நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல் வழக்கு... 'நீங்க மனது வைத்தால், இந்த காரியம் நடந்து விடும்... !' என்று சொல்வது.
நாம், ஒரு காரியமாக நாமறிந்த ஒருவரிடம் செல்லும் போது, அவரிடம் நாம் சொல்லும் இறுதி வாசகம் இதுவாகத்தான் இருக்கும். எங்களது குருநாதரிடம் நாங்கள் சத்சங்கத்திலிருந்த போது, இந்த வாசகத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. இதை எங்களுக்கு ஒரு சிறு கதை மூலம் அவர் விளக்கினார்.
'ஒரு புலவன், அவன் அந்த நாட்டு ராஜாவுடன் ஒரே குருகுலத்தில் படித்தவன். அன்றைய மாணவனாக இருந்த இளவரசன், இன்று தேசத்திற்கு ராஜாவாகி விட்டான். இவனோ, இறைவனைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றி, அவற்றை, ஆலயத்தில் உறையும் இறைவனுக்குச் சமர்ப்பித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
இறைவனைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாடுவதில்லை என்ற சங்கல்பத்திலிருந்த புலவனை, வறுமை வாட்ட ஆரம்பித்தது. புலவனின் துணைவி, 'நமது ராஜா உங்களது நண்பர்தானே. அவரைச் சென்று பார்த்தால்... அவர் மனது வைத்தால்... நமது வறுமைக்கு ஒரு வழி பிறக்கலாம்.' என்று கூறினாள்.
வெகு நேர யோஜனைக்குப் பின், மனைவியின் சொற்படியே, ராஜாவைப் பார்க்கப் புறப்பட்டான். அரண்மனையை அடைந்து, ராஜாவைப் பார்க்க வரிசையில் நின்றான். தூரத்திலிருந்தே இவனைப் பார்த்து விட்ட ராஜா, பழைய பழக்கத்தை மறந்து விடாமல், மந்திரியை விட்டு இவனை அருகில் அழைத்தான். வெகு நாட்களுக்குப் பின் பார்க்கும் தனது குருகுலத் தோழனை அன்புடன் விசாரித்து விட்டு, 'எப்போதும் இறைவனைப் பற்றிய ஸ்துதிகளையே, இயற்றிப் பாடுவாய், என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது, ஏதாவது புதிய கீர்த்தனைகளை இயற்றியிருந்தால் அதைப் பாடினால், அனைவரும் கேட்கலாம்' என்று கூறினான்.
தான வந்த வேலை சுலபமாக அரங்கேறுவதைக் கண்டு மகிழ்ந்து, தான் புதிதாக இயற்றியிருந்த ஒரு கீர்த்தனையைப் பாடினான் புலவன். அரண்மனையில் இருந்த அனைவரும் அதைக் கேட்டு மகிழ்ந்ததற்குப் பின், ராஜா, மந்திரியைப் பார்த்து, 'புலவரை நீங்களே அழைத்துச் சென்று, கஜானா அறையில் புலவர் என்ன விரும்புகிறாரோ, அவற்றுடன், புலவரை அவரது வீட்டில் கொண்டு விட்டு விட்டு வாருங்கள்' என்று பணித்தான்.
மந்திரியுடன், கஜானா அறைக்குச் சென்ற புலவன், தர்ம சங்கடத்தில் நெழிய ஆரம்பித்தான். காரணம் கஜானா அறை முழுவதும் பொக்கிஷங்களால் நிறைந்திருந்தது. அதில், எதை எடுப்பது என்பதில் சிக்கல் எழுந்தது. கண்ணுக்குத் தென்படும் பொக்கிஷத்தை எடுத்தால், கூட வந்திருக்கும் மந்திரிக்கு அது தெரிந்து விடும். அதனால், ராஜாவுடனான நட்பு கொச்சைப் படுத்தப்படும்.
ஆகவே, கஜானாவின் மூலையில் இருந்த, ஒரு மூடிய மரப் பெட்டியைச் சுட்டிக் காட்ட, மகிழ்வுடன் மந்திரி அந்தப் பெட்டியுடன் புலவனையும் கொண்டு வந்து, புலவனின் வீட்டிலே சேர்த்தார். மந்திரி பிரதானிகள் சென்றவுடன், வீட்டின் கதைவைச் சாத்தி விட்டு, மனைவியுடன் இணைந்து, அந்த மரப் பெட்டியைத் திறந்து பார்த்த புலவனுக்கு, அதிர்ச்சிதான் காத்திருந்தது. காரணம், அந்த மரப்பெட்டி முழுவதும் 'வெடி உப்பு' நிறைந்திருந்தது.
தலையில் கை வைத்தபடி உட்கார்ந்த புலவன், 'சாதாரண உப்பாக இருந்தால் சமையலுக்காவது உபயோகப்படும். ஆனால், இந்த வெடி உப்பு எதற்கும் உபயோகமில்லாமல் ஆகிவிட்டதே.. !' என்று புலம்பினான்.'
இந்தக் கதையைக் கூறிய குருநாதர், 'பார்த்தாயா அப்பா, மனசு வைக்கணும்னு சொன்னீயே... அந்த ராஜா மனசு வைத்திருந்தால், புலவன் பாடி முடித்தவுடனேயே, தனக்கு அருகிலிருக்கும் தட்டிலிருந்து ஒரு 'பொன் முடிப்பைக்' கொடுத்திருக்கலாம். புலவனின் வறுமை முழுவதும் தீர்ந்திருக்கும்,' என்றார்.
குருநாதரின் திருவடிகளுக்கு சமர்ப்பணம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment