தனது இறுதிப் பயணமாக, கும்பகோணம் மடத்திலிருந்து கிளம்பிய, பகவான் ஸ்ரீ ராகவேந்திரர், மீண்டும் ஆதோனி கிராமம் வழியாக ஆந்திரப் பிரதேசத்தை வந்து அடைந்தார்.
தனது மானஸீகமான சத்குருவின் வருகையை கேள்விப் பட்டு, அவருக்கு பூரண கும்ப மரியாதையை அளிப்பதற்காக, ஆதோனி எல்லையிலேயே காத்திருந்தார், திவான் வெங்கண்ணா. அவரது மனதில், பழைய எண்ணங்களெல்லாம், நினைவலைகளாக ஒன்றன் பின் ஒன்றாக ஓடின.
ஏதும் அறியாத... வெகுளிச் சிறுவனாக... ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தன்னை, இந்தப் பிரதேசத்து திவானாக மாற்றிய தனது சத்குருவின் லீலைகளை எண்ணி வியந்தாவாறு ைருக்கும் போது, மகானின் வருகை நிகழ்ந்தது. அவரை, பூரண கும்ப மரியாதையோடு வரவேற்று, அவரின் திருவடிகளில் பணிந்து நமஸ்கரித்தார். 'சுவாமி, தங்களது திருவருளினால்தான், நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன். என்னை ஆசீர்வதியுங்கள், பிரபு...!' எனும் போது, பகவான், 'எல்லாம் ஸ்ரீ மூல இராமரின் அனுக்கிரகம்தான்... !' என்று பதிலளித்தார்.
வெங்கண்ணாவின் வேண்டுதலுக்கு ஏற்ப, ஆதோனி கிராமத்திலேயே சுவாமி தங்கி, மூல ராம பூஜைகள் செய்வதற்கு சம்மதித்தார். சுவாமிகளுக்கான அனைத்து வசதிகளையும் நிறைவாகச் அமைத்திருந்தார், வெங்கண்ணா. அனைத்தையும் முறைப்படுத்திவிட்டு, சுல்தான், சித்தி மசூத்கானைப் பார்ப்பதர்காக அரண்மனைக்குச் சென்றார்.
அதற்குள்ளாக, சுல்தானுக்கு, மகானின் வருகையைப் பற்றிய செய்தி சென்று சேர்ந்திருந்தது. வெங்கண்ணாவின் செயல் முறைகளையும், அவரது நிர்வாகத் திறமையயும், நன்கு அறிந்த சுல்தானுக்கு, இந்த மகானின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான பக்தியைப் பற்றி மட்டும் ஏற்புடமையில்லாமல் இருந்தது.
ஆனால், வெங்கண்ணாவோ, சுல்தானிடம், ' சுல்தான் அவர்களே, மகானின் வருகையினால், நமது பிரதேசம் முழுவதும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. நீங்களும் ஒரு முறை நேரில், வந்து மகானை தரிசிக்க வேண்டும்' என்றார். வெங்கண்ணாவின் பக்தியை மட்டுமல்ல, எப்போதும் அந்த மகானைப் பற்றியே பிரதாபித்துக் கொண்டிருக்கும், அவரது நம்பிக்கையையும் சோதித்துப் பார்க்க எண்ணினார், சுல்தான்.
'சரி, வெங்கண்ணா, இன்று மாலை நாம், உங்களுடனே வந்து, நீங்கள் எப்போதும் பிரதாபித்துக் கொண்டிருக்கும், உங்கள் மகானை தரிசிக்க வருகிறோம்' என்றார். அன்று மாலை, சொன்ன படியே, மாகானை தரிசிப்பதற்காக, ஸ்ரீ ராகவேந்திரப் பிரபு தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார் சுல்தான்.
வெங்கண்ணா மரியாதையுடன் உள்ளே சென்று, மகானின் திருவடிகளை வணங்கி நின்றார். அப்போதுதான், மூல இராம பூஜையை பூரணமாக்கி, கண்களை முடியபடி தியானத்தில் அமர்ந்திருந்தார் பகவான் ராகவேந்திரர். சித்தி மசூத் கான், தனது பணியாட்கள் கொண்டு வந்த தட்டுக்களை மகானின் முன்பாக வைத்தார். அனைவரும் முகம் சுளிக்கும் வண்ணம், அந்தத் தட்டுக்களில் மாமிசங்கள் நிறைந்திருந்தன. சிரித்துக் கொண்டே, அந்தத் தட்டுக்களை பட்டுத் துணி கொண்டு மூடச் செய்தார் சித்தி மசூத்கான்.
தியானத்திலிருந்து கண்களைத் திறந்த ராகவேந்திரர், வெங்கண்ணாவையும், சித்தி மசூத்கானையும் பார்த்தருளினார். சுல்தான் கொண்டு வந்திருக்கும் அன்பளிப்புகளை நினைத்து பயந்து கொண்டே, வெங்கண்ணா, 'சுவாமி, இவர்தான் இந்த பிரதேசத்தின் அதிபதியான சுல்தான், சித்தி மசூத் கான், இவர்தான் என்னை இந்தப் பிரதேசத்திற்கு திவானாக ஆக்கியவர்.. உங்கள் தரிசனத்திற்காகத்தான் இன்று அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறேன், பிரபு' என்றார்.
புன்னகைத்துக் கொண்டே, ஸ்ரீ ராகவேந்திரர், 'அப்படியானால், அவர், ஏன் அன்புடன் சமர்ப்பிதற்காகக் கொண்டு வந்த தட்டுக்களை மூடி வைத்திருக்கிறார், அவற்றை மூடியிருக்கும் துணிகளை விலக்கச் சொல், வெங்கண்ணா... !உன்னுடைய சுல்தான் கொண்டு வந்திருக்கும் அன்பளிப்புகளை அனைவரும் காணட்டும்.' என்றார்.
சுல்தானின் பணியாட்கள், அந்தத் தட்டுக்களை மூடியிருக்கும் பட்டுத் துணிகளை விலக்கினர். அனைவரின் ஆச்சரியத்துக்கும் இடையே, அந்தத் தட்டுக்கள் பூக்களாலும், பழங்களாலும் நிறைந்திருந்தன. இந்த அற்புதத்தை கண்களால் பார்த்த சுல்தான் உட்பட்ட அனைவரும், ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள்.
மகானின் காருண்யத்தைத் தனது கண்களாலேயேக் கண்டு, தனது தகாத செயலினால், மனம் குன்றிப் போன சித்தி மசூத்கான், தானாகவே, மகானின் திருப்பாதங்களில் பணிந்தார். 'சுவாமி, உங்களது மகிமைகளை அறிந்து கொள்ளாமல், நான் தவறு இழைத்து விட்டேன். என்னை மன்னித்தருளுங்கள் பிரபு'. என்றார்.
பகவானோ, 'நீங்கள் என்னைக் காண வந்த போது, உங்களது மனம் நீங்கள் கொண்டு வந்த பொருள்களைப் போலக் கடினமாக இருந்தது. எப்போது, உங்கள் மனதை ஸ்ரீ மூல இராமர் மாற்றினாரோ, அப்போதே, நீங்கள் கொண்டு வந்த பொருள்களின் தன்மையும் மாறிவிட்டது.' என்றார்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment