Thursday, July 2, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 131. 'பகவான் ஸ்ரீ இராமபிரானது ஜாதகத்தில், குரு பகவானின் அமைவு'




இறைவனே, ஒரு மனித ரூபமாய் அவதரிக்கும் போது, அந்த அவதாரமும் ஒரு உடல் கூட்டுக்குள் கட்டுப்பட்டுப் போகிறது.ஆனால், இந்தப் பரம்பொருளை, ஒரு உடல் கூட்டுக்குள் கட்டி வைக்க முடியுமா... ?

காரண காரியங்களுக்காக ஒரு அவதாரம் நிகழ்கிறது. அந்த அவதார ரகசியத்தை, அந்த அவதாரமே வெளிப்படுத்தாத போது, யாரால்தான் அந்த அவதாரத்தின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும்... ?

ஆனால், 'பகவான் இராமபிரானது' அவதாரத்தை... அவதாரமாக அல்ல, இறை சொரூபமாகவே, உணர்ந்து கொண்ட... அன்பு வைத்த...  ஆத்மார்த்தமான பக்தர்களால் நிறைந்த காப்பியமாகவே, 'இராமகாதையைப்' படைத்திருக்கிறார் வால்மீகி மகிரிஷி. 

ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்த தன்னை 'ராம' நாமத்தினால், ஒரு மகிரிஷியாக மாற்றிய 'நாரத மகிரிஷியிடம்', வால்மீகி கேட்ட கேள்வி, 'இந்த பூலோகத்தில், மகிமைகள் நிறைந்த... மிகச் சிறந்த குணங்களுடன் கூடிய... ஒரு அவதாரத்திற்கு நிகரான... மனிதரை எங்கும் காண முடியுமா... ?' என்பதுதான்.

அதற்காகக் காத்திருந்தது போல, நாரத மகிரிஷி, 'உங்களது வாழ்வையே மாற்றிய 'ராம' என்ற  நாமத்துக்கு உரிய, ஸ்ரீ இராம பிரானது வாழ்க்கையே, உங்கள் கேள்விக்கான பதில்' என்று, பகவானது அவதாரக் கதையை வால்மீகிக்கு அருளினார்.

வால்மீகிக்கு அருளப்பட்ட வகையில், அவர், பகவான் இராமரது அவதாரத்தின் போது, நவக் கிரகங்கள் நின்ற நிலைகளைத் தமது இராம காப்பியத்தில் வடித்திருக்கிறார். அதையே 'கம்ப நாட்டாழ்வாரும்' வழி மொழிந்திருக்கிறார். அந்தக் குறிப்புகளுடன் கூடிய ஜாதகத்தில், 'இறைவனே' ஒரு அவதார புருஷராக அவதரித்தாலும். அவரும் 'ஒரு குருவின் அருளுடன்தான்' இறைவனை அடைய வேண்டும்... என்ற சூட்சுமத்தை... உணர்த்தியிருக்கிறார்.

அதை, அவரது வாழ்வில், குருகுலத்தின் கல்வி கற்பதன் மூலமும்... 'விஸ்வாமிதிர மகிரிஷியை' குருவாக ஏற்றுக் கொண்டு, அவர் வழிகாட்டுதலின் படி வாழ்வை கடந்து போவதன் மூலமும்... வாழ்ந்து காட்டியிருக்கிறார்... 'பகவான்  ஸ்ரீ இராமபிரான்'.

அதைத்தான், பூஜைக்குறிய... அவரது ஜாதக அமைவிலும் காணமுடிகிறது.

1. 'கடக லக்னத்தில்' அவதரித்த பகவானது ஜாதகத்தில், 'குரு பகவான்' தர்மம் என்ற '9 ஆம் பாவத்திற்கு' அதிபதியாகிறார். 'அந்த தர்மமே உருவானவர்தான் இவர்'... என்பதை உணர்த்தும் வண்ணமாக, லக்னத்திலேயே 'உச்ச பலத்தைப்' பெறுகிறார்.

2. 'லக்னாதிபதியாகவும்... இராசியாதிபதியாகவும்'... அமைந்திருக்கிற 'சந்திர பகவானை' (1 ஆம் பாவம்) இந்த 'குரு பகவான்' தனது நட்சத்திர சாரத்தால் இயக்குவது மட்டுமல்ல... அவருடன் இணைந்து... 'ஒரு சொல்... ஒரு வில்... ஒரு இல்...' என்பதாக,,,'எண்ணம், சொல், செயல்' என்ற மூன்றையும் ஒரு நேர் கோட்டில் கொண்டு வந்து... 'உள்ளும், புறமும்' ஒரே நிலையில் வாழும் மனிதர் இவர், என்ற சத்தியத்தை உணர்த்துகிறார்.

3. கடக லக்னத்திற்கு... பூர்வம் மற்றும் கர்மம் என்ற ஜீவன ஸ்தானங்களுக்கு (5 மற்றும் 10 ஆம் பாவங்கள்) அதிபதியாகி, 'உச்ச பலம்' பெற்ற 'செவ்வாய் பகவானை'... தனது '7 ஆம் பார்வையாகக்' கடாக்ஷித்து அருள்கிறார் 'குரு பகவான்'

இவ்வாறாக, லக்னம் (1 ஆம் பாவம்), பூர்வம் (5 ஆம் பாவம்), தர்மம் என்ற பாக்கியம் (9 ஆம் பாவம்) என்ற 'திரி கோணாதிகளின்' சங்கமத்தை... பூர்த்தி செய்கிறார்... 'குரு பகவான்'.

4. தனம்-வாக்கு-குடும்பம் என்ற 2 ஆம் பாவாதிபதியாகிய 'சூரிய பகவான்' 'கர்மம் என்ற ஜீவன ஸ்தானத்தில், உச்ச பலம் பெற்று அமைந்து... அவரமைந்த வீட்டதிபதியான 'செவ்வாய் பகவானை' தனது பார்வை பலத்துக்குள் 'குரு பகவான்'... வைத்திருக்கிறார். 

இதனால், தான் பிறந்த குடும்பமோ அல்லது தனக்கு அமைந்த குடும்பமோ... தனது கடமைக்கு, இடையே வராமலும், ஒரு தடையாக வராமலும்... தர்ம-கர்மத்திற்கு உட்பட்டுத் தனது வாழ்வின் கடமைகளைப் பூரணமாக்கியிருக்கிறார்.

5. தைர்யம் - வீர்யம் - பராக்கிரமம் என்ற '3 ஆம் பாவத்திற்கும்'... 'சுகம் - சயனம் - விரயம் - முற்பிறப்பு' என்ற '12 ஆம் பாவத்திற்கும்'... அதிபதியான 'புத பகவானை' 'தர்மம் என்ற பாக்கிய ஸ்தானமான' தனது வீட்டில்... 'நீச நிலையில்' பலமிழக்க வைத்து... தனது 'உச்ச கதி' பலத்தால் 'நீச பங்கம்' என்ற மிக வலிமையான நிலையை 'குரு பகவான்' அளித்திருக்கிறார்.

இந்த அமைவு... தனது வீர தீர பராக்கிரமங்களை... 'தர்மத்துடன் கூடிய கர்மமாக' அணுகியிருப்பதை ஊர்ஜிதமாக்குகிறது.

6. சுகம் (4 ஆம் பாவம்) மற்றும் லாபம் என்ற புற - அக விருத்தி (11 அம் பாவம்) ஸ்தானங்களுக்கு அதிபதியாகி... 'உச்ச பலம்' பெற்று வலுத்த 'சுக்கிர பகவானையும்' தனது 'தர்மம் என்ற பாக்கிய ஸ்தானத்தில்' அமர வைத்து, அவரையும் 'குரு பகவான்' தனது 9 ஆம் பார்வையாகப் பார்த்து அருள்கிறார்.

இந்த அமைவினால், தனக்கு அமைந்த சுக - பாக்கியங்களையும்... துன்ப நிலைகளையும்... ஒரே சம நிலையில் எதிர் கொள்பவராகவும், இன்பம் - துன்பம்... என்ற இரண்டு நிலைகளையும் புற விருத்தியின் பக்கமிருந்து திருப்பி அக விருத்திக்கு மூலமாக்குகிறார்.

7. 'களத்திரம் மற்றும் துணை, இணை' என்ற ஸ்தானத்திற்கும் (7 ஆம் பாவம்), ஆயுள், மறை பொருள் ஸ்தானத்திற்கும் (8 ஆம் பாவம்) அதிபதியாகிற 'சனி பகவான்' உச்ச பலம் பெற்று, சுக ஸ்தானமான '4 ஆம் பாவத்தில்' அமர்வது... இவருக்கு அமைந்த துணையும்... இணை என்ற நட்பும்... எவ்வளவு உறுதியுடன் அமைந்தது என்பதை, இவரின் வாழ்வின் வழியாகவே அறிந்து கொள்ளலாம்.

இவருக்கு வீடளித்த 'சுக்கிர பகவானை' தனது கட்டுக்குள் வைத்திருக்கும் 'குரு பகவான்'... 'சனி பகவானை' தனது சூட்சுமமான  வழி நடத்தி... 'தன்னை நம்பி வந்தவர்களை மிகவும் அன்புடன் காத்து இரட்சிப்பதை' உறுதி செய்கிறார்.

8. 'ருண - ரோக - சத்ரு ஸ்தானத்தில்' அமர்ந்திருக்கும் 'ராகு பகவானை' தனது வீட்டிலேயே வைத்திருக்கும் 'குரு பகவான்' சத்ருக்களை வெல்வது மட்டுமல்ல... தன்னை 'சரணாகதி' அடைபவர்களுக்கும் 'கதி மோக்ஷம்' அளிப்பவராக, இவர் இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

9. 'சுகம் - சயனம் - விரயம் - முற்பிறப்பு'... என்ற '12 ஆம் பாவத்தில்' அமர்ந்திருக்கும் 'கேது பகவான்'... அவரமர்ந்திருக்கும் ஸ்தானாதிபதியான 'புத பகவானின்' நிச நிலையினாலும், அவரமர்ந்த வீடு 'குரு பகவானது' வீடாகவும், 'குரு பகவானது' 9 ஆம் பார்வையையும் பெற்று, நீச பங்கம் அடைவதாலும்... 

இந்தப் பிறப்பிற்கான, எவ்வித 'கர்ம வினைகள்' இன்றியும்... வரும் பிறப்புகளுக்கான எந்த 'கர்ம வினையும்' இன்றியும்... இந்த ஜீவனது வாழ்வு அமையும்... என்பதை சூட்சுமமாக விளக்குகிறார்கள். 'கேது பகவானின்' இந்த அமைவே, இந்த ஜாதகம் ஒரு 'இறை அவதார ஜாதகம்' என்பதை உறுதி செய்கிறது.

இதுதான், 'குரு பகவான்' என்ற நவக்கிரக நாயகன் நடத்தும்... குரு அருள் கூடிய அமைவு.

ஸாய்ராம்.

(இதைக் காணொளியாக, கீழ்க் கண்ட இணைப்பில் கண்டு மகிழலாம்)

https://youtu.be/f4aeRGvb2yk

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...