எந்த வயதில் கடந்து போகிறார்... என்பதுதான்.
~ திருமணத்திற்கு முன்பே இந்த தசா கடந்து விட்டிருந்தால்... திருமணத்திற்குப் பின்... இந்த அமைவினால் ஏற்படும் பாதிப்புகள், மிக மிகக் குறைவாகவே இருக்கும்.
~ திருமணத்திற்குப் பின், இந்த தசா வருவதாக இருந்தால்...
~ திருமண வாழ்வின் மிக முக்கியமான முதல் 10 அல்லது 12 வருடங்களுக்குப் பிறகு... இந்த தசா வரும் போது, தம்பதிகள் இருவருக்குமான, இணக்கமான, அன்பான, வாழ்வின் அனுபவங்கள்... இந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும்.
~ 7 ஆம் பாவத்தை, சுப கிரகங்கள் பார்க்கும் பட்சத்தில்... அந்த பாவத்தின் அசுபத்துவம் குறைந்து போகும்.

இது போன்ற அமைவு இருக்கும் பட்சத்தில், இணைக்கப்பட இருக்கும் வரனின் ஜாதகத்தில், 

~ 7 ஆம் பாவமான 'களத்திர பாவம்' மிகவும் வலுத்துள்ள ஜாதகமாக இருப்பது, உத்தமமான இணைப்பாக இருக்கும்.
~ களத்திர ஸ்தானாதிபதியும் வலுத்திருப்பது, மேலும் இந்த இணைப்புக்கு வலு சேர்க்கும்.
~ களத்திர ஸ்தானத்தை சுபகிரகங்கள் பார்க்கும் பட்சத்தில்... அந்த ஸ்தானம் மேலும் வலுப் பெற்று... எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் வந்து சேரும்.

'தோஷம்' என்று கருதப்படும் அமைவுள்ள ஜாதகத்தை... அந்த தோஷத்தின் தன்மையை ஆய்ந்து... அதன் தன்மைக்கு ஏற்ப... சந்தோஷத்துடன் வாழ்வைக் கடந்து போகும்... தக்கதொரு வலிமையான ஜாதகத்துடன் இணைக்கும் போது... இருவரின் வாழ்வும் சுகமாகவும், சுபமாகவும் கடந்து போகும்... என்பது அனுபவ உண்மையாகும்.

மாறாக, பெண்ணிற்கு இருக்கும், அதே அமைவுள்ள... தோஷம் என்று கருதப்படக் கூடிய அமைவுள்ள... ஆணின் ஜாதகத்தை இணைக்கும் பட்சத்தில்... இருவரது வாழ்வும்... சுகமற்றுப் போவதற்கான வாய்ப்பு வந்து கூடும்... என்பதும் அனுபவ உண்மையாகும்.

ஸாய்ராம்.

திவான் வெங்கண்ணா மூலம் பகவான் ஸ்ரீ ராகவேந்திரர் நடத்திய அற்புதம் :



தனது இறுதிப் பயணமாக, கும்பகோணம் மடத்திலிருந்து கிளம்பிய, பகவான் ஸ்ரீ ராகவேந்திரர், மீண்டும் ஆதோனி கிராமம் வழியாக ஆந்திரப் பிரதேசத்தை வந்து அடைந்தார்.

தனது மானஸீகமான சத்குருவின் வருகையை கேள்விப் பட்டு, அவருக்கு பூரண கும்ப மரியாதையை அளிப்பதற்காக, ஆதோனி எல்லையிலேயே காத்திருந்தார், திவான் வெங்கண்ணா. அவரது மனதில், பழைய எண்ணங்களெல்லாம், நினைவலைகளாக ஒன்றன் பின் ஒன்றாக ஓடின.

ஏதும் அறியாத... வெகுளிச் சிறுவனாக... ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தன்னை, இந்தப் பிரதேசத்து திவானாக மாற்றிய தனது சத்குருவின் லீலைகளை எண்ணி வியந்தாவாறு ைருக்கும் போது, மகானின் வருகை நிகழ்ந்தது. அவரை, பூரண கும்ப மரியாதையோடு வரவேற்று, அவரின் திருவடிகளில் பணிந்து நமஸ்கரித்தார். 'சுவாமி, தங்களது திருவருளினால்தான், நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன். என்னை ஆசீர்வதியுங்கள், பிரபு...!' எனும் போது, பகவான், 'எல்லாம் ஸ்ரீ மூல இராமரின் அனுக்கிரகம்தான்... !' என்று பதிலளித்தார். 

வெங்கண்ணாவின் வேண்டுதலுக்கு ஏற்ப, ஆதோனி கிராமத்திலேயே சுவாமி தங்கி, மூல ராம பூஜைகள் செய்வதற்கு சம்மதித்தார். சுவாமிகளுக்கான அனைத்து வசதிகளையும் நிறைவாகச் அமைத்திருந்தார், வெங்கண்ணா. அனைத்தையும் முறைப்படுத்திவிட்டு, சுல்தான், சித்தி மசூத்கானைப் பார்ப்பதர்காக அரண்மனைக்குச் சென்றார்.

அதற்குள்ளாக, சுல்தானுக்கு, மகானின் வருகையைப் பற்றிய செய்தி சென்று சேர்ந்திருந்தது. வெங்கண்ணாவின் செயல் முறைகளையும், அவரது நிர்வாகத் திறமையயும், நன்கு அறிந்த சுல்தானுக்கு, இந்த மகானின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான பக்தியைப் பற்றி மட்டும் ஏற்புடமையில்லாமல் இருந்தது.

ஆனால், வெங்கண்ணாவோ, சுல்தானிடம், ' சுல்தான் அவர்களே, மகானின் வருகையினால், நமது பிரதேசம் முழுவதும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. நீங்களும் ஒரு முறை நேரில், வந்து மகானை தரிசிக்க வேண்டும்' என்றார். வெங்கண்ணாவின் பக்தியை மட்டுமல்ல, எப்போதும் அந்த மகானைப் பற்றியே பிரதாபித்துக் கொண்டிருக்கும், அவரது நம்பிக்கையையும் சோதித்துப் பார்க்க எண்ணினார், சுல்தான்.

'சரி, வெங்கண்ணா, இன்று மாலை நாம், உங்களுடனே வந்து, நீங்கள் எப்போதும் பிரதாபித்துக் கொண்டிருக்கும், உங்கள் மகானை தரிசிக்க வருகிறோம்' என்றார். அன்று மாலை, சொன்ன படியே, மாகானை தரிசிப்பதற்காக, ஸ்ரீ ராகவேந்திரப் பிரபு தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார் சுல்தான்.

வெங்கண்ணா மரியாதையுடன் உள்ளே சென்று, மகானின் திருவடிகளை வணங்கி நின்றார். அப்போதுதான், மூல இராம பூஜையை பூரணமாக்கி, கண்களை முடியபடி தியானத்தில் அமர்ந்திருந்தார் பகவான் ராகவேந்திரர். சித்தி மசூத் கான், தனது பணியாட்கள் கொண்டு வந்த தட்டுக்களை மகானின் முன்பாக வைத்தார். அனைவரும் முகம் சுளிக்கும் வண்ணம், அந்தத் தட்டுக்களில் மாமிசங்கள் நிறைந்திருந்தன. சிரித்துக் கொண்டே, அந்தத் தட்டுக்களை பட்டுத் துணி கொண்டு மூடச் செய்தார் சித்தி மசூத்கான்.

தியானத்திலிருந்து கண்களைத் திறந்த ராகவேந்திரர், வெங்கண்ணாவையும், சித்தி மசூத்கானையும் பார்த்தருளினார். சுல்தான் கொண்டு வந்திருக்கும் அன்பளிப்புகளை நினைத்து பயந்து கொண்டே, வெங்கண்ணா, 'சுவாமி, இவர்தான் இந்த பிரதேசத்தின் அதிபதியான சுல்தான், சித்தி மசூத் கான், இவர்தான் என்னை இந்தப் பிரதேசத்திற்கு திவானாக ஆக்கியவர்.. உங்கள் தரிசனத்திற்காகத்தான் இன்று அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறேன், பிரபு' என்றார்.

புன்னகைத்துக் கொண்டே, ஸ்ரீ ராகவேந்திரர், 'அப்படியானால், அவர், ஏன் அன்புடன் சமர்ப்பிதற்காகக் கொண்டு வந்த தட்டுக்களை மூடி வைத்திருக்கிறார், அவற்றை மூடியிருக்கும் துணிகளை விலக்கச் சொல், வெங்கண்ணா... !உன்னுடைய சுல்தான் கொண்டு வந்திருக்கும் அன்பளிப்புகளை அனைவரும் காணட்டும்.' என்றார்.

சுல்தானின் பணியாட்கள், அந்தத் தட்டுக்களை மூடியிருக்கும் பட்டுத் துணிகளை விலக்கினர். அனைவரின் ஆச்சரியத்துக்கும் இடையே, அந்தத் தட்டுக்கள் பூக்களாலும், பழங்களாலும் நிறைந்திருந்தன. இந்த அற்புதத்தை கண்களால் பார்த்த சுல்தான் உட்பட்ட அனைவரும், ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள்.

மகானின் காருண்யத்தைத் தனது கண்களாலேயேக் கண்டு, தனது தகாத செயலினால், மனம் குன்றிப் போன சித்தி மசூத்கான், தானாகவே, மகானின் திருப்பாதங்களில் பணிந்தார். 'சுவாமி, உங்களது மகிமைகளை அறிந்து கொள்ளாமல், நான் தவறு இழைத்து விட்டேன். என்னை மன்னித்தருளுங்கள் பிரபு'. என்றார். 

பகவானோ, 'நீங்கள் என்னைக் காண வந்த போது, உங்களது மனம் நீங்கள் கொண்டு வந்த பொருள்களைப் போலக் கடினமாக இருந்தது. எப்போது, உங்கள் மனதை ஸ்ரீ மூல இராமர் மாற்றினாரோ, அப்போதே, நீங்கள் கொண்டு வந்த பொருள்களின் தன்மையும் மாறிவிட்டது.' என்றார்.

ஸாய்ராம்.

Saturday, July 18, 2020

குரு ராகவேந்திரப் பிரபு, ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு அருளிய மாண்பு.



16 ஆம் நூற்றாண்டு... ஆந்திர மாநிலத்தின், ஆதோனி என்ற ஒரு சிறிய கிராமம், அந்த கிராமத்தில் தாய், தந்தையை இழந்து, தனது மாமாவின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருந்த சிறுவன்தான் , வெங்கண்ணா.

வெங்கண்ணாவின் குடும்பம், அந்தக் கிராமத்திலேயே மிக வசதியான, நிறைந்த நில புலன்களுடனும், மாடு கன்றுகள் என வசதியான வாழ்வுடனும் வாழ்ந்த குடும்பமாக இருந்தது. அந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசாக இருந்தவன்தான் சிறுவன் வெங்கண்ணா. மிகவும் செல்வச் செழிப்புடன் வளர்ந்த வெங்கண்ணா, சிறிய வயதிலேயே, தனது தாய் தந்தையர்களை இழக்கும் சூழல் ஏற்பட்டது.

தனது பண்ணையில், கணக்கு வழக்குகளை மேற்பார்வை செய்யும், அவனது மாமாவின் பொறுப்பில், வெங்கண்ணாவும், அவனுக்குரிய சொத்துக்களும் வந்து சேர்ந்தன. வெங்கண்ணாவை, கல்வி கற்காத... ஒரு மட்டிப் பிள்ளையாக... வளர்த்தால், எதிர் காலத்தில், அந்த சொத்துக்கள் முழுவதையும் அனுபவிக்கலாம்... என்ற எண்ணத்தில், அவனது பண்ணையிலேயே, வெங்கண்ணாவை, ஆடு மேய்க்கும் பணியில் அமர்த்திவிட்டார், வெங்கண்ணாவின் மாமா.

வீட்டில் நடக்கும் விஷயத்தை வெளியில் சொல்ல முடியாமலும்... கல்வி கற்க முடியவில்லையே என்ற ஏக்கத்திலும்... வெங்கண்ணா கவலையுடனும், கண்ணீருடனும் அமர்ந்திருந்தான். அப்போது, அந்த வழியே, ஒரு சந்நியாசி, தனது குழு பின் தொடர, நடந்து வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும், ஏதோ ஒரு உள்ளுணர்வு தன்னைத் தூண்ட, இருக்கும் இடத்திலிருந்து ஓடி வந்து, அவரின் காலில் விழுந்து கதறி அழுதான், வெங்கண்ணா.

அமைதியாக, அவன் அழுகை ஓயும் வரை, காத்திருந்த அந்த மஹான், அவனது விம்மல்கள் ஓய்ந்த பின், அவனை ஆசிர்வதித்து, அவனுக்கு, 'மிருத்திகை' என்ற அருள் பிரசாதத்தை அளித்தருளினார். கண்களில் அந்த பிரசாதத்தை ஒத்திக் கொண்ட பின், கடந்து போகும் மகானைப் பின் தொடர்ந்த, அவரது குழுவின் இறுதியில் சென்ற சிஷ்யரிடம், சுவாமிகளைப் பற்றி விசாரித்தான் வெங்கண்ணா.

அவர்தான், 'மத்வ மடத்தின்' பீடாதிபதியான 'ஸ்வாமி ராகவேந்திரப் பிரபு' என்றும், அவரைத் துதிக்கும் மந்திரம், 'ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ' என்றும், அறிந்து கொண்ட வெங்கண்ணா அன்றிலிருந்து, சதா சர்வ காலமும், அந்த மந்திரத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள், அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான, சித்தி மசூத் கான் என்ற சுல்தான், தனது படைகளுடன் அந்தப் பகுதிக்கு வந்தான். அப்போது, அவனது ஒற்றர் படையைச் சேர்ந்த ஒருவன், ஒரு ஓலையைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தான். ஓலையில் எழுதியிருந்தது பிரதேச மொழியாதலால், அதைப் படிக்க ஒரு ஆளைத் தேட, அவனது கண்ணில் வெங்கண்ணா தென்பட்டான்.

வெங்கண்ணாவிடம் ஓலையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னான். மசூத் கானின் தளபதி. தனக்குப் படிக்கத் தெரியாது... என்பதை எத்தனை தடவைகள் சொன்னாலும், புரிந்து கொள்ளாத அந்தத் தளபதியின் மிரட்டல்களுக்குப் பயந்து, அந்த ஓலையை வாங்கி, தனது மானஸீகமான சத்குருவை மனதில் நினைத்துக் கொண்டு, அந்த ஓலையைப் படிக்க ஆரம்பித்தான் வெங்கண்ணா. அவனது ஆச்சரியத்துக்கு இடையே, அவனால், அந்த ஓலையிலிருந்த செய்தியை, மசூத் கானுக்கு வாசித்தளிக்க முடிந்தது. வெங்கண்ணாவின் வாழ்வும் அந்தக் கணத்திலேயே மாறியும் விட்டது..

அவன படித்த செய்தி, மசூத் கானுக்கு மிகவும் உகந்த செய்தியாக அமைந்ததினால், ஆதோனி உட்பட்டப் பிரதேசம் முழுவதற்கும், வெங்கண்ணா திவானாக நியமிக்கப்பட்டான். மனதிலிருந்த கவலைகள் அனைத்தும் நீங்கி... தெளிவுடனும்... ஞானத்துடனும்... தன்னால் இயங்க முடிந்ததைக் கண்டு, தனது ஆதர்ஷ்ண சத்குருவின் மஹிமையை உணர்ந்து, ஆனந்தக் கண்ணீரில் மிதந்தார், திவானான வெங்கண்ணா.



ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ... !

ஸாய்ராம்.



Saturday, July 11, 2020

எங்கே இருக்கிறான் இறைவன்... ? குருநாதர் அருளிய சிறு கதை.



ஒரு வியாபாரி, பொருள்களைக் கொள்முதல் செய்வதற்காகத் தொலைதூரப் பயணத்தை மேற்கொண்டான். அவனைத் தொடர்ந்து ஒரு திருடனும் வந்து கொண்டிருந்தான். இரவு நேரம் நெருங்கும் பொது, ஒரு சத்திரத்தில் வியாபாரி ஓய்வெடுத்துக் கொண்டான். அவனைத் தொடர்ந்த திருடனும், அதே சத்திரத்தில் ஓய்வெடுத்தான்.

வியாபாரி, தூங்குவதற்கு முன், தனது பொன் முடிப்பை இடுப்பிலிருந்து எடுத்து, அந்த மூட்டையிலே வைப்பதைப் பார்த்தான்.சீக்கிரமாகவே தூங்கிய திருடன், நடு நிசியில் விழித்து, வியாபாரியின் மூட்டையை அவிழ்த்து, பொன் முடிப்பைத் தேடினான். அந்த மூட்டையில் முடிப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் படுத்து விட்டான்.

காலையில் எழுந்த வியாபாரி, அதே மூட்டையிலிருந்து பொன் முடிப்பை எடுத்து,  கச்சையில் முடித்து வைத்துக் கொண்டான். ஆச்சரியத்தில் மூழ்கிப் போன திருடன், மீண்டும் மிகக் கவனமாக, வியாபாரியைத் தொடர்ந்து சென்றான். அடுத்தடுத்த இரண்டு சத்திரங்களிலும், இதே நிலைதான் தொடர்ந்தது. 

இறுதியில், வியாபாரி, பொருள்களை கொள்முதல் செய்து, அதற்கான பொற்காசுகளை, அந்த முடிப்பிலிருந்து எடுத்துக் கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த திருடன், வியாபாரியை நெருங்கி, 'நான் தினமும் நடு நிசியில் எழுந்து உனது மூட்டையில் தேடிப் பார்க்கிறேன். அதில் பொற்காசு முடிப்பைக் காணமுடியவில்லை. ஆனால், விடிந்ததும், அதிலிருந்து நீ முடிப்பை எடுக்கிறாய். இது எப்படி நடக்கிறது... ?' என்று கேட்டான்.

அதற்கு வியாபாரி, 'நீ என்னைத் தொடர்ந்து வருவதை நானும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு இரவும் நீ விழித்திருக்கும் போது, கச்சையிலிருந்த பொன் முடிப்பை எடுத்து மூட்டையில் வைப்பேன். நீ உறங்கியதற்குப் பின், மூட்டையிலிருக்கும் முடிப்பை எடுத்து உனது கைப்பைக்குள் வைத்து விடுவேன். காலையில் நீ விழிக்கும் முன்பே, உனது கைப்பைக்குள் இருக்கும் முடிப்பை எடுத்து எனது மூட்டைக்குள் வைத்து விடுவேன். நீ தேடும் போதெல்லாம் பொன் முடிப்பு, உனது பைக்குள்தான் இருந்தது.' என்றான்.

இந்தக் கதையைக் கூறிய எனது குருநாதர், 'இது போலத்தானப்பா... நாம் தூங்கும் போது, நமக்குள்ளேயே இருந்து அருள் செய்யும் அந்த இறைவன், நம்மை இழுத்து, அணைத்து, எப்போதும் நாம் அனுபவித்திராத ஆனந்தத்தைத் தந்து விடுகிறான். நாம் விழித்ததற்குப் பிறகு, நம்மை, அவனை வெளியே தேடும் படி வைத்து, அமைதியற்று அழைக்களிக்கிறான். எப்போது, நாம் விழித்திருக்கும் போதே, இறைவனை அறிகிறோமோ... அப்போதே அவன் நமக்குள்ளிருந்து, ஒரு 'சத்குருவாய்' எழுந்தருளி அருள்பாலிக்கிறான்.' என்றார்.

ஸாய்ராம். 

Thursday, July 9, 2020

சகுண சாஸ்திரம் : தொடரப் போகும் நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டும் சகுணங்கள். அல்லமாப் பிரபுவின் அனுபவங்களிலிருந்து...




12 ஆம் நூற்றாண்டில், கன்னட தேசத்தில் வாழ்ந்த ஒரு யோகியர்தான் 'அல்லமா பிரபு'. கோவிலில் திருப்பணிகள் செய்யும் குடும்பத்தில் பிறந்து, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, யோகசாதனைகளில் மூழ்கி, 'சதானந்த முக்தராக' வலம் வந்தவர்தான் அல்லமா பிரபு.

அவரளிக்கும் எண்ணற்ற அற்புத அனுபவங்கள்... இன்றும் ஆன்மீக அன்பர்களின் வாழ்வில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. அவர் 'சகுண சாஸ்த்திரத்திலும்' வல்லவர். அவரிடம் பயிலுவதற்கும்... ஆன்மீக சாதனைகளில் பயிற்சி பெறுவதற்குமென... எண்ணற்ற சிஷ்யர்கள், அவரை நாடி வந்த வண்ணம் இருந்தனர்.

ஒரு நாள், அவரின் குருகுலத்தை நோக்கி, ஒரு பெரியவரும், அவரின் மகளும் வந்திருந்தனர். பெரியவர், 'சுவாமி, இவள் எனது மகள். இவளின் கணவர் விட்டினர், சில அற்பக் காரணங்களையெல்லாம் கூறி, இவளை அழைத்து வந்து விட்டு விட்டுச் சென்று விட்டனர். இவளது கணவர் மிகவும் அன்பானவர்தான். அவருடன் இணைந்து வாழும் வாய்ப்பு எனது மகளுக்குக் கிடைக்குமா... ?' என்று கேட்டார்.

அவர் கேட்ட நேரத்தில், அருகிலுள்ள கிணற்றில், மாணவன் ஒருவன், நீர் இறைத்துக் கொண்டிருந்தான். அவர், கேள்வி கேட்டு முடித்த கணம், மேலே வந்து கொண்டிருந்த நீர்க்குடம், கயறு அறுந்ததால், மீண்டும் கிணற்றுக்குள்ளே , 'பொத்தென்று' விழுந்ததது. இந்த சப்தத்தைக் கேட்டு, அனைவரும் கிணற்றை நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்பினர்.

சலனமில்லாமல், இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அல்லமாப் பிரபு, மாணாக்கர்களிடம், 'இப்போது இந்தப் பெரியவர் கேட்ட கேள்வியையும்... நிகழ்ந்த சகுணத்தையும்... கவனித்திருப்பீர்கள். இந்த சகுணத்தை முலமாக வைத்து... இந்தப் பெரியவரின் கேள்விக்கு பதிலளியுங்கள்... !'என்றார்.

மாணாக்கர்கள், ஒவ்வொருவராக எழுந்து அளித்த பதில்கள் அனைத்தும் ஏறத்தாள ஒரே மாதிரியாகவே அமைந்தன. அது, 'எப்போது, அந்த கயறு அறுந்து, அந்த குடம் தண்ணீரிலேயே விழுந்து மூழ்கி விட்டதோ, அப்போதே இவர்களுக்கு இடையேயான பந்தமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இனித் தொடர வாய்ப்பில்லை' என்பதுதான்.

ஆனால், ஒரே ஒரு மாணக்கனின் பதில் மட்டும் அனைவரது கணிப்பிலிருந்தும் மாறியிருந்தது. அது, 'சுவாமி. இந்தத் தம்பதிகள் இருவரும் மீண்டும் இணைந்து விடுவர்.' என்பதுதான். அல்லமாப் பிரபு, அந்த மாணாக்கனிடம், 'எப்படிஅது நிகழும் என்பதை, இந்தச் சகுணத்தின் வாயிலாக விளக்குவாயா... ?' என்று கேட்க... பணிவுடன், அந்த மாணாக்கன், 'சுவாமி, குடம், கிணற்று நீரைத் தனியாக பிரித்து எடுத்துக் கொண்டு வந்தது... இந்தக் கேள்வி பிறந்த வேளையில்... அந்தக் குடத்து நீர், மீண்டும் கிணற்றிலேயே சென்று சேர்ந்து விட்டது. அதனால்தான், இவ்விருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று சொன்னேன்' என்றான்.

அல்லமாப் பிரபுவும், அந்தப் பெரியவரிடம், 'தைர்யமாகச் சென்று வாருங்கள். உங்கள் பெண், அவளது கணவருடன் இணைந்து விடுவாள்... !' என்று கூறி அனுப்பிவைத்தார்.

ஒரு சில நாட்களுக்குள், அந்தப் பெரியவர், தனது மகள் மற்றும் மருமகனுடன், பழங்கள், பூக்கள் மற்றும் தக்ஷணையுடன் வந்து, அல்லமாப் பிரபுவின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள். அவர்களை ஆசிர்வதித்து அனுப்பிய அல்லமாப் பிரபு, மாணவர்களை நோக்கி, 'உங்களனைவரது கவனமும் அறுந்த கயிற்றில் இருந்தது. இவனது கவனமோ, குடத்தில் இருந்த நீரின் மீது இருந்தது. சகுணங்களைக் கவனிக்கும் போது, உங்களது கவனம், இயற்கையுடன் ஒன்றியிருப்பதும்... இயற்கைக்கு ஒவ்வாதவற்றிலிருந்து  தள்ளியிருப்பது... முக்கியமானது... !' என்ற அனுபவப் பாடத்தை அளித்தார்.

அல்லமா பிரபுவின் திருப்பாதங்களுக்குச் சமர்ப்பணம்.

ஸாய்ராம்.

Tuesday, July 7, 2020

அகத்தியப் பெருமான் அளித்த... 'நாடி ஜோதிட அனுபவம்'




'ஜோதிடக் கலையில்' ஈடுபாட்டுடன் இருக்கும் எனக்கு, 'நாடி ஜோதிடத்தைப்' பற்றிய நேரடி அனுபவம் இல்லாதிருந்த காலம் அது. 

2004 ஆம் ஆண்டின் முற்பகுதியில், எனது உறவினரும், நண்பருமான ஒருவருக்கு, அவரது தொழில் ரீதியாக... ஜோதிட ரீதியிலான ஆலோசனையை வழங்கியிருந்தேன். தொழிலுக்கான இடத்தைத் தேர்வு செய்யும் போது... அதில் சில சந்தேகங்கள் நிலவியதால்... இன்னும் சற்றுத் தெளிவான வழிகாட்டுதல் தேவையாக இருந்தது.

அப்போது, அந்த நண்பர், 'நாடி ஜோதிடத்தில், இதற்கான தெளிவு கிடைக்க வாய்ப்புிருக்குமா... ?' என்ற கேள்வியை முன்வைத்தார். அதுவரை, எனக்கு அந்தத் துறையில் நேரடி அனுபவம் ஏதுமில்லாததால், நான் அறிந்ததை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். 

'நாடிகள் என்பது ரிஷிகளின் கைப்பட எழுதிய ஓலைகள். அவற்றில், 'ஜீவனின் பிறவிகள் பற்றிய 'வாழ்க்கைக் குறிப்பும்' அடங்கியிருக்கும். அந்த ஓலைகளில் ஜோதிடக் கலை விவரிக்கும், லக்னம் முதலான பனிரெண்டு பாவங்களைப் போல, பொதுக் காண்டம் முதல் மோக்ஷக் காண்டம் வரை விரிந்திருக்கும். முதலில் பார்க்கப்படுவது பொதுக் காண்டம்தான். அதற்குப் பிறகு தேவையெனில், மீதிக் காண்டங்களைப் பார்க்கலாம். காண்டங்களைப் பார்ப்பதற்கு, ஒருவரின் வலது  கை பெருவிரல் ரேகை மட்டும் போதுமானது. பொதுவாக அகத்தியர், வசிஷ்டர், சுகர் மகிரிஷிகளின் நாடிகள் இருந்தாலும், பெரும்பாலும் அகத்திய மகிரிஷ்யின் நாடி பிரபலமாக இருக்கிறது.'

ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நண்பர், 'அகத்தியர் நாடி பார்ப்பதற்கான விபரங்களுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்'. என்று கூறி விட்டுச் சென்றார். அடுத்த நாளே, 'மத்தியப் பேருந்து நிலையத்திற்கு' அருகில் (எங்கள் ஊர் திருச்சிராப்பள்ளி), திண்டுக்கல் சாலையில் இருக்கும் ஒரு பிரபல 'நாடி ஜோதிடரின்' முகவரியுடன் வந்தார். அன்றே, அந்த முகவரிக்குச் சென்றோம். அங்கு வரவேற்பரையில், எங்களது பெயர், நட்சத்திரம், பிறந்த தேதி முதலிய விபரங்களைப் பெற்றுக் கொண்டு, ஒரு தேதியைக் குறிப்பிட்டு, வரும் போது, ஒரு குறிப்பிட்டத் தொகையைக் கூறி, அதைச் செலுத்தமாறும் கூறினர்.

நான் அறிந்ததற்கும்... தற்போது நடப்பதற்கும்... உள்ள மாறுபாடுகளைக் கண்டு திருப்தியில்லாத நிலையில், அன்று மாலை, எனது 'சத்குருவின் திருவடியில்', ஒரு பிரார்த்தனையை வைத்தேன். 'சுவாமி, அகத்திய மகிரிஷியின் வாக்கை கேட்பதற்கு, எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்... ! அந்த பாக்கியத்தை அருளுங்கள், சுவாமி... !' என்று. 

அன்று இரவு, வீடு திரும்பும் போது, மின்சார சாதனங்களை பழுதுபார்க்கும் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம், எனது நாடி சம்பந்தமான சந்தேகங்களைப் பகிர்ந்து கொண்ட போது, அவர், எனது கருத்துக்களை ஆமோதித்து, அதற்கேற்ப, புற நகர்ப் பகுதியான 'காட்டூரில்' ஒரு நாடி ஜோதிடரின் விலாசத்தைக் கொடுத்தார்.

அடுத்த நாள், அவர் கொடுத்த முகவரிக்குச் சென்று, அந்த ஜோதிடரைச் சந்தித்தோம். மிகச் சாதரணமாக இருந்த அவர், மரத் தடுப்புள்ள  உள் அறைக்கு அழைத்துச் சென்றார். அவரது இருக்கைக்குப் பின், அகத்திய மகிரிஷியின் உருவப் படமும்... ஊதுவத்தியின் சுகந்த மணத்துடன்... எனது குரு நாதரின் உருவப் படமும்... இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.

எங்களை அமரவைத்து, நண்பரின் வலது கை பெருவிரல் ரேகையை பெற்று, அதை 'அகத்திய மகிரிஷியின் திருவடியில்' வைத்துவிட்டு... அங்கிருக்கும் ஓலைக் கட்டுகளில் ஒன்றை எடுத்து... ஒவ்வொன்றாகப் பிரித்து... ஒவ்வொரு ஓலையினையும் எடுத்து... 'நான் உங்களது தந்தையின் பெயரை, ஒரு சில, உள் குறிப்புடன் சொல்வேன். நீங்கள் ஆமோதித்தால், பின் உங்களது பெயரையும், உங்களின் நட்சத்திரத்தையும் சொல்வேன்... நீங்கள் உறுதி சொன்னால், பின்னர் ஓலையைப் படிக்கலாம், என்னிடம் பொதுக் காண்டம் மட்டுமே உள்ளது.' என்று ஆரம்பித்தார்.

முதல் ஓலைக் கட்டில் நண்பரின் தந்தையைப் பற்றிய குறிப்புகள் இல்லாததால், இரண்டாவது கட்டை எடுத்து, சில ஓலைகளைப் படித்த பின், ஒரு ஓலையை படிக்கும் போது, 'யாசகம் கேட்போன்...' என்ற குறிப்பொன்றைக் கூற, அதை நாங்கள் ஆமோதித்தோம். ஏனெனில், நண்பரின் தந்தையின் பெயர்... 'திரு.பிச்சை'. தொடர்ந்து, நண்பரின் பெயரையும், அவரின் நட்சத்திரத்தையும், லக்னம் முதலான இராசியின் அமைப்பையும்... நண்பரின் வாழ்க்கைக் குறிப்பையும் ரத்தினச் சுருக்கமாக விவரித்து... பின் அதை அவ்வாறே ஒரு 40 பக்க நோட்டில் எழுதி... அதை அகத்திய மகிரிஷியின் திருவடியில் வைத்து எடுத்துத் தந்தார்.

முதன் முதலாக மகிரிஷியின் வாக்கைக் கேட்ட ஆனந்தத்தில்... அதைப் பெற்றுக் கொண்டு, அவருக்கான தக்ஷ்ணையைக் கேட்ட போது, ஆச்சரியத்தில் மூழ்கி விட்டடேன்.  காரணம், நாஙகள் முன்னிரு தினங்களுக்கு முன்னர் சந்தித்த... நாடி ஜோதிடரின் அலுவலகத்தில்... அவர்கள் கேட்ட தொகையின் '6 ல் 1 பகுதியைத்தான்' இவர் கேட்டார். எங்கள் மனம் திருப்தியுறும் வகையில் ஒரு தொகையை, அகத்திய மகிரிஷியின் திருவடியில் சமர்ப்பித்து, அவரையும் அடியேனது குருநாதரையும் வணங்கி வந்தோம்.

ஆம், நமக்கு ஒரு துன்பம் நேரும் போது, நாம் அணுக வேண்டியது இறைவனைத்தான், அவசியம் இருந்தால், அவர், நம்மை ஒரு ஜோதிடரிடம் அனுப்பி வைப்பார்... !'

ஸாய்ராம்.

Monday, July 6, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 133. 'ஆண்டாள் தாயாரின் ஜாதகத்தில், பெரியாழ்வாரின் அரவணைப்பை வெளிப்படுத்தும் 'குரு பகவான்'.



பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரம்பொருளான 'விஷ்ணு பகவான்'... பக்தர்களை அனுக்கிரகிப்பதற்காக, பூலோகத்தில் 'ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி சமேத ஸ்ரீநிவாஸப் பெருமாளாக' எழுந்தருளியிருக்கிறார்.

அந்த பூதேவித் தாயார்தான், ஸ்ரீ வில்லிப்புத்தூரில், வடபத்திரசாயியாக எழுந்தருளியிருக்கும் 'ரங்கமன்னார் ஆலயத்தின்', திருத்துழாய் வனத்துக்குள், ஒரு குழந்தையாக எழுந்தருள்கிறார்.

அன்றாடம் 'வடபத்ரசாயிக்குத்' திருத்துழாயினால் ஆன மாலையை சாற்றுவதற்காக, நந்தவனத்திற்கு வரும் 'பெரியாழ்வாரின்' கண்களில்தான்... இந்த 'தெய்வக் குழந்தையைக்' காண வைத்தான்... 'ஸ்ரீ ரெங்கநாதன்'. அந்தக் குழந்தையை வாரியணைத்து... 'ஆண்டாள்' என்று பெயர்  சூட்டி வளர்த்துவந்தார் ஆழ்வார்.

பின்னாளில், 'ஆண்டாள் தாயரை', திருவரங்கத்திற்கே அழைத்து வர வைத்து... அனைவருக்கும் முன்னால்... தனது கருவறைக்குள்ளேயே ஈர்த்து... தன்னோடு அணைத்துக் கொண்டான், 'ஸ்ரீ ரெங்கநாதன்'. 

'ஆசையோடு நான் வளர்த்த பிள்ளையை... திருவரங்கப் பெருமாள், கவர்ந்து கொண்டு விட்டானே... !' என்று பெரியாழ்வார் அழுது புலம்பும் போது, 'ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கநாதராக' காட்சியளித்து...ஆண்டாள் தாயாரின் அவதார ரகசியத்தைக் கூறி, பெரியாழ்வாருக்கு அனுக்கிரஹம் செய்தார் 'திருவரங்கப் பெருமாள்'.

ஆகவே, ஆண்டாள் தாயாரின் அவதாரம் ஒரு தாய். தந்தை என்ற பெற்றோருக்கு நிகழாததால் அவருக்கான 'ஜனன ஜாதகம்' இருக்க வாய்ப்பில்லை. பெரியாழ்வார், என்று... அந்தக் குழந்தையைத் திருத்துழாய் நந்தவனத்தில்  கண்டாரோ... அந்த, ஆடி மாதத்து, பூரம் நட்சத்திரம் கூடிய நன்னாளில் கணிக்கப்பட்ட ஜாதகத்தைத்தான்... ஆண்டாள் தாயாரின் ஜனன ஜாதகமாக கணித்திருக்க வாய்ப்புண்டு. 

ஆனால், இறைவனின் திருவுள்ளப்படி இந்த நிகழ்வு நிகழ்ந்திருப்பதால், இந்த ஜாதகம் தாயாரின் அவதார சூட்சுமங்கள் அனைத்தையும் அற்புதமாக வெளிப்படுத்துகிறது. 'துலாம் லக்னமாகவும்'... 'சிம்மம் இராசியாகவும்'... அமைந்த இந்த ஜாதகத்தில், 

1. லக்னாதிபதியாகிய 'சுக்கிர பகவானும்',  பூர்வ புண்ணியாதிபதியாகிய 'சனி பகவானும்'... பாக்கியாதிபதியாகிய 'புத பகவானும்'... திரி கோணாதிபதிகளாகி... ஒன்றாக இணைந்து... கர்மம் என்ற ஜீவன் ஸ்தானத்திலிருந்து... சுக ஸ்தானமான '4 ஆம் பாவத்தை' பார்வை செய்கிறார்கள்.

சனி பகவானின் அதிதேவதையாக... 'ஸ்ரீ நிவாஸப் பெருமாள்' அமைகிறார். புத பகவானின் அதிதேவதைகளாக... ஸ்ரீ நிவாஸப் பெருமாளும், வரதராஜப் பெருமாளும் அமைகிறார்கள். சுக்கிர பகவானின் அதிதேவதையாக... ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாள் அமைகிறார்.

இவ்வாறு, 'பூதேவித் தாயார் சமேத ஸ்ரீ நிவாஸப் பெருமாளிடமிருந்து' அவதரித்த 'ஆண்டாள் தாயார்'... ஸ்ரீ ரெங்கநாதரின் அனுக்கிரகத்தோடு, 'ஆண்டாள் தாயார் சமேத ரெங்க மன்னராக'... தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிய நிகழ்வுகளைத்தான்... இந்த 'திரிகோணாதிபதிகளின் இணைவு' சுட்டிக் காட்டுகிறது.

2. ஆனால், இந்த அவதார நோக்கத்தை நிறைவேற்ற... பெரியாழ்வாரின் துணை தேவைப்படுகிறது. பெரியாழ்வார், ஒரு தந்தையாக... ஒரு குருவாக... இருந்து, ஆண்டாள் தாயாரை வளர்த்து... அவரை 'ஸ்ரீ ரெங்கநாதரின் திருவடியில்' சேர்க்க உதவியிருக்கிறார். இந்த நிலையை... 

~ லக்னாதிபதியானா 'சுக்கிர பகவானை'... தனது நட்சதிர சாரத்தால் (ஆயில்யம் 4 ஆம் பாதம்) இயக்கும் 'பிதுர் ஸ்தானதிபதியும் - பாக்கிய ஸ்தானாதிபதியும் - தர்ம ஸ்தானாதிபதியுமான'... 'புத பகவான்' உறுதி செய்கிறார்.

~ மேலும், 'பிதுர் காரகனான'... 'சூரிய பகவானும்' இந்த திரி கோணாதிபதிகளுடன் இணைந்து... இந்த சூட்சுமத்தை உறுதி செய்கிறார்.

~ தந்தையாக மட்டுமல்ல... பெரியாழ்வார் ஒரு குருவாக இருந்து அருள் செய்கிறார் என்பதை...'குரு பகவானே' தனது சுய நட்சத்திர சாரத்தில் (புனர் பூசம் 4 ஆவது பாதம்) இந்த 'திரி கோணதிபதிகளுடன்' இணைந்திருப்பதும்... நவாம்ஸத்திலும் இதே வீட்டில் அமர்ந்து 'வர்க்கோத்துமம்' பெற்று வலுத்திருப்பதும் உறுதிசெய்கிறது.

3. பெரியாழ்வார், ஒரு தந்தையாக... ஒரு குருவாக... இருப்பதை... 'குரு பகவான்' மேலும் சூட்சுமமாக வெளிப்படுத்தும் ஒரு அமைவைத்தான்... நவக் கோள்கள் தமது அமைவின் மூலம்... இந்த 'அற்புத பிரசன்ன ஜாதகத்தில்' சுட்டிக் காட்டுகின்றன.

~ லக்னாதிபதியான 'சுக்கிர பகவான்; இராசியாதிபதியான 'சந்திர பகவானின்' வீடான... 10 ஆம் பாவத்தில் அமர்ந்திருக்கிறார். 
~ இராசியாதிபதியான. 'சந்திர பகவானோ'... 11 ஆம் பாவத்தில்... லக்னாதிபதியான 'சுக்கிர பகவானின்' நட்சத்திர சாரத்தில் (பூரம் 4 அம் பாதத்தில்) அமர்ந்திருக்கிறார். 


இவ்வாறு, 'லக்னாதிபதிக்கும்... ராசியாதிபதிக்கும்'... இடையே ஒரு 'சூட்சுமமான பரிவர்த்தனை' ஏற்படுகிறது.

அதுமட்டுமல்ல... கர்மம் மற்றும் ஜீவனம் என்ற '10 ஆம் பாவாத்திற்கும்'... ஜிவனம் மற்றும் லாபம் என்ற விருத்தி பாவமான 11 ஆம் பாவத்திற்கும்... ஒரு பரிவர்த்தனை நிகழ்கிறது. அதாவது 'சூரியன் மற்றும் சந்திர பகவான்களுக்கு இடையேயான பரிவர்த்தனை'.

இந்த 'பரிவர்த்தனையின்' சூட்சுமதாரியான 'சூரிய பகவானுடன்' .... 'குரு பகவான்' இணைந்திருக்கிறார். 

இந்த ஒட்டு மொத்த 'அவதார நிகழ்வுக்கும்'... பெரியாழ்வார் என்ற பெருந்தகைதான் சூட்சுமதாரியாக இருக்கிறார் என்பதை...  இந்த 'குரு பகவானின்' அமைவே மிக அற்புதாமாகச் சுட்டிக் காட்டுகிறது.

இதுதான், 'குரு பகவானின்' அமைவின் மூலம்... ஆண்டாள் தாயாரின் அவதார 'பிரசன்ன ஜாதகம்' சுட்டிக் காட்டிடும்... 'நவக் கோள்களின் கோளாட்டம்' என்ற ஜோதிடக் கலையின் சூட்சுமம்.

ஆண்டாள் தாயாரின் திருவடிகளுக்கும்... பெரியாழ்வாரின் திருவடிகளுக்கும்... சமர்ப்பணம்.

ஹரி ஓம் நாரயணாய நமஹ.

ஸாய்ராம்.

(இதைத் தெளிவாக, காணொளியாக... கீழே கண்ட இணைப்பில் காணலாம்.)

https://youtu.be/zgwA_s4NEOc

Saturday, July 4, 2020

ஸாயீயின் கீதங்கள்




சீரடி ஸாயீயின் சமஸ்தானம் - ஸாயீ
குருவைத் தேடி வந்த குருஸ்தானம்
ஞானிகள் கடவுளின் அவதாரம் - புவி 
மாந்தரின் இருளகற்றும் ஒளிதீபம்.

பாலகனாய் பரம்பொருள் பாதம் பதித்த பூமி,
யவ்வனத் துறவியாய் தவத்தில் அமர்ந்த பூமி,
பக்கிரியாய் நடந்து உணவை இரந்த பூமி,
பாவங்கள் தொலைத்திடும் கங்கையே சீரடி பூமி.               (சீரடி... )

சாலைகள் ஊருக்கு வழிகாட்டி - உயர்
கோபுரம் கோவிலின் வழிகாட்டி
குருவே இறைவனின் வழிகாட்டி - பெரும்
பிறவி பிணி தீர்க்கும் கைகாட்டி.                                                 (சீரடி... )

பாவங்கள் துகளாய் திருகையில் நைந்த பூமி,
நன்மைகள் பூக்களாய் பூத்து சிரித்த பூமி,
வினைகள் விறகுகளாய் எரிந்து அழிந்த பூமி,
நித்திய இன்பத்தை அளித்திடும் புண்ணிய பூமி.                  (சீரடி... ) 

சீரடி ஸாயீயின் சமஸ்தானம் - ஸாயீ
குருவைத் தேடி வந்த குருஸ்தானம்
ஞானிகள் கடவுளின் அவதாரம் - புவி 
மாந்தரின் இருளகற்றும் ஒளிதீபம்.

(26.1.2005 அன்று, பகாவான் ஸாயீயின் கருணையினால்... அடியவனின் மனதில் உதித்த பாடல். 4.7.2020, குரு பூர்ணிமா நாளான இன்று, ஸாயீயின் பக்தர்களுக்குச் சமர்ப்பணம்.)

ஸாய்ராம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 132. 'பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரது ஜாதகத்தில், காளி மாதாவின்' பூரண அருளை வெளிப்படுத்தும் 'ராகு பகவான்'




மேற்கு வங்கத்தின், காமார்புகூர் என்ற சிற்றூரில், க்ஷூதிராம், சந்திரமணி தேவி தம்பதிகளின், நான்காவது குழந்தையாகப் பிறந்த 'கதாதர சட்டோபாத்யாயர்' என்ற குழந்தையை... 

தட்சிணேஸ்வரத்தில், மீனவ குலத்தில் பிறந்து, தேசத்து ராணியான... 'ராசாமணியார்', எழுப்பியுள்ள 'காளி கோவிலில்' எழுந்தருளியுள்ள 'பவதாரிணித் தாயாரே'... ஈர்த்து, அவரை 'பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸராக'... மாற்றியருளினார். ஆகவேதான், கதாதரரின் மனதில், 'தாயார் பவதாரணியான'... 'காளி மாதா' எழுந்தருளி, பக்தி என்ற நறுமணத்தால் நிறைந்து நின்றார். 

அவரது, பக்தியையும்... அவரது தொண்டையும்... தாயாரின் திருவடியில் கலந்து விட அவர் செய்த சாதகங்களையும்... அவரிடமிருந்து பெருக்கெடுத்த ஞானத்தையும்... இவற்றிற்கெல்லாம் மூலமாக இருக்கும் 'காளி மாதாவின் அருளையும்'... அவரது ஜனன கால ஜாதகத்தில் அமைந்த நவக் கோள்களில் ஒருவரான 'ராகு பகவானின்' அற்புத அமைவே வெளிப்படுத்துகிறது.

1. தாயார் அமர்ந்திருக்கும் 'கும்பமே' அவரது லக்னமாகிறது. இந்த 'கும்ப லக்னத்தை' வழி நடத்துபவராக 'காளி மாதாவே' அமைகிறார். இதை, லக்னத்தை தனது நட்சத்திர சாரத்தால் (சதயம் 2 ஆம் பாதம்) வழி நடத்தும், 'ராகு பகவான்' சுட்டிக் காட்டுகிறார். ஏனெனில், 'ராகு பகவானின்' அதிதேவதையாக இருப்பவர்... 'காளி மாதாதான்'.

2. லக்னத்தை மட்டுமல்ல... லக்னாதிபதியான, 'சனி பகவானையும்' தனது நட்சத்திர சாரத்தால் (சுவாதி 3 ஆம் பாதம்) 'ராகு பகவான்' வழி நடத்துகிறார்.

இவ்வாறாக, லக்னத்தையும் (கும்ப லக்னம்), லக்னாதிபதியையும் (சனி பகவான்)... காளி மாதா சுவீகரித்துக் கொண்டிருக்கிறார்.

3. இவரது 'இராசியும் கும்பமாகவே' அமைகிறது. இராசியையும்... இராசிதிபதியான 'சனி பகவானையும்'... 'சதயம் 2 மற்றும் 3 ஆம் பாதங்களில்' அமைந்திருக்கும் 'ராகு பகவான்' இயக்குகிறார்.

இவ்வாறாக, லக்னம் என்ற ;ஆன்மாவையும்;... இராசி என்ற ;உடலையும்;... தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்... பவதாரிணித் தாயார்.

4. பூர்வ புண்ணியாதிபதியான 'புத பகவான்' (5 ஆம் பாவம்) லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறார். அவரையும்... 'ராகு பகவான்' தனது நட்சத்திர சாரத்தால் (சதயம் 3 ஆம் பாதம்) இயக்குகிறார். 

அது மட்டுமல்ல, அந்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிற 'தன-குடும்ப-வாக்கு-லாபம் என்ற விருத்தி ஸ்தானங்களுக்கு' அதிபதியாகிற 'குரு பகவானையும்' தனது நட்சத்திரத்தின் மூலமாக (திருவாதிரை 3 ஆம் பாதம்) இயக்குகிறார்... 'ராகு பகவான்'.

இவ்வாறாக, பூர்வ புண்ணியாதிபதியையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிற 'பூர்வ புண்ணியக் காரகனான'... 'குரு பகவானையும்'... தன்னால் ஆகர்ஷிக்கப்பட்ட... 'ராகு பகவானின்' நட்சத்திர சாரங்களின் மூலமாக... பகவான் இராமகிருஷ்ணரை, அவரது பூர்வத்திலேயே ஆட்கொண்டிருக்கிறார்... காளித் தாயார்.

5. அது மட்டுமல்ல, இந்த 'பூர்வ புண்ணியம்' என்ற 'கர்மவினைகள்தான்', இந்தப் பிறவியை அளித்திருக்கிறது. அந்த கர்ம வினைகள்தான்... 'ருணமாக-ரோகமாக-சத்ருவாக'... '6 ஆம் பாவம்' வெளிப்படுத்துகிறது. 

அந்த 6 ஆம் பாவத்திற்கு அதிபதியான 'சந்திர பகவான்' லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறார். அவரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிற  'குரு பகவான்' தனது நட்சத்திர சாரத்தாலும் (பூரட்டாதி 1 ஆம் பாவம்)... தனது 9 ஆம் பார்வையாலும் கடாக்ஷித்து...  இந்தப் பிறவியில், அவரனுபவிக்கப் போகும் 'கர்மாக்களிலிருந்து' மட்டுமல்ல, அவரது முந்தைய பிறவிகளின் 'கர்மாக்களிலிருந்தும்'... விடுவித்து விடுகிறார்.

இந்த விடுவிப்புக்கான அருளை அளிப்பவராக 'காளி மாதா' இருப்பதை... 'குரு பகவானை' தனது நட்சத்திர சாரத்தல் இயக்கும் 'ராகு பகவான்' உறுதி செய்கிறார்.

6. இவரது ஜாதகத்தில்... 'இணை, துணை மற்றும் களத்திரம்' என்ற '7 ஆம் பாவத்திற்கு' அதிபதியாகிற 'சூரிய பகவான்' லக்னத்திலேயே அமர்கிறார். இவரை. ராகு பகவான்' தனது நட்சத்திரமான... 'சதயம் 1 ஆம் பாவத்தில்' வழி நடத்துகிறார்.

அதாவது, இவரது வாழ்வில் இணைந்து வருபவர்கள் அனைவரையும்... ஈர்த்துக் கொள்ளும் வல்லமை இவருக்கு இயல்பாக இருப்பதை இந்த அமைவு உணர்த்துகிறது. ஆனால், அவர்களினால் இவர் ஈர்க்கப்பட்டு... இந்த உலக பந்தங்களிலும்... பற்றுக்களிலும்... சிக்கிக் கொள்ளாதவாறு, அந்த '7ஆம் பாவாதிபதியான 'சூரிய பகவானை'... 'ராகு பகவானின்' மூலமாக... 'காளி மாதாவே'... இயக்குகிறார்.

மேலும், தன்னோடு இணைபவர்கள் அனைவரையும், தன்னோடு ஈர்த்துக் கொள்வதும்... அவர்களையும் இறைபக்தியில் வழி நடத்தி, அவர்களின் கர்மவினைகளிலிருந்து விடுவிக்கும் வல்லமையையும்... இவருக்கு 'காளி மாதா' அருள்வதை... 'ராகு பகவானின்' சாரத்தினால் வழி நடத்தப்படும் 'குரு பகவானின்' பார்வை, இந்த 'சூரிய பகவானுக்கு' கிடைப்பது... உறுதி செய்கிறது.

7. இவ்வாறாக, லக்னம் - லக்னாதிபதி... இராசி - இராசியாதிபதி... பூர்வ புண்ணியாதிபதி - பூர்வ புண்ணியக் காரகன்... பாக்கியம் என்ற தர்ம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிற லக்ன -  இராசியாத்பதி... என்று, 'லக்னம்-பூர்வம்-பாக்கியம்' என்ற 'திருகோணாதிபதிகள்' அனைத்தையும் தனது ஆளுமைக்குள் கொண்டுவருகிறார்... ;ராகு பகவான்'.

8. இந்த 'ராகு பகவான்', இவரது சுகங்கள் அனைத்தையும் துறக்க வைப்பதற்காக... அதிலிருந்து இவரை விடுவிப்பதற்காக... இவரின் 'சுக ஸ்தானத்தில்' அமர்கிறார். இந்த உலக சுகங்களிலிருந்து இவரை விடுவிக்கவும்... அதில் இவர் சிக்கிக் கொள்ளாதவாறும்... இவரைக் காத்தருள, இந்த 'ராகு பகவானே'... இந்த 'ராகு பகவானால்' வழி நடத்தப்படும் 'சூரிய பகவானை'... இயக்குவது... 'காளி மாதாவின்' சூட்சுமமான வழிநடத்துதலன்றி வேறேது... !

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரையும்... அவரது ஜாதகத்தையும்... நாம் பூஜித்து, பக்தியுடன் வழிபட்டுவர... 'பவதாரிணித் தாயாரான காளி மாதா'... தன் இன்னருளால்... நம்மை இரட்சிப்பாள் என்பது திண்ணம்.

'பகவான் ஸ்ரீ இராம கிருஷ்ணரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்'.

ஸாய்ராம்.


Thursday, July 2, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 131. 'பகவான் ஸ்ரீ இராமபிரானது ஜாதகத்தில், குரு பகவானின் அமைவு'




இறைவனே, ஒரு மனித ரூபமாய் அவதரிக்கும் போது, அந்த அவதாரமும் ஒரு உடல் கூட்டுக்குள் கட்டுப்பட்டுப் போகிறது.ஆனால், இந்தப் பரம்பொருளை, ஒரு உடல் கூட்டுக்குள் கட்டி வைக்க முடியுமா... ?

காரண காரியங்களுக்காக ஒரு அவதாரம் நிகழ்கிறது. அந்த அவதார ரகசியத்தை, அந்த அவதாரமே வெளிப்படுத்தாத போது, யாரால்தான் அந்த அவதாரத்தின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும்... ?

ஆனால், 'பகவான் இராமபிரானது' அவதாரத்தை... அவதாரமாக அல்ல, இறை சொரூபமாகவே, உணர்ந்து கொண்ட... அன்பு வைத்த...  ஆத்மார்த்தமான பக்தர்களால் நிறைந்த காப்பியமாகவே, 'இராமகாதையைப்' படைத்திருக்கிறார் வால்மீகி மகிரிஷி. 

ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்த தன்னை 'ராம' நாமத்தினால், ஒரு மகிரிஷியாக மாற்றிய 'நாரத மகிரிஷியிடம்', வால்மீகி கேட்ட கேள்வி, 'இந்த பூலோகத்தில், மகிமைகள் நிறைந்த... மிகச் சிறந்த குணங்களுடன் கூடிய... ஒரு அவதாரத்திற்கு நிகரான... மனிதரை எங்கும் காண முடியுமா... ?' என்பதுதான்.

அதற்காகக் காத்திருந்தது போல, நாரத மகிரிஷி, 'உங்களது வாழ்வையே மாற்றிய 'ராம' என்ற  நாமத்துக்கு உரிய, ஸ்ரீ இராம பிரானது வாழ்க்கையே, உங்கள் கேள்விக்கான பதில்' என்று, பகவானது அவதாரக் கதையை வால்மீகிக்கு அருளினார்.

வால்மீகிக்கு அருளப்பட்ட வகையில், அவர், பகவான் இராமரது அவதாரத்தின் போது, நவக் கிரகங்கள் நின்ற நிலைகளைத் தமது இராம காப்பியத்தில் வடித்திருக்கிறார். அதையே 'கம்ப நாட்டாழ்வாரும்' வழி மொழிந்திருக்கிறார். அந்தக் குறிப்புகளுடன் கூடிய ஜாதகத்தில், 'இறைவனே' ஒரு அவதார புருஷராக அவதரித்தாலும். அவரும் 'ஒரு குருவின் அருளுடன்தான்' இறைவனை அடைய வேண்டும்... என்ற சூட்சுமத்தை... உணர்த்தியிருக்கிறார்.

அதை, அவரது வாழ்வில், குருகுலத்தின் கல்வி கற்பதன் மூலமும்... 'விஸ்வாமிதிர மகிரிஷியை' குருவாக ஏற்றுக் கொண்டு, அவர் வழிகாட்டுதலின் படி வாழ்வை கடந்து போவதன் மூலமும்... வாழ்ந்து காட்டியிருக்கிறார்... 'பகவான்  ஸ்ரீ இராமபிரான்'.

அதைத்தான், பூஜைக்குறிய... அவரது ஜாதக அமைவிலும் காணமுடிகிறது.

1. 'கடக லக்னத்தில்' அவதரித்த பகவானது ஜாதகத்தில், 'குரு பகவான்' தர்மம் என்ற '9 ஆம் பாவத்திற்கு' அதிபதியாகிறார். 'அந்த தர்மமே உருவானவர்தான் இவர்'... என்பதை உணர்த்தும் வண்ணமாக, லக்னத்திலேயே 'உச்ச பலத்தைப்' பெறுகிறார்.

2. 'லக்னாதிபதியாகவும்... இராசியாதிபதியாகவும்'... அமைந்திருக்கிற 'சந்திர பகவானை' (1 ஆம் பாவம்) இந்த 'குரு பகவான்' தனது நட்சத்திர சாரத்தால் இயக்குவது மட்டுமல்ல... அவருடன் இணைந்து... 'ஒரு சொல்... ஒரு வில்... ஒரு இல்...' என்பதாக,,,'எண்ணம், சொல், செயல்' என்ற மூன்றையும் ஒரு நேர் கோட்டில் கொண்டு வந்து... 'உள்ளும், புறமும்' ஒரே நிலையில் வாழும் மனிதர் இவர், என்ற சத்தியத்தை உணர்த்துகிறார்.

3. கடக லக்னத்திற்கு... பூர்வம் மற்றும் கர்மம் என்ற ஜீவன ஸ்தானங்களுக்கு (5 மற்றும் 10 ஆம் பாவங்கள்) அதிபதியாகி, 'உச்ச பலம்' பெற்ற 'செவ்வாய் பகவானை'... தனது '7 ஆம் பார்வையாகக்' கடாக்ஷித்து அருள்கிறார் 'குரு பகவான்'

இவ்வாறாக, லக்னம் (1 ஆம் பாவம்), பூர்வம் (5 ஆம் பாவம்), தர்மம் என்ற பாக்கியம் (9 ஆம் பாவம்) என்ற 'திரி கோணாதிகளின்' சங்கமத்தை... பூர்த்தி செய்கிறார்... 'குரு பகவான்'.

4. தனம்-வாக்கு-குடும்பம் என்ற 2 ஆம் பாவாதிபதியாகிய 'சூரிய பகவான்' 'கர்மம் என்ற ஜீவன ஸ்தானத்தில், உச்ச பலம் பெற்று அமைந்து... அவரமைந்த வீட்டதிபதியான 'செவ்வாய் பகவானை' தனது பார்வை பலத்துக்குள் 'குரு பகவான்'... வைத்திருக்கிறார். 

இதனால், தான் பிறந்த குடும்பமோ அல்லது தனக்கு அமைந்த குடும்பமோ... தனது கடமைக்கு, இடையே வராமலும், ஒரு தடையாக வராமலும்... தர்ம-கர்மத்திற்கு உட்பட்டுத் தனது வாழ்வின் கடமைகளைப் பூரணமாக்கியிருக்கிறார்.

5. தைர்யம் - வீர்யம் - பராக்கிரமம் என்ற '3 ஆம் பாவத்திற்கும்'... 'சுகம் - சயனம் - விரயம் - முற்பிறப்பு' என்ற '12 ஆம் பாவத்திற்கும்'... அதிபதியான 'புத பகவானை' 'தர்மம் என்ற பாக்கிய ஸ்தானமான' தனது வீட்டில்... 'நீச நிலையில்' பலமிழக்க வைத்து... தனது 'உச்ச கதி' பலத்தால் 'நீச பங்கம்' என்ற மிக வலிமையான நிலையை 'குரு பகவான்' அளித்திருக்கிறார்.

இந்த அமைவு... தனது வீர தீர பராக்கிரமங்களை... 'தர்மத்துடன் கூடிய கர்மமாக' அணுகியிருப்பதை ஊர்ஜிதமாக்குகிறது.

6. சுகம் (4 ஆம் பாவம்) மற்றும் லாபம் என்ற புற - அக விருத்தி (11 அம் பாவம்) ஸ்தானங்களுக்கு அதிபதியாகி... 'உச்ச பலம்' பெற்று வலுத்த 'சுக்கிர பகவானையும்' தனது 'தர்மம் என்ற பாக்கிய ஸ்தானத்தில்' அமர வைத்து, அவரையும் 'குரு பகவான்' தனது 9 ஆம் பார்வையாகப் பார்த்து அருள்கிறார்.

இந்த அமைவினால், தனக்கு அமைந்த சுக - பாக்கியங்களையும்... துன்ப நிலைகளையும்... ஒரே சம நிலையில் எதிர் கொள்பவராகவும், இன்பம் - துன்பம்... என்ற இரண்டு நிலைகளையும் புற விருத்தியின் பக்கமிருந்து திருப்பி அக விருத்திக்கு மூலமாக்குகிறார்.

7. 'களத்திரம் மற்றும் துணை, இணை' என்ற ஸ்தானத்திற்கும் (7 ஆம் பாவம்), ஆயுள், மறை பொருள் ஸ்தானத்திற்கும் (8 ஆம் பாவம்) அதிபதியாகிற 'சனி பகவான்' உச்ச பலம் பெற்று, சுக ஸ்தானமான '4 ஆம் பாவத்தில்' அமர்வது... இவருக்கு அமைந்த துணையும்... இணை என்ற நட்பும்... எவ்வளவு உறுதியுடன் அமைந்தது என்பதை, இவரின் வாழ்வின் வழியாகவே அறிந்து கொள்ளலாம்.

இவருக்கு வீடளித்த 'சுக்கிர பகவானை' தனது கட்டுக்குள் வைத்திருக்கும் 'குரு பகவான்'... 'சனி பகவானை' தனது சூட்சுமமான  வழி நடத்தி... 'தன்னை நம்பி வந்தவர்களை மிகவும் அன்புடன் காத்து இரட்சிப்பதை' உறுதி செய்கிறார்.

8. 'ருண - ரோக - சத்ரு ஸ்தானத்தில்' அமர்ந்திருக்கும் 'ராகு பகவானை' தனது வீட்டிலேயே வைத்திருக்கும் 'குரு பகவான்' சத்ருக்களை வெல்வது மட்டுமல்ல... தன்னை 'சரணாகதி' அடைபவர்களுக்கும் 'கதி மோக்ஷம்' அளிப்பவராக, இவர் இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

9. 'சுகம் - சயனம் - விரயம் - முற்பிறப்பு'... என்ற '12 ஆம் பாவத்தில்' அமர்ந்திருக்கும் 'கேது பகவான்'... அவரமர்ந்திருக்கும் ஸ்தானாதிபதியான 'புத பகவானின்' நிச நிலையினாலும், அவரமர்ந்த வீடு 'குரு பகவானது' வீடாகவும், 'குரு பகவானது' 9 ஆம் பார்வையையும் பெற்று, நீச பங்கம் அடைவதாலும்... 

இந்தப் பிறப்பிற்கான, எவ்வித 'கர்ம வினைகள்' இன்றியும்... வரும் பிறப்புகளுக்கான எந்த 'கர்ம வினையும்' இன்றியும்... இந்த ஜீவனது வாழ்வு அமையும்... என்பதை சூட்சுமமாக விளக்குகிறார்கள். 'கேது பகவானின்' இந்த அமைவே, இந்த ஜாதகம் ஒரு 'இறை அவதார ஜாதகம்' என்பதை உறுதி செய்கிறது.

இதுதான், 'குரு பகவான்' என்ற நவக்கிரக நாயகன் நடத்தும்... குரு அருள் கூடிய அமைவு.

ஸாய்ராம்.

(இதைக் காணொளியாக, கீழ்க் கண்ட இணைப்பில் கண்டு மகிழலாம்)

https://youtu.be/f4aeRGvb2yk

Wednesday, July 1, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 130. 'ஒரு மஹா சத்குருவின் ஜாதகத்தில், குரு பகவானின் அமைவு'



'நதி மூலம்... ரிஷி மூலம்... பார்க்கக் கூடாது.'... என்பது, ஒரு நியதி. காரணம், 'கண்ணில் காண்பது மட்டுமே, மெய்...' என்ற, சாதாரண அறிவுக்கு, சத்தியம் என்ற உண்மைப் பொருள்... எப்போதும், எட்டாக் கனியாக இருப்பதனால்தான்.

உதாரணமாக, ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான அகலத்தில் ஓடும் 'அகண்ட காவேரி நதி'..., பொங்கிப் பிரவாகமாக ஓடுவதைக் காணும் சாதரணக் கண்கள், அதன் உற்பத்தி ஸ்தானமான குடகு மலையின், 4400 அடி உயரத்தில், தலைக் காவேரியின் ஒரு சிறு ஊற்றிலிருந்துதான் உற்பத்தியாகிறது... என்ற உண்மையைக் கண்களால் கண்டாலும்... உடனடியாக ஜீரணித்துக் கொள்ள முடியாது.

அது போலத்தான், ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள் போன்றோரின் வாழ்க்கையும். நாம் கண்களினால் பார்க்கும் அவர்களின் வாழ்வும்... அவர்களின் வாழ்விற்கான மூலமும்... நமது சிற்றறிவுக்கு எட்டாத வகையில்தான் இருக்கும். 

அவர்களின் அவதாரங்களும் அவ்வாறேதான் நிகழ்கின்றன. அவர்களின் பிறப்பு, பல நேரங்களில் மிக சூட்சுமமாக அமைந்து விடுகிறது. சில நேரங்களில், காரண, காரியங்களுக்காக... தாய், தந்தை, குடும்பம் என்ற ஒரு குடும்ப அமைவிற்குள்ளும் அமைந்து விடுகிறது. அப்போது, அவர்களுக்கான 'ஒரு ஜாதக அமைவும்' ஏற்பட்டு விடுகிறது. ஒரு சாதாரன மனிதர்களைப் போல ஆரம்பிக்கும் அவர்களது வாழ்வு, ஒரு குறிப்பிட்ட காலத்தில், பரம்பொருளால் ஆகர்ஷிக்கப்பட்ட வாழ்வாக மலர்ந்து விடுகிறது. 

எப்போது, அந்த ஆகர்ஷணம் நிகழ்கிறதோ, அப்போதே அவர்களது, இந்த மானுடப் பிறப்புக்கான 'ஜாதகத்தின் வழியேயான கணிப்புகளும்' ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது. அந்த க்ஷணத்திலிருந்து அவர்கள் எடுத்திருப்பது 'ஒரு புதுப் பிறவி'. அது 'தெய்வப் பிறவி'. ஜனன காலத்தில் கணிக்கப்பட்ட ஜாதகத்தின் பணி, அந்த 'ஜீவனின் கடைத் தேற்றம்' என்ற 'தெய்வத்திற்குள் ஒன்றுதல்' வரைதான் செய்லபடும். அதற்குப் பின் தொடரும் வாழ்க்கைக்கு, ஜனன ஜாதகத்தின் வழியேயான பலன்கள் பொருந்தி வராது.

ஆனாலும், அந்த மகான்களின் ஜனன ஜாதகம்... ஒரு மகா அவதாரத்தின் மூலமாக... இருப்பதால், அது வணங்குவதற்கும், பூஜிப்பதற்கும், தெய்வாம்சமான ஆய்வுக்கும்... உட்பட்டதாக இருக்கும். அவ்வாறு அமைந்ததே, 'மகா பெரியவர்' என்று எல்லோராலும் அழைக்கப்படும், நடமாடும் தெய்வமான 'காஞ்சிப் பெரியவர், 'ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி' அவர்களின் ஜனன ஜாதகம்.

இந்த ஆய்வின் நோக்கமே, 'குரு பகவான்' என்ற நவக்கிர நாயகனின் ஆளுமை, எவ்வாறு ஒரு 'சத்குருவின்' ஜனன கால ஜாதகத்தில் அமைந்திருக்கிறது... என்ற அற்புதத்தை உணர்வதற்கே.

1. சிம்ம ராசிவீட்டை, லக்னமாகக் கொண்டு பிறந்தவருக்கு, 'குரு பகவான்' பூர்வ புண்ணியாதிபதியாகிறார் (5 ஆம் பாவம்).

2. அவர், லக்னாதிபதியாகிய 'சூரிய பகவானுடன்' (1 ஆம் பாவம்), 'கர்மம்' என்ற ஜீவன ஸ்தானத்தில் (10 ஆம் பாவம்) இணைந்து, தனது கடமைகள் அனைத்தையும், இந்தப் பிறவியிலேயே பூர்த்தி செய்யும் வண்ணம் அமைந்திருக்கிறார்.

3. சிம்ம லக்னத்திற்கு, 'சுகம் - பாக்கியம்' (4 மற்றும் 9 ஆம் பாவங்கள்) என்ற இரண்டு ஸ்தானங்களுக்கு மட்டுமல்ல... 'தர்மம்' என்ற உயரிய ஸ்தானத்திற்கு அதிபதியாகிய 'செவ்வாய் பகவான்'... ருண-ரோக-சத்ரு என்ற 6 ம் பாவத்தில், உச்ச பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். இந்தத் திரிகோணாதிபதியை, லக்னாதிபதியுடன் இணைந்து, 'குரு பகவான்' தனது 9 ஆம் பார்வையாக பார்க்கிறார். இந்தத் 'திரிகோணாதிபதிகளின்' சங்கமத்தை... 'குரு பகவான்', தனது அருள் பார்வையால் பூர்த்தி செய்கிறார்.

4. அவருக்கு வீடளித்த 'சனி பகவான்' (6 மற்றும் 7 அம் பாவங்கள்)... தனம்-வாக்கு-குடும்ப அமைவு என்ற 2 ஆம் பாவத்தில்... 'வர்க்கோத்துமம்' பெற்று வலுத்து அமர்ந்திருக்கிறார். அவருடன் மோக்ஷக் காரகரான 'கேது பகவான்' இணைந்திருக்கிறார். இந்த அமைவை, 'கர்மம்' என்ற உயரிய ஸ்தானத்தில், அமர்ந்திருக்கிற ''குரு பகவான்'... இந்த அமைவுக்கு இடமளித்த, தனம்-வாக்கு-குடும்பம்-லாப (2 மற்றும் 11 ஆம் பாவங்கள்) ஸ்தானங்களுக்கு அதிபதியாகிற 'புத பகவானுடன்' இணைந்து, தனது 5 ஆம் பார்வையாகப் பார்க்கிறார்.

5. 'கர்மம்' என்ற உயரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிற 'குரு பகவான்'... அந்த வீட்டதிபதியாகிய 'தைர்ய-வீர்ய-ஜீவன-கர்ம' ஸ்தானங்களுக்கு அதிபதியாகிற (3 மற்றும் 10 ஆம் பாவங்கள்) 'சுக்கிர பகவானின்' வீட்டில் அமர்ந்தது மட்டுமல்ல... அவரை தனது வீட்டில் (8 ஆம் பாவம்), போகக் காரகனாக 'ராகு பகவானுடன்' இணைத்து... சுக-போகங்களை' அந்த ஸ்தானத்தில் புதைத்து... அந்த ஸ்தானத்துடன் 'பரிவர்த்தனை' செய்து... ஜீவனை, அதன் இக லோக சுகங்கள் அனைத்திலிருந்தும் விடுவித்திருக்கிறார்.

6. 'சுகம்-சயனம்-விரயம்-முற்பிறப்பு' என்ற 12 ஆம் பாவத்திற்கு அதிபதியாகிற 'சந்திர பகவான்' இந்த பிறவிக்கான உலக வாழ்வை மட்டுமல்ல... மனம் என்ற  வினைகளின் எண்ணங்களின் உற்பத்திக்கும்... உரியவராகிறார். அவர், 4 ஆம் பாவம் என்ற 'சுக ஸ்தானத்தில்' தனது பலத்தை இழந்து 'நீசம்' பெற்றிருப்பது... இந்தப் பிறவியே இறுதியானது... என்பதை உறுதி செய்கிறது. 

அது மட்டுமல்ல, அந்த வீட்டதிபதியான 'செவ்வாய் பகவான்' 'ருண-ரோக-சத்ரு' ஸ்தானத்தில் 'உச்ச பலம்' பெற்று, 'சந்திர பகவானுக்கு' நீச பங்கம் என்ற பலத்தை அருள்கிறார். இவ்வாறு அமைந்திருக்கிற 'சந்திர பகவானையும்', 'செவ்வாய் பகவானையும்'... கர்ம ஸ்தானத்திலிருந்து 'குரு பகவான்' தனது 7 மற்றும் 9 ஆம் பார்வையாக பார்த்து அருள்கிறார். அதனால், இந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகள்' வெளிப்படுத்தும் 'விளைவுகளிலிருந்து' இந்த ஜீவனை... முற்றிலுமாக விடுவித்து விடுகிறார்.

7. இவ்வாறு, இராசியில் தனது ஆளுமையை நடத்திக் காட்டிய 'குரு பகவான்' அம்ஸத்திலும், பூர்வ புண்ணியாதிபதியாகி, ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்து... இந்த ஜீவனின் வாழ்வைப் பூரணமாக்குகிறார்.

இதுதான், 'குரு பகவான்' என்ற நவக்கிரக் நாயகனின் அமைவு நடத்தும்... அருள் நாடகம்.

இந்த ஆய்வை, 'காஞ்சி மகானின்' திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன். 

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... !

ஸாய்ராம்.

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...