Saturday, July 11, 2020

எங்கே இருக்கிறான் இறைவன்... ? குருநாதர் அருளிய சிறு கதை.



ஒரு வியாபாரி, பொருள்களைக் கொள்முதல் செய்வதற்காகத் தொலைதூரப் பயணத்தை மேற்கொண்டான். அவனைத் தொடர்ந்து ஒரு திருடனும் வந்து கொண்டிருந்தான். இரவு நேரம் நெருங்கும் பொது, ஒரு சத்திரத்தில் வியாபாரி ஓய்வெடுத்துக் கொண்டான். அவனைத் தொடர்ந்த திருடனும், அதே சத்திரத்தில் ஓய்வெடுத்தான்.

வியாபாரி, தூங்குவதற்கு முன், தனது பொன் முடிப்பை இடுப்பிலிருந்து எடுத்து, அந்த மூட்டையிலே வைப்பதைப் பார்த்தான்.சீக்கிரமாகவே தூங்கிய திருடன், நடு நிசியில் விழித்து, வியாபாரியின் மூட்டையை அவிழ்த்து, பொன் முடிப்பைத் தேடினான். அந்த மூட்டையில் முடிப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் படுத்து விட்டான்.

காலையில் எழுந்த வியாபாரி, அதே மூட்டையிலிருந்து பொன் முடிப்பை எடுத்து,  கச்சையில் முடித்து வைத்துக் கொண்டான். ஆச்சரியத்தில் மூழ்கிப் போன திருடன், மீண்டும் மிகக் கவனமாக, வியாபாரியைத் தொடர்ந்து சென்றான். அடுத்தடுத்த இரண்டு சத்திரங்களிலும், இதே நிலைதான் தொடர்ந்தது. 

இறுதியில், வியாபாரி, பொருள்களை கொள்முதல் செய்து, அதற்கான பொற்காசுகளை, அந்த முடிப்பிலிருந்து எடுத்துக் கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த திருடன், வியாபாரியை நெருங்கி, 'நான் தினமும் நடு நிசியில் எழுந்து உனது மூட்டையில் தேடிப் பார்க்கிறேன். அதில் பொற்காசு முடிப்பைக் காணமுடியவில்லை. ஆனால், விடிந்ததும், அதிலிருந்து நீ முடிப்பை எடுக்கிறாய். இது எப்படி நடக்கிறது... ?' என்று கேட்டான்.

அதற்கு வியாபாரி, 'நீ என்னைத் தொடர்ந்து வருவதை நானும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு இரவும் நீ விழித்திருக்கும் போது, கச்சையிலிருந்த பொன் முடிப்பை எடுத்து மூட்டையில் வைப்பேன். நீ உறங்கியதற்குப் பின், மூட்டையிலிருக்கும் முடிப்பை எடுத்து உனது கைப்பைக்குள் வைத்து விடுவேன். காலையில் நீ விழிக்கும் முன்பே, உனது கைப்பைக்குள் இருக்கும் முடிப்பை எடுத்து எனது மூட்டைக்குள் வைத்து விடுவேன். நீ தேடும் போதெல்லாம் பொன் முடிப்பு, உனது பைக்குள்தான் இருந்தது.' என்றான்.

இந்தக் கதையைக் கூறிய எனது குருநாதர், 'இது போலத்தானப்பா... நாம் தூங்கும் போது, நமக்குள்ளேயே இருந்து அருள் செய்யும் அந்த இறைவன், நம்மை இழுத்து, அணைத்து, எப்போதும் நாம் அனுபவித்திராத ஆனந்தத்தைத் தந்து விடுகிறான். நாம் விழித்ததற்குப் பிறகு, நம்மை, அவனை வெளியே தேடும் படி வைத்து, அமைதியற்று அழைக்களிக்கிறான். எப்போது, நாம் விழித்திருக்கும் போதே, இறைவனை அறிகிறோமோ... அப்போதே அவன் நமக்குள்ளிருந்து, ஒரு 'சத்குருவாய்' எழுந்தருளி அருள்பாலிக்கிறான்.' என்றார்.

ஸாய்ராம். 

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...