எனக்கு 8 வயது இருக்கும் போது, ஒரு சித்திரைத் திருநாளன்றைய காலைப் பொழுதில், 'ஜன்னலுக்கு எதிரே தெரியும் மாமரக் கிளையின் நடுவே இருந்து, ஒரு ஒளி வெள்ளம் தோன்றி, எனக்குள்ளே வந்து புகுந்தது.'.கட்டை போல விரைத்துக் கிடந்த என்னை, மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஓரிரண்டு மணிகளுக்குப் பின் கண் விழித்து எழுந்த நான், மருத்துவரிடம் விளக்கியது இதைத்தான்.
இரவு நேரங்களில், அம்மாவுக்கு அருகிலே படுத்திருக்கும் போது, தொடர்ந்து இது போல சில முறைகள் நிகழ்ந்ததாம். ஓர் நாள், அம்மா, அவருடன் ஆரம்ப காலங்களில் பணி செய்து கொண்டிருந்த 'மாரியம்மாள்' என்பவரின் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். விபூதி சிறு மலையாகக் குவிக்கப்படிருந்த அந்த சிறிய அறையில், தீபம் சுடர் விட்டுக் கொண்டிருக்க, அந்தத் தாயார் கண் மூடி அமர்ந்து, பிரார்த்தித்து, திருநீறு பூசி விட்டார்கள். அப்போதிருந்து முன்பு போன்ற நிலை எனக்கு ஏற்படவே இல்லை.
எனது 12 ஆவது வயதில் அன்னையை மட்டுமல்ல, தந்தை, உடன் பிறந்தோர், உற்றார், உறவினர், பிறந்த வீடு, என அனைத்தையும் பிரிந்து, வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. காலம் கடந்தது... எனது 21 ஆவது வயதில், மீண்டும் நான் இருக்கும் இடத்திற்கே அம்மா வந்து சேர்ந்தார். குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலும் சேர்ந்தது. குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்த, அந்த ஒன்பது வருடகாலங்கள் அளித்த அனுபவம், என்னால் குடும்பத்தினர் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றலைத் தந்தது. அம்மாவுடன் வாழ்ந்தபோது, எனக்கும் அம்மாவுக்கும் இடையே நடந்த 'இரண்டு முறண்பாடுகள்', 'எனது பக்குவ நிலையை' அம்மாவுக்குப் புரிய வைத்தது.
எனக்கு மூத்தவருக்குத் திருமணம் நடந்து, 5 வருடங்களாகியும், குடும்பத்தின் சூழல்கள் கருதி, எனது திருமணத்தை ஒத்தி வைத்துக் கொண்டே இருந்தேன். இறுதியாக தந்தையின் தள்ளாத வயதில், அவரது விருப்பத்திற்காக திருமணத்திற்கு சம்மதித்து, எனது சூழலுக்கு ஏற்ப ஒரு வரனைப் பார்க்குமாறு குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரிடன் தெரிவித்தேன். எனக்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பதை விட, குடும்பப் பொறுப்புகளை என்னோடு சேர்ந்து சுமக்கும் வரன்களிலேயே குடும்ப அங்கத்தினர்களின் கவனம் இருந்தது.
நல்ல வரன்கள் தள்ளிப் போகும் போது, 'என்னப்பா செய்றது... உனக்குத்தான் யாரும் பெண் கொடுக்க முன்வர மாட்டேங்கிறாங்களே !' என்ற அம்மாவின் முதல் முறண்பாடான வார்த்தைகள், என்னை முதல் முறையாக ஒடிந்து போக வைத்தது. 'ஆமாம்மா...ஏன் மறுக்கிறாங்க... என்ற உண்மையை நீங்க யோசித்துப் பார்த்தா உங்களுக்கு புரியும் !' என்பது மட்டுமே, எனது பதிலாக இருந்தது.
பின்னால், குடும்பத்திற்கு ஏற்ற வரனமைந்து, இட வசதியின்மை காரணமாக அருகிலேயே ஒரு மாடி வீட்டில் நான் குடியேறினேன். ஆனாலும், எங்களது வாழ்வு முழுவதும் அம்மாவுடனேயே கடந்தது. தந்தையின் மறைவு அடுத்த 4 மாதத்திற்குள் நிகழ்ந்தது. தொடர்ந்த காலங்களில், மந்திரியாகவும், மதிநுட்பமானவரும், இருந்த எனது அம்மா, 'மாமியாராக' மாறிவருவதைக் கவனித்த நான் இரண்டாவது முறையாக,, ஒரு தக்க சூழலில் அம்மாவிடம், 'நான் என் அனுபவத்தில் ஒன்றை உணர்ந்து கொண்டேம்மா... அனுபவசாலிகள் - அனுபவமற்றவர்கள், வயதில் பெரியவர்கள் - சிறியவர்கள், படித்தவர்கள் - படிக்காதவர்கள் என எல்லா பெண்களும் இறுக்கமான சூழல்களில் ஒரே மாதிரியாகத்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதுதான்', இதைக் கேட்ட எனது அம்மா சற்று மௌனமாக இருந்தார். ஆனால், அவரது வெளிப்பாடு இதற்கு மட்டுமல்ல, மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட முதல் முரண்பாட்டுக்குமான பதிலாக, வெளிப்பட்ட இடம், அவரின் இறுதிக் காலமாக , மருத்துவமனையாக அமைந்தது.
ஏழு நாட்கள் மருத்துவமனையின் தனி அறையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தேன். ஒவ்வொரு இரவிலும் அவருடன் இருக்கும் நான், பகல் பொழுதுகளில் மட்டும் அலுவலுக்குச் சென்று வருவேன். ஏனைய குடும்பத்தினர்கள் ஒவ்வொருவராக பகல் பொழுதுகளில் துணையிருப்பார்கள். பெரும்பாலும் அமைதியாகக் கடந்த நாட்களின் இறுதி நாள் காலை, வழக்கம் போல அவருக்கான சிஸ்ருதிகளை செய்து முடித்த பின், 80 வயதுகளைக் கடந்து கொண்டிருக்கும் அவரது சிவந்த மேனியின் கைகளில் மருந்தேற்றிய ரத்தக் கட்டுகளைப் பார்த்து, இன்று ஒரு நாள் மட்டும், தொடர்ந்த கடும் மருத்துவ சிகிச்சைகளுக்கு ஓய்வு கொடுக்க எண்ணினேன். அதை, மருத்துவரிடமும் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு, இன்று ஒரு நாள் ஓய்வைக் கொடுத்து, இடையே அவசர நிலை ஏற்பட்டால் தொடரலாம், என்றார்.
நாம் அலுவலுக்குச் செல்லும் வேளை வந்தது, அம்மாவிடம் இதனை தெரிவித்து விட்டு, ஓய்வெடுக்கும் படி கூறியதும், அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு, கண்களில் நீர் கசிய என்னைப் பார்த்தது... அந்த இரண்டு முரண்பாடுகளுக்குமாக, அவர் அளித்த பதிலாக அமைந்தது, அது, இன்றும் எனது மனக் கண்களில் நிழலாடுகிறது. பின் 'என்னை கொஞ்சம் சுவர் பக்கமாக திருப்பி விடுப்பா !' என்ற போது, கனமான அவரது தேகத்தை மெதுவாகத் திருப்பி விட்டேன். அவர் மெதுவாகவும், தெளிவாகவும், 'ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று... ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று...' என்று முணு முணுக்கும் போது, நானும் மனதால் அவருடன் இணைந்து கொண்டேன், பாடலை முழுமையாக முடித்ததுதான் அவரிடம் இருந்த வெளிப்பட்ட இறுதியான வார்த்தைகள் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன்.
அன்று மதியம் நான் மருத்துவமனைக்குச் செல்லவில்ல. மாலை 7 மணியளவில் தொலை பேசி ஒலித்தது, மறு முனையில் எனது சகோதரன், பதைபதைப்புடன், 'காலையிலிருந்து சுவர் பக்கமே பார்த்து படுத்திருந்த அம்மா, இப்போதுதான் நேராக படுத்தார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செவிலியர்களிடம் தெரிவித்தோம். டாக்டர் வந்து பார்த்துவிட்டு உன்னிடம் பேச வேண்டும் என்கிறார்...' என்றான். டாகடர், 'தம்பி, அம்மாவுக்கு லேசான முச்சுத் திணறல்ல் ஏற்பட்டிருக்கிறது. நான் மருத்துவத்தை ஆரம்பிக்கும் முன், அவர் தனது இறுதிப் பயணத்தை தொடர்ந்து விட்டார். எனது அம்மாவாக இருந்தால் நான் என்ன செய்வேனோ அதைத்தான் நீ செய்திருக்கிறாய் என்றார்.'
அதற்குப பின் நிகழ்ந்ததெல்லாம் வெறும் சம்பிரதாயச் சடங்குகள் மட்டுமே !
அம்மாவிற்குச் சமர்ப்பணம்...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment