Wednesday, January 18, 2023

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 240. 'தசா - புத்தி - அந்தரம் இவற்றின் சூட்சுமம்.' பகுதி 2.


 

(ஜென்ம நட்சத்திரத்தையும், அதன் பாத சாரத்தையும், அந்த நட்சத்திரத்தின் அதிபதியையும் அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பிறவிக்கான தசா (Direction of Life) தீர்மானிக்கப்படுகிறது....)

முன் பகுதித் தொடர்ச்சி... 

ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னத்திற்கு யோகமான பாவங்கள்,,, என அனைத்து பாவங்களும், அந்த பாவங்களுக்கு உரிய கிரகங்களும் வலுத்திருந்து, அவர்களது தசாக்கள், ஜாதகரின் 'தக்கக் காலங்களில்' நடைபெறாமல் போவதும்...

மற்றுமொரு ஜாதகத்தில், லக்னம், லக்தனத்திற்கு யோகமான பாவங்கள்... என அனைத்து பாவங்களும், அந்த பாவங்களுக்கு உரிய கிரகங்களும் வலு இழந்து இருந்து, அவர்களின் தசாக்கள் ஜாதகரின் தக்கக் காலங்களில் நடைபெறுவதும்...

நாம் அனுபவத்தில் அறிந்து கொள்வதாக இருக்கிறது. அது மாதிரியான சூழல்களில்தான், புத்திகள்... அந்தரங்கள்... என்ற 'தசாகளின் உட்பிரிவுகள்' ஜாதகரின் 'வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை' சுட்டிக் காட்டிவிடுகின்றன.

இதில், புத்தி... என்பது, தசா நடத்தும் கிரகத்தின் காலத்தை ஒன்பதாகப் பகுத்து, அதன் ஒவ்வொரு பகுதியையும் தசாக்கள் வகைபடுவது போல பகுத்து ஆயும் முறை. 

உதாரணமாக, 'கேது பகவானின்' தசாக்காலம் 7 வருடங்களாக இருக்கிறது, அதை 'சுய புத்தி' என்பதாக 'கேது பகவானில் (4 வருடம் 27 நாட்கள்)' ஆரம்பித்து, சுக்கிர பகவான் (1 வருடம் 2 மாதங்கள்) - சூரிய பகவான் (4 மாதம் 6 நாட்கள்)- சந்திர பகவான் (7 மாதங்கள்) - செவ்வாய் பகவான் 4 மதம் 27 நாட்கள்) - ராகு பகவான் (1 வருடம் 18 நாட்கள்) - குரு பகவான் 11 மாதம் 6 நாட்கள்) - சனி பகவான் (1 வருடம் 1 மாதம் 9 நாட்கள்) - புத பகவான் (11 மாதம் 27 நாட்கள்) என பகுத்து பலன்களை ஆயும் முறை.

'ரிஷப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒரு ஜாதருக்கு, தனது 8 ஆவது வயதில் 'கேது பகவானின்' தசாக்காலம் நடைபெற்று, அந்தக் 'கேது பகவான்' தனது 'சுய' நட்சத்திர சாரமான, 'மக நட்சத்திரத்தில்' 4 ஆம் பாவமான 'உயர கல்வி' ஸ்தான பாவத்தில் (சிம்ம இராசியில்) 'சூரிய - புத பகவான்களோடு' இணைந்திருக்கும் பக்ஷத்தில்,  ஜாதகருக்கு உயர் கல்விக்கான 'பாக்கியம்' இருக்கிறது என்பதை 'நிபுண யோகமான' சூரிய - பகவான்களின் இணைவு உறுதிப்படுத்தினாலும், சூரிய - புத பகவான்களோடு இணைந்திருக்கும் 'வலுவான' கேது பகவானின் 7 வருட தசாக்காலம், ஜாதகரின் 'ஆரம்ப காலக் கல்வியை' (3 முதல் 9 ஆம் வகுப்பு வரை...) மிகவும் மந்தப்படுத்திக் கொண்டிருப்பதைக் காணமுடியும்.

பாலர் வகுப்பிலிருந்து 3 ஆம் வகுப்பு வரை நன்கு சுறு சுறுப்புடன், நிறைந்த கிரகிப்புத் தன்மையுடன் இருந்த குழந்தை, சற்று மந்தமாக மாறுவதும், படிபடியான வகுப்புகளில் சுமாராகத் தேறுவதும், 9 ஆம் வகுப்புக்கு போகும் போது, குடும்பத்தினருக்கு, 10 ஆம் வகுப்பைக் கடப்பதற்கே தடுமாறும் இந்தக் குழந்தை எவ்வாறு பட்டப் படிப்புகளுக்குப் போகப் போகிறது ? என்ற கவலையும் குடிகொள்வது இயல்புதானே!

ஆனால், அந்தக் குழந்தை, 9 ஆம் வகுப்பைக் கடந்து, 10 ஆம் வகுப்பில் புகுந்ததிலிருந்து, இதுவரை இல்லாத ஆர்வத்துடன், மிக கவனமாகக் கல்வியில் கவனம் செலுத்தி, புத்தி சக்தியோடு கூடி, மிக நல்ல தேர்ச்சியை பெற்று விடும். அதற்குக் காரணம், 'கேது பகவானின்' தசாவில் கடைசிக் கால புத்தியான, 'புத பகவானின்' 11 மாத 27 நாட்களுக்கான 'புத்திக் காலம்தான்'.

தனது 'புத்திக் காலம்' வரும் வரை பொறுத்திருந்த 'புத பகவான்', 'சிம்ம இராசியதிபதியான' சூரிய பகவானின் துணையோடு (நிபுண யோகம்), ஜாதகரை உயர் கல்விக்காகத் தயார் செய்து விடுவார். தொடரும் 'சுக்கிர பகவானின்' 20 வருட தசாக் காலங்கள் ஜாதகரை அவரின் 'இலக்கை' நோக்கி அழைத்துச் செல்லும். இதுதான், 'புத்திகள்' நடத்தும் லீலைகள்.

தொடர்ந்து 'அந்தரங்கள்' நடத்தும் லிலைகளையும் ஆய்வோம்...

ஸாய்ராம்.




No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...