Thursday, January 19, 2023

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 241. 'தசா - புத்தி - அந்தரம் இவற்றின் சூட்சுமம்.' பகுதி 3.


... (ஜென்ம நட்சத்திரத்தையும், அதன் பாத சாரத்தையும்,அந்த நட்சத்திரத்தின் அதிபதியையும் அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பிறவிக்கான தசா (Direction of Life) தீர்மானிக்கப்படுகிறது.... (பகுதி 1.))

... (தனது புத்திக் காலம் வரை பொறுத்திருந்த 'புத பகவான்'... (பகுதி 2.))

முன் பகுதிகளின் தொடர்ச்சி...

தசாவைப் பற்றியும், புத்தியைப் பற்றியும் சென்ற இரு பகுதிகளில் ஆய்ந்தறிந்தோம். இப்போது, அந்தரம் என்ற உட்பிரிவைப் பற்றி ஆய்வோம்.

எவ்வாறு ஒரு கிரகத்தின் 'தசாக் காலத்தை' 9 உட்பிரிவுகளாகப் பிரித்து, அதனை ஆளும் 'ஒவ்வொரு புத்தி நாதர்களான கிரகங்கள்', ஜீவனின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ, அதுபோல, 'புத்தி நாதரின் காலத்தையும்' மேலும் ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரித்து, அந்த 'அந்தர நாதர்கள்', எவ்வாறு பலன்களை வெளிப்படுத்துகிறார்கள்... என்பதும் ஒரு நுட்பமான ஆய்வு முறைதான்.

ஒரு ஜாதகரின் 'தசாக் காலம்' சற்று பின்னடைவுள்ளதாக இருந்து, அவரின் 'புத்திக் காலம்' பலமாக இருக்கும் பட்சத்தில், அந்தப் 'புத்தி நாதர்', ஜாதகரின் புண்ணிய பலன்களை வெளிக் கொண்ர்பவராக அமைவார். அப்போது, அந்த புத்திக் காலத்தில், எப்போது, இந்த மாற்றம் நிகழக் கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை, 'அந்தர நாதர்' துல்லியமாகக் காட்டியருள்வார். இதற்குத் துல்லியமான கணக்கீடுகள் அவசியமாகிறது.

நாம் பகுதி 2 ல் விவரித்த உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். 'ரிஷப லகன' ஜாதகரின், 4 ஆம் பாவத்தில் (சிம்ம இராசி) 'கேது பகவான்', 'சூரிய - புத பகவான்களுடன்' இணைந்து, தனது 'சுய நட்சத்திர சாரத்தில்' (மகம் நட்சத்திரம்) அமர்ந்து, தனது 7 வருட தசாக் காலத்தை, ஜாதகரின் 8 ஆவது வயதிலிருந்து ஆரம்பித்து, ஜாதகரின் அடிப்படைக் கல்வியை மந்தப் படுத்தும் சூழலைப் பார்த்தோம்.

ஆனாலும், ஜாதகரின் உயர் கல்விக்கான வாய்ப்பை அறிவிக்கும், 'நிபுண யோகத்தை' அளிக்கும் , 'சூரிய - புத பகவான்களின்' இணைவின்,'புத பகவானது' புத்திக் காலம் தக்க சமயத்தில் அதாவது, ஜாதகரின் பள்ளிக் கல்வி இறுதியின் போது வந்து, ஜாதகரை எவ்வாறு காத்து அருளியது... என்பதையும் பார்த்தோம். 

அந்த 11 மாத 27 நாட்களுக்கான, 'கேது பகவானின் தசாவில் புத பகவானது புத்திக் காலத்தை' இன்னும் சற்று உட்பிரிவுகளாகப் பிரித்தால், புத பகவான் (1 மாதம் 21 நாட்கள்), கேது பகவான் (21 நாட்கள்), சுக்கிர பகவான் (2 மாதங்கள்), சூரிய பகவான் (18 நாட்கள்), சந்திர பகவான் 30 நாட்கள்), செவ்வாய் பகவான் (21 நாட்கள்), ராகு பகவான் (1 மாதம் 23 நாட்கள்), குரு பகவான் (1 மாதம் 17 நாட்கள்), சனி பகவான் (1 மாதம் 26 நாட்கள்) என்பதாகப் பகுக்கலாம்..

அந்த ஜாதகரின் பள்ளி இறுதி வகுப்பாகிய, 10 ஆம் வகுப்பின் ஆரம்பமான 'கேது பகவானின் தசாவின் - புத பகவானின் புத்திக் காலத்தின்' இரண்டாவது அந்தரமான 'சுக்கிர பகவானின்' அந்தரக் காலமான 2 மாதங்களில்தான், அந்த மாற்றம் ஏற்பட்டு, படிப்படியாக அவர் உயர் கல்வியின் சிறந்த தேர்ச்சிக்குத் தயாரானார். அதை, 'தைர்ய ஸ்தானமான' 3 ஆம் பாவத்தில் (கடக இராசி) 'புத பகவானின்' நட்சத்திர சாரத்தில் அமைந்திருந்த 'சுக்கிர பகவான்' ஏற்படுத்திக் கொடுக்கக் காரணமாக இருந்தார்.

இவ்வாறு, Direction of Life... என்ற வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கும் தசா - புத்தி - அந்தரங்கள்... ஜாதகரின் வாழ்வில், அவரது 'கர்ம வினைகளின் பூர்வ புண்ணிய - பாப வினைகளின் விளைவுகள் நிகழும் தருணங்கள மிகத் துல்லியமாகச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை..

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...