மாணிக்க வாசகர்... என்ற பெயர், அந்த மகிமை பொருந்திய அருளாளரின் திருவாக்குகளுக்குள் அடங்கியிருக்கின்ற ஒவ்வொரு சொல்லும் விலை மதிக்கமுடியாத 'மாணிக்கங்கள்' என்பதை, உணர்த்துகின்றன. ஆதலால்தான் 'திருவாசகத்திற்கு உருகார்... ஒரு வாசகத்திற்கும் உருகார்...' என்ற புகழுரை இன்றும் நிலைத்திருக்கிறது.
அவரின், 'தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!' என்ற மணிக்க வாசகங்களில், 'தென்னாடுடைய சிவன்' என்ற பதத்தை மட்டும் சற்று ஆய்ந்தாலே, அதற்குள் மூழ்கியிருக்கும் அதிஅற்புதமான ஞானமுத்துக்கள், அளவிடமுடியாததாக இருப்பதை உணரலாம்.
மேலோட்டமாகவும்... சற்று உள் நோக்குதலிலும்... ஆழ்ந்து நோக்கும் போதும்... அனைத்திற்கும் பொருத்தமாக அமையுமாறு இந்தப் பதத்தை அமைத்திருக்கிறார், மாணிக்கவாசகர்.
இந்திய நாட்டின் தென்பகுதி, என்பது 'சிவபெருமானார்' பற்றிய புராணங்களில் பெரும் பங்கை வகிக்கிறது. அவற்றிற்கு சாட்சியாக எண்ணற்ற ஆலயங்களும் இந்தப் பகுதியில்தான், அதுவும் குறிப்பாகத் தமிழக்த்தில் அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சிவபெருமானரால் ஆட்கொள்ளப்பட்ட 'அறுபத்து மூவர்களான' நாயன்மார்களும், அவர்களை பெருமானார் ஆட்கொண்ட வரலாறுகளும், தமிழகத்திற்குள்ளேயே அமைந்திருக்கின்றன. பெருமானாரின் இளைய மகனான 'முருக பகவானின்' வரலாற்றின் சான்றுகளான 'அறுபடை வீடுகளும்' இங்கேயே அமைந்திருக்கிறது. இதனால், 'தென்னாடுடைய சிவனே...!' என்று, பகவானை அழைப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது.
சற்று உள்நோக்கினால்... பாரதம் என்ற தீபகற்பம், உலக வரைபடத்தில் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. உலகவரைபடத்தின் படி, பாரத நாடு 'தென்னாடாகிறது', ஆகவே, பெருமானாரை, 'தென்னாடுடைய சிவனே...!' என்றும், இவ்வுலகத்திற்கே அதிபதியான அவரை, 'எந்நாட்டுக்கும் இறைவா...!' என்று தொடர்வதும் மிகவும் பொருத்தமாக அமைந்து விடுகிறது.
இறுதியாக, சற்று ஆழ்ந்து நோக்கும் போது, 'எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்' என்பதால், மேல் நோக்கியிருக்கும் நமது சிரசின் உச்சப் பகுதி, பெருமானார் உறைந்திருக்கும் 'சகஸ்ர தளம்' என்ற 'ஆயிரம் தாமரைகள் மலர்ந்த' வடக்காக இருக்கிறது. 'சதாசிவமாக' மலர்ந்திருக்கும் பெருமானார், 'ருத்ரன்' என்ற அக்னி வடிவமாக எழுந்தருளும் 'நெற்றிப் பொட்டு', 'சதாசிவமாக' இருக்கும் பெருமானார், அக்னி வடிவான 'ருத்ரராக வெளிப்படும் தெற்காக மலர்கிறது. இந்த அகம் நோக்கும் மூலமான 'ஞானக் கண்ணின்' இருப்பிடம்தான் 'தென்நாடு' என்றும், அதன் வழியே வெளிப்படுகிற பெருமானாரான 'ருத்திரரை' 'தென்னாடுடைய சிவனே...!' என்று தொடர்வதும் மிக மிகப் பொருத்தமாக அமைந்து விடுகிறது.
'தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment