இராசியின் பாவங்களை, சரம்... ஸ்திரம்... உபயம்... என்று பகுத்தறிந்து, அதன் பலத்தைக் கொண்டு, கர்ம பலன்களை அறிந்து கொள்வது, ஜோதிட ரீதியிலான ஒரு உபாயம்தான்.
பொதுவாக 'சர இராசியில் லக்னம் அமைந்தோர் தனது பூர்வத்தை விட்டு அகன்று பிரிதொரு இடத்தில் தமது வாழ்வை அமைத்துக் கொள்வார்கள் என்றும்... ஸ்திர இராசியில் லக்னம் அமைந்தோர், தனது பூர்வத்தை விட்டு அகலாத வாழ்வை அனுபவிப்பார்கள் என்றும்... உபய இராசியில் லக்னம் அமைந்தோர், பூர்வத்தோடும், பூர்வத்தை விட்டு அகன்று பிரிதொரு இடத்திலும், மாறி, மாறி வாழ்வை எதிர்கொள்வார்கள் என்றும்... கணிக்கப்படுவது தொன்று தொட்டு வரும் வழிமுறைதான்,
இதில் பூர்வத்தை விட்டு அகலுதல் மற்றும் பூர்வத்தை விட்டு அகலாது இருத்தல் என்ற... சரம் மற்றும் ஸ்திர இராசிகளை சற்று ஆராய்ந்து பார்த்தால், அதில் மறைந்து இருக்கும் ஒரு நுட்பம் நமக்கு புலப்படும்.
சர இராசிகளாகக் குறிப்பிடப்படுபவைகள், மேஷம்... கடகம்... துலாம்... மகர இராசிகளாகும். அவற்றின் அதிபதிகளாக முறையே செவ்வாய்... சந்திரன்... சுக்கிரன்... சனி பகவான்கள் அமைகிறார்கள்.
ஸ்திர இராசிகளாக, ரிஷபம்... சிம்மம்... விருச்சிகம்... கும்பம்... ஆகிய இராசிகளும், அவற்றின் அதிபதிகளாக முறையே சுக்கிரன்... சூரியன்... செவ்வாய்... சனி பகவான்களும் அமைகிறார்கள்.
இந்த இரண்டு அமைவுகளின் அதிபதிகளை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு சூட்சுமம் புலனாகும். அது, 'சூரிய பகவானும்'... 'சந்திர பகவானும்'... இந்த இரண்டு அமைவுகளையும் மாறுபட வைக்கிறார்கள் என்பதுதான் அது.
நிலையாக இருக்கும் 'சூரிய பகவான்' நிலைபட வாழ்தலையும்... நிலையில்லாமல் சதா இடம் விட்டு இடம் நகரும் 'சந்திர பகவான்' ஓரிடத்தில் நிலை நிற்க முடியாமல் வாழும் வாழ்தலையும்... குறிப்பிடுகிறார்கள்.
இந்த இரண்டு கிரகங்களின் வலிமையைக் கொண்டு (ஆட்சி, உச்சம், சமம், பகை, நீசம், சேர்க்கை, பார்வை மற்றும் சாரம்) , ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பயணத்தை மிக இலகுவாக கணித்திருக்கிறார்கள், ஜோதிட வல்லுனர்கள்.
தொடர்ந்து ஆய்வோம்...
ஸாய்ராம்.
.png)
No comments:
Post a Comment