Monday, July 27, 2020

பகவத் கீதையின் ஒரு சுலோகத்திற்கு, பாபா அளித்த விஷேச விளக்கம்.



பாபாவின் அத்யந்த பகதர்களில் ஒருவரான, நானா சாஹேப் சந்தோர்க்கர்' என்ற நானா, சப் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணிபுரிந்து வந்தவர், ஒரு சமயம், அவர் துவாரகமாயியில், பாபாவின் பாதங்களைப் பிடித்து விட்டவாறு, கீதையின் சுலோகங்களை முணு முணுத்துக் கொண்டிருந்தார்.

கீதையில், 'ஞான கர்ம சன்யாச யோகம்' என்ற தலைப்பில், 4 ஆவது அத்தியாத்தின், 34 ஆவது சுலோகத்தை ஸ்மரிக்கும் போது, பாபா, 'நானா, நீர் என்ன முணுமுணுக்கிறீர் ?நீர் மெல்லிய குரலில் ஓதுவதைத் தெளிவாகவும் உரத்த குரலிலும் ஓதி என் காதுகளுக்குக் கேட்குமாறு செய்வீராக.' என்றார்.

அதற்கேற்ப, 'தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா I உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வதர்சினஹ II' என்ற சுலோகத்தை, நானா ஓதினார்.

இதற்கான விளக்கத்தை பாபா கேட்க, நானா, 'குருவின் பாதங்களில் பணிவுடன் நமஸ்காரம் செய்து அவருடைய சேவையில் வாழ்நாள் முழுவதையும் கழிக்கத் தயாராகி, மரியாதையுடன் அவரைக் கேள்விக் கேட்பவனுக்கு ஞானிகள் தத்துவ விளக்கத்தை அளிக்கின்றனர்' என்று விளக்கினார்.

சுற்றியிருந்த அனைவரும், நானா, பாபாவுக்கு கீதையை விளக்கியதாக நினைத்தனர். ஆனால், பிரம்மத்தை அறிந்தவர் சகலத்தையும் அறிந்தவராகிறார் என்பதும், சதா பிரம்மத்திலேயே ஒன்றியிருக்கும் இந்த மகா சத்குருவுக்கு பிரம்மம், அதன் ரகசியங்கள் அனைத்தையும், உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிப்படுத்திவிடும்... என்பதையும், இவர்கள் அறிந்திருக்க வில்லை.

பாபா, நானாவிடம் சில கேள்விகளை முன் வைத்த போதுதான், பாபாவின் அனைத்தும் அறியும் ஞானம் அனைவருக்குக் வெளிச்சமானது.

பாபா, நானாவிடம் கேட்ட கேள்விகள் ;

~ கிருஷ்ண பகவானே ஒரு குருவாக இருந்து அர்ஜுனனுக்கு, ஞானத்தை அருளியிருக்கலாமே... அவர் ஏன் அர்ஜுனனை  ஞானிகளிடம் அனுப்புகிறார்  ?

~ அதுவும், ஞானிகளிடன் சென்று, அவர்களை பணிவதையும், சேவை செய்வதையும், பணிவோடு அவர்களைக் கேட்டு ஞானத்தைப் பெறுவதையும். கிருஷ்ண பகவான் ஏன் வற்புருத்துகிறார்  ?

~ 'பரி' என்றாலும் 'ப்ரச்னா' என்றாலும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக கேள்விகளை எழுப்புவதுதான்... என்றால், வியாஸ மகிரிஷி ஏன் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும் இரண்டு சொற்களைப் பயன் படுத்தியிருக்கிறார்  ?'

~ சமஸ்கிருத மொழி பிரயோகத்தில், சில பிரத்தியோக வார்த்தைகளுக்கு முன் 'அ' என்ற எழுத்தைப் பிரயோகிப்பது வழக்கம். அது போல, இந்த சுலோகத்தில், 'ஞானம்' என்ற சொல்லுக்கு முன்னால், 'அ' என்ற எழுத்தைச் சேர்த்து, 'அஞ்ஞானம்' என்ற சொல்லைப் பிரயோகித்தால், அந்த சுலோகத்தின் உண்மையான அர்த்தம் எவ்வாறு வெளிப்படுகிறது...  என்பதை அறிவாயா ?

இந்த அடுக்கடுக்கான கேள்விகள், நானாவை மட்டுமல்ல, அங்கு குழுமியிருந்த அனைவரையுமே, ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அனைவரது கவனமும், நானாவின் பக்கம் திரும்பியது. நானாவோ, பாபாவின் பாதங்களைப் பிடித்தவறே, 'பாபா, இது மாதிரியான அர்த்த வெளிப்பாடுகளுடன், நான் இதுவரை கீதையைப் படித்ததில்லை... !' என்று பணிவுடன் கூறினார்.

புன்னகைத்தவாறே, பாபா பதிலளிக்கத் துவங்கினார்.

'~ அனுபவித்து அறியாத எது ஒன்றும், வெறும் ஏட்டுச் சுரைக்காயகத்தான் இருக்கும். அனுபவித்து அறியும் போதுதான் அதன் அனுபவம் கைகூடும். அது போல, ஞானத்தை, வெறும் அறிவாக அல்ல, அதன் சோரூபமாகவே இருந்து அனுபவிக்கும், மகான்களிடமிருந்து பெறுவதே உத்தமமாக இருக்கும்.

அதனால்தான் பகவான், அர்ஜுனனை ஞானிகளிடம் அனுப்புகிறார்.

~ அவர்களிடம் சென்று பணிவதையும், சேவை செய்வதையும், வெறும் சடங்காகக் கொள்ளாமல், ஆத்மார்த்த அன்போடு செய்யும் போதுதான், அவர்களின் மனம் கனிந்து, அன்பாகி, ஞானத்தின் வாசல்களை நமக்குத் திறந்து விடுவார்கள்.

~ கேள்வி கேட்பது என்பது வெறும் அறிவுத் தேடல் கொண்ட சடங்காக இருந்து விடக் கூடாது. நான் அறிந்தவன்... என்ற அகங்கார நிலையில் இல்லாமல், அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்பதாக இருக்க வேண்டும்.

~ ஞானம் என்பது அடைய வேண்டிய வஸ்து அல்ல. ஜீவன், ஏற்கனவே ஞான சொரூபியாகத்தான் இருக்கிறது. ஜீவன் அறிந்து கொள்ள வேண்டியது ஞானத்தை அல்ல. அஞ்ஞாத்தைத்தான் அது அறிந்து கொள்ள வேண்டும். 

எது அஞ்ஞானம் என்று அறிந்து கொள்ளும் போது, அந்த அஞ்ஞானம் நீங்கி, ஞானம் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறது.

நீரை, பாசி மூடியிருக்கிறது. அந்தப் பாசியை நீக்கும் போது, நீர் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிறது.

அது போலத்தான், அஞ்ஞானம் நீக்கப் படும் பொது, ஞானம் சுயமாக வெளிப்படுகிறது.'

இந்த விளக்கங்கள், பாபாவின் திருமுகத்திலிருந்து வெளிப்பட்ட போதுதான், மறை பொருளாக பகவான் உதிர்த்த கீதையின் உள்ளர்த்தங்கள், ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படத் துவங்கின.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...