16 ஆம் நூற்றாண்டு... ஆந்திர மாநிலத்தின், ஆதோனி என்ற ஒரு சிறிய கிராமம், அந்த கிராமத்தில் தாய், தந்தையை இழந்து, தனது மாமாவின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருந்த சிறுவன்தான் , வெங்கண்ணா.
வெங்கண்ணாவின் குடும்பம், அந்தக் கிராமத்திலேயே மிக வசதியான, நிறைந்த நில புலன்களுடனும், மாடு கன்றுகள் என வசதியான வாழ்வுடனும் வாழ்ந்த குடும்பமாக இருந்தது. அந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசாக இருந்தவன்தான் சிறுவன் வெங்கண்ணா. மிகவும் செல்வச் செழிப்புடன் வளர்ந்த வெங்கண்ணா, சிறிய வயதிலேயே, தனது தாய் தந்தையர்களை இழக்கும் சூழல் ஏற்பட்டது.
தனது பண்ணையில், கணக்கு வழக்குகளை மேற்பார்வை செய்யும், அவனது மாமாவின் பொறுப்பில், வெங்கண்ணாவும், அவனுக்குரிய சொத்துக்களும் வந்து சேர்ந்தன. வெங்கண்ணாவை, கல்வி கற்காத... ஒரு மட்டிப் பிள்ளையாக... வளர்த்தால், எதிர் காலத்தில், அந்த சொத்துக்கள் முழுவதையும் அனுபவிக்கலாம்... என்ற எண்ணத்தில், அவனது பண்ணையிலேயே, வெங்கண்ணாவை, ஆடு மேய்க்கும் பணியில் அமர்த்திவிட்டார், வெங்கண்ணாவின் மாமா.
வீட்டில் நடக்கும் விஷயத்தை வெளியில் சொல்ல முடியாமலும்... கல்வி கற்க முடியவில்லையே என்ற ஏக்கத்திலும்... வெங்கண்ணா கவலையுடனும், கண்ணீருடனும் அமர்ந்திருந்தான். அப்போது, அந்த வழியே, ஒரு சந்நியாசி, தனது குழு பின் தொடர, நடந்து வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும், ஏதோ ஒரு உள்ளுணர்வு தன்னைத் தூண்ட, இருக்கும் இடத்திலிருந்து ஓடி வந்து, அவரின் காலில் விழுந்து கதறி அழுதான், வெங்கண்ணா.
அமைதியாக, அவன் அழுகை ஓயும் வரை, காத்திருந்த அந்த மஹான், அவனது விம்மல்கள் ஓய்ந்த பின், அவனை ஆசிர்வதித்து, அவனுக்கு, 'மிருத்திகை' என்ற அருள் பிரசாதத்தை அளித்தருளினார். கண்களில் அந்த பிரசாதத்தை ஒத்திக் கொண்ட பின், கடந்து போகும் மகானைப் பின் தொடர்ந்த, அவரது குழுவின் இறுதியில் சென்ற சிஷ்யரிடம், சுவாமிகளைப் பற்றி விசாரித்தான் வெங்கண்ணா.
அவர்தான், 'மத்வ மடத்தின்' பீடாதிபதியான 'ஸ்வாமி ராகவேந்திரப் பிரபு' என்றும், அவரைத் துதிக்கும் மந்திரம், 'ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ' என்றும், அறிந்து கொண்ட வெங்கண்ணா அன்றிலிருந்து, சதா சர்வ காலமும், அந்த மந்திரத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள், அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான, சித்தி மசூத் கான் என்ற சுல்தான், தனது படைகளுடன் அந்தப் பகுதிக்கு வந்தான். அப்போது, அவனது ஒற்றர் படையைச் சேர்ந்த ஒருவன், ஒரு ஓலையைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தான். ஓலையில் எழுதியிருந்தது பிரதேச மொழியாதலால், அதைப் படிக்க ஒரு ஆளைத் தேட, அவனது கண்ணில் வெங்கண்ணா தென்பட்டான்.
வெங்கண்ணாவிடம் ஓலையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னான். மசூத் கானின் தளபதி. தனக்குப் படிக்கத் தெரியாது... என்பதை எத்தனை தடவைகள் சொன்னாலும், புரிந்து கொள்ளாத அந்தத் தளபதியின் மிரட்டல்களுக்குப் பயந்து, அந்த ஓலையை வாங்கி, தனது மானஸீகமான சத்குருவை மனதில் நினைத்துக் கொண்டு, அந்த ஓலையைப் படிக்க ஆரம்பித்தான் வெங்கண்ணா. அவனது ஆச்சரியத்துக்கு இடையே, அவனால், அந்த ஓலையிலிருந்த செய்தியை, மசூத் கானுக்கு வாசித்தளிக்க முடிந்தது. வெங்கண்ணாவின் வாழ்வும் அந்தக் கணத்திலேயே மாறியும் விட்டது..
அவன படித்த செய்தி, மசூத் கானுக்கு மிகவும் உகந்த செய்தியாக அமைந்ததினால், ஆதோனி உட்பட்டப் பிரதேசம் முழுவதற்கும், வெங்கண்ணா திவானாக நியமிக்கப்பட்டான். மனதிலிருந்த கவலைகள் அனைத்தும் நீங்கி... தெளிவுடனும்... ஞானத்துடனும்... தன்னால் இயங்க முடிந்ததைக் கண்டு, தனது ஆதர்ஷ்ண சத்குருவின் மஹிமையை உணர்ந்து, ஆனந்தக் கண்ணீரில் மிதந்தார், திவானான வெங்கண்ணா.
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ... !
ஸாய்ராம்.


No comments:
Post a Comment