அந்த இரண்டு பகுதிகளுக்கு இடையேயான தொலைவு மிகக் குறைவாக இருந்தாலும், அந்த குறுகிய இடத்தைக் கடக்கும் போது, இரண்டு பகுதிகளையும் மறைத்தபடி மலைச் சரிவுகள் அமைந்திருப்பதாலும், பகலிலேயே ஆள் நடமாட்டம் குறைந்திருப்பதாலும், சற்று பயந்தே கடக்க வேண்டியிருக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில், அதைத் தனியே கடப்பது என்பது, என் வயதையொத்த சிறுவர்களுக்கு சிம்ம சொப்பனம்தான்.
அந்த முதல் வளைவையொட்டி, ஒரு சமாதி இருந்தது. எங்கள் ஊரில் மீன் வியாபாரம் செய்தவரின் சமாதிதான் அது. அவருக்கு சுடுட்டுப் பிடிக்கு பழக்கம் இருந்தது. ஆதலால் இரவு நேரத்தில், அந்தச் சமாதிக்கு வெளியே அவர் வந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த நெருப்பின் வெளிச்சத்தையும், புகையின் வாசனையையும், அந்தப் பகுதியைக் கடப்போர் பார்த்திருப்பதாகவும், எல்லோரும் பேசிக்கொள்வது, எனது மனத்தில் நீங்காத பயத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஓர் நாள் மாலை நேரத்தில் அந்தப் பாதையை நான் கடக்க நேர்ந்தது. அடுத்தப் பகுதியில் இருக்கும் எங்களது இன்னொரு கடைக்கு தேநீர் கொண்டு போகவிருந்ததால், அந்தப் பாதையில் செல்லும், அடிக்கடி எங்களது ஊருக்கு வந்து செல்லும், ஒருவரின் துணையோடு, என்னை அனுப்பிவைத்தனர்.
அவர் அருகில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர். எங்கள் ஊரில் இருக்கும் மதுக் கடைக்கு வந்து மது அருந்தி விட்டு, தனது கிராமத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தவர், என்பதை அவருடன் செல்லும் போதுதான் அறிந்து கொண்டேன். பேசிக்கொண்டே சென்றாலும், அந்த வளைவையும், அதனையொட்டிய சமாதியையும், அதற்கு மேல் அமர்ந்து புகை பிடிப்பதாகச் சொல்லும் ஆவியையும், நினைத்து பயந்து கொண்டே சென்றேன்.
என்னுடன் வந்தவர், 'தம்பி, நான் இங்கிருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன், நீ அந்த வளைவைக் கடந்து விடு, பின் வெளிச்சத்தின் பகுதி வந்து விடும்.' என்று என்னிடம் சொல்லி விட்டு, பையில் இருந்த சுருட்டு ஒன்றை எடுத்து, அதைத் தீக்குச்சியால் பற்ற வைத்து, புகையை நன்றாக இழுத்த விட்ட படி, அந்த சாமாதியின் மீது அமர்ந்து விட்டார்.
பயந்து கொண்டே, மூச்சிறைக்க, வேகமாக சற்றுத் தூரம் சென்று, என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, திரும்பிப் பார்த்தேன். அந்த சமாதிக்கு மேல் அமர்ந்து கொண்டு, சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பவர்தான், ஊரார் நினைத்து பயந்து போன 'சுருட்டுப் பிடிக்கு ஆவி' என்பதை புரிந்து கொண்டேன்.
அதற்குப் பின், அந்த சமாதியைக் கடக்கும் போதெல்லாம், சைக்கிளில் ஒரு பெட்டியைக் கட்டிக் கொண்டு, அதில் மீன்களை வைத்து வியாபரம் செய்த அந்தப் பெரியவரின் அன்பு முகம், என் மனக் கண்களில் வந்து போய்க் கொண்டே இருந்தது..
ஸாய்ராம்.

No comments:
Post a Comment