Wednesday, July 1, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 130. 'ஒரு மஹா சத்குருவின் ஜாதகத்தில், குரு பகவானின் அமைவு'



'நதி மூலம்... ரிஷி மூலம்... பார்க்கக் கூடாது.'... என்பது, ஒரு நியதி. காரணம், 'கண்ணில் காண்பது மட்டுமே, மெய்...' என்ற, சாதாரண அறிவுக்கு, சத்தியம் என்ற உண்மைப் பொருள்... எப்போதும், எட்டாக் கனியாக இருப்பதனால்தான்.

உதாரணமாக, ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான அகலத்தில் ஓடும் 'அகண்ட காவேரி நதி'..., பொங்கிப் பிரவாகமாக ஓடுவதைக் காணும் சாதரணக் கண்கள், அதன் உற்பத்தி ஸ்தானமான குடகு மலையின், 4400 அடி உயரத்தில், தலைக் காவேரியின் ஒரு சிறு ஊற்றிலிருந்துதான் உற்பத்தியாகிறது... என்ற உண்மையைக் கண்களால் கண்டாலும்... உடனடியாக ஜீரணித்துக் கொள்ள முடியாது.

அது போலத்தான், ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள் போன்றோரின் வாழ்க்கையும். நாம் கண்களினால் பார்க்கும் அவர்களின் வாழ்வும்... அவர்களின் வாழ்விற்கான மூலமும்... நமது சிற்றறிவுக்கு எட்டாத வகையில்தான் இருக்கும். 

அவர்களின் அவதாரங்களும் அவ்வாறேதான் நிகழ்கின்றன. அவர்களின் பிறப்பு, பல நேரங்களில் மிக சூட்சுமமாக அமைந்து விடுகிறது. சில நேரங்களில், காரண, காரியங்களுக்காக... தாய், தந்தை, குடும்பம் என்ற ஒரு குடும்ப அமைவிற்குள்ளும் அமைந்து விடுகிறது. அப்போது, அவர்களுக்கான 'ஒரு ஜாதக அமைவும்' ஏற்பட்டு விடுகிறது. ஒரு சாதாரன மனிதர்களைப் போல ஆரம்பிக்கும் அவர்களது வாழ்வு, ஒரு குறிப்பிட்ட காலத்தில், பரம்பொருளால் ஆகர்ஷிக்கப்பட்ட வாழ்வாக மலர்ந்து விடுகிறது. 

எப்போது, அந்த ஆகர்ஷணம் நிகழ்கிறதோ, அப்போதே அவர்களது, இந்த மானுடப் பிறப்புக்கான 'ஜாதகத்தின் வழியேயான கணிப்புகளும்' ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது. அந்த க்ஷணத்திலிருந்து அவர்கள் எடுத்திருப்பது 'ஒரு புதுப் பிறவி'. அது 'தெய்வப் பிறவி'. ஜனன காலத்தில் கணிக்கப்பட்ட ஜாதகத்தின் பணி, அந்த 'ஜீவனின் கடைத் தேற்றம்' என்ற 'தெய்வத்திற்குள் ஒன்றுதல்' வரைதான் செய்லபடும். அதற்குப் பின் தொடரும் வாழ்க்கைக்கு, ஜனன ஜாதகத்தின் வழியேயான பலன்கள் பொருந்தி வராது.

ஆனாலும், அந்த மகான்களின் ஜனன ஜாதகம்... ஒரு மகா அவதாரத்தின் மூலமாக... இருப்பதால், அது வணங்குவதற்கும், பூஜிப்பதற்கும், தெய்வாம்சமான ஆய்வுக்கும்... உட்பட்டதாக இருக்கும். அவ்வாறு அமைந்ததே, 'மகா பெரியவர்' என்று எல்லோராலும் அழைக்கப்படும், நடமாடும் தெய்வமான 'காஞ்சிப் பெரியவர், 'ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி' அவர்களின் ஜனன ஜாதகம்.

இந்த ஆய்வின் நோக்கமே, 'குரு பகவான்' என்ற நவக்கிர நாயகனின் ஆளுமை, எவ்வாறு ஒரு 'சத்குருவின்' ஜனன கால ஜாதகத்தில் அமைந்திருக்கிறது... என்ற அற்புதத்தை உணர்வதற்கே.

1. சிம்ம ராசிவீட்டை, லக்னமாகக் கொண்டு பிறந்தவருக்கு, 'குரு பகவான்' பூர்வ புண்ணியாதிபதியாகிறார் (5 ஆம் பாவம்).

2. அவர், லக்னாதிபதியாகிய 'சூரிய பகவானுடன்' (1 ஆம் பாவம்), 'கர்மம்' என்ற ஜீவன ஸ்தானத்தில் (10 ஆம் பாவம்) இணைந்து, தனது கடமைகள் அனைத்தையும், இந்தப் பிறவியிலேயே பூர்த்தி செய்யும் வண்ணம் அமைந்திருக்கிறார்.

3. சிம்ம லக்னத்திற்கு, 'சுகம் - பாக்கியம்' (4 மற்றும் 9 ஆம் பாவங்கள்) என்ற இரண்டு ஸ்தானங்களுக்கு மட்டுமல்ல... 'தர்மம்' என்ற உயரிய ஸ்தானத்திற்கு அதிபதியாகிய 'செவ்வாய் பகவான்'... ருண-ரோக-சத்ரு என்ற 6 ம் பாவத்தில், உச்ச பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். இந்தத் திரிகோணாதிபதியை, லக்னாதிபதியுடன் இணைந்து, 'குரு பகவான்' தனது 9 ஆம் பார்வையாக பார்க்கிறார். இந்தத் 'திரிகோணாதிபதிகளின்' சங்கமத்தை... 'குரு பகவான்', தனது அருள் பார்வையால் பூர்த்தி செய்கிறார்.

4. அவருக்கு வீடளித்த 'சனி பகவான்' (6 மற்றும் 7 அம் பாவங்கள்)... தனம்-வாக்கு-குடும்ப அமைவு என்ற 2 ஆம் பாவத்தில்... 'வர்க்கோத்துமம்' பெற்று வலுத்து அமர்ந்திருக்கிறார். அவருடன் மோக்ஷக் காரகரான 'கேது பகவான்' இணைந்திருக்கிறார். இந்த அமைவை, 'கர்மம்' என்ற உயரிய ஸ்தானத்தில், அமர்ந்திருக்கிற ''குரு பகவான்'... இந்த அமைவுக்கு இடமளித்த, தனம்-வாக்கு-குடும்பம்-லாப (2 மற்றும் 11 ஆம் பாவங்கள்) ஸ்தானங்களுக்கு அதிபதியாகிற 'புத பகவானுடன்' இணைந்து, தனது 5 ஆம் பார்வையாகப் பார்க்கிறார்.

5. 'கர்மம்' என்ற உயரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிற 'குரு பகவான்'... அந்த வீட்டதிபதியாகிய 'தைர்ய-வீர்ய-ஜீவன-கர்ம' ஸ்தானங்களுக்கு அதிபதியாகிற (3 மற்றும் 10 ஆம் பாவங்கள்) 'சுக்கிர பகவானின்' வீட்டில் அமர்ந்தது மட்டுமல்ல... அவரை தனது வீட்டில் (8 ஆம் பாவம்), போகக் காரகனாக 'ராகு பகவானுடன்' இணைத்து... சுக-போகங்களை' அந்த ஸ்தானத்தில் புதைத்து... அந்த ஸ்தானத்துடன் 'பரிவர்த்தனை' செய்து... ஜீவனை, அதன் இக லோக சுகங்கள் அனைத்திலிருந்தும் விடுவித்திருக்கிறார்.

6. 'சுகம்-சயனம்-விரயம்-முற்பிறப்பு' என்ற 12 ஆம் பாவத்திற்கு அதிபதியாகிற 'சந்திர பகவான்' இந்த பிறவிக்கான உலக வாழ்வை மட்டுமல்ல... மனம் என்ற  வினைகளின் எண்ணங்களின் உற்பத்திக்கும்... உரியவராகிறார். அவர், 4 ஆம் பாவம் என்ற 'சுக ஸ்தானத்தில்' தனது பலத்தை இழந்து 'நீசம்' பெற்றிருப்பது... இந்தப் பிறவியே இறுதியானது... என்பதை உறுதி செய்கிறது. 

அது மட்டுமல்ல, அந்த வீட்டதிபதியான 'செவ்வாய் பகவான்' 'ருண-ரோக-சத்ரு' ஸ்தானத்தில் 'உச்ச பலம்' பெற்று, 'சந்திர பகவானுக்கு' நீச பங்கம் என்ற பலத்தை அருள்கிறார். இவ்வாறு அமைந்திருக்கிற 'சந்திர பகவானையும்', 'செவ்வாய் பகவானையும்'... கர்ம ஸ்தானத்திலிருந்து 'குரு பகவான்' தனது 7 மற்றும் 9 ஆம் பார்வையாக பார்த்து அருள்கிறார். அதனால், இந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகள்' வெளிப்படுத்தும் 'விளைவுகளிலிருந்து' இந்த ஜீவனை... முற்றிலுமாக விடுவித்து விடுகிறார்.

7. இவ்வாறு, இராசியில் தனது ஆளுமையை நடத்திக் காட்டிய 'குரு பகவான்' அம்ஸத்திலும், பூர்வ புண்ணியாதிபதியாகி, ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்து... இந்த ஜீவனின் வாழ்வைப் பூரணமாக்குகிறார்.

இதுதான், 'குரு பகவான்' என்ற நவக்கிரக் நாயகனின் அமைவு நடத்தும்... அருள் நாடகம்.

இந்த ஆய்வை, 'காஞ்சி மகானின்' திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன். 

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர... !

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...