Friday, July 24, 2020

ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிய பேரருளாளன்.



காஞ்சீபுரத்தில் ராமானுஜர், 'அதவைத சிங்கம்' என்றழைக்கப்பட்ட, யாதவப் பிரகாசரிடம் கல்வி கற்று வந்த நேரம்... 

'உருவமற்ற அருவமாக இருப்பவரே இறைவன்' என்று, தத்துவரீதியாகவும், தர்க்கரீதியாகவும், நிர்ணயம் செய்வதிலேயே மிகக் கவனமாக இருந்தவர்தான், யாதவப் பிரகாசர். அவரின் தத்துவ விளக்கங்களில் எப்போதெல்லாம், தவறு இருந்ததோ, அதை, அப்போதே சுட்டிக் காட்டி, அதற்குத் தனது விளக்கங்களை அளித்து, ஆசிரியரின் கோபத்துக்கு ஆளானார், ராமானுஜர்.

'சத்யம் - ஞானம் - அனந்தம்' என்ற பரப்பிரம்மத்தின் வருணணையை, யாதவப் பிரகாசர் விளக்கும் பொது, 'பரப்பிரம்மம் சத்தியமானது... அறிவுமயமானது... இறுதியற்றது... என்று பொருளுரைத்தார்.'.\ அதை மறுத்த, ராமானுஜர் ' இவை பரப்பிரம்மத்தின் பண்புகளே அன்றி... இவை பரப்பிரம்மல்ல, என்று வரையருத்தார். 

இதனால், போபமுற்ற யாதவப் பிரகாசர், ராமானுஜரின் வளர்ச்சி, 'அத்வைத சித்தானந்தத்த்தை' அழித்து 'துவைத பாவத்தை' வளர்த்துவிடும் என்று கருதி, ராமானுஜரை அழித்துவிடுவதற்கே தயாரானார். அதற்காக திட்டம் ஒன்றை வகுத்து, ராமானுஜர் உட்பட்ட தனது சீடர் குழுவுடன் 'கங்கை  யாத்திரைக்குப்' புறப்பட்டார்.

யாத்திரையின் போது, ஒரு தனிமையான இடத்தில், ராமானுஜரை கொலை செய்யவும் துணிந்து விட்டார் யாதவப் பிரகாசர். தனது திட்டத்தை நிறைவேற்றத் தக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவரின் பயணம், விந்திய மலையின் அடிவாரத்தில், கோதாண்டாரண்யத்தில், ஜனசந்தடியே இல்லாத ஒரு இடத்தில் நிறைவேறவிருந்தது. தனது சகோதரரான, கோவிந்தரிடமிருந்து இந்தத் திட்டத்தைத் தெரிந்து கொண்ட ராமானுஜர், கோவிந்தரது வற்புருத்தலால், தன்னைக் காத்துக் கொள்ள, தென் திசையை நோக்கி வெகு, வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

ஒரு சில மணி நேர நடைப் பயணத்திற்குப் பின், பசியாலும், தாகத்தாலும், களைத்துப் போய், ஒரு மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டார். ஆழ்ந்த தூக்கத்தின் பின் விழித்தெழுந்த போது, ஒரு வேட்டுவத் தம்பதிகள், தனது விழிப்பிற்காகக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அதிர்ச்சியுற்று எழுந்து அமர்ந்தார். அவரை ஆசுவாசப்படுத்திய வேட்டுவத் தம்பதிகள், தாங்களும் விந்திய பார்வதத்தின் அடிவாரத்திலிருக்கும் கிராமத்திலிருந்து தெற்கே, தனுஷ்கோடி வரைக்கான யாத்திரைக்குச் செல்வதாகவும்... ராமானுஜரைப் பார்த்தால், அவரும் தென் திசைக்குச் செல்வதாகத் தோன்றுவதால், அவரும் தங்களுடன் சேர்ந்து பயணிக்கலாம்... என்றும் கூறினர்.

பார்வைக்கு அச்சமூட்டும் தோற்றமுடையவர்களாக இருந்தாலும், அவர்களிடம் இருந்து வெளிப்பட்ட அன்பினால், தனது பயத்திலிருந்து நீங்கியவராக, அவர்களுடன் பயணப்பட்டார், ராமானுஜர். ஒரு சில மணி நேரப் பயணத்திற்குப் பின், ஒரு ஓடைக்கு அருகில் வந்து சேர்ந்தனர். அன்றைய இரவுப் பொழுதை, அந்த மணற் பரப்பிலேயே கழிக்கத் திட்டமிட்டனர். 

சரியான இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மணலச் சமன்படுத்தி. ராமானுஜரை படுக்கச் செய்த வேடுவர், அவருக்கு அருகே, சுள்ளிகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, விடியும் வரை, குளிரிலிருந்தும், கொடிய விலங்குகளிடமிருந்தும் விலகிப் பாதுகாப்பாகத் தூங்குவதற்கு வழி செய்தார். அதற்குப் பின், தானும் தனது மனைவியுடன் சற்றுத் தள்ளி, ஓய்வெடுத்துக் கொண்டார். அப்போது, அந்த வேடுவரின் மனைவி, தனக்குத் தண்ணீர் தாகமாக இருப்பதாகக் கூறியதற்கு, விடிந்த பிறகு அருகிலிருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்... என்று கூறி விட்டு... ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கிப் போனார் வேடுவர்.

விடிந்ததும், வேட்டுவத் தம்பதிகளுக்கு முன்னரே எழுந்து, தனது காலைக் கடன்களை முடித்துவிட்டு, முதல் நாள் இரவு, வேடுவர் சொன்ன கிணற்றுக்கு அருகில் சென்று, அந்தக் கிணற்றிலிருந்து தூய குடி நீரை எடுத்துக் கொண்டு வந்து, வேடுவரின் மனைவிக்குக் கொடுத்தார் ராமானுஜர். தனது தாகம் தீர ஆவலாகக் குடித்தவருக்காக, மீண்டும் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தார். இவ்வாறாக மூன்று முறை தண்ணீர் கொடுத்து விட்டு... நான்காம் முறை மேலே ஏறி வந்தவருக்கு, ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த வேடுவத் தம்பதிகளைக் காணதுதான்... அந்த ஆச்சர்யம். சுற்றும் முற்றும் தேடிப் பார்த்து, அழைந்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. சிறிது நேரத்தில், அவ்வழியே வந்த ஒருவரிடம், இது எந்த ஊர்... ? என்று ராமானுஜர் கேட்டதற்கு, அந்த வழிப் போக்கர், ஆச்சரியம் கலந்த குரலில், 'தாங்கள் யாதவப் பிரகாசகரின் மாணவர்தானே... உங்களை அவரின் சீடர்  குழாத்துடன் பார்த்திருக்கிறேன். இது காஞ்சீபுரம்,, நீங்கள் இருக்குமிடம் 'சாலக் கிணற்றுக்கு' அருகில். அதனால்தான் உங்களுக்கு இந்த இடம் தெரியாமல் போயிருக்கிறது. இந்தக் கிணற்று நீர், அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது.' என்றார்.

அப்போதுதான், ராமானுஜருக்கு அனைத்தும் புரிய ஆரம்பித்தது. அந்த விந்திய மலையின் அடிவாரத்திலிருந்து, இந்த நொடி வரையிலும், தன்னைக் காத்து, இரட்சித்து, அழைத்து வந்து, தனது திருவடியில் சேர்த்துக் கொண்டது... 'பெருந்தேவித் தாயாரும், பேரருளாளனான வரதாரஜப் பெருமாளும்தான்'... என்பதை உணர்ந்து கொண்டு, தனது இரு கைகளைத் தலை மீது தூக்கி வைத்து... பெருமானைக்  கண்ணீர் மழ்க, பேரானந்தத்துடன் வணங்கி மகிழ்ந்தார் ராமானுஜர்.

ஹரி ஓம் நாரயணாய நமஹ,

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...