Saturday, January 28, 2023

நினைவுப் பெட்டகத்திலிருந்து... சந்யாசி ஒருவரின் தரிசனமும், அவரளித்த அனுபவமும்


 

எங்களது நண்பர் ஒருவரின் இல்லத் துயர நிகழ்ச்சிக்காக, கரூருக்கு அருகிலிருந்த அவரது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தோம். இப்போது இருப்பதைப் போன்ற, நெடுஞ்சாலைகள் அப்போது இல்லாத நேரம். ஆனால், குளு குளு என்ற நிழலை அளிக்கும் மரங்கள் சாலையின் இருபுறமும் குடைகள் விரித்தாற்போல இருக்கும்..

லாலாபேட்டை என்ற இடத்தில், ரெயில்வே கேட்டிற்கு முன்பாக, ரயில் கடந்து போவதற்காக,  வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. எங்கள் வாகனமும் நின்றது. எப்போதும் போல, வெள்ளரிப் பிஞ்சுகள்... கொய்யாப் பழங்கள்... வேர்க்கடலைகள்... என வியாபாரம் செய்பவர்கள் வாகனங்களை சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்க, சற்று தூரத்திலிருந்து, ஒரு சந்யாசி எங்கள் வாகனத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போதுதான், ரயில் எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. எங்களுக்கு முன்னால் இருந்து வாகனங்கள் புறப்பட ஆரம்பித்தன. அந்த சந்யாசியின் நடையில் ஒரு வேகம் தெரிந்தது. அவர் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த என்னை நோக்கி பார்த்தபடியே வந்து கொண்டிருந்தார், வாகனம் புறப்படுவதற்கு முன், அவருக்கு ஏதாவது தக்ஷணை கொடுத்து விட வேண்டுமென எனது பர்ஸை திறந்து, பணத்தை மடித்து கையில் வைத்துக் கொண்டேன். அதற்குள் காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த எனது நண்பர், அவசர அவசராமக ஓட்டுநரை காரை எடுக்கச் சொன்னார். சில நிமிடங்களில் எங்களை அணுகிவிடும் அவரை நோக்கி, இவர் கும்பிட்டபடி 'சீக்கிரம்... சீக்கிரம்... 'எனக் கூற, வண்டியும் வேகமெடுத்துக் கிளம்பியது.

நான், சற்று ஏமாற்றத்துடன், கண்ணாடி வழியே திரும்பிப் பார்த்தேன். சாலையோரத்தில் சிரித்தபடியே நின்ற அவரின் முகம் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்தது. '/என்னண்ணா இப்படி பண்ணீட்டிங்க ?' என்ற என் ஆதங்கத்துக்கு, 'நாம போகிற வழியில ஒரு சந்யாசி மடம் ஒண்னு இருக்கு. அதுல இன்னைக்கு அன்னதானம் நடக்கும். அதுக்காகத்தான் அந்த ஆளு, நம்ம காரை நிருத்தி, வழியில தன்னை இறக்கிவிடச் சொல்வதற்காக வந்தாரு. இதான் நமக்கு வேலையா ?'என்ற என் நண்பரின் சாமர்த்தியத்தை நினைத்து வண்டியில் என்னோடு பயணித்த நண்பர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். ஆனால், எனது மனக் கண்ணில், அந்த 'கனிவாகப் புன்னகைத்த முகம்' அழியாது இருந்தது.

சற்று பயணித்த போது, சாலையின் இடது புறத்தில் சில சந்யாசிகள் நடந்து போய்க் கொண்டிருந்ததையும், நண்பர், 'இந்த மடத்திலதான் அன்னதானம் நடக்கும்' என்று சுட்டிக் காட்டிய மடமும், கடந்து போக ஆரம்பித்தது. அப்போது எங்களது வாகனத்தைக் கடந்த ஒரு பேருந்து, சாலையின் முன்பு, பயணிகளை இறக்கி விடுவதற்காக நின்றது. எதிர்புற வலது புறமும் வாகனங்கள் வருவதால், எங்களது வாகனம் தடை பட்டு நின்றது.

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது, முன் புறப் பேருந்திலிருந்து, அதே சந்யாசி இறங்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து பயணிகள் இறங்க ஆரம்பிக்க, அவர் இப்போது எங்களுக்கு எதிர்திசையில் எங்களது வாகனத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே மறக்கவொண்ணா புன்னகையுடன்... எங்களை நெருங்கியவர், ஒரு நொடி நின்று, முன் சீட்டில் இருந்த எனது நண்பரைப் பார்த்து விட்டு, என்னை நோக்கி வந்து  நின்ற அவரின் கைகளில், நான் அப்போதிருந்தே கையில் மடித்து வைத்திருந்த அதே தக்ஷணையை, அன்புடன் கொடுத்தேன். பெற்றுக் கொண்டு, எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.

எங்களது வாகனமும்... அதில் பயணித்த அனைவரும்... இறுதிவரை, மௌனமாகவே பயணித்தோம்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...