திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில், புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார் பெரியவர். சந்திரமௌளீஸ்வர பூஜைக்குப் பின், இரவு ஓய்வுக்கு செல்லுமுன், தனக்குப் பணிவிடை செய்யும் நாகராஜனிடம், 'அப்பா நாகு ! நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஸ்நானத்திற்கு எழுந்திருக்க வேண்டும். ஞாபகம் வைத்துக்கொள்' என்றார்.
நாகராஜன் பணிவுடன், 'உத்தரவு பெரியவா ! நாளை அதிகாலை 3.30 மணிக்கு, 'ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர...' என்ற நாமாவளியைப் பாடுகிறேன், பெரியவா !' என்றார்.
நாகுவின் பதிலைக் கேட்டு சிரித்துக் கொண்டே, பெரியவர், 'நான் உங்களை 3.30 மணிக்கு எழுப்புகிறேன், என்று சொல்வது முறையாக இருக்காது என்பதனால், ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர... எனச் சொல்வதாகக் கூறுகிறாயா ?' என்றதற்கு, பதில் என்ன சொல்வது என்பது தெரியாமல், தலையைக் குனிந்து கொண்டே சிரித்தார் நாகராஜன்.
'சரி அப்படியெ செய் !' என்ற படியெ பெரியவர், தனது அறைக்குள் சென்றார்.
ஆனால், நாகராஜனுக்கு இருந்த சிக்கல், அந்த சத்திரத்தில் கடிகாரம் இல்லை. இவரிடமும் அலாரம் அடித்து எழுப்பிவிடக் கூடிய கடிகாரம் இல்லை. இவரிடம் இருந்தது என்னவோ, ஒரு சாவி கொடுக்கும் கைக்கடிகாரம் மட்டும்ந்தான். அதுவும் அவரது மாமா, உபநயனத்தின் போது கொடுத்தது. சாமான்கள் வைக்கும் அறையிலிருந்த பெட்டியிலிருந்து அந்தக் கடிகாரத்தை எடுத்து, அதற்குச் சாவி கொடுத்துக் கட்டிக் கொண்டார். பின், பெரியவரின் அறைக் கதவுக்கு அருகே அமர்ந்து மெதுவாக 'விஷ்ணு சகஸ்ரநாமாவை' சொல்ல ஆரம்பித்தார்,
அடிக்கொரு தடவை கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர், காலை சரியாக 3.30 மணிக்கு எழுந்திருந்து, கதவுக்கு முன் நின்று 'ஹர ஹர சங்கர,,,' என்ற அடுத்த நொடி, கதவு திறந்து தேஜஸ்ரூபியாக மகா பெரியவர் தரிசனமளித்தார். இந்த 'சுப்ரபாத தர்சினத்தை' காணும் பேறு நாகராஜனுக்குக் கிட்டியது. பின் வாசலை நோக்கி நடந்த பெரியவருக்குக் கைக்ங்கர்யம் செய்வதற்காக பின்னால் சென்றார்.
அடுத்த இரண்டு நாட்களும் இதே போல, நாகராஜனின் சகஸ்ரநாம பாராயானமும், சரியான நேரத்திற்கு 'ஹர ஹர சங்கர...; நாமஸ்மரணமும் தொடர்ந்தன. நான்காம் நாள் அதிகாலை வரை விழித்திருந்த நாகராஜன், சற்று அயர்ந்து தூக்கத்தில் ஆழ்ந்தார். 'ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர,,,; என்ற மகா பெரியவரின் குரலைக் கேட்டு விழித்ததும்தான், நாகராஜனுக்கு தான் நன்றாக தூங்கிவிட்டது தெரிய வந்தது.
பெரியவரை வாஞ்சையுடன் பார்த்த நாகரஜனிடம், 'குழந்தாய் ! நேரம் இப்போது 3.30 மணி. முழுநாள் சேவையினால் நீ சோர்வுற்று, அதனால்தான் சற்று அயர்ந்து விட்டாய். இது இயற்கையாக நடப்பதுதான்.' என்று கூறியபடி, வாசலை நோக்கி அடியெடுத்து வைக்கும் போதுதான், நாகராஜன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார்... மணி சரியாக 3.30.
அடுத்த ஐந்தாம் நாள் நாகராஜன் கங்கணம் கட்டிக் கொண்டு , ஒரு பானையில் தண்ணீரைக் கொண்டு வந்து அருகில் வைத்துக் கொண்டு, சகஸ்ரநாம பாராயணமும் அவ்வப்போது, குடத்து நீரினால் கண்களை கழுவிக் கொண்டும் அமர்ந்திருந்தார். இருந்தும், 2.30 மணியளவில் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து போனார்.
ஆனால், பெரியவரின் அறைக்கதவு சரியாக 3.30 க்குத் திறந்தது. வெளியே வந்த பெரியவர், நாகராஜன், சரிந்து தரையில் படுத்து உறங்குவதைக் கண்டார். 'ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர...' என்ற பெரியவரின் குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த நாகராஜனைப் பார்த்து, சிரித்துக் கொண்டே, 'இன்னைக்கும் பாவம் உன்னால சரியான நேரத்திற்கு எழுந்திருக்க முடியல. சரி ஸ்நானத்திற்கு ஏற்பாடு செய்'. என்றபடி நடந்தார். மீண்டும், நாகராஜன் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தர். மணி சரியாக 3.30.
எந்தக் கடிகாரமும் இல்லாம, எப்படி பெரியவா தினம் தினமும் சரியான நேரத்திற்கு எழுந்திடுறார் ?' இந்த கேள்வி நாகராஜனின் மனதை துளைத்துக் கொண்டே இருந்தது. எப்படியும் இன்று மதிய ஓய்வின் போது அவரிடம் கேட்டு விட வேண்டும், என்று நினைத்தார். அது போலவே பெரியவர், ஓய்வாக அமர்ந்திருந்த போது, அருகே சென்று நமஸ்கரித்த போது, 'ஏதோ கேட்கனுனும்னு. வந்திருக்க... தயக்கமில்லாம கேட்டுடு' என்றர் பெரியவர்.
'நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால சரியான நேரத்திற்கு எழுந்திருக்க முடியல. ஆனால், பெரியவா ஒவொரு நாளும் சரியான நேரத்திற்கு எழுந்திடுறார். பெரியவாளுக்கு எப்படி சரியான நேரம் தெரிகிறது ? என்பதுதான் எனது சந்தேகம்... பெரியவா !' என்றார் நாகராஜன்.
'ஏதோ ஒரு கர்ண யக்ஷணி வந்து என்னை சரியான நேரத்திற்கு எழுப்பி விடுறாளாங்கிற சந்தேகமா ?' என்று சிரித்த பெரியவர், 'அதெல்லாம் ஒண்னும் இல்லே, மதுரையிலிருந்து இங்கே புதுக்கோட்டைக்கு வருகிற டி.வி.எஸ் பஸ்தான் என்னை சரியான நேரத்திற்கு எழுப்பிவிடுது. நான் முதல் நாள் எழுந்து வந்த போது கேட்டுக்கு முன்னால அந்த பஸ் போறதை பார்த்தேன். விசரிச்சதில, அந்த பஸ் ஒவ்வொரு நாளும் சரியா 3.30 க்கு இந்த சத்திரத்தை கடந்து போகுன்னு சொன்னாங்க. அந்த பஸ்சின் நேரத்தைப் பார்த்து நம்ம கடிகாரத்தை சரி செய்து வைச்சுக்கலாங்கிற அளவிற்கு, நேரத்தை சரியா கடைப்பிடிக்கிற கம்பெனின்னு சொன்னாங்க. தொடர்ந்து அந்த பஸ் அதே நேரத்தில தினமும் தவாறம வந்தது. அந்த பஸ்தான் எனக்குக் கடிகாரம்' என்று பெரியவா சிரித்துக் கொண்டே சொன்னார் !
ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர...
(நன்றி : ஆசிரியர் 'திரு ரமணி அண்ணா. ஜகத்குரு ஸ்ரீ மகா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா / Fb யிலிருந்து தொகுக்கப்பட்டது. )
தமிழாக்கம்.... அடியேன்.
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment