Tuesday, July 28, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 135. 'தசா, புத்தி, அந்தரம்;



ஒரு ஜீவனின் ஜாதக சித்திரம், அந்த ஜீவனின் இந்தப் பிறவிக்கான வாழ்க்கையை விவரிக்கும் ஒரு திறந்த புத்தகம். ஆனால், அதைப் படித்து புரிந்துகொள்ள, அந்தப் படைப்பவனின் அனுமதி தேவையாக இருக்கிறது.
ஏனெனில், அந்த ஜீவனின் வாழ்வில் மலரும் ஒவ்வொரு நிகழ்வையும், அந்த ஜீவனே அறியாமலிருக்குமாறு, மர்மமாக வைத்திருப்பதுதான், இறைவன் நடத்தும் நாடகம். 

இறைவனின் அனுமதியின்றி, அந்த ஜீவனின் வாழ்க்கை இரகசியத்தை, எவரும் அறியா வண்ணம்தான், இந்தப் படைப்பின் இரகசியம் வகுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு ஜோதிடன் என்ற 'தெய்வக்ஞயனுக்கு' மட்டுமே, இந்த வாழ்வின் இரகசியத்தை, தேவன் திறந்து காட்டுகிறார்... அதுவும் அந்த ஜீவனின் நல்வாழ்வு கருதி மட்டுமே. இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டுதான், ஒரு ஜீவனின் ஜாதகத்தை அணுகவேண்டும்.

ஒரு ஜாதகச் சித்திரத்தில், லக்னம் முதல் விரயம் வரையிலான 12 பாவங்களும்... லக்னதிற்கு சுபமாக அமையும் ஆதிபத்தியங்களான திரிகோணாதிபதிகள் என்ற லக்னம், பூர்வம் மற்றும் பாக்கிய ஸ்தானங்களும்... கேந்திராதிபதிகள் என்ற லக்னம், சுகம், களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தானங்களும்... பண பர ஸ்தானங்கள் என்ற தனம் மற்றும் லாப ஸ்தானங்களும்... மறைவு ஸ்தானங்களான தைர்யம், சத்ரு, ஆயுள் மற்றும் விரய ஸ்தானங்களும்... இவற்றில் அமையும் நவ கோள்களும்... அந்த நவ கோள்களை சூட்சுமமாக வழி நடத்தும் நட்சத்திரங்களும்... அந்த ஜீவனின் வாழ்க்கை இரகசியங்களை முழுவதுமாக வெளிப்படுத்துகின்றன.

ஆனால், அந்த வாழ்க்கை இரகசியங்களான 'கர்ம வினைக்ளின் விளைவுகள்', அந்த ஜீவனின் வாழ்வின் எந்தக் கட்டத்தில் நிகழப் போகிறது... ? என்பதை, அந்த ஜீவனின் 'கர்ப்ப செல் நீக்கி இருப்பு'... என்ற, நட்சத்திர நாயகனை சூட்சுமமாக இயக்கும், கிரகத்தின் தசா என்ற கால அளவும்... அதன் பிரிவான புத்தியும்... அதன் உட்பிரிவான அந்தரமும்தான் நிர்ணயம் செய்கின்றன. இதைத்தான் 'வாழ்வின் பாதை' (Direction of life) என்ற... தசா, புத்தி, இருப்பு வெளிப்படுத்துகிறது.

இந்த 'கர்ப்ப செல் நீக்கி இருப்பு' என்ற பதம் விளக்கும் சூட்சுமம்தான், 'கர்ம வினைகளின் விளைவு' என்ற ஜீவனின் பூர்வ புண்ணிய கர்மாவாகும். ஒவ்வொரு ஜீவனும் அதன் மொத்தக் கர்மாவின் தொகுப்பான 'சஞ்சித கர்மா'விலிருந்து, இந்தப் பிறவிக்கான 'பிராரப்தக் கர்மாவான' வினைத் தொகுப்பைச் சுமந்து கொண்டு வருகிறது. மேலும், இந்தப் பிறவியில் அது சேர்க்கும் வினைகளின் தொகுப்பான 'ஆகாமியக் கர்மாவையும்' சுமந்து கொண்டு, அடுத்தப் பிறவியை நோக்கி நகர்கிறது.

இந்தக் கர்மாக்களின் கால நிர்ணயங்களை, நிர்ணயிப்பதுதான் 'தசா, புத்தி, இருப்பு என்ற, 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பு...' என்ற ஜோதிடக் கலையின் சூட்சும அமைப்பு.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...