Saturday, July 4, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 132. 'பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரது ஜாதகத்தில், காளி மாதாவின்' பூரண அருளை வெளிப்படுத்தும் 'ராகு பகவான்'




மேற்கு வங்கத்தின், காமார்புகூர் என்ற சிற்றூரில், க்ஷூதிராம், சந்திரமணி தேவி தம்பதிகளின், நான்காவது குழந்தையாகப் பிறந்த 'கதாதர சட்டோபாத்யாயர்' என்ற குழந்தையை... 

தட்சிணேஸ்வரத்தில், மீனவ குலத்தில் பிறந்து, தேசத்து ராணியான... 'ராசாமணியார்', எழுப்பியுள்ள 'காளி கோவிலில்' எழுந்தருளியுள்ள 'பவதாரிணித் தாயாரே'... ஈர்த்து, அவரை 'பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸராக'... மாற்றியருளினார். ஆகவேதான், கதாதரரின் மனதில், 'தாயார் பவதாரணியான'... 'காளி மாதா' எழுந்தருளி, பக்தி என்ற நறுமணத்தால் நிறைந்து நின்றார். 

அவரது, பக்தியையும்... அவரது தொண்டையும்... தாயாரின் திருவடியில் கலந்து விட அவர் செய்த சாதகங்களையும்... அவரிடமிருந்து பெருக்கெடுத்த ஞானத்தையும்... இவற்றிற்கெல்லாம் மூலமாக இருக்கும் 'காளி மாதாவின் அருளையும்'... அவரது ஜனன கால ஜாதகத்தில் அமைந்த நவக் கோள்களில் ஒருவரான 'ராகு பகவானின்' அற்புத அமைவே வெளிப்படுத்துகிறது.

1. தாயார் அமர்ந்திருக்கும் 'கும்பமே' அவரது லக்னமாகிறது. இந்த 'கும்ப லக்னத்தை' வழி நடத்துபவராக 'காளி மாதாவே' அமைகிறார். இதை, லக்னத்தை தனது நட்சத்திர சாரத்தால் (சதயம் 2 ஆம் பாதம்) வழி நடத்தும், 'ராகு பகவான்' சுட்டிக் காட்டுகிறார். ஏனெனில், 'ராகு பகவானின்' அதிதேவதையாக இருப்பவர்... 'காளி மாதாதான்'.

2. லக்னத்தை மட்டுமல்ல... லக்னாதிபதியான, 'சனி பகவானையும்' தனது நட்சத்திர சாரத்தால் (சுவாதி 3 ஆம் பாதம்) 'ராகு பகவான்' வழி நடத்துகிறார்.

இவ்வாறாக, லக்னத்தையும் (கும்ப லக்னம்), லக்னாதிபதியையும் (சனி பகவான்)... காளி மாதா சுவீகரித்துக் கொண்டிருக்கிறார்.

3. இவரது 'இராசியும் கும்பமாகவே' அமைகிறது. இராசியையும்... இராசிதிபதியான 'சனி பகவானையும்'... 'சதயம் 2 மற்றும் 3 ஆம் பாதங்களில்' அமைந்திருக்கும் 'ராகு பகவான்' இயக்குகிறார்.

இவ்வாறாக, லக்னம் என்ற ;ஆன்மாவையும்;... இராசி என்ற ;உடலையும்;... தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்... பவதாரிணித் தாயார்.

4. பூர்வ புண்ணியாதிபதியான 'புத பகவான்' (5 ஆம் பாவம்) லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறார். அவரையும்... 'ராகு பகவான்' தனது நட்சத்திர சாரத்தால் (சதயம் 3 ஆம் பாதம்) இயக்குகிறார். 

அது மட்டுமல்ல, அந்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிற 'தன-குடும்ப-வாக்கு-லாபம் என்ற விருத்தி ஸ்தானங்களுக்கு' அதிபதியாகிற 'குரு பகவானையும்' தனது நட்சத்திரத்தின் மூலமாக (திருவாதிரை 3 ஆம் பாதம்) இயக்குகிறார்... 'ராகு பகவான்'.

இவ்வாறாக, பூர்வ புண்ணியாதிபதியையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிற 'பூர்வ புண்ணியக் காரகனான'... 'குரு பகவானையும்'... தன்னால் ஆகர்ஷிக்கப்பட்ட... 'ராகு பகவானின்' நட்சத்திர சாரங்களின் மூலமாக... பகவான் இராமகிருஷ்ணரை, அவரது பூர்வத்திலேயே ஆட்கொண்டிருக்கிறார்... காளித் தாயார்.

5. அது மட்டுமல்ல, இந்த 'பூர்வ புண்ணியம்' என்ற 'கர்மவினைகள்தான்', இந்தப் பிறவியை அளித்திருக்கிறது. அந்த கர்ம வினைகள்தான்... 'ருணமாக-ரோகமாக-சத்ருவாக'... '6 ஆம் பாவம்' வெளிப்படுத்துகிறது. 

அந்த 6 ஆம் பாவத்திற்கு அதிபதியான 'சந்திர பகவான்' லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறார். அவரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிற  'குரு பகவான்' தனது நட்சத்திர சாரத்தாலும் (பூரட்டாதி 1 ஆம் பாவம்)... தனது 9 ஆம் பார்வையாலும் கடாக்ஷித்து...  இந்தப் பிறவியில், அவரனுபவிக்கப் போகும் 'கர்மாக்களிலிருந்து' மட்டுமல்ல, அவரது முந்தைய பிறவிகளின் 'கர்மாக்களிலிருந்தும்'... விடுவித்து விடுகிறார்.

இந்த விடுவிப்புக்கான அருளை அளிப்பவராக 'காளி மாதா' இருப்பதை... 'குரு பகவானை' தனது நட்சத்திர சாரத்தல் இயக்கும் 'ராகு பகவான்' உறுதி செய்கிறார்.

6. இவரது ஜாதகத்தில்... 'இணை, துணை மற்றும் களத்திரம்' என்ற '7 ஆம் பாவத்திற்கு' அதிபதியாகிற 'சூரிய பகவான்' லக்னத்திலேயே அமர்கிறார். இவரை. ராகு பகவான்' தனது நட்சத்திரமான... 'சதயம் 1 ஆம் பாவத்தில்' வழி நடத்துகிறார்.

அதாவது, இவரது வாழ்வில் இணைந்து வருபவர்கள் அனைவரையும்... ஈர்த்துக் கொள்ளும் வல்லமை இவருக்கு இயல்பாக இருப்பதை இந்த அமைவு உணர்த்துகிறது. ஆனால், அவர்களினால் இவர் ஈர்க்கப்பட்டு... இந்த உலக பந்தங்களிலும்... பற்றுக்களிலும்... சிக்கிக் கொள்ளாதவாறு, அந்த '7ஆம் பாவாதிபதியான 'சூரிய பகவானை'... 'ராகு பகவானின்' மூலமாக... 'காளி மாதாவே'... இயக்குகிறார்.

மேலும், தன்னோடு இணைபவர்கள் அனைவரையும், தன்னோடு ஈர்த்துக் கொள்வதும்... அவர்களையும் இறைபக்தியில் வழி நடத்தி, அவர்களின் கர்மவினைகளிலிருந்து விடுவிக்கும் வல்லமையையும்... இவருக்கு 'காளி மாதா' அருள்வதை... 'ராகு பகவானின்' சாரத்தினால் வழி நடத்தப்படும் 'குரு பகவானின்' பார்வை, இந்த 'சூரிய பகவானுக்கு' கிடைப்பது... உறுதி செய்கிறது.

7. இவ்வாறாக, லக்னம் - லக்னாதிபதி... இராசி - இராசியாதிபதி... பூர்வ புண்ணியாதிபதி - பூர்வ புண்ணியக் காரகன்... பாக்கியம் என்ற தர்ம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிற லக்ன -  இராசியாத்பதி... என்று, 'லக்னம்-பூர்வம்-பாக்கியம்' என்ற 'திருகோணாதிபதிகள்' அனைத்தையும் தனது ஆளுமைக்குள் கொண்டுவருகிறார்... ;ராகு பகவான்'.

8. இந்த 'ராகு பகவான்', இவரது சுகங்கள் அனைத்தையும் துறக்க வைப்பதற்காக... அதிலிருந்து இவரை விடுவிப்பதற்காக... இவரின் 'சுக ஸ்தானத்தில்' அமர்கிறார். இந்த உலக சுகங்களிலிருந்து இவரை விடுவிக்கவும்... அதில் இவர் சிக்கிக் கொள்ளாதவாறும்... இவரைக் காத்தருள, இந்த 'ராகு பகவானே'... இந்த 'ராகு பகவானால்' வழி நடத்தப்படும் 'சூரிய பகவானை'... இயக்குவது... 'காளி மாதாவின்' சூட்சுமமான வழிநடத்துதலன்றி வேறேது... !

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரையும்... அவரது ஜாதகத்தையும்... நாம் பூஜித்து, பக்தியுடன் வழிபட்டுவர... 'பவதாரிணித் தாயாரான காளி மாதா'... தன் இன்னருளால்... நம்மை இரட்சிப்பாள் என்பது திண்ணம்.

'பகவான் ஸ்ரீ இராம கிருஷ்ணரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்'.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...