12 ஆம் நூற்றாண்டில், கன்னட தேசத்தில் வாழ்ந்த ஒரு யோகியர்தான் 'அல்லமா பிரபு'. கோவிலில் திருப்பணிகள் செய்யும் குடும்பத்தில் பிறந்து, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, யோகசாதனைகளில் மூழ்கி, 'சதானந்த முக்தராக' வலம் வந்தவர்தான் அல்லமா பிரபு.
அவரளிக்கும் எண்ணற்ற அற்புத அனுபவங்கள்... இன்றும் ஆன்மீக அன்பர்களின் வாழ்வில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. அவர் 'சகுண சாஸ்த்திரத்திலும்' வல்லவர். அவரிடம் பயிலுவதற்கும்... ஆன்மீக சாதனைகளில் பயிற்சி பெறுவதற்குமென... எண்ணற்ற சிஷ்யர்கள், அவரை நாடி வந்த வண்ணம் இருந்தனர்.
ஒரு நாள், அவரின் குருகுலத்தை நோக்கி, ஒரு பெரியவரும், அவரின் மகளும் வந்திருந்தனர். பெரியவர், 'சுவாமி, இவள் எனது மகள். இவளின் கணவர் விட்டினர், சில அற்பக் காரணங்களையெல்லாம் கூறி, இவளை அழைத்து வந்து விட்டு விட்டுச் சென்று விட்டனர். இவளது கணவர் மிகவும் அன்பானவர்தான். அவருடன் இணைந்து வாழும் வாய்ப்பு எனது மகளுக்குக் கிடைக்குமா... ?' என்று கேட்டார்.
அவர் கேட்ட நேரத்தில், அருகிலுள்ள கிணற்றில், மாணவன் ஒருவன், நீர் இறைத்துக் கொண்டிருந்தான். அவர், கேள்வி கேட்டு முடித்த கணம், மேலே வந்து கொண்டிருந்த நீர்க்குடம், கயறு அறுந்ததால், மீண்டும் கிணற்றுக்குள்ளே , 'பொத்தென்று' விழுந்ததது. இந்த சப்தத்தைக் கேட்டு, அனைவரும் கிணற்றை நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்பினர்.
சலனமில்லாமல், இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அல்லமாப் பிரபு, மாணாக்கர்களிடம், 'இப்போது இந்தப் பெரியவர் கேட்ட கேள்வியையும்... நிகழ்ந்த சகுணத்தையும்... கவனித்திருப்பீர்கள். இந்த சகுணத்தை முலமாக வைத்து... இந்தப் பெரியவரின் கேள்விக்கு பதிலளியுங்கள்... !'என்றார்.
மாணாக்கர்கள், ஒவ்வொருவராக எழுந்து அளித்த பதில்கள் அனைத்தும் ஏறத்தாள ஒரே மாதிரியாகவே அமைந்தன. அது, 'எப்போது, அந்த கயறு அறுந்து, அந்த குடம் தண்ணீரிலேயே விழுந்து மூழ்கி விட்டதோ, அப்போதே இவர்களுக்கு இடையேயான பந்தமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இனித் தொடர வாய்ப்பில்லை' என்பதுதான்.
ஆனால், ஒரே ஒரு மாணக்கனின் பதில் மட்டும் அனைவரது கணிப்பிலிருந்தும் மாறியிருந்தது. அது, 'சுவாமி. இந்தத் தம்பதிகள் இருவரும் மீண்டும் இணைந்து விடுவர்.' என்பதுதான். அல்லமாப் பிரபு, அந்த மாணாக்கனிடம், 'எப்படிஅது நிகழும் என்பதை, இந்தச் சகுணத்தின் வாயிலாக விளக்குவாயா... ?' என்று கேட்க... பணிவுடன், அந்த மாணாக்கன், 'சுவாமி, குடம், கிணற்று நீரைத் தனியாக பிரித்து எடுத்துக் கொண்டு வந்தது... இந்தக் கேள்வி பிறந்த வேளையில்... அந்தக் குடத்து நீர், மீண்டும் கிணற்றிலேயே சென்று சேர்ந்து விட்டது. அதனால்தான், இவ்விருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று சொன்னேன்' என்றான்.
அல்லமாப் பிரபுவும், அந்தப் பெரியவரிடம், 'தைர்யமாகச் சென்று வாருங்கள். உங்கள் பெண், அவளது கணவருடன் இணைந்து விடுவாள்... !' என்று கூறி அனுப்பிவைத்தார்.
ஒரு சில நாட்களுக்குள், அந்தப் பெரியவர், தனது மகள் மற்றும் மருமகனுடன், பழங்கள், பூக்கள் மற்றும் தக்ஷணையுடன் வந்து, அல்லமாப் பிரபுவின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள். அவர்களை ஆசிர்வதித்து அனுப்பிய அல்லமாப் பிரபு, மாணவர்களை நோக்கி, 'உங்களனைவரது கவனமும் அறுந்த கயிற்றில் இருந்தது. இவனது கவனமோ, குடத்தில் இருந்த நீரின் மீது இருந்தது. சகுணங்களைக் கவனிக்கும் போது, உங்களது கவனம், இயற்கையுடன் ஒன்றியிருப்பதும்... இயற்கைக்கு ஒவ்வாதவற்றிலிருந்து தள்ளியிருப்பது... முக்கியமானது... !' என்ற அனுபவப் பாடத்தை அளித்தார்.
அல்லமா பிரபுவின் திருப்பாதங்களுக்குச் சமர்ப்பணம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment