Monday, January 30, 2023

'கொல்லான் பொய்கூறான் களவிலான்...' திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல் ; 'இயமம்' ; பாடல்-554.


 

'கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்

நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய

வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்

இல்லா நியமத் திடைநின் றானே'

(திருமந்திரம் ; இயமம் ; பாடல் 0 554)

'பதஞ்சலி மகாமுனிவர் வகுத்தளிக்கும் 'அட்டாங்க யோகத்தின்' முதல் படியாக இந்த 'இயமம்' என்ற 'பக்தி நெறி' வருகிறது.

அட்டாங்க யோகம் (இயமம்- நியமம்-ஆசனம்-பிரணாயாமம்-பிரத்யாகாரம்-தாரணை-தியானம்-சமாதி) என்பது, யோக மார்க்கமாக இறைவனை அடையும் வழியாகும். இந்த யோகம்.... இவ்வுயிரையும் (ஜீவன்), உடலையும் (உடல்), இவற்றிற்கு மூலமாக இருக்கும் இறைவனிடம் (ஆத்மா) கொண்டு சேர்க்கும் உபாயத்தை பயிற்றுவிக்கிறது.

இதன் முதல் படியாக பக்தியை (இயமம்) முன்வைக்கிறார், பதஞ்சலி தேவர். அந்த பக்திதான் படிப்படியாக அடுத்தடுத்த நிலைகளுக்கு ஜீவனை இட்டுச் செல்கிறது.

இறைவனின் மீது வைக்கும் பக்தியினால் விளைவதுதான் என்ன ? 

இந்த கேள்விக்கு 'திருமூலர்' அளிக்கும் பதிலாகத்தான் இந்த திருமந்திரப் பாடல் அமைகிறது. 

~ மனதளவிலும் தீங்கு நினைக்காதவனாய்...

~ பொய் கூறாதவனாய்...

~ பிறர் பொருளை அபகரிக்காதவனாய்...

~ அன்பு, அமைதி, பொறாமையின்மை, தூய்மை, ஏற்றுக்கொள்ளும் தன்மை, ஆனந்தம், தர்மம், ஆசையின்மை என்ற 'எண் குணங்களைக்' கொண்டவனாய்...

~ பணிவுடையவனாய்...

~ நீதி தவறாமல் இருப்பவனாய்...

~ பகிர்ந்து கொடுப்பவனாய்...

~ குற்றமில்லாதவனாய்...

~ முறையற்ற காமமில்லாதவனாய்...

ஒருவனை மாற்றி விடும் வல்லமையை இந்த 'பக்தி' என்ற இயமம் நமக்கு அளித்து விடுகிறது. இந்த பக்தியே தொடரும் யோகங்களுக்கு அடிப்படையாகவும் அமைகிறது.

பக்தியின் பெருமையை, இதை விட வேறு எவ்வாறு எடுத்தியம்ப முடியும் ! 

ஸாய்ராம்.


Saturday, January 28, 2023

நினைவுப் பெட்டகத்திலிருந்து... சந்யாசி ஒருவரின் தரிசனமும், அவரளித்த அனுபவமும்


 

எங்களது நண்பர் ஒருவரின் இல்லத் துயர நிகழ்ச்சிக்காக, கரூருக்கு அருகிலிருந்த அவரது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தோம். இப்போது இருப்பதைப் போன்ற, நெடுஞ்சாலைகள் அப்போது இல்லாத நேரம். ஆனால், குளு குளு என்ற நிழலை அளிக்கும் மரங்கள் சாலையின் இருபுறமும் குடைகள் விரித்தாற்போல இருக்கும்..

லாலாபேட்டை என்ற இடத்தில், ரெயில்வே கேட்டிற்கு முன்பாக, ரயில் கடந்து போவதற்காக,  வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. எங்கள் வாகனமும் நின்றது. எப்போதும் போல, வெள்ளரிப் பிஞ்சுகள்... கொய்யாப் பழங்கள்... வேர்க்கடலைகள்... என வியாபாரம் செய்பவர்கள் வாகனங்களை சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்க, சற்று தூரத்திலிருந்து, ஒரு சந்யாசி எங்கள் வாகனத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போதுதான், ரயில் எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. எங்களுக்கு முன்னால் இருந்து வாகனங்கள் புறப்பட ஆரம்பித்தன. அந்த சந்யாசியின் நடையில் ஒரு வேகம் தெரிந்தது. அவர் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த என்னை நோக்கி பார்த்தபடியே வந்து கொண்டிருந்தார், வாகனம் புறப்படுவதற்கு முன், அவருக்கு ஏதாவது தக்ஷணை கொடுத்து விட வேண்டுமென எனது பர்ஸை திறந்து, பணத்தை மடித்து கையில் வைத்துக் கொண்டேன். அதற்குள் காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த எனது நண்பர், அவசர அவசராமக ஓட்டுநரை காரை எடுக்கச் சொன்னார். சில நிமிடங்களில் எங்களை அணுகிவிடும் அவரை நோக்கி, இவர் கும்பிட்டபடி 'சீக்கிரம்... சீக்கிரம்... 'எனக் கூற, வண்டியும் வேகமெடுத்துக் கிளம்பியது.

நான், சற்று ஏமாற்றத்துடன், கண்ணாடி வழியே திரும்பிப் பார்த்தேன். சாலையோரத்தில் சிரித்தபடியே நின்ற அவரின் முகம் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்தது. '/என்னண்ணா இப்படி பண்ணீட்டிங்க ?' என்ற என் ஆதங்கத்துக்கு, 'நாம போகிற வழியில ஒரு சந்யாசி மடம் ஒண்னு இருக்கு. அதுல இன்னைக்கு அன்னதானம் நடக்கும். அதுக்காகத்தான் அந்த ஆளு, நம்ம காரை நிருத்தி, வழியில தன்னை இறக்கிவிடச் சொல்வதற்காக வந்தாரு. இதான் நமக்கு வேலையா ?'என்ற என் நண்பரின் சாமர்த்தியத்தை நினைத்து வண்டியில் என்னோடு பயணித்த நண்பர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். ஆனால், எனது மனக் கண்ணில், அந்த 'கனிவாகப் புன்னகைத்த முகம்' அழியாது இருந்தது.

சற்று பயணித்த போது, சாலையின் இடது புறத்தில் சில சந்யாசிகள் நடந்து போய்க் கொண்டிருந்ததையும், நண்பர், 'இந்த மடத்திலதான் அன்னதானம் நடக்கும்' என்று சுட்டிக் காட்டிய மடமும், கடந்து போக ஆரம்பித்தது. அப்போது எங்களது வாகனத்தைக் கடந்த ஒரு பேருந்து, சாலையின் முன்பு, பயணிகளை இறக்கி விடுவதற்காக நின்றது. எதிர்புற வலது புறமும் வாகனங்கள் வருவதால், எங்களது வாகனம் தடை பட்டு நின்றது.

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது, முன் புறப் பேருந்திலிருந்து, அதே சந்யாசி இறங்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து பயணிகள் இறங்க ஆரம்பிக்க, அவர் இப்போது எங்களுக்கு எதிர்திசையில் எங்களது வாகனத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே மறக்கவொண்ணா புன்னகையுடன்... எங்களை நெருங்கியவர், ஒரு நொடி நின்று, முன் சீட்டில் இருந்த எனது நண்பரைப் பார்த்து விட்டு, என்னை நோக்கி வந்து  நின்ற அவரின் கைகளில், நான் அப்போதிருந்தே கையில் மடித்து வைத்திருந்த அதே தக்ஷணையை, அன்புடன் கொடுத்தேன். பெற்றுக் கொண்டு, எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.

எங்களது வாகனமும்... அதில் பயணித்த அனைவரும்... இறுதிவரை, மௌனமாகவே பயணித்தோம்.

ஸாய்ராம்.


Wednesday, January 25, 2023

பெரியவர் பயன்படுத்திய 'மந்திரக் கடிகாரம்'


 

திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில், புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார் பெரியவர். சந்திரமௌளீஸ்வர பூஜைக்குப் பின், இரவு ஓய்வுக்கு செல்லுமுன், தனக்குப் பணிவிடை செய்யும் நாகராஜனிடம், 'அப்பா நாகு ! நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஸ்நானத்திற்கு எழுந்திருக்க வேண்டும். ஞாபகம் வைத்துக்கொள்' என்றார்.

நாகராஜன் பணிவுடன், 'உத்தரவு பெரியவா ! நாளை அதிகாலை 3.30 மணிக்கு, 'ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர...' என்ற நாமாவளியைப் பாடுகிறேன், பெரியவா !' என்றார்.

நாகுவின் பதிலைக் கேட்டு சிரித்துக் கொண்டே, பெரியவர், 'நான் உங்களை 3.30 மணிக்கு எழுப்புகிறேன், என்று சொல்வது முறையாக இருக்காது என்பதனால், ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர... எனச் சொல்வதாகக் கூறுகிறாயா ?' என்றதற்கு, பதில் என்ன சொல்வது என்பது தெரியாமல், தலையைக் குனிந்து கொண்டே சிரித்தார் நாகராஜன்.

'சரி அப்படியெ செய் !' என்ற படியெ பெரியவர், தனது அறைக்குள் சென்றார்.

ஆனால், நாகராஜனுக்கு இருந்த சிக்கல், அந்த சத்திரத்தில் கடிகாரம் இல்லை. இவரிடமும் அலாரம் அடித்து எழுப்பிவிடக் கூடிய கடிகாரம் இல்லை. இவரிடம் இருந்தது என்னவோ, ஒரு சாவி கொடுக்கும் கைக்கடிகாரம் மட்டும்ந்தான். அதுவும் அவரது மாமா, உபநயனத்தின் போது கொடுத்தது. சாமான்கள் வைக்கும் அறையிலிருந்த பெட்டியிலிருந்து அந்தக் கடிகாரத்தை எடுத்து, அதற்குச் சாவி கொடுத்துக் கட்டிக் கொண்டார். பின், பெரியவரின் அறைக் கதவுக்கு அருகே அமர்ந்து மெதுவாக 'விஷ்ணு சகஸ்ரநாமாவை' சொல்ல ஆரம்பித்தார், 

அடிக்கொரு தடவை கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர், காலை சரியாக 3.30 மணிக்கு எழுந்திருந்து, கதவுக்கு முன் நின்று 'ஹர ஹர சங்கர,,,' என்ற அடுத்த நொடி, கதவு திறந்து தேஜஸ்ரூபியாக மகா பெரியவர் தரிசனமளித்தார். இந்த 'சுப்ரபாத தர்சினத்தை' காணும் பேறு நாகராஜனுக்குக் கிட்டியது. பின் வாசலை நோக்கி நடந்த பெரியவருக்குக் கைக்ங்கர்யம் செய்வதற்காக பின்னால் சென்றார்.

அடுத்த இரண்டு நாட்களும் இதே போல, நாகராஜனின் சகஸ்ரநாம பாராயானமும், சரியான நேரத்திற்கு 'ஹர ஹர சங்கர...; நாமஸ்மரணமும் தொடர்ந்தன. நான்காம் நாள் அதிகாலை வரை விழித்திருந்த நாகராஜன், சற்று அயர்ந்து தூக்கத்தில் ஆழ்ந்தார். 'ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர,,,; என்ற மகா பெரியவரின் குரலைக் கேட்டு விழித்ததும்தான், நாகராஜனுக்கு தான் நன்றாக தூங்கிவிட்டது தெரிய வந்தது. 

பெரியவரை வாஞ்சையுடன் பார்த்த நாகரஜனிடம், 'குழந்தாய் ! நேரம் இப்போது 3.30 மணி. முழுநாள் சேவையினால் நீ சோர்வுற்று, அதனால்தான் சற்று அயர்ந்து விட்டாய். இது இயற்கையாக நடப்பதுதான்.' என்று கூறியபடி, வாசலை நோக்கி அடியெடுத்து வைக்கும் போதுதான், நாகராஜன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார்... மணி சரியாக 3.30.

அடுத்த ஐந்தாம் நாள் நாகராஜன் கங்கணம் கட்டிக் கொண்டு , ஒரு பானையில் தண்ணீரைக் கொண்டு வந்து அருகில் வைத்துக் கொண்டு, சகஸ்ரநாம பாராயணமும் அவ்வப்போது, குடத்து நீரினால் கண்களை கழுவிக் கொண்டும் அமர்ந்திருந்தார்.  இருந்தும், 2.30 மணியளவில் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து போனார். 

ஆனால், பெரியவரின் அறைக்கதவு சரியாக 3.30 க்குத் திறந்தது. வெளியே வந்த பெரியவர், நாகராஜன், சரிந்து தரையில் படுத்து உறங்குவதைக் கண்டார். 'ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர...' என்ற பெரியவரின் குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த நாகராஜனைப் பார்த்து, சிரித்துக் கொண்டே, 'இன்னைக்கும் பாவம் உன்னால சரியான நேரத்திற்கு எழுந்திருக்க முடியல. சரி ஸ்நானத்திற்கு ஏற்பாடு செய்'. என்றபடி நடந்தார். மீண்டும், நாகராஜன் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தர். மணி சரியாக 3.30.

எந்தக் கடிகாரமும் இல்லாம, எப்படி பெரியவா தினம் தினமும் சரியான நேரத்திற்கு எழுந்திடுறார் ?' இந்த கேள்வி நாகராஜனின் மனதை துளைத்துக் கொண்டே இருந்தது. எப்படியும் இன்று மதிய ஓய்வின் போது அவரிடம் கேட்டு விட வேண்டும், என்று நினைத்தார். அது போலவே பெரியவர், ஓய்வாக அமர்ந்திருந்த போது, அருகே சென்று  நமஸ்கரித்த போது, 'ஏதோ கேட்கனுனும்னு. வந்திருக்க... தயக்கமில்லாம கேட்டுடு' என்றர் பெரியவர்.

'நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால சரியான நேரத்திற்கு எழுந்திருக்க முடியல. ஆனால், பெரியவா ஒவொரு நாளும் சரியான நேரத்திற்கு எழுந்திடுறார். பெரியவாளுக்கு எப்படி சரியான நேரம் தெரிகிறது ? என்பதுதான் எனது சந்தேகம்... பெரியவா !' என்றார் நாகராஜன்.

'ஏதோ ஒரு கர்ண யக்ஷணி வந்து என்னை சரியான நேரத்திற்கு எழுப்பி விடுறாளாங்கிற சந்தேகமா ?' என்று சிரித்த பெரியவர், 'அதெல்லாம் ஒண்னும் இல்லே, மதுரையிலிருந்து இங்கே புதுக்கோட்டைக்கு வருகிற டி.வி.எஸ் பஸ்தான் என்னை சரியான நேரத்திற்கு எழுப்பிவிடுது. நான் முதல் நாள் எழுந்து வந்த போது கேட்டுக்கு முன்னால அந்த பஸ் போறதை பார்த்தேன். விசரிச்சதில, அந்த பஸ் ஒவ்வொரு நாளும் சரியா 3.30 க்கு இந்த சத்திரத்தை கடந்து போகுன்னு சொன்னாங்க. அந்த பஸ்சின் நேரத்தைப் பார்த்து நம்ம கடிகாரத்தை சரி செய்து வைச்சுக்கலாங்கிற அளவிற்கு, நேரத்தை சரியா கடைப்பிடிக்கிற கம்பெனின்னு சொன்னாங்க. தொடர்ந்து அந்த பஸ் அதே நேரத்தில தினமும் தவாறம வந்தது. அந்த பஸ்தான் எனக்குக் கடிகாரம்' என்று பெரியவா சிரித்துக் கொண்டே சொன்னார் !

ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர...

(நன்றி : ஆசிரியர் 'திரு ரமணி அண்ணா. ஜகத்குரு ஸ்ரீ மகா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா / Fb யிலிருந்து தொகுக்கப்பட்டது. )

தமிழாக்கம்.... அடியேன்.

ஸாய்ராம்.

Tuesday, January 24, 2023

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 242. சந்திர பகவானைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய குறிப்புகள்...


 

1. பூமியை, 27 நட்சத்திர மண்டலங்களில் வழியாக சுற்றி வருபவர்.

2. இந்த 27 நட்சத்திரங்களின் 108 பாதசாரங்களை, 30 நாட்களில் கடந்து செல்பவர்.

3. சராசரியாக 2 1/4 நாட்களில், 9 நட்சத்திர பாதசாரங்கள் கொண்ட ஒரு          இராசியைக் கடப்பவர்.

4. சூரிய பகவானின் பார்வையை கடக்கும் போது, வளர் பிறைச் சந்திரனாக...

சுபராகவும், அவரின் பார்வையிலிருந்து மறையும் போது, தேய்பிறைச்                  சந்திரனாக... அசுபராகவும் கணிக்கப்படுபவர்.

5. ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்கும் போதும், அந்த நட்சத்திரத்தின்            பாதசாரக் கிரகத்தின் 'நவாம்ஸ பலத்தைப் பொருத்து, பலன்களை                          வெளிப்படுத்துபவர். 

உதரணமாக 'ரிஷப இராசியைக்' கடக்கும் போது, கார்த்திகை நட்சத்திரத்தின்      சாராதிபதியான 'சூரிய பகவானின்' நவாம்ஸ பலத்தையும்...ரோகிணி                      நட்சத்திரத்தைக் கடக்கும் போது, 'சந்திர பகவானின்' நவாம்ஸ நிலை                      பலத்தையும்... மிருகஷீரிட நட்சத்திரத்தைக் கடக்கும் போது, நவாம்ச        '    செவ்வாய் பகவானின்' பலத்தையும் கொண்டு, ஜாதகரின் கர்ம                                பலன்களை வெளிப்படுத்துபவர்.

6. ஒரு நிலையில், நிலைத்து நிற்காமல், தொடர்ந்து சுழற்சியை                                  மேற்கொள்வதால்தான் என்னவோ, அவரை, ஜீவனின் ஒரு நிலையில்                  நில்லாத 'மனதைக்' குறிக்கும் வண்ணமாக 'மனோகரகன்' என்று                              குறிப்பிடப்படுபவர்.

7. ஏனைய கிரகங்களின் கதிர் வீச்சுக்களை தன் மூலம் இந்தப் புவிக்குப் பரப்பும்  ஒரு 'செயற்கைக் கோளாக' செயல்படுவதால், 'ஜீவனின் உடலுக்குக்                        காரகனாகவும் கொள்ளப்படுபவர். ஆதலால்தான், இவர் உலவும்                                நட்சத்திரத்தில் ஜீவன் பிறப்பெடுக்கும் போது, அந்த நட்சத்திரம்                                  ஜாதகரின் 'ஜென்ம நட்சத்திரமாகவும்'... அந்த நட்சத்திர சாராதிபதியான              கிரகத்தின் தசாக் காலம் ஜீவனின், 'தசாக் காலமாகவும்' கணக்கிடப்படுகிறது.

8. எவ்வாறு ஜாதகரின் பிறந்த நேரத்தை வைத்துக் கணக்கிடப்படும் 'லக்னத்தை'அடிப்படையாகக் கொண்டு, ஜாதகரின் 'பூர்வ கர்ம வினைகள்' ஆய்வுக்கு                  உட்படுத்தப் படுகிறதோ... அது போல 'சந்திர பகவான்'

அமரும் 'இராசியை' மூலமாகக் கொண்டு, அந்த ஜீவனின் உடல் சார்ந்த உலக வாழ்வு, ஜீவன் இவ்வுலகத்தில் அக்கர்ம வினைகளின் விளைவுகளை எவ்வாறுகடந்து போகிறது என்பது கணிக்கப்படுகிறது.

9. பூர்வ கர்ம வினைகள் வெளிப்படுத்தும் விளைவுகளை, 'யோகங்களாகவும்...  தோஷங்களாகவும்...' வெளிப்படுத்தும் அமைப்புகளுக்கு துணையாக                      இருப்பவர்.

10. வளர் பிறை காலங்களில், சுபராகவும்... தேய் பிறை காலங்களில்                        அசுபராகவும்... தன்னை மாற்றிக் கொள்பவர்.

11.'செவ்வாய் - குரு பகவான்களுக்கு நடபானவராகவும், 'சூரிய - புத - சுக்கிர          பகவான்களுக்கு' சமமானவராகவும், 'சனி - ராகு - கேது பகவான்களுடன்              பகையாளராகவும், கணிக்கப்படுபவர்.

12. தனது வீட்டை /இராசிநாதராகக் கொள்ளும்' இவர், தனது இராசி விட்டுக்கு, 3,6,8 மற்றும் 12 அம் பாவங்களில் மறைவு பெறும் போது, எதிர்விளைவுகளை      எற்படுத்துபவராக அமைகிறார்.

13. கிரகங்களின் காரகத்துவங்களில், இவர் 'மாதுர் கார்ககன்' ஆகிறார்.                    பலன்களை கணிக்கும் போது, 'தாயாரை' குறிப்பவராகக் கொள்ளப்படுகிறார்.

14. 120 வருடங்களைக் கொண்ட 'விம்சோத்திரி தசாக் காலங்களில்', தனது        தசாவாக 10 வருடங்களை ஆட்கொள்பவர்.

15. 'பராசக்தி தேவியை' தனக்கு அதிபதியாகக் கொள்பவர்.

16. 'செவ்வாய் பகவானோடு' இணைந்திருக்கும் போது, உலக வாழ்விற்கான    ஆற்றலைக் கொடுக்கும் இவர், 'குரு பகவானோடு' இணையும் போது                      உள்வாழ்வான, ஞான வாழ்வுக்கு வித்திடுபவர்.

'எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி ! திருவருள் தருவாய்,

சந்திரா போற்றி ! சத்குரு போற்றி !

சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி !'

ஸாய்ராம்.


Saturday, January 21, 2023

'தென்னாடுடைய சிவனே போற்றி...' இந்த சொற்றொடரில் அடங்கியிருக்கிற சூட்சுமங்கள்...


 

மாணிக்க வாசகர்... என்ற பெயர், அந்த மகிமை பொருந்திய அருளாளரின் திருவாக்குகளுக்குள்  அடங்கியிருக்கின்ற  ஒவ்வொரு சொல்லும் விலை மதிக்கமுடியாத 'மாணிக்கங்கள்' என்பதை, உணர்த்துகின்றன. ஆதலால்தான் 'திருவாசகத்திற்கு உருகார்... ஒரு வாசகத்திற்கும் உருகார்...' என்ற புகழுரை இன்றும் நிலைத்திருக்கிறது. 

அவரின், 'தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!' என்ற மணிக்க வாசகங்களில், 'தென்னாடுடைய சிவன்' என்ற பதத்தை மட்டும் சற்று ஆய்ந்தாலே, அதற்குள்  மூழ்கியிருக்கும் அதிஅற்புதமான ஞானமுத்துக்கள், அளவிடமுடியாததாக இருப்பதை உணரலாம்.

மேலோட்டமாகவும்... சற்று உள் நோக்குதலிலும்... ஆழ்ந்து நோக்கும் போதும்... அனைத்திற்கும் பொருத்தமாக அமையுமாறு இந்தப் பதத்தை அமைத்திருக்கிறார், மாணிக்கவாசகர்.

இந்திய நாட்டின் தென்பகுதி, என்பது 'சிவபெருமானார்' பற்றிய புராணங்களில் பெரும் பங்கை வகிக்கிறது. அவற்றிற்கு சாட்சியாக எண்ணற்ற ஆலயங்களும் இந்தப் பகுதியில்தான், அதுவும் குறிப்பாகத் தமிழக்த்தில் அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சிவபெருமானரால் ஆட்கொள்ளப்பட்ட 'அறுபத்து மூவர்களான' நாயன்மார்களும், அவர்களை பெருமானார் ஆட்கொண்ட வரலாறுகளும், தமிழகத்திற்குள்ளேயே அமைந்திருக்கின்றன. பெருமானாரின் இளைய மகனான 'முருக பகவானின்' வரலாற்றின் சான்றுகளான 'அறுபடை வீடுகளும்' இங்கேயே அமைந்திருக்கிறது. இதனால், 'தென்னாடுடைய சிவனே...!' என்று, பகவானை அழைப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது.

சற்று உள்நோக்கினால்... பாரதம் என்ற தீபகற்பம், உலக வரைபடத்தில் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. உலகவரைபடத்தின் படி, பாரத நாடு 'தென்னாடாகிறது', ஆகவே, பெருமானாரை, 'தென்னாடுடைய சிவனே...!' என்றும், இவ்வுலகத்திற்கே அதிபதியான  அவரை, 'எந்நாட்டுக்கும் இறைவா...!' என்று தொடர்வதும் மிகவும்  பொருத்தமாக அமைந்து விடுகிறது.

இறுதியாக, சற்று ஆழ்ந்து நோக்கும் போது, 'எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்' என்பதால், மேல் நோக்கியிருக்கும் நமது சிரசின் உச்சப் பகுதி, பெருமானார் உறைந்திருக்கும்  'சகஸ்ர தளம்' என்ற 'ஆயிரம் தாமரைகள் மலர்ந்த' வடக்காக இருக்கிறது. 'சதாசிவமாக' மலர்ந்திருக்கும் பெருமானார், 'ருத்ரன்' என்ற அக்னி வடிவமாக எழுந்தருளும் 'நெற்றிப் பொட்டு', 'சதாசிவமாக' இருக்கும் பெருமானார், அக்னி வடிவான 'ருத்ரராக வெளிப்படும் தெற்காக மலர்கிறது. இந்த அகம் நோக்கும் மூலமான 'ஞானக் கண்ணின்' இருப்பிடம்தான் 'தென்நாடு' என்றும், அதன் வழியே வெளிப்படுகிற பெருமானாரான 'ருத்திரரை' 'தென்னாடுடைய சிவனே...!' என்று தொடர்வதும் மிக மிகப் பொருத்தமாக அமைந்து விடுகிறது.

'தென்னாடுடைய சிவனே போற்றி ! 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

ஸாய்ராம்.


Friday, January 20, 2023

நினைவுப் பெட்டகத்திலிருந்து... அம்மாவுடன் நான்.


எனக்கு 8 வயது இருக்கும் போது, ஒரு சித்திரைத் திருநாளன்றைய காலைப் பொழுதில், 'ஜன்னலுக்கு எதிரே தெரியும் மாமரக் கிளையின் நடுவே இருந்து, ஒரு ஒளி வெள்ளம் தோன்றி, எனக்குள்ளே வந்து புகுந்தது.'.கட்டை போல விரைத்துக் கிடந்த என்னை, மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஓரிரண்டு மணிகளுக்குப் பின் கண் விழித்து எழுந்த நான், மருத்துவரிடம் விளக்கியது இதைத்தான்.

இரவு நேரங்களில், அம்மாவுக்கு அருகிலே படுத்திருக்கும் போது, தொடர்ந்து இது போல சில முறைகள் நிகழ்ந்ததாம். ஓர் நாள், அம்மா, அவருடன் ஆரம்ப காலங்களில் பணி செய்து கொண்டிருந்த 'மாரியம்மாள்' என்பவரின் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். விபூதி சிறு மலையாகக் குவிக்கப்படிருந்த அந்த சிறிய அறையில், தீபம் சுடர் விட்டுக் கொண்டிருக்க, அந்தத் தாயார் கண் மூடி அமர்ந்து, பிரார்த்தித்து, திருநீறு பூசி விட்டார்கள். அப்போதிருந்து முன்பு போன்ற நிலை எனக்கு ஏற்படவே இல்லை.

எனது 12 ஆவது வயதில் அன்னையை மட்டுமல்ல, தந்தை, உடன் பிறந்தோர், உற்றார், உறவினர், பிறந்த வீடு, என அனைத்தையும் பிரிந்து, வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. காலம் கடந்தது... எனது 21 ஆவது வயதில், மீண்டும் நான் இருக்கும் இடத்திற்கே அம்மா வந்து சேர்ந்தார். குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலும் சேர்ந்தது. குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்த, அந்த ஒன்பது வருடகாலங்கள் அளித்த அனுபவம், என்னால் குடும்பத்தினர் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றலைத் தந்தது. அம்மாவுடன் வாழ்ந்தபோது, எனக்கும் அம்மாவுக்கும் இடையே நடந்த 'இரண்டு முறண்பாடுகள்', 'எனது பக்குவ நிலையை' அம்மாவுக்குப் புரிய வைத்தது. 

எனக்கு மூத்தவருக்குத் திருமணம் நடந்து, 5 வருடங்களாகியும், குடும்பத்தின் சூழல்கள் கருதி, எனது திருமணத்தை ஒத்தி வைத்துக் கொண்டே இருந்தேன். இறுதியாக தந்தையின் தள்ளாத வயதில், அவரது விருப்பத்திற்காக திருமணத்திற்கு சம்மதித்து, எனது சூழலுக்கு ஏற்ப ஒரு வரனைப் பார்க்குமாறு குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரிடன் தெரிவித்தேன். எனக்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பதை விட, குடும்பப் பொறுப்புகளை என்னோடு சேர்ந்து சுமக்கும் வரன்களிலேயே குடும்ப அங்கத்தினர்களின் கவனம் இருந்தது.

நல்ல வரன்கள் தள்ளிப் போகும் போது, 'என்னப்பா செய்றது... உனக்குத்தான் யாரும் பெண் கொடுக்க முன்வர மாட்டேங்கிறாங்களே !' என்ற அம்மாவின் முதல் முறண்பாடான வார்த்தைகள், என்னை முதல் முறையாக ஒடிந்து போக வைத்தது. 'ஆமாம்மா...ஏன் மறுக்கிறாங்க... என்ற உண்மையை நீங்க யோசித்துப் பார்த்தா உங்களுக்கு புரியும் !' என்பது மட்டுமே, எனது பதிலாக இருந்தது.

பின்னால், குடும்பத்திற்கு ஏற்ற வரனமைந்து, இட வசதியின்மை காரணமாக அருகிலேயே ஒரு மாடி வீட்டில் நான் குடியேறினேன். ஆனாலும், எங்களது வாழ்வு முழுவதும் அம்மாவுடனேயே கடந்தது. தந்தையின் மறைவு அடுத்த 4 மாதத்திற்குள் நிகழ்ந்தது. தொடர்ந்த காலங்களில், மந்திரியாகவும், மதிநுட்பமானவரும், இருந்த எனது அம்மா, 'மாமியாராக' மாறிவருவதைக் கவனித்த நான் இரண்டாவது முறையாக,, ஒரு தக்க சூழலில் அம்மாவிடம், 'நான் என் அனுபவத்தில் ஒன்றை உணர்ந்து கொண்டேம்மா... அனுபவசாலிகள் - அனுபவமற்றவர்கள், வயதில் பெரியவர்கள் - சிறியவர்கள், படித்தவர்கள் - படிக்காதவர்கள் என எல்லா பெண்களும் இறுக்கமான சூழல்களில் ஒரே மாதிரியாகத்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதுதான்', இதைக் கேட்ட எனது அம்மா சற்று மௌனமாக இருந்தார். ஆனால், அவரது வெளிப்பாடு இதற்கு மட்டுமல்ல, மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட முதல் முரண்பாட்டுக்குமான பதிலாக, வெளிப்பட்ட இடம், அவரின் இறுதிக் காலமாக , மருத்துவமனையாக  அமைந்தது.

ஏழு நாட்கள் மருத்துவமனையின் தனி அறையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தேன். ஒவ்வொரு இரவிலும் அவருடன் இருக்கும் நான், பகல் பொழுதுகளில் மட்டும் அலுவலுக்குச் சென்று வருவேன். ஏனைய குடும்பத்தினர்கள் ஒவ்வொருவராக பகல் பொழுதுகளில் துணையிருப்பார்கள். பெரும்பாலும் அமைதியாகக் கடந்த நாட்களின் இறுதி நாள் காலை, வழக்கம் போல அவருக்கான சிஸ்ருதிகளை செய்து முடித்த பின், 80 வயதுகளைக் கடந்து கொண்டிருக்கும் அவரது சிவந்த மேனியின் கைகளில் மருந்தேற்றிய ரத்தக் கட்டுகளைப் பார்த்து, இன்று ஒரு நாள் மட்டும், தொடர்ந்த கடும் மருத்துவ சிகிச்சைகளுக்கு ஓய்வு கொடுக்க எண்ணினேன். அதை, மருத்துவரிடமும் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு, இன்று ஒரு நாள் ஓய்வைக் கொடுத்து,  இடையே அவசர நிலை ஏற்பட்டால் தொடரலாம், என்றார்.

நாம் அலுவலுக்குச் செல்லும் வேளை வந்தது, அம்மாவிடம் இதனை தெரிவித்து விட்டு, ஓய்வெடுக்கும் படி கூறியதும், அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு, கண்களில் நீர் கசிய என்னைப் பார்த்தது... அந்த இரண்டு முரண்பாடுகளுக்குமாக,  அவர் அளித்த பதிலாக அமைந்தது, அது, இன்றும் எனது மனக் கண்களில் நிழலாடுகிறது. பின்  'என்னை கொஞ்சம் சுவர் பக்கமாக திருப்பி விடுப்பா !' என்ற போது, கனமான அவரது தேகத்தை மெதுவாகத் திருப்பி விட்டேன். அவர் மெதுவாகவும், தெளிவாகவும், 'ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று... ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று...' என்று முணு முணுக்கும் போது, நானும் மனதால் அவருடன் இணைந்து கொண்டேன், பாடலை முழுமையாக முடித்ததுதான் அவரிடம் இருந்த வெளிப்பட்ட இறுதியான வார்த்தைகள் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.

அன்று மதியம் நான் மருத்துவமனைக்குச் செல்லவில்ல. மாலை 7 மணியளவில் தொலை பேசி ஒலித்தது, மறு முனையில் எனது சகோதரன், பதைபதைப்புடன், 'காலையிலிருந்து சுவர் பக்கமே பார்த்து படுத்திருந்த அம்மா, இப்போதுதான் நேராக படுத்தார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செவிலியர்களிடம் தெரிவித்தோம். டாக்டர் வந்து பார்த்துவிட்டு உன்னிடம் பேச வேண்டும் என்கிறார்...' என்றான். டாகடர், 'தம்பி, அம்மாவுக்கு லேசான முச்சுத் திணறல்ல் ஏற்பட்டிருக்கிறது. நான் மருத்துவத்தை ஆரம்பிக்கும் முன், அவர் தனது இறுதிப் பயணத்தை தொடர்ந்து விட்டார். எனது அம்மாவாக இருந்தால் நான் என்ன செய்வேனோ அதைத்தான் நீ செய்திருக்கிறாய் என்றார்.'

அதற்குப பின் நிகழ்ந்ததெல்லாம் வெறும் சம்பிரதாயச் சடங்குகள் மட்டுமே !

அம்மாவிற்குச் சமர்ப்பணம்...

ஸாய்ராம்.




Thursday, January 19, 2023

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 241. 'தசா - புத்தி - அந்தரம் இவற்றின் சூட்சுமம்.' பகுதி 3.


... (ஜென்ம நட்சத்திரத்தையும், அதன் பாத சாரத்தையும்,அந்த நட்சத்திரத்தின் அதிபதியையும் அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பிறவிக்கான தசா (Direction of Life) தீர்மானிக்கப்படுகிறது.... (பகுதி 1.))

... (தனது புத்திக் காலம் வரை பொறுத்திருந்த 'புத பகவான்'... (பகுதி 2.))

முன் பகுதிகளின் தொடர்ச்சி...

தசாவைப் பற்றியும், புத்தியைப் பற்றியும் சென்ற இரு பகுதிகளில் ஆய்ந்தறிந்தோம். இப்போது, அந்தரம் என்ற உட்பிரிவைப் பற்றி ஆய்வோம்.

எவ்வாறு ஒரு கிரகத்தின் 'தசாக் காலத்தை' 9 உட்பிரிவுகளாகப் பிரித்து, அதனை ஆளும் 'ஒவ்வொரு புத்தி நாதர்களான கிரகங்கள்', ஜீவனின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ, அதுபோல, 'புத்தி நாதரின் காலத்தையும்' மேலும் ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரித்து, அந்த 'அந்தர நாதர்கள்', எவ்வாறு பலன்களை வெளிப்படுத்துகிறார்கள்... என்பதும் ஒரு நுட்பமான ஆய்வு முறைதான்.

ஒரு ஜாதகரின் 'தசாக் காலம்' சற்று பின்னடைவுள்ளதாக இருந்து, அவரின் 'புத்திக் காலம்' பலமாக இருக்கும் பட்சத்தில், அந்தப் 'புத்தி நாதர்', ஜாதகரின் புண்ணிய பலன்களை வெளிக் கொண்ர்பவராக அமைவார். அப்போது, அந்த புத்திக் காலத்தில், எப்போது, இந்த மாற்றம் நிகழக் கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை, 'அந்தர நாதர்' துல்லியமாகக் காட்டியருள்வார். இதற்குத் துல்லியமான கணக்கீடுகள் அவசியமாகிறது.

நாம் பகுதி 2 ல் விவரித்த உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். 'ரிஷப லகன' ஜாதகரின், 4 ஆம் பாவத்தில் (சிம்ம இராசி) 'கேது பகவான்', 'சூரிய - புத பகவான்களுடன்' இணைந்து, தனது 'சுய நட்சத்திர சாரத்தில்' (மகம் நட்சத்திரம்) அமர்ந்து, தனது 7 வருட தசாக் காலத்தை, ஜாதகரின் 8 ஆவது வயதிலிருந்து ஆரம்பித்து, ஜாதகரின் அடிப்படைக் கல்வியை மந்தப் படுத்தும் சூழலைப் பார்த்தோம்.

ஆனாலும், ஜாதகரின் உயர் கல்விக்கான வாய்ப்பை அறிவிக்கும், 'நிபுண யோகத்தை' அளிக்கும் , 'சூரிய - புத பகவான்களின்' இணைவின்,'புத பகவானது' புத்திக் காலம் தக்க சமயத்தில் அதாவது, ஜாதகரின் பள்ளிக் கல்வி இறுதியின் போது வந்து, ஜாதகரை எவ்வாறு காத்து அருளியது... என்பதையும் பார்த்தோம். 

அந்த 11 மாத 27 நாட்களுக்கான, 'கேது பகவானின் தசாவில் புத பகவானது புத்திக் காலத்தை' இன்னும் சற்று உட்பிரிவுகளாகப் பிரித்தால், புத பகவான் (1 மாதம் 21 நாட்கள்), கேது பகவான் (21 நாட்கள்), சுக்கிர பகவான் (2 மாதங்கள்), சூரிய பகவான் (18 நாட்கள்), சந்திர பகவான் 30 நாட்கள்), செவ்வாய் பகவான் (21 நாட்கள்), ராகு பகவான் (1 மாதம் 23 நாட்கள்), குரு பகவான் (1 மாதம் 17 நாட்கள்), சனி பகவான் (1 மாதம் 26 நாட்கள்) என்பதாகப் பகுக்கலாம்..

அந்த ஜாதகரின் பள்ளி இறுதி வகுப்பாகிய, 10 ஆம் வகுப்பின் ஆரம்பமான 'கேது பகவானின் தசாவின் - புத பகவானின் புத்திக் காலத்தின்' இரண்டாவது அந்தரமான 'சுக்கிர பகவானின்' அந்தரக் காலமான 2 மாதங்களில்தான், அந்த மாற்றம் ஏற்பட்டு, படிப்படியாக அவர் உயர் கல்வியின் சிறந்த தேர்ச்சிக்குத் தயாரானார். அதை, 'தைர்ய ஸ்தானமான' 3 ஆம் பாவத்தில் (கடக இராசி) 'புத பகவானின்' நட்சத்திர சாரத்தில் அமைந்திருந்த 'சுக்கிர பகவான்' ஏற்படுத்திக் கொடுக்கக் காரணமாக இருந்தார்.

இவ்வாறு, Direction of Life... என்ற வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கும் தசா - புத்தி - அந்தரங்கள்... ஜாதகரின் வாழ்வில், அவரது 'கர்ம வினைகளின் பூர்வ புண்ணிய - பாப வினைகளின் விளைவுகள் நிகழும் தருணங்கள மிகத் துல்லியமாகச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை..

ஸாய்ராம்.



தெய்வத்திரு. அண்ணார் திரு. ரெங்கராஜன் அவர்களின் நினைவாக...


 

சமர்ப்பணம்...

தன்னை ஈர்த்துத் தன்மயமாக்கிய

தவமுனி, தானாய் தனக்குள் எழுந்திட,

தன்னையே ஈந்த தவமுனிப் புதல்வன்.

இயமம் என்ற பக்தி ஒரு புறம்...

நியமம் என்ற நேர்த்தி மறுபுறம்...

அன்பு, பண்பு, கருணை, நல்வாக்கென

நலிந்தோர் நலனைப் பேணிய சீலன்.

நிலையற்ற வாழ்வின் நிலையை உணர்த்தி,

நித்ய வாழ்வின் நிறைவை உணர்த்திட,

நீற்றை நிறைவாய் அளித்திட்ட சேயோன் !


நல்லோரைக் கைவிடும் காலச் சல்லடை,

இன்று இவரையும் கை விட்டதுவோ - இல்லை

தன் புகழ் சேர்த்த தவமுனிவர் தம்

திருவடிக் கமலங்கள் சேர்த்ததுவோ !!


... என்றும் உங்கள் நினைவில்...

(நிலைபெற்ற நாளின் (20.12.2022) நினைவாக...)


ஸாய்ராம்.


Wednesday, January 18, 2023

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 240. 'தசா - புத்தி - அந்தரம் இவற்றின் சூட்சுமம்.' பகுதி 2.


 

(ஜென்ம நட்சத்திரத்தையும், அதன் பாத சாரத்தையும், அந்த நட்சத்திரத்தின் அதிபதியையும் அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பிறவிக்கான தசா (Direction of Life) தீர்மானிக்கப்படுகிறது....)

முன் பகுதித் தொடர்ச்சி... 

ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னத்திற்கு யோகமான பாவங்கள்,,, என அனைத்து பாவங்களும், அந்த பாவங்களுக்கு உரிய கிரகங்களும் வலுத்திருந்து, அவர்களது தசாக்கள், ஜாதகரின் 'தக்கக் காலங்களில்' நடைபெறாமல் போவதும்...

மற்றுமொரு ஜாதகத்தில், லக்னம், லக்தனத்திற்கு யோகமான பாவங்கள்... என அனைத்து பாவங்களும், அந்த பாவங்களுக்கு உரிய கிரகங்களும் வலு இழந்து இருந்து, அவர்களின் தசாக்கள் ஜாதகரின் தக்கக் காலங்களில் நடைபெறுவதும்...

நாம் அனுபவத்தில் அறிந்து கொள்வதாக இருக்கிறது. அது மாதிரியான சூழல்களில்தான், புத்திகள்... அந்தரங்கள்... என்ற 'தசாகளின் உட்பிரிவுகள்' ஜாதகரின் 'வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை' சுட்டிக் காட்டிவிடுகின்றன.

இதில், புத்தி... என்பது, தசா நடத்தும் கிரகத்தின் காலத்தை ஒன்பதாகப் பகுத்து, அதன் ஒவ்வொரு பகுதியையும் தசாக்கள் வகைபடுவது போல பகுத்து ஆயும் முறை. 

உதாரணமாக, 'கேது பகவானின்' தசாக்காலம் 7 வருடங்களாக இருக்கிறது, அதை 'சுய புத்தி' என்பதாக 'கேது பகவானில் (4 வருடம் 27 நாட்கள்)' ஆரம்பித்து, சுக்கிர பகவான் (1 வருடம் 2 மாதங்கள்) - சூரிய பகவான் (4 மாதம் 6 நாட்கள்)- சந்திர பகவான் (7 மாதங்கள்) - செவ்வாய் பகவான் 4 மதம் 27 நாட்கள்) - ராகு பகவான் (1 வருடம் 18 நாட்கள்) - குரு பகவான் 11 மாதம் 6 நாட்கள்) - சனி பகவான் (1 வருடம் 1 மாதம் 9 நாட்கள்) - புத பகவான் (11 மாதம் 27 நாட்கள்) என பகுத்து பலன்களை ஆயும் முறை.

'ரிஷப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஜாதருக்கு, தனது 8 ஆவது வயதில் 'கேது பகவானின்' தசாக்காலம் நடைபெற்று, அந்தக் 'கேது பகவான்' தனது 'சுய' நட்சத்திர சாரமான, 'மக நட்சத்திரத்தில்' 4 ஆம் பாவமான 'உயர கல்வி' ஸ்தான பாவத்தில் (சிம்ம இராசியில்) 'சூரிய - புத பகவான்களோடு' இணைந்திருக்கும் பக்ஷத்தில்,  ஜாதகருக்கு உயர் கல்விக்கான 'பாக்கியம்' இருக்கிறது என்பதை 'நிபுண யோகமான' சூரிய - பகவான்களின் இணைவு உறுதிப்படுத்தினாலும், சூரிய - புத பகவான்களோடு இணைந்திருக்கும் 'வலுவான' கேது பகவானின் 7 வருட தசாக்காலம், ஜாதகரின் 'ஆரம்ப காலக் கல்வியை' (3 முதல் 9 ஆம் வகுப்பு வரை...) மிகவும் மந்தப்படுத்திக் கொண்டிருப்பதைக் காணமுடியும்.

பாலர் வகுப்பிலிருந்து 3 ஆம் வகுப்பு வரை நன்கு சுறு சுறுப்புடன், நிறைந்த கிரகிப்புத் தன்மையுடன் இருந்த குழந்தை, சற்று மந்தமாக மாறுவதும், படிபடியான வகுப்புகளில் சுமாராகத் தேறுவதும், 9 ஆம் வகுப்புக்கு போகும் போது, குடும்பத்தினருக்கு, 10 ஆம் வகுப்பைக் கடப்பதற்கே தடுமாறும் இந்தக் குழந்தை எவ்வாறு பட்டப் படிப்புகளுக்குப் போகப் போகிறது ? என்ற கவலையும் குடிகொள்வது இயல்புதானே!

ஆனால், அந்தக் குழந்தை, 9 ஆம் வகுப்பைக் கடந்து, 10 ஆம் வகுப்பில் புகுந்ததிலிருந்து, இதுவரை இல்லாத ஆர்வத்துடன், மிக கவனமாகக் கல்வியில் கவனம் செலுத்தி, புத்தி சக்தியோடு கூடி, மிக நல்ல தேர்ச்சியை பெற்று விடும். அதற்குக் காரணம், 'கேது பகவானின்' தசாவில் கடைசிக் கால புத்தியான, 'புத பகவானின்' 11 மாத 27 நாட்களுக்கான 'புத்திக் காலம்தான்'.

தனது 'புத்திக் காலம்' வரும் வரை பொறுத்திருந்த 'புத பகவான்', 'சிம்ம இராசியதிபதியான' சூரிய பகவானின் துணையோடு (நிபுண யோகம்), ஜாதகரை உயர் கல்விக்காகத் தயார் செய்து விடுவார். தொடரும் 'சுக்கிர பகவானின்' 20 வருட தசாக் காலங்கள் ஜாதகரை அவரின் 'இலக்கை' நோக்கி அழைத்துச் செல்லும். இதுதான், 'புத்திகள்' நடத்தும் லீலைகள்.

தொடர்ந்து 'அந்தரங்கள்' நடத்தும் லிலைகளையும் ஆய்வோம்...

ஸாய்ராம்.




Tuesday, January 17, 2023

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 239. 'தசா - புத்தி - அந்தரம்' இவற்றின் சூட்சுமம். பகுதி 1.


 

தசா, புத்தி, அந்தரம்... என்பதில் எண்ணற்ற சூட்சுமங்கள் அடங்கியிருக்கின்றன.

ஒவ்வொரு ஜாதகத்திலும், தினசுத்தி - கிரக பாதசாரம் - இராசி - நவாம்ஸம் இவற்றை குறிப்பிட்ட பிறகு, 'கர்ப்ப செல் நீக்கி இருப்பு...' என்பதாக வருடம் - மாதம் - நாள் - நாழிகை - நொடி என்பதான குறிப்புக் காணப்படும். இந்தக் குறிப்பைத்தான் 'ஜனன கால தசா இருப்பு' என்பதாகக் கொள்கிறோம்.

ஜனனகால நட்சத்திரத்தையும், அந்த நட்சத்திரம் சார்ந்த கிரகத்தின் அடிப்படையையும், நட்சத்திரம் நின்ற பாதசாரங்களை அடிப்படையையும் கொண்டுமே, இந்த 'கர்ப்ப செல் நீக்கிய இருப்பு' என்ற கணக்கீடு கணிக்கிடப்படுகிறது. 

எண்ணற்ற பிறவிகளைக் கடந்து வரும் ஜீவன், கடந்த பிறவியில் எந்த நட்சத்திரத்தின் பாதசாரங்களின் ஒன்றில், தனது ஜீவனை இழந்திருக்குமோ, அதே பாதசாரத்தில்தான், இந்தப் பிறவியை அடைவார்... என்பதுதான் 'பிறவி இரகசியாமகக் கொள்ளப்படுகிறது. அதனால்தான், ஜென்ம நட்சத்திரத்தையும், அதன் பாதசாரத்தையும், அந்த நட்சத்திர அதிபதியையும் அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பிறவிக்கான தசா (Direction of Life) தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நட்சத்திரங்களின் அதிபதிகளின் தசாக்கள் தொடர்கின்றன.

உதாரணமாக, அஸ்வினி நட்சத்திரத்தின் 4 ஆவது பாதத்தில் ஒரு ஜீவனது ஆயுள் முடிந்தால், மீண்டும் பிரிதொரு காலத்தில் அந்த ஜீவன், அதே அஸ்வினி 4 ஆவது பாதத்தில் பிறந்து, தனது வாழ்வின் பயணத்தைத் தொடர்வார். அதாவது ஏறத்தாள அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதியாகிய 'கேது பகவானின்' தசாவில்,  வருடம் 5 மாதம் 6 நாட்கள் 24 நாழிகை 25 நொடிகள் 17 ல், ஒருவர் தனது முந்தைய வாழ்க்கைப் பயணத்தை முதித்திருந்தால், தொடரும் இந்தப் பிறவியில், அதே அஸ்வினி நட்சத்திரத்தின் 4 ஆம் பாதத்தில் பிறந்து, எஞ்சிய கேது பகவானின் தசாக் காலமான, வருடம் 1 மாதம் 5 நாட்கள் 25 நாழிகை 34 நொடி 43 யிலிருந்து தனது வாழ்க்கைப் பயணத்தை, சுக்கிர பகவான் (20 வருடங்கள்) - சூரிய பகவான் (6 வருடங்கள்)- சந்திர பகவான் (10 வருடங்கள்) - செவ்வாய் பகவான் (7 வருடங்கள்)... என தொடர்ந்து ஏனைய கிரகங்களின் தசாக் காலங்களின் வழியே பயணிப்பார்.

இவ்வாறு தசா நடத்தும் நட்சத்திராதிபதியான கிரகம், ஏனைய கிரகங்களோடு எவ்வாறு சூட்சுமமாகத் தொடர்பு கொள்கிறது... என்பதை தொடர்ந்து ஆய்வோம்.

ஸாய்ராம்.



Saturday, January 14, 2023

திருக்குறள் உணர்த்தும் ஞானம் : பகுதி - 12. 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது, ஊதியம் இல்லை உயிர்க்கு'


 

'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது, 

ஊதியம் இல்லை உயிர்க்கு'  - குறள் : 231. புகழ்

வரியவர்களுக்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வேண்டும். அதுவே இந்த உயிருக்கு அளிக்கும் ஊதியமாக இருக்கும், என்பதுதான் இந்தக் குறளுக்கு அளிக்கும் பொதுவான விளக்கமாக அமைந்திருக்கும்.

சற்று இந்தக் குறளை, ஆய்ந்து பார்த்தால், 

- 'புகழ்' என்பது, இறைவனிடம் 'சரணாகதி அடைவதை' குறிக்கும்.

- 'ஊதியம் இல்லை உயிர்க்கு...' என்ற சொற்றொடர் சிந்தனையை தூண்டுவதாக இருக்கும். காரணம் 'ஊதியம்' என்பது 'கூலி' என்பதைத்தான் குறிக்கும். உயிர் என்பது 'ஜீவனாகும்'. அந்த ஜீவன் நிலையற்ற உடலைச் சார்ந்தும்... நிலையான 'ஆத்மா' என்ற பரம்பொருளைச் சார்ந்தும் (ஆத்மா - ஜீவன்(உயிர்) - உடல்) இருக்கிறது. 

இந்த இரண்டு நிலைகளில், 'ஜீவன்' இந்த 'நிலையற்ற உடலை' சார்ந்து இருக்கும் போது, இந்த உலக  வாழ்விற்கான.உடல் உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியம், இந்த உடலை வளர்த்து விடுகிறது. அந்தந்த ஜீவர்களின் 'பூர்வ கர்ம வினைகளுக்கு' ஏற்ப, இந்த உலகில் அந்த ஜீவர்களின் உடல் வாழ்வும் அமைந்து விடுகிறது.

ஆனால், ஜீவன், நிலையான' ஆத்மாவை சார்ந்து இருக்கும் போது, உடல் சார்ந்த உழைப்பிற்கான ஊதியம், அந்த 'ஆத்ம முன்னேற்றத்திற்கு'  உதவிடாமல் போகிறது. 

ஆத்ம முன்னேற்றத்திற்கான 'ஊதியம்', இந்த உயிர், அந்த ஆத்மாவான 'இறை சக்தியிடம்', பக்தி கொண்டு சரணடைவதில்தான் இருக்கிறது. அந்த சரணாகதியைத்தான்... 'ஈதல்' என்றும், அந்த இறை சக்தியுடன் இணைந்து வாழும் நிலையான வாழ்வைத்தான்... 'இசைபட வாழ்தல்' என்றும், இதுவே ஜீவனாகிய உயிர்க்கு உண்டான கடமையென்றும்... வரையருக்கிறார், 'தெய்வப் புலவர்'. 

ஆம், 'அணுவைத் துளைத்து, அதில் ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள்' என்ற ஔவைத் தாயாரின் பொன்மொழி, குறள்களில் புதைந்துள்ள பேருண்மைகளை ஆய்ந்து அறிந்துகொள்ளத் தூண்டுகிறது !

ஸாய்ராம்.


Friday, January 6, 2023

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 238. 'சனியைப் போல ராகு பகவானும்... செவ்வாயைப் போல கேது பகவானும்...'


 'சனி பகவானைப்' போல 'ராகு பகவான்' பலனளிப்பார் என்றும்... 'செவ்வாய் பகவானைப்' போல 'கேது பகவான்' பலனளிபார் என்றும்... வழங்கப்படுவதை அறிந்திருப்போம்.

ப்ரத்யக்ஷமாக காணப்படும் ஒற்றுமைகளாக, சனி பகவானும், ராகு பகவானும் தங்களது 'தசாக் காலங்களை' ஏறத்தாள (சனி பகவான் - 19 வருடங்கள், ராகு பகவான் - 18 வருடங்கள்)  ஒரே மாதிரியாகக் கடக்கிறார்கள். தங்களை அடையாளப்படுத்தும் வண்ணங்களாக 'கரிய நிறத்தை' (குறிப்பாக நீல வண்ணத்தையும், கரு நீல வண்ணத்தையும் கொண்டாலும்...)  பொதுவாகக் கொள்கிறார்கள்.

அது போல, செவ்வாய் பகவானும், கேது பகவானும் தங்களது 'தசாக் காலங்களை' ஒரே மாதிரியாகக் (7 வருடங்கள்) கடக்கிறார்கள், தங்களின் வண்ணங்களாக 'சிவப்பு வண்ணத்தை' (குறிப்பாக சிவப்பு வண்ணத்தையும், கலப்பு வண்ணங்களையும் கொண்டாலும்) பொதுவாகக் கொள்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டவைகள் பொதுவானவைகள்தானெ தவிர, அதன் உள்ளார்ந்த சூட்சுமம் என்னவெனில் ;

'ராகு பகவான்', ஜீவனின் இந்தப் பிறப்புக்கான 'கர்மாவை' (பிராரர்த்தக் கர்மா) குறிப்பிடுகிறார், அதன் அனுபவங்களை காலப் பரிமாணமாகக் கொள்கிறார் 'சனி பகவான்'. அது போல, இந்தக் கர்மாவிலிருந்து விடுபட்டு, தொடர்ந்து கொண்டிருக்கும் பிறப்புச் சூழலைக் கட்டவிழ்க்கிறார் 'கேது பகவான்'. அதன்கான ஆற்றலைத் தந்திருள்கிறார் 'செவ்வாய் பகவான்'.

உதாரணமாக, 'துலா லக்னத்தில்' பிறக்கும் ஒரு ஜாதகருக்கு, 'சனி பகவான்' முதல் யோகக்காரராகிறார். ஜாதகரின் ஆரம்பகால தசைகள் 'சுக்கிர, சூரியன், சந்திரன் செவ்வாய்' எனக் கடக்கும் பட்சத்தில், சரியான காலக் கட்டத்தில் அவரால் 'சனி பகவானின்' யோக நிலை தசாவை அனுபவிக்க முடியாது போகும். அவரது ஜாதகத்தில் 'ராகு பகவான்' சுபமான ஆதிபத்தியம் (திரிகோணம், கேந்திரம் அல்லது பணபரம்) பெற்று... திரிகோணாதிபதிகளான 'சனி - சுக்கிரன் - புத பகவான்களின்' தொடர்பை (சேர்க்கை, பார்வை, சாரம்) பெற்று, அவரது 'தசா நடக்கும்' பக்ஷத்தில், 'சனி பகவான்' அளிக்கக் கூடிய அனைத்து சுப பலன்களையும், 'ராகு பகவான்' அளித்து விடுவார்.

அது போலவே, 'கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில்' பிறப்பவர்களுக்கு 'செவ்வாய் பகவான்' முதல் தர யோகக்காரராகிறார். அவரது 'தசாவை'ஜாதகர்கள் தக்க சமயத்தில் அனுபவிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, அந்தக் காலக் கட்டத்தில் 'கேது பகவானின்' தசா நடக்கும் பக்ஷத்தில், மேலே குறிப்பிட்டவாறு 'கேது பகவான்' அமையும் பக்ஷத்தில், 'செவ்வாய் பகவான்' அளிக்கக் கூடிய அனைத்து சுப பலன்களையும் 'கேது பகவான்' அளித்தருள்வார்.

என்ணற்ற ஜாதகங்களில், இந்த அமைவு அளித்த அனுபவங்களைக் கண்டதற்குப் பின்னால்தான், இதை பதிவுடுகிறோம்.

ஸாய்ராம்.





Wednesday, January 4, 2023

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'சுருட்டுப் பிடிக்கும் ஆவி'


நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து, சற்றுத் தொலைவில் இருக்கும் அடுத்தப் பகுதிக்குச் செல்வதற்கு இரண்டு மலைச் சரிவுகள் கொண்ட பாதையைக் கடக்க வேண்டியிருந்தது. 

அந்த இரண்டு பகுதிகளுக்கு இடையேயான தொலைவு மிகக் குறைவாக இருந்தாலும், அந்த குறுகிய இடத்தைக் கடக்கும் போது, இரண்டு பகுதிகளையும் மறைத்தபடி மலைச் சரிவுகள் அமைந்திருப்பதாலும், பகலிலேயே ஆள் நடமாட்டம் குறைந்திருப்பதாலும், சற்று பயந்தே கடக்க வேண்டியிருக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில், அதைத் தனியே கடப்பது என்பது, என் வயதையொத்த சிறுவர்களுக்கு சிம்ம சொப்பனம்தான்.

அந்த முதல் வளைவையொட்டி, ஒரு சமாதி இருந்தது. எங்கள் ஊரில் மீன் வியாபாரம் செய்தவரின் சமாதிதான் அது. அவருக்கு சுடுட்டுப் பிடிக்கு பழக்கம் இருந்தது. ஆதலால் இரவு நேரத்தில், அந்தச் சமாதிக்கு வெளியே அவர் வந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த நெருப்பின் வெளிச்சத்தையும், புகையின் வாசனையையும், அந்தப் பகுதியைக் கடப்போர் பார்த்திருப்பதாகவும், எல்லோரும் பேசிக்கொள்வது, எனது மனத்தில் நீங்காத பயத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஓர் நாள் மாலை நேரத்தில் அந்தப் பாதையை நான் கடக்க நேர்ந்தது. அடுத்தப் பகுதியில் இருக்கும் எங்களது இன்னொரு கடைக்கு தேநீர் கொண்டு போகவிருந்ததால், அந்தப் பாதையில் செல்லும், அடிக்கடி எங்களது ஊருக்கு வந்து செல்லும், ஒருவரின் துணையோடு, என்னை அனுப்பிவைத்தனர். 

அவர் அருகில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர். எங்கள் ஊரில் இருக்கும் மதுக் கடைக்கு வந்து மது அருந்தி விட்டு, தனது கிராமத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தவர், என்பதை  அவருடன் செல்லும் போதுதான் அறிந்து கொண்டேன். பேசிக்கொண்டே சென்றாலும், அந்த வளைவையும், அதனையொட்டிய சமாதியையும், அதற்கு மேல் அமர்ந்து புகை பிடிப்பதாகச் சொல்லும் ஆவியையும், நினைத்து பயந்து கொண்டே சென்றேன்.

என்னுடன் வந்தவர், 'தம்பி, நான் இங்கிருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன், நீ அந்த வளைவைக் கடந்து விடு, பின் வெளிச்சத்தின் பகுதி வந்து விடும்.' என்று என்னிடம் சொல்லி விட்டு, பையில் இருந்த சுருட்டு ஒன்றை எடுத்து, அதைத் தீக்குச்சியால் பற்ற வைத்து, புகையை நன்றாக இழுத்த விட்ட படி, அந்த சாமாதியின் மீது அமர்ந்து விட்டார்.

பயந்து கொண்டே, மூச்சிறைக்க, வேகமாக சற்றுத் தூரம் சென்று, என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, திரும்பிப் பார்த்தேன். அந்த சமாதிக்கு மேல் அமர்ந்து கொண்டு, சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பவர்தான், ஊரார் நினைத்து பயந்து போன 'சுருட்டுப் பிடிக்கு ஆவி' என்பதை புரிந்து கொண்டேன்.

அதற்குப் பின், அந்த சமாதியைக் கடக்கும் போதெல்லாம், சைக்கிளில் ஒரு பெட்டியைக் கட்டிக் கொண்டு, அதில் மீன்களை வைத்து வியாபரம் செய்த அந்தப் பெரியவரின் அன்பு முகம், என் மனக் கண்களில் வந்து போய்க் கொண்டே இருந்தது..

ஸாய்ராம்.



ஜோதிடமும் அதன் சூட்சுமமும். பகுதி - 237. 'இராசியின் அமைப்பு உணர்த்து சூட்சுமம்' பாகம் - 7. 'சரமும்... ஸ்திரமும்'


 

இராசியின் பாவங்களை, சரம்... ஸ்திரம்... உபயம்... என்று பகுத்தறிந்து, அதன் பலத்தைக் கொண்டு, கர்ம பலன்களை அறிந்து கொள்வது, ஜோதிட ரீதியிலான ஒரு உபாயம்தான்.

பொதுவாக 'சர இராசியில் லக்னம் அமைந்தோர் தனது பூர்வத்தை விட்டு அகன்று பிரிதொரு இடத்தில் தமது வாழ்வை அமைத்துக் கொள்வார்கள் என்றும்... ஸ்திர இராசியில் லக்னம் அமைந்தோர், தனது பூர்வத்தை விட்டு அகலாத வாழ்வை அனுபவிப்பார்கள் என்றும்... உபய இராசியில் லக்னம் அமைந்தோர், பூர்வத்தோடும், பூர்வத்தை விட்டு அகன்று பிரிதொரு இடத்திலும், மாறி, மாறி வாழ்வை எதிர்கொள்வார்கள் என்றும்... கணிக்கப்படுவது தொன்று தொட்டு வரும் வழிமுறைதான்,

இதில் பூர்வத்தை விட்டு அகலுதல் மற்றும் பூர்வத்தை விட்டு அகலாது இருத்தல் என்ற... சரம் மற்றும் ஸ்திர இராசிகளை சற்று ஆராய்ந்து பார்த்தால், அதில் மறைந்து இருக்கும் ஒரு நுட்பம் நமக்கு புலப்படும்.

சர இராசிகளாகக் குறிப்பிடப்படுபவைகள், மேஷம்... கடகம்... துலாம்... மகர இராசிகளாகும். அவற்றின் அதிபதிகளாக முறையே செவ்வாய்... சந்திரன்... சுக்கிரன்... சனி பகவான்கள் அமைகிறார்கள்.

ஸ்திர இராசிகளாக, ரிஷபம்... சிம்மம்... விருச்சிகம்... கும்பம்... ஆகிய இராசிகளும், அவற்றின் அதிபதிகளாக முறையே சுக்கிரன்... சூரியன்... செவ்வாய்... சனி பகவான்களும் அமைகிறார்கள்.

இந்த இரண்டு அமைவுகளின் அதிபதிகளை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு சூட்சுமம் புலனாகும். அது, 'சூரிய பகவானும்'... 'சந்திர பகவானும்'... இந்த இரண்டு அமைவுகளையும் மாறுபட வைக்கிறார்கள் என்பதுதான் அது.

நிலையாக இருக்கும் 'சூரிய பகவான்' நிலைபட வாழ்தலையும்... நிலையில்லாமல் சதா இடம் விட்டு இடம் நகரும் 'சந்திர பகவான்' ஓரிடத்தில் நிலை நிற்க முடியாமல் வாழும் வாழ்தலையும்... குறிப்பிடுகிறார்கள். 

இந்த இரண்டு கிரகங்களின் வலிமையைக் கொண்டு (ஆட்சி, உச்சம், சமம், பகை, நீசம், சேர்க்கை, பார்வை மற்றும் சாரம்) , ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பயணத்தை மிக இலகுவாக கணித்திருக்கிறார்கள், ஜோதிட வல்லுனர்கள்.

தொடர்ந்து ஆய்வோம்...

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...