'கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லா நியமத் திடைநின் றானே'
(திருமந்திரம் ; இயமம் ; பாடல் 0 554)
'பதஞ்சலி மகாமுனிவர் வகுத்தளிக்கும் 'அட்டாங்க யோகத்தின்' முதல் படியாக இந்த 'இயமம்' என்ற 'பக்தி நெறி' வருகிறது.
அட்டாங்க யோகம் (இயமம்- நியமம்-ஆசனம்-பிரணாயாமம்-பிரத்யாகாரம்-தாரணை-தியானம்-சமாதி) என்பது, யோக மார்க்கமாக இறைவனை அடையும் வழியாகும். இந்த யோகம்.... இவ்வுயிரையும் (ஜீவன்), உடலையும் (உடல்), இவற்றிற்கு மூலமாக இருக்கும் இறைவனிடம் (ஆத்மா) கொண்டு சேர்க்கும் உபாயத்தை பயிற்றுவிக்கிறது.
இதன் முதல் படியாக பக்தியை (இயமம்) முன்வைக்கிறார், பதஞ்சலி தேவர். அந்த பக்திதான் படிப்படியாக அடுத்தடுத்த நிலைகளுக்கு ஜீவனை இட்டுச் செல்கிறது.
இறைவனின் மீது வைக்கும் பக்தியினால் விளைவதுதான் என்ன ?
இந்த கேள்விக்கு 'திருமூலர்' அளிக்கும் பதிலாகத்தான் இந்த திருமந்திரப் பாடல் அமைகிறது.
~ மனதளவிலும் தீங்கு நினைக்காதவனாய்...
~ பொய் கூறாதவனாய்...
~ பிறர் பொருளை அபகரிக்காதவனாய்...
~ அன்பு, அமைதி, பொறாமையின்மை, தூய்மை, ஏற்றுக்கொள்ளும் தன்மை, ஆனந்தம், தர்மம், ஆசையின்மை என்ற 'எண் குணங்களைக்' கொண்டவனாய்...
~ பணிவுடையவனாய்...
~ நீதி தவறாமல் இருப்பவனாய்...
~ பகிர்ந்து கொடுப்பவனாய்...
~ குற்றமில்லாதவனாய்...
~ முறையற்ற காமமில்லாதவனாய்...
ஒருவனை மாற்றி விடும் வல்லமையை இந்த 'பக்தி' என்ற இயமம் நமக்கு அளித்து விடுகிறது. இந்த பக்தியே தொடரும் யோகங்களுக்கு அடிப்படையாகவும் அமைகிறது.
பக்தியின் பெருமையை, இதை விட வேறு எவ்வாறு எடுத்தியம்ப முடியும் !
ஸாய்ராம்.

No comments:
Post a Comment