ஜாதக ரீதியாக பொருத்தங்களைப் பார்த்து, வரன்களை இணைக்கும் போது, தோஷங்களைப் பற்றிய சந்தேகங்கள் நிலவுவது வழக்கமானதுதான்.
இரண்டு விதமான கருத்துக்கள், ஜோதிடர்களிடையேயும்... ஜோதிட ஆர்வலர்களிடையேயும்... வரன்களைத் தேடும் பெற்றோர்களிடையேயும்... நிலவிவருகிறது.
1. வரனின் ஜாதகத்தில், தோஷம் என்று கருதப்படும் ஒரு அமைப்பு இருக்கும் பட்சத்தில்... அதே அமைப்புள்ள வரனின் ஜாதகத்துடன்தான், இந்த வரனை இணைக்க வேண்டும்.
2. தோஷம் என்று கருதப்படும் அமைப்புள்ள வரனின் ஜாதகத்தை... தோஷம் ஏதும் இல்லாத அமைப்புள்ள வரனின் ஜாதகத்துடன்தான் இணைக்க வேண்டும்.
இந்த இருவேறு மாறுபட்ட கருத்துக்களால், மேலும் குழப்பங்கள் எழுவதற்கே வாய்ப்பு உண்டாகும். இதனை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
இதை ஒரு உதாரணம் கொண்டு விளக்குவோம் :
உதாரணமாக, ஒரு பெண்ணின் ஜாதகத்தில், 'துலாம் லக்னமாகி', 2 ஆம் பாவமாகிய... 'தனம்-வாக்கு-குடும்பம்' என்ற ஸ்தானத்திற்கும், 7 ஆம் பாவமாகிய... 'களத்திரம்-நட்பு-துணை மற்றும் இணை' என்ற ஸ்தானத்திற்கும் அதிபதியாகிய 'செவ்வாய் பகவான்'... 4 ஆம் பாவமான, 'மகர இராசியில்'... அவிட்டம் 1 ஆம் பாதத்தில் அமைவதாகக் கொள்வோம்.
இந்த அமைவைத்தான், 'செவ்வாய் தோஷம்' என்று கருதுகிறார்கள்.
இதை சற்று ஆழமாக ஆய்ந்தால், 'துலா லகனத்திற்கு', 'செவ்வாய் பகவான்' ...
~ இரு மாராகாதிபதிகளாகிறார்.
~ மேலும், சுக ஸ்தானத்தில். தனது சுய நட்சத்திர சாரத்திலேயே, உச்சம் பெற்று வலுத்துக் காணப்படுகிறார்.
~ சுக ஸ்தானத்திலிருந்து, தனது நான்காம் பார்வையாய், களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.
இந்த 'செவ்வாய் பகவானின்', அமைவின் பலன்கள்...
~ இந்த அமைவினால், இந்த வரனுக்கு இல்வாழ்வில் போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் கூடி வரும்.
~ சற்று பிடிவாதமும், முன் கோபமும் உள்ள அமைவினால், இவருக்கு அமையும் துணைவருக்கு, இவரால் துன்பங்கள் வந்து சேர வாய்ப்புகள் உருவாகும்.
~ இதனால், இவரது, இல்வாழ்வில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.
இந்த பலன்களெல்லாம், கிரகங்களின் அமைவின் படியான பலன்களேயானாலும், நாம் இந்த ஜாதகத்தை மற்றொரு ஜாதகத்துடன் இணைக்க முற்படும் போது, மேலும் சில ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அவை...
~ இந்த செவ்வாய் பகவானின் தசாவை, இந்த வரன்... எப்போது, எந்த வயதில் கடந்து போகிறார்... என்பதுதான்.
~ திருமணத்திற்கு முன்பே இந்த தசா கடந்து விட்டிருந்தால்... திருமணத்திற்குப் பின்... இந்த அமைவினால் ஏற்படும் பாதிப்புகள், மிக மிகக் குறைவாகவே இருக்கும்.
~ திருமணத்திற்குப் பின், இந்த தசா வருவதாக இருந்தால்...
~ திருமண வாழ்வின் மிக முக்கியமான முதல் 10 அல்லது 12 வருடங்களுக்குப் பிறகு... இந்த தசா வரும் போது, தம்பதிகள் இருவருக்குமான, இணக்கமான, அன்பான, வாழ்வின் அனுபவங்கள்... இந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும்.
~ 7 ஆம் பாவத்தை, சுப கிரகங்கள் பார்க்கும் பட்சத்தில்... அந்த பாவத்தின் அசுபத்துவம் குறைந்து போகும்.
இது போன்ற அமைவு இருக்கும் பட்சத்தில், இணைக்கப்பட இருக்கும் வரனின் ஜாதகத்தில்,
~ 7 ஆம் பாவமான 'களத்திர பாவம்' மிகவும் வலுத்துள்ள ஜாதகமாக இருப்பது, உத்தமமான இணைப்பாக இருக்கும்.
~ களத்திர ஸ்தானாதிபதியும் வலுத்திருப்பது, மேலும் இந்த இணைப்புக்கு வலு சேர்க்கும்.
~ களத்திர ஸ்தானத்தை சுபகிரகங்கள் பார்க்கும் பட்சத்தில்... அந்த ஸ்தானம் மேலும் வலுப் பெற்று... எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் வந்து சேரும்.
'தோஷம்' என்று கருதப்படும் அமைவுள்ள ஜாதகத்தை... அந்த தோஷத்தின் தன்மையை ஆய்ந்து... அதன் தன்மைக்கு ஏற்ப... சந்தோஷத்துடன் வாழ்வைக் கடந்து போகும்... தக்கதொரு வலிமையான ஜாதகத்துடன் இணைக்கும் போது... இருவரின் வாழ்வும் சுகமாகவும், சுபமாகவும் கடந்து போகும்... என்பது அனுபவ உண்மையாகும்.
மாறாக, பெண்ணிற்கு இருக்கும், அதே அமைவுள்ள... தோஷம் என்று கருதப்படக் கூடிய அமைவுள்ள... ஆணின் ஜாதகத்தை இணைக்கும் பட்சத்தில்... இருவரது வாழ்வும்... சுகமற்றுப் போவதற்கான வாய்ப்பு வந்து கூடும்... என்பதும் அனுபவ உண்மையாகும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment