Wednesday, July 31, 2019

பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 2. திருச்சி, உறையூர், ஐவண்ணேஸ்வரரின் கருணை மழை.

பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 2.

திருச்சி, உறையூர், ஐவண்ணேஸ்வரரின் கருணை மழை.

எனது நெருங்கிய உறவினர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் திருச்சி, உறையூர், 'ஐவண்ணேஸ்வரர் ஆலய' எல்லைக்குள் அமைந்த, ஒன்றன் பின் ஒன்றாகக் கட்டப்பட்ட, இரண்டு வீடுகளில், பின் அமைந்த வீட்டை விலைக்கு வாங்கி, அதில் தனது சகோதரியின் குடும்பத்திற்கு கொடுத்திருந்தார்.

அந்த இரண்டு வீடுகளும்... இரண்டு சகோதரிகளுக்குச் சொந்தமானது. மூத்த சகோதரியின் வீட்டை இவர் வாங்கியிருந்தார். சிறிது காலத்திற்குப் பின்... முன் இருந்த வீட்டை, இளைய சகோதரி விற்பதற்கு முடிவு எடுத்தார். அதை இவர் வாங்கினால் மிகவும் வசதியாக இருக்கும் என்று கருதி, அதையும் ஒரு விலை பேசி... மொத்தத் தொகையில் ஒரு 20% விகிதத்தை முன்பணமாகக் கொடுத்து, மூன்று மாத இடைவெளியில் கிரயம் செய்வதாக, ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது.

ஒப்பந்தத் தேதி முடிவதற்குள், அவரது கணவரின் தொழிலில் அவசர முதலீடு தேவை என்று கூறி, மேலும் ஒரு 20% விகிதம் கொடுக்கப்பட்டு, அதுவும் முன்பணத்தொகையுடன் சேர்க்கப்பட்டது. ஒப்பந்த்த் தேதி நெருங்குகையில்... அவர்கள் இடம் பெயர்ந்து செல்லும் வீடு, தயாராகவில்லை என்று கூறி, அந்த ஒப்பந்தத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, அதையும் அந்த ஒப்பந்தப் பத்திரத்தில் பதிவு செய்தார்கள்.

நீட்டிக்கப்பட்ட இரண்டாவது காலத்திற்குள்ளாக, வியாபார விருத்திக்கு முதலீடு தேவை என்று கூறி, மேலும் 20% விகிதத்தைக் கொடுத்து, அதையும் ஒப்பந்தத்தில் பதிவு செய்தார்கள். ஒப்பந்தத் தேதி நெருங்குகையில், மூன்றாவது முறையாக, ஒரு மூன்று மாத நீட்டிப்பையும், மேலும் ஒரு அவசரத் தேவையைச் சொல்லி ஒரு தொகையையும் கேட்கும் போதுதான், அவர்கள் எனது ஆலோசனைக்காக வந்திருந்தார்கள்.

இதுவரை நடந்தது அனைத்தையும் கேட்டு, இது முறையானதாக இல்லை என்பதையும், பாக்கித் தொகையைக் கொடுத்து, உடனே வீட்டை கிரயம் செய்து கொள்வதுதான் தீர்வு என்று வலியுருத்தினேன். உறவினரோ, அவர்களின் குடும்பம் பூர்வீகமானது என்றும், அவர்களின் தொழில் நிலையே தாமதத்திற்குக் காரணம் என்றும், நிச்சியமாக அவர்கள் இந்த முறை, குறிப்பிட்டுள்ள காலக் கெடுவுக்குள், கிரயம் செய்து தருவார்கள் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.

நாமும், அவரின் நம்பிக்கைக்குள் பிரவேசிப்பது உசிதமாகாது என்பதை உணர்ந்து, ஒரு ஆலோசனையை வழங்கினேன். அது, அந்த வீட்டின் மூலப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வது, இந்த மூன்றாவது நீட்டிப்பே இறுதியானது. தற்போது கொடுக்கும் 20% விகிதத்துடன் சேர்த்து மொத்தத் தொகையான 80% விகிதத்தையும் பத்திரத்தில் குறிப்பிடுவது. இவையனைத்தையும் ஒரு சாட்சிக்கு முன் நடத்திக் கொள்வது, இறுதியாக அந்த மூலப் பத்திரம் மற்றும் ஒப்பந்தப் பத்திரத்தை, ஐவண்ணேஸ்வரரின் திருவடிகளில் சமர்ப்பிப்பது, என்று ஆலோசனை வழங்கி, அதன் படி அனைத்தும் நடந்தேறியது.

மூன்றாவது நீட்டிப்பின் காலக் கெடு முடிவுறும் 10 நாட்களுக்கு முன்னதாக, எனது உறவினரின் சகோதரி கண்ணீருடன் வந்து, அவர்கள் அந்த வீட்டை கிரயம் செய்ய மறுப்பதாகவும், 80% விகித முன் பணத்தையும் தற்போது தரும் சூழலில் அவர்கள் இல்லை என்பதாகவும் கூற, இதில், இதுவரை நாம் நேராகத் தலையிடாததாலும், இவையனைத்தும் அவர்களது விருப்பங்களுக்கு ஒப்ப நடந்ததாலும், நாம் வெளி நாட்டில் இருக்கும் உறவினரை என்னோடு தொடர்புக் கொள்ளச் சொல்லி அவரை அனுப்பிவைத்தேன்.

உறவினர் வெளி நாட்டில் இருந்து தொடர்பில் வரும் போது, அவரை உடனடியாக நேரில் வந்தால்தான் இதற்கு ஒரு தீர்வு காணமுடியும் என்று கூறினேன். அவரும் இரண்டு நாட்களுக்குள் வந்து விட்டார். அவரையும், அவரது சகோதரியாரையும், இறுதியாக சாட்சியாக இருந்த அவரின் மாமா ஒருவரையும் அழைத்துக் கொண்டு, முதன் முறையாக  அந்த வீட்டினரைச் சந்திக்கச் சென்றேன்.

கணவரும், மனைவியுமாக அவர்கள், தங்களால், இப்போது அந்த வீட்டைக் கிரயம் செய்து கொடுக்க முடியாது என்றும், முன் பணத்தையும் தற்போது கொடுக்க முடியாத சூழலில் இருப்பதாகவும் தெரிவித்தனர். நாம் அவர்களிடம், உறவினர் எவ்வாறெல்லாம் அவர்களது ஒவ்வொரு கோரிக்கையயும் நிறைவேற்றியிருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு முறையும் அவர்கள் எவ்வாறெல்லாம் தமது நிலைப்பாட்டில் மாறியிருக்கிறார்கள், என்பதையும் சுட்டிக் காட்டினோம்.

வேறு வழியில்லாத சூழலில், நடந்தது யாவற்றையும் ஒரு பதிவாக இட்டு, அதை 'ஐவன்ணேஸ்வரரின் திருவடியில்' சமர்ப்பித்து, இதற்கு ஒரு நல்லத் தீர்வை ஏற்படுத்தித் தருமாறும், அவ்வாறு அது கிரயமாக இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டைத் தனது சகோதரரின் பெயரில் பதிவு செய்துவிடலாம், என்றும் சங்கல்ப்பம் ஏற்றுக் கொள்ளச் செய்தோம்.

பின்னர், பத்திரப் பதிவுக்கான நாளைத் தேர்ந்தெடுத்தோம், பாக்கித் தொகைக்கு வங்கியில் ஒரு வரைவோலை பெற்றோம், இவற்றுடன் ஒரு வழக்கறிஞரை சந்தித்து, அவரின் மூலமாக அவர்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்பினோம். அதில், அது வரை நடந்தவற்றை விவரித்து, அவர்களது தவற்றைச் சுட்டிக்காட்டி, குறிப்பிட்ட நாளில் வந்து கிரயம் செய்து தருமாறும், தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்து, இழப்புகள், மன உளைச்சல்கள் அனைத்துக்குமான தொகையைப் பெற நேரிடும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தோம்.

அதற்குப் பின்னர் நடந்ததெல்லாம்... 'ஐவண்ணேஸ்வரரின் அருள் கருணைதான்'. அவர்கள் மெலும் சில தவறான பாதைகளில் பயணம் செய்தார்கள். இறுதியாக, தவிர்க்க முடியாத சூழலில், பத்திரப் பதிவுக்கான நாளின் காலை வேளையில், உறவினரின் வீட்டுக்கு வருவதாக தொலைபேசியில் கூற, நாமும் நேரில் சென்றிருந்தோம்.

வேகமாக வந்து அமர்ந்த அவரின் முகத்தில் கோபத்தின் கனல் வீசிக்கொண்டிருந்தது. அவர் ஆசுவாசமடைந்ததும்... அவரிடம், தற்போதும் ஒன்றும் பாதகமில்லை... கிரயத்தைத் தவிர வேறு வழியில்லாத நிலையில்... வேண்டுமானால், கிரயத்திற்கான விலையை சற்று உயர்த்திக் கொள்ளுங்கள்... என்று நாம் கூற, அவர் மேலும் ஒரு 20% விகித தொகையைக் கேட்டார். கோபமடைந்த உறவினர் குடும்பத்தைச் சமாதானம் செய்து, அந்தத் தொகையை ஒரு 10% விகிதமாகக் குறைத்து நிணயம் செய்தோம்.

அதன்பின் பத்திரப் பதிவு சுமூகமாக நடந்தேறியது.உறவினரை குடும்பத்துடன் சென்று, ஐவண்ணேஸ்வரரின் திருவடியில் நன்றிகளைக் காணிக்கையாக்கக் கூறினோம். நாமும் நமது வழக்கமான தரிசன நாளான வியாழன் அன்று, 'ஐவண்ணேஸ்வரரின் அருள் திருவடியில்', நமது மனமுவந்த நன்றிகளை காணிக்கையாக்கினோம்.

ஸாய்ராம்.


Tuesday, July 30, 2019

பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 1. தனுஷ்கோடி ஸ்ரீ தர்ப்பசயன இராம பிரானின் கருணை

பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 1.

தனுஷ்கோடி ஸ்ரீ தர்ப்பசயன இராம பிரானின் கருணை

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின், மூத்த சகோதரர் மகளின் திருமணம் தாமதமாகிக் கொண்டு இருந்தது. அவர் தனது நண்பர் ஒருவரிடம் தனது கவலையைப் பகிர்ந்து கொள்ள... அந்த நண்பர், அந்தப் பெண்ணின் ஜாதகத்தை... ஆய்ந்து பார்க்கும்படி சமர்ப்பித்தார்.

அதைக் கணித்துப் பார்க்கும் போது, அந்த ஜாதகரின் திருமணம் பற்றிய நிலைகளை அறிய முடிந்தது. திருமண தாமதத்திற்கான சில காரணங்களையும் அறிய முடிந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்தை... திருமணம் அமையக்கூடிய காலமாக அனுமானித்து... அதைப் பதிவும் செய்தோம்.

அந்த ஜாதகத்தில் அமைந்திருந்த சில அமைவுகளின் படி... அவர்களின் பூர்வீகத்திற்கு அருகில் இருக்கும், இராமேஸ்வரம்... தனுஷ்கோடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும்... 'தர்ப்ப சயன ஸ்ரீ இராம பிரானை'... ஒரு அமாவாஸ்யை அன்று குடும்பத்துடன் சென்று சேவித்து... அங்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும்... தீபத்தில்; சிறிது நெய் சேர்த்து... துளசி... கல்கண்டு... திராட்சை ஆகியவற்றை சமர்ப்பித்து... அஷ்டோத்திர அர்ச்சனை செய்து... ஐந்து முறை வலம் வந்து... அமைதியுடன் அமர்ந்து ஒரு ஆழ்ந்த பிரார்த்தனையை... அவரின் திருவடியில் சமர்ப்பிக்கும் படியான  ஆலோசனையை அளித்தோம்.

அவர்களும் குடும்பத்துடன்... அடுத்த அமாஸ்வாயை தினத்தன்று... தனுஷ் கோடி சென்று... 'ஸ்ரீ தர்ப்ப சயன இராமபிரானாரையும்'... 'ஸ்ரீ ஆஞ்சனேய ஸ்ரீ லக்ஷ்மண ஸ்ரீ சீதா தேவி தாயார் சமேத உற்சவ ஸ்ரீ இராமபிரானாரையும்' தரிசனம் செய்து... அனைத்து பிரார்த்தனைகளையும் பூர்த்தி செய்தார்கள்.

தரிசனத்திர்குப் பின்... ஆலய பிரகாரம் வந்த போது... அன்றைய அமாவாஸ்யை தினத்தில்... தர்ப்பணத்திற்காக... பிரார்த்தனைகளுக்காக... பக்தர்களின் கூட்டமும் நிறைந்திருந்தது. அங்கு ஒரு சிறப்புப் பரிகாரத்திற்கென அமைக்கப் பட்ட பந்தலின் கீழ்... தமது பெண்ணின் திருமண தாமதத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு பரிகாரத்திற்காக... சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். அந்த பரிகாரத்தை நடத்தும் ஆலய பட்டாச்சார்யார்... அதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தார்.

இதைப் பார்த்ததும்... இந்தக் குடும்பத்தாருக்கும் ஒரு சலனம் ஏற்பட்டது. இது போன்ற ஒரு யாக பரிகாரம் செய்வதற்கான வசதி தங்களுக்கு இருந்ததாலும்... தங்களக்கு ஆலோசனை அளித்தவர்... மிக எளிய முறையில்... ஒரு பக்தி சமர்ப்பணத்தைச் செய்யச் சொன்னாதாலும்... தற்போது, தங்களுக்கு முன் இவ்வாறான ஒரு சிறப்பு யாகம் நடக்கும் போது... அதைக் காணும் தங்களது மகளின் கண்ணோட்டம் எவ்வாறு இருக்கும்... என்பதையும் நினைத்துச் சற்றுக் கலங்கிப் போய் நின்றார்கள்.

பந்தலின் கீழ்... யாகப் பரிகாரம் ஆரம்பித்தது. யாகக் குண்டத்திற்கு முன் அமர்ந்த பட்டாச்சார்யார்... குண்டத்திற்கு அருகில்... அந்தப் பரிகாரத்திற்கான பெண்ணை அமரச் செய்தார். அவருக்கு அருகில் ஒரு ஆசனத்தை இட்டு அதில்... அவருக்குத் துணையாக... அவருடன் சேர்ந்து சங்கல்ப்பம் செய்து கொள்ள... அவர்களுடன் வந்த திருமணமாகாத பெண் ஒருவரை அமருமாறு கேட்டுக் கொண்டார்.

சென்னையைச் சேர்ந்த குடும்பத்தின் பெண்கள் அனைவருமே திருமணமானவர்கள் ஆதலால், அவர்கள் என்ன செய்வது என்று யோசிக்க... இதனையறிந்த பட்டாச்சார்யார்... இதைப் பார்த்துக் கொண்டிருந்த திருச்சி குடும்பத்தினரிடம்... தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லாதிருந்தால்... தங்கள் குடும்பத்தில்... திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் பெண் இருந்தால்... அமரலாம்... என்றார்.

பட்டாசார்யாரின் இந்த அழைப்பைக் கேட்டதும்... திருச்சிக் குடும்பத்தினர் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். மறுப்பேதும் கூறாமல்... தங்களது பெண்ணை... அந்த துணை ஆசனத்தில் அமர்ச் செய்தனர். யாகம் தொடங்கி... அனைத்து சங்கல்ப்பங்களுடன்... பரிகார ஹோமம் பூரணாமாகியது.

யாகப் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்ட திருச்சி குடும்பத்தினர்... பட்டாச்சார்யாருக்கும்... பரிகார யாகத்திற்கு மூலக் காரணமாகிய சென்னைக் குடும்பத்தினருக்கும்... தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு... அந்த யாகத்திற்கான செலவில் தாங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்ற தங்களின் நிலையைத் தெரிவித்தபோது... அதை அந்தச் சென்னைக் குடும்பத்தினர்... அன்புடன் மறுத்துவிட்டனர்.

காரணம்... அது அவர்களின் மகளுக்கான பரிகார யாகம். அது பூரணமாவதற்கு... இன்னொரு பெண் தேவையென்ற நிலையில்... தாங்கள் தவித்து நின்ற போது... அந்த ஸ்ரீ இராம பிரானாரே... தங்கள் பெண்ணை அனுப்பி... இந்த யாகத்தைப் பூர்த்தி செய்தார்... என்பதாலேயே.

இந்த அனைத்து இனிய அனுபவங்களுடன்... ஊர் வந்து சேர்ந்தவர்களின் பெண்ணிற்கு... அந்தக் குறிப்பிட்ட காலத்தில்... தகுந்த வரனுடன் திருமணமும்... தொடர்ந்து... இரு பிள்ளைப் பேறுகளும் கிடைத்தன என்றால்... அது... ஸ்ரீ இராம பிரானாரின் கருணையன்றி வேறேது...!

பரிகாரம் என்பது நாம் தேடித் தேடிச் சென்று செய்யும் ஒரு கடினமான நிகழ்வாகிறது. இதற்கு... இதுதான் என்ற பரிகாரமும் நிச்சயமானதல்ல. அதில் பல்வேறு சிக்கல்களும்... முடிச்சுகளும் நிறைந்திருக்கின்றன. ஏனெனில்... அது 'நமது கர்மவினையின் முடிச்சுகளால்'... சூழப்பட்டிருக்கிறது. ஒரு பரிகாரத்தால் நிகழும் நிகழ்வின் முடிவில்... சில ஈடு செய்ய முடியாத  இழப்புகளும் ஏற்படுகிறது.

அதுவே... பக்தியின் மூலம் அணுகப்படும் போது... இறைவனின் பேரருள் கருணையினால்... அந்த ஜீவன் தன்மீது  கொண்ட ஆழ்ந்த பக்திக்குப் பரிசாக... அந்த இறைவனே... தக்கப் பரிகாரத்தை அளித்துவிடுகிறான். ஜீவன் செய்ய வேண்டியது... அந்த இறைவனின் மீது கொள்ளும் ஆழ்ந்த பக்தி ஒன்றை மட்டும்தான்.

இதைத்தான்... கருணை உள்ளம் கொண்ட ஸ்ரீ இராமபிரான்... அந்தப் பெண் குழந்தைக்கு அளித்தருளினார்.

ஸாய்ராம்.


Thursday, July 25, 2019

முடிவு எடுக்கும் தன்மை பற்றிய (Decision Making) ஒரு பார்வை

முடிவு எடுக்கும் தன்மை பற்றிய (Decision Making) ஒரு பார்வை :

இந்த பூமியில் உயிர் வாழும் இனங்களிலேயே ஒரு தனிப்பட்ட இனமாக இருப்பது மனித இனமே. காரணம்... ஏனைய உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவாக இருப்பது, உண்பது... உறங்குவது... உயிர் பெருக்கம் செய்வது... என இந்த மூன்று நிலைகள்தான்.

இந்த நிலைகளைக் கடந்து, 'சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கும்' ஒரு பிரத்தியோக அந்தஸ்து... இந்த மனித இனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை... மனித இனம் பயன்படுத்திக் கொள்கிறதா...? என்பதுதான் கேள்வி.

பொதுவாகவே, ஒரு சூழ்நிலையில்... அதற்கு ஏற்றவாறு... ஒரு முடிவை எடுப்பதற்கு.. மனிதர்கள் தயங்கவே செய்கிறார்கள். வெற்றி-தோல்விகளை மனதில் கொண்டு... அதை எவ்வளவு தாமதப் படுத்த முடியுமோ... அந்த அளவிற்குத் தாமதப் படுத்துகிறார்கள். அதற்குள்ளாக, அந்த சூழலுக்கு... தானாகவெ ஒரு முடிவு வந்து விடும் என்றும் நம்ம்புகிறார்கள். சூழலுக்கு ஏற்றவாறு... பிரிதொருவர் முடிவு எடுக்கும் பக்ஷத்தில்... அந்த முடிவைப்பற்றிய விமரிசனங்களையும் எடுத்து வைக்கிறார்கள்.

இதிலிருந்தே... நாமறிந்து கொள்ளலாம்... முடிவு எடுப்பதின் முக்கியத்துவத்தைப் பற்றி.

கடமைகளை சுமந்து கொண்டு... அதனை பொறுப்புடன் செயல்படுத்துபவர்கள்தான் எப்போதும் இந்த 'முடிவு எடுக்கும்' சூழலை' எதிர் கொள்கிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு எப்போதும் அந்தக் கடமையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதன் 'வெற்றி- தோல்விகளுக்கு'... அவர்களே பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

முடிவு எடுக்கும் தன்மையைப் பற்றிய உலகளாவிய ஆய்வுகள் பல இருந்தாலும்... 'ஸ்காட் பெக்' என்ற மேலை நாட்டின் ஆய்வாளர் ஒருவரின் ஆய்வு... இதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. இவரின் ஆய்வைப் பற்றி 'ரா.கி.ரெங்கராஜன்' அவர்களின் மொழிபெயர்ப்பு... ஆரம்ப காலத்து 'ஜூனியர் விகடன்' இதழ்களில் வெளிவந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்காட் பெக்... ஏழு வரிசைகள் கொண்ட ஒரு அட்டவணையை உருவாக்குகிறார். அந்தக் கட்டங்களில்... ஒரு மனிதன், தன் வாழ்நாளில்... தான் எடுத்த முடிவுகளை வரிசைப்படுத்தச் சொல்கிறார். அந்த கட்டங்களை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்ய வழிகளையும் காட்டுகிறார். அவையாவன...

1. அந்த முடிவு 'தன்னால் மட்டுமே'... எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

2.அது தனது 'வாழ்வை மாற்றியதாக' இருக்க வேண்டும். (தனது வாழ்வை
       உயற்றியும் இருக்கலாம் தாழ்த்தியும் இருக்கலாம்)

3. அந்த முடிவின் விளைவைக் கொண்டு... 'வேறு எவரையும் குறை சொல்லாது' இருக்க வேண்டும்.

4. அந்த முடிவுக்கு 'தானே முழுமையாக' பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

இதனடிப்படையில்... இந்த அட்டவணையை நிரப்ப முயன்றவர்கள்...

'தன்னைத் தான்' உணர்ந்து கொண்டார்கள்.

முடிவு எடுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டார்கள்.

முதல் முறை... தான் எப்போது... எந்த சூழலில்... முடிவு எடுத்தோம்... என்பதை அறிந்து கொண்டார்கள்.

தான் எடுத்த முதல் முடிவிற்குப் பின்னர்... தனது வாழ்வின் தொடர் முடிவுகளுக்குள்... தன்னைத் தவிர, வேறு எவரும் பங்கெடுத்துக் கொள்ள முடியாத சூழல் ஏற்படுவதையும்... புரிந்து கொண்டார்கள்.

தனது வாழ்வை மாற்றிய சூழல்கள் அனைத்தும்... இந்த ஏழு கட்டங்களுக்குள் அடங்கி விடுவதைக்' கண்டு ஆச்சரியப் பட்டுப் போனார்கள்.

தமது வாழ்வை பூரணமாக்கிக் கொண்டவர்கள் கூட... இந்த ஏழு கட்டங்களில்... கட்டங்கள் மிகுதியாக இருப்பதை அறிந்து கொண்டார்கள்.

இதைப் பூர்த்தி செய்யும் போதுதான்... முடிவு எடுக்கும் முக்கியத்துவம் பற்றிய ஒரு பூரணத்துவம் தெளிவாகிறது.

ஸாய்ராம்.


Wednesday, July 24, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 8. பிரம்ம ஹத்தி... ஒரு பார்வை

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 8 : பிரம்ம ஹத்தி... ஒரு பார்வை

ஜோதிடத் துறையில் மிகவும் அச்சத்துடன் அணுகப்படும் ஒரு அமைவு. இன்னென்ன கிரகங்கள் ... இந்தெந்த அமைவுடன் அமைந்திருந்தால்... இன்னென்ன விளைவுகள்... என்று ஜோதிட விதிகள் வகுத்திருந்தாலும்... இந்த 'பிரம்ம ஹத்தி' பற்றி மட்டும் பல... வேறுபாடான கருத்துகள்... ஜோதிட ஆர்வலர்கள் மத்தியில் உலவிவருகிறது.

'சனி பகவானையும்'... 'குரு பகவானையுமே'... பல்வேறு நிலைகளில்... இந்த பிரம்ம ஹத்தி அமைவுக்கு காரணமாக குறிப்பிடுவதை காணமுடிகிறது. அடிப்படையில் இது உண்மையான அணுகுமுறையல்ல.

காலபுருஷ இராசியான 'மேஷ இராசிக்கு'... 'தர்மம்' என்ற 'பாக்கிய ஸ்தானத்திற்கு' அதிபதியாகிறார், 'குரு பகவான்'. 'கர்மம்' என்ற 'ஜீவன் ஸ்தானத்திற்கு' அதிபதியாகிறார், 'சனி பகவான்'. இந்த இரு ஸ்தானங்களுக்கு இடையேயான தொடர்பைத்தான்... 'தர்மத்துடன் அணுகப்படும் கர்மம்' என... 'தர்ம-கர்மாதிபதி யோகம்' என்று வருணிக்கிறது ஜோதிட விதி.

கால புருஷ தத்துவத்திற்கு... தர்ம-கர்மாதிபதியாகிற... 'குரு - சனி பகவான்கள்'... ஒரு ஜீவனின் வாழ்வில்... இந்த பிறவிக்கென நிர்ணயிக்கப் பட்டிருக்கிற... அனைத்து கடமைகளையும்... தர்மத்துடன் அணுகி... எந்த எதிர்பார்ப்புமின்றி பூர்த்தி செய்து... நிர்ணயிக்கப்பட்ட வாழ்வு நாட்களை பூர்த்தி செய்வதைத்தான்... பல்வேறு நிலைகளில் உறுதி செய்கிறது. இதைத்தான்... 'குரு பகவான்' மற்றும் 'சனி பகவான்' நிலையைக் கொண்டு உறுதி செய்ய வேண்டும்.

'பிரம்மம்' என்பது... பூரணம். அது எந்த விதத்திலும் குறைபடாதது. என்றும் நிலைத்திருப்பது. அதுதான்... இந்த 'ஜீவனின்' பிறப்பிற்கு மூலமாகிறது. அந்த பிரம்மத்தினின்று தோன்றும்... இந்த 'ஜீவனுக்குத்தான்'... பிறப்பும்... வாழ்வும்... மறைவும்... ஏற்படுகிறது.

இந்த ஜீவன்தான்... தனது பிறப்புக்கு மூலமான... 'வினைகளின் விளைவு' என்ற 'கர்ம வினைகளை' சுமந்து கொண்டு பிறப்பை அடைகிறது. இந்தப் பிறவி... மற்றும் தனது  முந்தைய  பிறவிகள்...  என தனது அனைத்து 'கர்ம வினைகளையும்' அனுபவித்தபின்... இந்த ஜீவன்... பிரம்மத்தை அடைகிறது.

இந்த ஜீவன்... பிரம்மத்தை அடைவதற்குத் தடையாக இருப்பது... அதன் 'கர்ம வினைகளே'. அதைத்தான்... 'தடை' என்ற பொருள்படும் வார்த்தையாக' ஹத்தி' என்ற சொல் வருணிக்கிறது. இப்போது... இந்த ஜீவனுக்குத் தடையாக உள்ளது... தனது வினைகளே என்பது உறுதியாகிறது. இந்த வினைகளை ஜீவன் களையும் போது... அது பிரம்மத்துடன் சேர்வதற்க்கு ஏது தடை...!

அந்தத் தடையையும் இப்போதுள்ள... இந்தப் பிறவியிலேயே நீக்கிக் கொள்ளும் வழியும் உள்ளதே...! தற்போது இந்த ஜீவனின் வாழ்விற்கு மூலமாக... சாட்சியாக... ஆதாரமாக... இருக்கும் பிரம்மத்தை... இந்தப் பிறவியிலேயே அறிந்து கொள்வது மட்டுமல்ல... அதனுடன் கலந்து விடும் வாய்ப்பும் உள்ளதே...!

அந்த வாய்ப்புகளைத்தான்... நமது வேதம்... 'பக்தியாக... கர்மமாக... ஞானம் என்ற யோகமாக'... வகைப்படுத்துகிறது. இதில் நமக்கு வகுக்கப்பட்டிருக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்து...  கடமைகள் அனைத்தையும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி எதிர்கொண்டு... அந்தப் பாதையில் பயணித்து... இறுதியில்... இந்த ஜீவனுக்கு மூலமான பிரம்மத்துடன் ஐக்கியப்படும் போது... பிரம்ம ஹத்தி பற்றி ஏது பயம்...?

ஸாய்ராம்.


Tuesday, July 23, 2019

தாயமும் - தாய விளையாட்டின் சூட்சுமமும்

தாயமும் - தாய விளையாட்டின் சூட்சுமமும் :


நமது பாரம்பரிய விளையாட்டுகளில் தலையானது. இரண்டு முதல் நான்கு நபர்கள் வரை விளையாடும் ஆட்டம்தான் இது.

இந்த சித்திரத்தை தரையில் வரைந்து... கற்களைக் காய்களாகவும்... ஒரு புறம் தேய்க்கப்பட்ட புளியங்கொட்டைகளைத் தாயக்கட்டைகளாகவும் கொண்டு...  கிராமத்து மக்கள்... தங்களது கிராமத்து பொது இடங்களில்... பொழுதுபோக்காக விளையாடக்கூடிய... மிக எளிமையான விளையாட்டு.

இந்த ஆட்டம்... ஆறு காய்களை மூலமாகக் கொண்டு... தாயக் கட்டைகளை உருட்டி... தன் முறை வரும் போது... 'தாயம்' விழுந்ததும்... ஒவ்வொரு காயாக ஆரம்பித்து... இடது புறம் ஆரம்பித்து வலது புறத்தை நோக்கி காயை நகர்த்துவதுதான் விளையாட்டு முறை.

ஒவ்வொரு முறையும் தாயக்கட்டைகளை உருட்டி... அதில் விழும் எண்ணிக்கைக்கு ஏற்ப... காய்களை நகர்த்த வேண்டும். காய்களை ஒன்றாகவோ அல்லது இரண்டு மற்றும் மூன்றாகவோ நகர்த்தலாம். ஏனைய ஆட்டக்காரர்களின் 'வெட்டுக்கு' தப்பிக்க... 'மலைகள்' என்று குறிப்பிடும் இடங்களில் 'ஓய்வு' எடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

இந்த ஆட்டத்தின் வெற்றி... அந்த ஆறு 'காய்களையும்' எவரொருவர்... முதலாவதாகக் கொண்டு சென்று 'பழங்களாக' மாற்றுகிறார் என்பதைப் பொறுத்ததே. அதற்காக எடுக்கும் முயற்சியும்... அதில் ஏற்படும் தடைகளும்... அந்தத் தடைகளைத் தாண்டி... எவ்வாறு வெற்றி அடையப்படுகிறது என்பதே... இந்த ஆட்டத்தின் சுவாரஸ்யம்.

இந்த ஆட்டத்திற்குள் இருக்கும் சூட்சுமம்... இந்த விளையாட்டிற்குள்... நமது 'வாழ்க்கைச் சுழல்' என்ற... தொடர் விளையாட்டின் சூட்சுமம் அடங்கியிருப்பதுதான்.

'பிறவி' என்பது மிகவும் கடுமையான போராட்டம்தான். அதைத் தவிர்த்துவிடுவதற்கான போரட்டத்தைத்தான்... ஒரு ஜீவன் இந்தப் பிறவியில் எதிர்கொள்கிறது. ஆனால்... ஜீவன், இந்த பிறவிப் பந்தயத்தில்... தவிர்க்கவே முடியாத சூழலால்... கலந்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. 'தாயம்' விழாதவரை தப்பித்துக் கொள்ளும் ஜீவன்... 'தாய விளையாட்டின் சுவரஸ்யம் போல'... தாயத்தை விழ வைத்து... இந்த 'தாய விளையாட்டு'... என்ற பிறவிச் சுழல் விளையாட்டை ஆரம்பித்து வைத்து விடுகிறான்... படைப்பாளன்.

தவிர்க்க முடியாது... இந்தப் 'பிறவி விளையாட்டை' ஆரம்பிக்கும் ஜீவனுக்குத்தான்... எத்தனை சோதனைகள்...! 'தாயக் கட்டைகளை' உருட்டி விழும் எண்ணிக்கைகளைப் போன்றதுதான்... நமது'கர்ம வினைகள்' அளிக்கும்... 'இன்ப - துன்ப நிகழ்வுகள்'. அதற்கேற்ப இந்த ஜீவன் தன் வாழ்வு நிலைகளைக் கடக்கிறது.

சில நேரம்...இன்பமாக 'ஓய்வை ' எடுத்துக் கொள்கிறது. சில நேரம்... வாழ்வின் சூழல்களுக்கு ஏற்ப... 'தனியாகவோ... துணையுடனோ...' தனது 'கர்ம வினைகள்' என்ற 'சுமையைச்' சுமந்து கொண்டு செல்கிறது. அதன் 'இலக்கு'... தனக்குண்டான 'கர்ம வினைகளை' தர்மத்துடன் அணுகி... கடமைகளை பூரணமாக்கி... மிண்டும் பிறவி என்ற நிலையை அடையாமல்... 'காய்... பழமாவது போல' ...  'பிறவியற்ற பெரும் பேற்றை' அடைவதுதான்.

தாயம் என்ற எளிய விளையாட்டு... வாழ்வு என்ற மிகக் கடினமான விளையாட்டுக்கான பயிற்சி என்றால்... அது மிகையல்ல.

ஸாய்ராம்.


Thursday, July 18, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 7. தர்ம - கர்மாதிபதி யோகத்தின் சூட்சுமம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 7 :

தர்ம - கர்மாதிபதி யோகத்தின் சூட்சுமம் :

'தர்மம்' என்ற சொல் உணர்த்தும் பொருள்... சத்தியம் என்பதுதான். எது, எக்காலத்திற்கும் உண்மையாக இருக்குமோ... எது, எல்லோருக்கும் பொதுவானதோ...அதுதான் தர்மம்.

இந்த தர்மத்தை... யுகம் யுகமாக... எவ்வித பாரபட்சமும் இல்லாமல்... நிலைநிறுத்தி வருகிறார்... படைப்பாளர். அதன் வழியேதான்... தமது படைப்புகளையும் வழிநடத்துகிறார்.

வேதங்கள் குறிப்பிடும்... 84 லட்சங்கள் உயிரினங்களில்... மனிதப் பிறவி நீங்களாக... மிகுதி அனைத்து உயிரினங்களையும்...  உணவு... உறக்கம்... உறவுப்பெருக்கம்... என்ற பொதுவான அம்சங்கள் அடங்கிய வாழ்வு நிலைக்குள் அடக்கிவிடுகிறார். அதனால்... இந்த அனைத்து உயிரினங்களும்... அவற்றின் தர்மத்தினான வாழ்வை... ஒரு போதும் மீறுவதில்லை.

மனிதப் பிறவிக்கு மட்டும்... ஒரு பிரத்தியோக வாய்ப்பை... இறைவன் வழங்கியிருக்கிறார். அது... 'தானே முடிவெடுக்கும் ஒரு வாய்ப்புதான்'. அந்த வாய்ப்பை... பிரிதொரு உயிரினத்திற்கு வழங்காது... மனிதப் பிறவிக்கு மட்டும் வழங்கியிருப்பதற்கான நோக்கமே... மனிதன்... தனக்கு முன்னால் உள்ள சூழலுக்கு ஏற்ப... தனது அறிவை மூலமாகக் கொண்டு... தர்மத்தின் அடிப்படையிலான... முடிவையே எடுப்பான்... என்ற நம்பிக்கையிலேயே...!

ஆனால்... இந்த வாய்ப்பு... ஒரு வரமாக இல்லாமல் சாபமாகிப் போனதுதான்... 'கர்மம்' என்ற தொகுப்பின் ஆரம்பமாக அமைந்தது. உலக இச்சைகளினாலும்... ஆசா பாசங்களினாலும்... மனிதன் தனது சுய நலன் கருதி... எடுத்த முடிவுகளின் விளைவுகளே... 'தர்மத்தின் பிறல்களுக்கு' காரணமாக அமைந்தது. அந்தக் காரணங்களே... அந்த ஜீவனின் அடுத்தடுத்த பிறவிகளுக்கு காரணமான... 'கர்மத்தின் தொகுப்பாக' மாறிப் போனது.

இவ்வாறு, தொடர்ந்து... ஜனனம்... மரணம் என்ற தொடர் பிறவி என்ற பிணிக்குள் சிக்கிக் கொண்ட ஜீவனை மீட்பதற்கு... மீண்டும் தர்மத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டிய அவசியம் படைப்பாளருக்கு ஏற்படுகிறது. அதனால்... 'கர்மம் என்ற தொகுப்பை முற்றிலும் கரைத்துவிடும் தன்மை'... இந்த தர்மத்திற்கு மட்டுமே உண்டு... என்ற உண்மையை... ஜீவனுக்கு உணர்த்த வேண்டியிருக்கிறது.

இதை சூட்சுமமாக... ஜோதிடம் என்ற கலை உணர்த்துகிறது. ஜோதிடக் கலையின் மூலமான ஜோதிடச் சித்திரம்... கால புருஷ தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் 'மேஷம்' என்ற இராசி... கால புருஷனின் லக்னமாகிறது. அந்த லக்னத்திலிருந்து 9 ஆமிடமான 'தனுர் இராசி'... 'தர்ம ஸ்தானமாக' அமைகிறது. 10 ஆமிடமான 'மகர இராசி'... 'கர்ம ஸ்தானமாக' அமைகிறது.

தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக 'குரு பகவான்' அமைந்திருக்கிறார். அவர் ஞானத்திற்குக் காரகமாகிறார். அந்த ஞானம்தான்... இந்த ஜீவனை... தான் எதிர் கொள்ளும் நிலைகளுக்கு ஏற்ப... தர்மத்தை மூலமாகக் கொண்டு... முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது.

கர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக 'சனி பகவான்' அமைந்திருக்கிறார். அவர் அந்த ஜீவனின் வாழ்விற்கான காலமான... 'ஆயுளுக்குக்' காரகத்துவத்தை வகிக்கிறார். அவர்தான்... ஜீவனின்... ஜீவத்துவத்திற்கும் காரகனாகிறார்.

அந்த ஜீவத்துவத்தில்தான்... அந்த ஜீவன்... தனக்குண்டான கடமைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த கடைமகளை எதிர் கொள்ளும் போது... அதை தர்மத்துடன் எதிர் கொள்ளும் வண்ணம்தான்... 'கர்மம்' என்ற ஸ்தானத்திற்கு முன்... 'தர்மம்' என்ற ஸ்தானத்தை அமைத்திருக்கிறது... ஜோதிடம் என்ற அரும் கலை.

இதை உணர்த்தும் வண்ணம் அமைந்திருப்பதுதான்... இவ்விரண்டு நிலைகளின் சேர்க்கையான... 'தர்ம - கர்மாதிபதிகளின்' இணைவான யோகம்.

ஸாய்ராம்.


Saturday, July 13, 2019

சரணாகதியின் சூட்சுமம்

சரணாகதியின் சூட்சுமம் :

பிரபஞ்சப் பேருணர்வான... பரமாத்ம சொரூபத்தின் மூலத்தைக் கொண்டு... உயிராகி இருக்கும்... அனைத்து ஜீவன்களின் நோக்கமும், பயணமும்... அந்த மூலத்தை நோக்கியதாகவே அமைகிறது.

அந்த பயணத்திற்கு வழிகாட்டும் யுக்திகளாக... வேதம் நமக்கு மூன்று வழிகளை... மார்க்கங்களாக்கியிருக்கிறது. அவை,கர்மம்... பக்தி... யோகமாகிய ஞானம்.

இவற்றில்... பக்தி ஒன்றுதான், மிக எளிதாக இறைவனை அடையும் மார்க்கமாக இருக்கிறது. அது வாழ்வின் வழிமுறைகளினால் ஏற்படும் துன்ப நிலையில் ஆரம்பித்து... இறைவனுடன் ஒன்று கலக்கும் சரணாகதி என்ற உயர் உணர்வில் பூரணமாகிறது.

'விபீஷ்ணன்'... இலங்கை வேந்தனான 'இராவணேஸ்வரனின்' சகோதரன். ராக்ஷத குலத்தில் பிறந்திருந்தாலும்... இறைவனின் மேல் மாறாத பற்று கொண்டவன். அவனது பக்தி... அவனை தர்மம் நிறைந்த ஒரு மானுடனாக மாற்றியிருந்தது. பக்தியின் தன்மைதான் அது.

பக்தி... மனதை தூய்மை அடையச் செய்கிறது. தூய்மையான மனது... அதில் தோன்றும் தனது பூர்வ வினைகளால் தூண்டப்படுகிற... கர்ம வினைகளாகிய எண்ணங்களை... அதன் முளையிலேயே ஆராய்கிறது. அது நல்ல எண்ணங்களாக இருக்கும் பக்ஷத்தில்... அதன் வேருக்கு நீரூற்றி... அதை, ஒரு விருக்ஷமாக வளர்த்துவிடுகிறது. அதுவே, ஒரு தீய எண்ணமாக இருக்கும் பக்ஷத்தில்... அதனை, வேரிலேயே கிள்ளி எறிந்து விடுகிறது.

இராவணேஸ்வரன் எடுத்த ஒரு தவறுதலான முடிவு... அந்த இலங்கை சாம்ராஜ்யத்திற்கே ஒரு பேரழிவாக மாற இருந்தது. அந்த முடிவிலிருந்து... தனது சகோதரனைக் காப்பாற்ற... எண்ணற்ற முயற்சிகளைச் செய்து தோற்றுப் போன... விபீஷ்ணனின் மனதில், அந்த சாம்ராஜ்யத்தையும்... அதன் பிரஜைகளையும் காக்கும் கடமையைச் செய்வதே உத்தமமான செயல் என்ற தூய எண்ணம்... துளிர் விட்டது. இதுதான் பக்தி செய்யும் மாயம்.

அந்த எண்ணம் துளிர் விட்ட உடனேயே... ஸ்ரீ இராம பிரானாரின் வருகையினால்... அதற்கான வழியும் பிறந்து விட்டது. தனது குலத்தையும்... தனது குலத்திற்கான சாம்ராஜ்யத்தையும்... அதன் பிரஜைகளையும் காத்திட... தர்மத்தின் பாதையில் செல்லத் தீர்மானித்தான் விபீஷ்ணன்.

இலங்கையை நோக்கிய படையெடுப்பிற்காக... இராமேஸ்வரத்தில்... தனது பரிவாரங்களுடன் வந்திருக்கும்... ஸ்ரீ இராமபிரானிடம்... சரணாகதிக்காக வந்து தவமிருந்தான் விபீஷ்ணன். பக்தனின் நிலையை பகவான் அறியமாட்டாரா...!. விபீஷ்ணனுக்கு சரணாகதி கொடுத்தது மட்டுமல்ல... அப்போதே, சாம்ராஜ்யத்திற்கான மகுடத்தையும் சூட்டி மகிழ்ந்தார்... ஸ்ரீ இராம பகவான்.

மேலோட்டமாக பார்க்கும் போது... ஒரு உலக நிகழ்வாக இருக்கும் இந்தக் காட்சி... உள்ளுணர்வால் தூண்டப்படும் பக்தி செய்யும் மாயம்தான். அது, அந்த ஜீவனை... இறையின் திருவடியே சரணம் என்று... சரணாகதி அடையும் போது... என்றும் பிறப்பில்லா...உத்தம கதியில் கொண்டு சேர்க்கும்... உபாயமாக மலரும் என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும்.

ஸாய்ராம்.

Friday, July 12, 2019

“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற மந்திர வாசகத்தின் சூட்சுமம்.

'காதற்ற ஊசியும் வாராது கான் கடைவழிக்கே...'

இது... காவேரிப்பூம் பட்டினத்து, பெரும் செல்வரான... திருவெண்காடரை... தனது அனைத்துப் பற்றுக்களிலிருந்தும்... விடுவித்து... பட்டினத்தார் என்ற பூரண ஆத்மாவாக மாற்றிய... மந்திரச் சொற்கள்.

இந்த மந்திரச் சொற்களை உதிர்த்தவர்... திருவிடை மருதூரின் ஈஸ்வரரான மருதூரார்தான். தாமே ஒரு குழந்தையாக அவதரித்து...  ஒரு அந்தணரின் வறுமையையும்... அதே நேரத்தில்... திருவெண்காடரின் குழந்தையின்மையையும்... 'மருதவாணன்' என்ற நாமம் கொண்டு... ஒரே நேரத்தில் தீர்த்துவைத்தார்.

செல்வச் செழிப்பில் வளர்ந்த மருதவாணனின் நோக்கம்... இந்த புற உலக வாழ்வில் அழன்று கொண்டிருக்கும்... இந்த செல்வந்தரை... ஜீவனுக்கே உண்டான... ஒரே கடமையாகிய... அக உலக வாழ்வில் ஈடுபடுத்துவதே.

தக்க வயதை அடைந்த மருதவாணனை... கடல் கடந்த வாணிபத்திற்கு... பெரும் செல்வத்துடன் அனுப்புகிறார் திருவெண்காடர். திரும்பி வரும் போது... மருதவாணன் கொண்டு வந்தது... மூட்டை மூட்டைகளாக 'விராட்டிகளையும்'... கையடக்கமான 'ஒரு சிறு பெட்டியையும்தான்'.

மகன் திரும்பி வந்த மகிழ்வைவிட... அவன் ஈட்டி வந்த பொருள்கள் மேல் கொண்ட மோகத்தால்... வேகமாகச் சென்று ... ஆர்வத்துடன் மூட்டைகளைப் பிரித்தப் பார்த்த திருவெண்காடருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி... அந்த மூட்டைகளில் நிறைந்திருந்தது அனைத்தும் விராட்டிகளே.

ஆத்திரம் அடைந்த திருவெண்காடர்... அந்த விராட்டிகளை... தரையில் வீச... அந்த விராட்டிகளுக்குள் இருந்து... நவரத்தினங்கள் சிதறி ஓடியதைக் கண்டு... ஒரு புறம் அதிர்ச்சியும்... மறு புறம் ஆனந்தமும் அடைந்தார். தம் வாழ்நாளில்... தான் இதுவரை, ஈட்டியிராத... இத்தனை பெரும் செல்வத்தை... தனது ஒரு வாணிபத்தால் ஈட்டிய... தனது அன்பு மகனைத் தேடி, விட்டுக்கு ஓடிவந்தவரின் கையில்... ஒரு சிறு பெட்டியைக் கொடுத்துவிட்டு... வெளியெ ஓடிச்சென்றான் மருதவாணன்.

அந்த பெட்டிக்குள் இருந்த மந்திர வாசகம்தான்... 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே...'. ஆம்... எதையும் கொண்டுவராத இந்தப் பிறப்பு... எதையும் கொண்டு போகாமல்தான் முடிகிறது. இந்த உண்மையை உணர்ந்த பின்... அவரின் ஓட்டம்... மருதவாணனின் கால்தடங்களைத் தேடித்தான் ஓடியது. அது அவரை... பட்டினத்தார் என்ற துறவியாக்கியது.

இந்த மந்திர வாசகத்திற்குப் பின் உள்ள சுட்சுமம்தான் என்ன...?

தனது உள் நிலைப் பிரவேசத்திற்குச் செல்லும் ஒரு ஜீவன்... தனது ஐம்புலன்களில்... தேகம் என்ற தனது உடலை மறந்து விடுகிறது. பார்வையிலிருந்து தனது கண்களை விலக்கிக் கொள்கிறது. முகர்ந்து பார்ப்பதிலிருந்து தனது... நுகர்ச்சியை விலக்கிக் கொள்கிறது. சுவைபடலிலிருந்து... தனது நாவை அடக்கிக் கொள்கிறது. ஆனால்... கேட்பது என்ற... சப்த ஒலிகளிலிருந்து விடுபடுவதுதான் இறுதியானதாகிறது.

நான்கு புலன்களிலிருந்தும் விடுபடும் ஜீவன்... இந்த கேட்டல்... என்ற நிலையிலிருந்து விடுபட பெரும் முயற்சியை மேற்கொள்ளும் வரை... இந்த உலகவாழ்வுடன் ஒட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலையின் போராட்டமே... 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே...' என்ற நிலை.

எப்போது அந்த 'கேட்டல்'... என்ற நிலையில் ஒரு முன்னேற்றம் உண்டாகி... வெளியில் இருக்கும் சப்தங்கள்... முற்றிலுமாக அடங்குகிறதோ... அப்போது இந்த ஜீவனுக்கு... உள்ளிருக்கும் நாதத்துடன் உண்டான தொடர்பு உறுதியாகி... உள்ளொலிக்கும் 'ஓம்கார' நாதத்துடன்... ஜீவன் இணைந்து விடுகிறது.

ஜீவனின்... இறுதி முயற்சியான... தியான அவஸ்தையை... இதைவிட சிறந்த மந்திரச் சொற்காளால்... யாரால்தான்... விவரித்துவிட முடியும்...!

ஸாய்ராம்.


Tuesday, July 9, 2019

கவிதைத் தொகுப்பு : பூவிற்கு இதழ்கள் போல...

பூவிற்கு இதழ்கள் போல...

விதை மீண்டும் வித்தாகும்
வாழ்க்கை சுழற்சியில்
மலர் மலரும் பருவம்
சுழல் வாழ்வின் ஓர் அங்கம்

மலர் என்றால் மனம் சொல்லும்
இதழ்களின் வரி வடிவம் என்று
இதழ்கள் மட்டும் மலர்களல்ல
அது பூவின் ஓர் அங்கம்

இதழ் வண்ணம் கண் கொள்ளும்
நெஞ்சள்ளும், மனதிற்கினியதாய்
பூத்துக் குலுங்கும், பூவின்
அடையாளமாய் முகவரி காட்டும்

பூக்கள்...
காயாகி, கனிந்து மீண்டும்
விதையாகி, விருட்சமாகும். இது
காலச் சக்கரத்தின் பருவ மாற்றம்

பூக்களின் வடிவமைப்பே
படைத்தவனின் பாதையில்
நம்மை உள் திருப்பும்
உலக வாழ்வின் நியமம் உணர்த்தும்

மலர் காம்பின் தலைப்பாகை
பூ என்ற வடிவமைப்பு...
வெளிவட்டம் பூவிதழ்கள்
அதைத்தாங்கும் புல்லி வட்டம்...

பூவிதழ்கள் உள்ளே
ஆண் மகரந்தக் கம்பிகள்.
அதன் நுனியில் மகரந்தத் தூள்கள்
சூழ் கம்பி உள்ளே கர்வமாய் தலை நிமிரும்

காற்றசைவில் இவை கூட...
மன்மத மஞ்சத்தில்
சூழ் உருவாகும் - இதுவே
தன் மகரந்தச் சேர்க்கை

இது கூடாது போனால்...
மற்றுமொரு மாயத்தை
சூட்சுமமாய் உள் விரித்தான்
படைப்பின் நாயகன்.

வெளியே இதழ் விரித்தான்
இதழ்களில் அழகு செய்தான்
வரும் விருந்து உண்டு மகிழ...
தேன் வைத்தான் பூவுக்குள்ளே

இதழ் அழகு கண்டு வரும்
பூச்சிகள் உள்ளே தேன் சுவைக்க
கொம்பு நீட்டும்... மலர் குலுங்கும்...
மகரந்த லீலை நடக்கும்

மயங்கி வண்டு பறக்கும் போது
கால் வழியே மகரந்தத் தூள் பரவும்
வேறு பூவும் காயாகும்
மாயம் இதுவேதான்

சூழ் காயானால் இதழ்களின்
பங்கு முடியும்
இதழ் உதிர்ந்து சருகாகும்
பருவக் காட்சி முடிவுக்கு வரும்

பூவிதழ் போல் மாந்தர்க்கு
இளமை ஒரு பருவ மாற்றம்...

வாழ்க்கை சுழற்சியின்
தவிர்க்க முடியா ஓர் அங்கம்
அறியாமைக்கும்... அமைதிக்கும்
இடையேயான... அவஸ்த்தைக் காலம்

இனவிருத்தி செய்துவிட
இருபாலர் இணைந்து விட
இறைவன்... மானுடம் தந்த
இதழ்விரி கால மாற்றம்

ஈர்த்து இங்கே இனவிருத்தி
செய்து விட்டால்
இளமை இதழ்கள்
உதிர்ந்து இங்கே கருகிப் போகும்

செடி வாழ்வின் அத்தியாயத்தில்
பூ வாழ்வு ஓர் அங்கம்
இத்துடன் முடிவதில்லை
செடியின் வாழ்வு...

குறுஞ்செடியாய்... மரமாய்...
பறவைகளின் கூடுகளாய்...
சரணாலாயமாய்...நிழலாய்...மழையாய்...
காற்றாய்... கடமையுண்டு அதன் வாழ்வில்

மனித வாழ்வு செடி போல...
ஜனனம் முதல் மரணம் வரை
மனித வாழ்வில் இளமை காலம்...
சுழல் வாழ்வின் ஓர் அங்கம்

நல் மகவாய்... மாணாக்கராய்...
மனிதமாய்...பெற்றோராய்... வாழ்க்கை துணையாய்...
குருவாய்... பின்
தெய்வம் சேர மகானாய்...

மனித வாழ்வு இறையின் ஓர் கொடை
பூவிற்கு இதழ்கள் போல... இளமை மானுடர்க்கு.

ஸாய்ராம்.












Sunday, July 7, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 6. சாரபலனின் சூட்சுமம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 6 :

சாரபலனின் சூட்சுமம் :

ஜோதிடம்... கிரகங்களின் அமைவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஜீவனின் வாழ்வு ரகசியத்தை வெளிப்படுத்தும் கலையாகும்.

'சூரிய பகவானை' மையமாகக் கொண்டு... அதைச் சூழ்ந்துள்ள கிரகங்கள் சார்ந்த பிரபஞ்சத்தை ஒரு வட்டமாக்கி... அந்த வட்டத்தை பன்னிரு ராசிகளாகப் பிரித்து... ஒன்பது கிரகங்களை... அந்த ராசியில் அமைந்திருக்கிற ஒன்பது நட்சத்திர சாரங்களில்... பயணிக்க வைத்து... ஒரு ஜீவன் பிறக்கிற நேரத்தை லக்னமாக்கி... அந்த நேரத்தில் கிரகங்களின் அமைவினை அந்தந்த ராசிகளில் அமைத்து... ஒரு ஜோதிடசித்திரத்தை உருவாக்கி... அதன் மூலம் அந்த ஜீவனின் வாழ்வு ரகசியத்தை அற்ந்து கொள்வதே... இந்த கலையின் நோக்கமாகும்.

ஒரு ராசிச் சித்திரத்தை பார்க்கும் போது... லக்னம் முதலான பன்னிரு இராசிக் கட்டங்களில் அமைந்த ஒன்பது கிரகங்களின் அமைவுதான் தெரிகிறது. அந்தக் கிரகங்களின் அமைவுக்கேற்ப... திரிகோணம் (3), கேந்திரம் (4), பணபரம் (2) மற்றும் மறைவு ஸ்தானங்கள் (3) என... பன்னிரண்டு பாவங்களுக்கேற்ப... பலன்களை அறிந்து கொள்வதே அடிப்படை ஜோதிடமாகிறது.

இந்த பலன்கள் யாவும் அந்த ஜீவனின்... இந்தப் பிறவிக்கான கர்ம வினைகளின் மொத்தப் பலன்களாகும். அதில்... எந்த கர்மவினைக்கான பலனை... அந்த ஜீவன்... தற்போது அனுபவிக்கிறது...? என்பதை அறிந்துகொள்ள... மேலும் சில நுட்பமான ஜாதக உப அமைவுகள் தேவைப்படுகிறது.

புரதான ரிஷிகள் இந்த நுட்பமான ஜாதக அமைவுகளுக்கு பதினாறு (16) விதமான, ஜாதகக் கட்டமைப்புகளை... இராசிக் கட்டத்தை மையமாக வைத்து உருவாக்கினார்கள். இன்றைய காலக் கட்டத்தில்... அந்த நுட்ப்மான அமைவுகளின் விரிவாக்கத்தில் முதல் நான்கு (4) அமைவுகளே நடைமுறையில் கையாளப்படுகிறது.

அவை, 1. கிரக பாதசாரம்
                2. நவாம்ஸம்
                3. கர்ப்ப செல் நீக்கி தசா இருப்பு
                4 பாவம்
இதில் கிரக பாதசாரம்... மிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

ஒரு ஆலைக்கு செல்லும் கரும்புக்கு எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது...? கரும்பின் எடையைக் கொண்டா...? கரும்பின் அடர்த்தியைக் கொண்டா...? இவையிரண்டையும் நீக்கி... அதன் 'சாற்றின்' தன்மையைக் கொண்டா...? என்னும் போது... கரும்பிற்கு, அதன் சாற்றின் தன்மையைக் கொண்டே விலை நிரணயம் செய்யப்படுகிறது என்பதே நடைமுறை வழக்கமாகிறது.

அது போலவே... ஜாதகச் சித்திரத்தில் அமைந்திருக்கும்... ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் பலனை அறிந்து கொள்வதற்கு... அந்த கிரகத்தின் காரகத்துவம்... ஆட்சி... உட்சம்... நீசம்... மறைவு... நட்பு... பகை... சேர்க்கை... அது அமைந்த ஸ்தானம் இவை அனைத்த்தையும் விட... அந்தகிரகம் நின்ற 'நட்சத்திரத்தின் சாரமே'...  'உள் பொருள் உரைக்கும்' உண்மையாகிறது.

உதாரணமாக... 'சிம்ம லக்னத்தில்' பிறந்திருக்கிற ஜாதகர் ஒருவர்... தனக்கு தொழில் அமையும் காலத்தில்... தொழிலின் நிலையை அறிந்து கொள்ள... ஜாதகத்தின் துணையை நாடுகிறார். அவரது ஜாதகத்தில்... 'சிம்ம லக்னத்திற்கு' யோகாதிபதியான... 'செவ்வாய் பகவானின்' தசா தனது ஏழு (7) வருட காலங்களை நடத்தப் போகிறது. அந்த 'செவ்வாய் பகவான்'... ஜாதகரின் சுக ஸ்தானத்தில் (4) அமைந்திருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும் போது... இந்த அமைவு மிக நன்றானதாகத் தோன்றுகிறது. சுக ஸ்தானத்தில் (4) அமர்ந்து... தனது பார்வையால்... ஜீவன ஸ்தானத்தை (10) பார்வை செய்வதால்... அவரது தொழில் வெகு சிறப்பாக நடக்கும்... என்றுதான்... சொல்ல வேண்டும்.

மேல்கண்ட அமைவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பலன் கூறுவது நுட்பமானதாக இருக்காது. காரணம் இதில் சறுக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏனெனில்... அந்த 'செவ்வாய் பகவான்'... நான்காம் இடத்தில் (4)... 'கேட்டை நட்சத்திரத்தின்'... நான்காம் (4) பாதத்தில் அமைந்து... அந்த நட்சத்திர நாயகனான 'புத பகவான்'... இராசியில்... எட்டாம் இடத்தில் (8) அமையப் பெற்றால்... 'சிம்ம லக்னத்திற்கு' தன, லாபாதிபதியாகிய...'புத பகவானின்'... 8 ஆமிட மறைவு... 'செவ்வாய் பகவானின்'... ஏழு வருட வாழ்வை மிகக் கடினமாக மாற்றிவிடுவதை அனுபவத்தில்தான் அறிந்து கொள்ள நேரிடும்.

மாறாக... அதே 'சிம்ம லக்ன' ஜாதகருக்கு... நான்காம் (4) இடத்தில் அமைந்த 'செவ்வாய் பகவான்'... 'புத பகவானின்' சாரமான... 'கேட்டை நட்சத்திரத்தின்'... 1 ஆம் பாதத்தில் அமைந்து... இராசியில், 'புத பகவான்' ... 2 ஆமிடமான 'தன ஸ்தானத்தில்' அமையப் பெறும் போது... தன,லாபாதிபதியின் 'உச்ச பலத்தினால்'... 'செவ்வாய் பகவானின்'... ஏழு (7) வருட காலம்... ஜாதகருக்கு... மிக உன்னதமான காலமாக அமையும் என்பதையும் அனுபவத்தில்தான் அறிந்து கொள்ள நேரிடும்.

இந்த இரண்டு மாறுபட்ட நிலைகளையும்... அந்த ஜாதகருக்கு... வருமுன்னர் உரைப்பதற்கு... கிரகங்களின் நட்சத்திர சாரஅமைவே... உறு துணையாக இருக்கும். சாரம் அறிந்து பலனுரைப்பதே... சாலச் சிறந்தது.

ஸாய்ராம்.


Friday, July 5, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 5. 'அட்டமஸ்தானம்'

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - 5 : 

அட்டமஸ்தானம் 

லக்னத்திலிருந்து எட்டாமிட அமைவுக்குத்தான்... 'அட்டமஸ்தானம்' என்று பெயர். பொதுவாக இந்த எட்டாமிடம் 'ஆயுள் ஸ்தானம்' என்று அழைக்கப் படுகிறது.

இந்த இடத்தை மூலமாகக் கொண்டு ஒரு ஜீவனின் இகலோக வாழ்வு காலம் கணிக்கப்படுகிறது. ஜீவன் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வாழ்வு காலத்தை எவ்வாறு கடந்து போகிறது என்பதையும்... அதில் ஏற்படும் தடைகள்... தடங்கல்கள்... என்பவை பற்றியும் இந்த 8 ஆமிடம் அறிவிக்கிறது.

ஆணுக்கும்... பெண்ணுக்கும் ஆயுள் ஸ்தானமாக அமையும் இந்த 8 ஆமிடம்... பெண்ணின் ஜாதகத்தில்... கணவனின் ஆயுளைக் குறிக்கும் 'மாங்கல்ய ஸ்தானமாக'... கணவனின் ஆயுளைக் குறிக்கும் இடமாகவும் அமைகிறது.

அதிர்ஷ்டம் என்ற அறிவுக்கும்... முயற்சிக்கும்... அப்பால் இருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் இடமாக இந்த ஸ்தானம் அமையும். அதிர்ஷ்டம் என்ற சொல்லே... கண்ணுக்குப் புலப்படாதது... என்ற அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது. அதனால்தான்... இந்த இடத்தை 'புதை பொருள் ஸ்தானம்' என்ற வகையிலும் அழைப்பதுண்டு.

எவ்வளவுதான் புகழ்ச்சியாக இந்த இடத்தை வருணித்தாலும்... இந்த அஷ்டமாதிபதியின் தசாக் காலம்... ஒரு ஜாதகருக்கு கடும் துன்பத்தை அளிப்பதை மறுக்க முடியாது. அதற்கான காரணத்தை சற்று ஆய்வோம்.

1. இந்த 8 ஆமிடம்... 12 என்ற சென்ற பிறவியைக் குறிக்கும் ஸ்தானத்திற்கு 9 ஆமிடமான 'தர்ம ஸ்தானமாகிறது'. சென்ற பிறவியில் இந்த ஜீவன்... தான் புரிந்த கடமைகளின் தர்மத்தையும்... அதர்மத்தையும் எடைபோடும் இடமாக அமைகிறது.

2. இந்த 8 ஆமிடம்... பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு (5 ஆமிடம்)... சுக... துக்க ஸ்தானமாக ( 4 ஆமிடம்) அமைகிறது. இந்த ஜீவன் தான் கொண்டு வந்திருக்கும் 'பாப-புண்ய வினைகளுக்கு' ஏற்பவே... இந்த அட்டாமதிபதி... தனது காலத்தில்.. ஜீவனை வழி நடத்துகிறார்.

3. இந்த 8 ஆமிடம்... பாக்கியம் என்ற 9 ஆமிடத்திற்கு விரய ஸ்தானமாக அமைகிறது. இது உணர்த்துவது எதையென்றால்... அந்த அடாமாதிபதியின் காலம்... வினைகளின் விளைவுகளை கரைந்து போக வைக்கிறது என்ற உண்மயைத்தான்.

4. இந்த 8 ஆமிடம்... கர்மம்... தொழில்... ஜீவனம் என்ற 10 ஆமிடத்திற்கு... லாபம் என்ற 11 ஆமிடமாகிறது. இது உணர்த்துவது எதையென்றால்... தற்போதைய பிறவியில் இந்த ஜீவன் எதிர்கொள்ளும் வினைகளை... எவ்வாறு எதிர் கொள்கிறதோ... அதற்கேற்றாவாறே... அதன் வினைகளின் தொகுப்பு அமையப் போகிறது.

இவ்வளவு சூட்சுமங்களையும் கொண்ட இந்த 8 ஆமிடம் இரகசியங்களின் சுரங்கம்தான்.

ஸாய்ராம்.


ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 4.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 4 :

வேதத்தின் அங்கமாகவும்... புரதான ரிஷிகளின் வழிமுறைகளாலும்... வளப்படுத்தப்பட்ட ஜோதிடக் கலை... ஒரு ஜீவனின் வாழ்வின் பாதையை... அதன் கர்ம இரகசியயத்தை... இறைவனின் பேரருளின் கருணையினால்... தேவைப்படும் போது... அந்த ஜீவனுக்கு வெளிப்படுத்துகிறது.

ஜோதிடத்தின் மூலமாக ஒரு ஜீவனின் வாழ்க்கை இரகசியத்தை... கர்ம இரகசியத்தை... அறிய முற்படும் ஜோதிடருக்கு... இராசி மணடலத்தில் அமைந்த கிரக ஆதிபத்தியத்தில்... 'திரி கோணம்' என்ற நிலை... அந்த சூட்சுமத்தை விளக்கும் பிரதானமான அணுகுமுறையாக அமைகிறது.

'லக்னம்' முதலாவது திரிகோணமாகவும்... 'பூர்வம்' என்ற ஐந்தாம் இடம் இரண்டாவது திரிகோணமாகவும்... 'பாக்கியம்' என்ற தர்ம ஸ்தானம் மூன்றாவது திரிகோணமாகவும் அமைகிறது.

லக்னம்... அந்த ஜீவனின் அனைத்து நிலைகளையும் படம்பிடித்து காட்டிவிடும். ஜீவனின் மூலம்... அது மேற்கொண்டுள்ள இந்த பிறவிக்கான நோக்கம்... அது பயணம் மேற்கொள்ளும் பாதை... என அனைத்து முடிச்சுகளையும் அவிழ்க்கும் இடமாக அமையும்.


பூர்வம்... அந்த ஜீவன் தனது மொத்த வினைகளின் தொகுப்பிலிருந்து... இந்த பிறவிக்கு மாத்திரமான... சம அளவிலான பாவ,புண்ணியங்களின் தொகுப்பை சுமந்து கொண்டு பிறவியை அடைகிறது. அந்த வினைகளின் விளைவுகளை பகுத்தறியும் இடமாக... இந்த பூர்வம் அமைகிறது.

பாக்கியம்... அந்த ஜீவன் தான் சுமந்து கொண்டிருக்கும் வினைகளின் தொகுப்பை... இந்த புவி வாழ்வில் எவ்வாறு... அனுபவித்துக் கடந்து போகிறது...? என்ற நிலையை வெளிப்படுத்தும் இடமாக அமைகிறது.

இந்த முன்று நிலைகளின் மூலமாக... ஒரு ஜீவனின் பிறப்பும்... நோக்கமும்... வாழ்வும்... வளமும் வெளிப்படுகிறது. அதனால்தான்... ஜோதிட அணுகுமுறையில்... இந்த 'திரிகோணம்' என்ற அணுகுமுறை மிக முக்கிய அங்கத்தை வகிக்கிறது.

ஸாய்ராம்.




Thursday, July 4, 2019

சுந்தர காண்டமும் அதன் சூட்சுமமும்.

சுந்தர காண்டமும் அதன் சூட்சுமமும் :

ஸ்ரீமத் இராமாயணம் ஒரு இதிகாசம். மஹாவிஷ்ணுவின் அவதாரமாக ஸ்ரீ இராம பிரான்... மனித உருவெடுத்து... தர்மத்தின் வழியே... நடந்து காட்டிய பாதையே... ஸ்ரீ இராம... அயனம்.

ஸ்ரீ இராமபிரானது பிறப்பு... குருகுலம்... விஷ்வாமித்திரருடனான திக்விஜயம்... துஷ்ட நிக்ரஹம்... சீதாதேவியுடன் திருமணம்... கைகேயின் வரம்... சீதாதேவி, லக்ஷ்மணனுடன் வனவாசம்... வனவாச இறுதி நேரத்தில் இராவணனது பிரவேசம்... சீதாதேவியை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தல்... சுக்ரீவ சாம்ராஜ்யத்தோடான நட்பு... அநுமனின் தேடல்... இலங்கையின் மீது படையெடுப்பு... இராவண வதம்... சீதா தேவியாரின் மீட்பு... பட்டாபிஷேகம் என...

பால காண்டம்... அயோத்தியா காண்டம்... ஆரண்ய காண்டம்... கிஷ்கிந்தா-சுந்தர-யுத்த காண்டங்கள்... உத்திர காண்டம்... என ஸ்ரீ இராமபிரானது பயணம் நடந்து முடிகிறது.

இதில் 'சுந்தர காண்டம்' என்பது மிக முக்கியமான காண்டமாக அமைகிறது. தங்களது பதினான்கு வருட வனவாசத்தை பூர்த்தி செய்யும் நேரத்தில்... பதின்மூன்றாம் வருட ஆரம்பத்தில் நிகழ்ந்த ஒரு திருப்பம்... ஸ்ரீ இராமபிரானையும்... சிதாதேவி தாயாரையும் பிரித்து வைத்தது.

தசரச சக்கரவர்த்தியின் அன்பு மகனான இராமன்... ஜனக மஹராஜரின் அன்பு செல்வியான சீதாதேவியை... சுயம்வரத்தில் மணந்து... மிக இன்பமான வாழ்வை மேற்கொள்ளும் நேரத்தில்... முதல் திருப்பமாக... கைகேயியின் வரம் குறுக்கிட்டது. அது இந்த தம்பதிகளை கானகத்திற்கு அழைத்துச் சென்றது. அடுத்த திருப்பம்... இராவணனது வருகையும்... சீதாதேவியை கவர்தலுமாக... ஸ்ரீ இராமபிரானையும்... சிதா தேவியையும்... பிரித்து வைத்தது.

இந்த பிரிவினால் தாங்கவொண்ணா துயரத்தில் சிக்கித் தவிக்கிற இந்த தம்பதிகளின் துயரத்தை... ஆஞ்சிநேய மகாபிரபு... தனது தூதுவன் என்ற பொறுப்பை ஏற்று... இருவரது துயரத்தையும் துடைக்கும்... அற்புத நிகழ்வையே... 'சுந்தர காண்டம்' வருணிக்கிறது.

இந்த 'சுந்தர காண்டத்தின்' சூட்சுமம்தான் என்ன...? என்பதை சற்று ஆய்ந்தால்... 'பரப்பிரம்மத்திடமிருந்து'... பிரிந்து வந்த 'ஜீவன்'... தனது தொடர் பிறவிகளால்... தனது மூலமான பிரம்மத்தையே மறந்து... இந்த உலக சூழல்களிலேயே உழன்று கொண்டிருக்கிறது. ஒரு நிலையில்... இந்த துன்ப நிலையிலிருந்து மீழ முடியாது... தவித்து... தளர்ந்து... கதியே இல்லையா...!... என்று கலங்கி நிற்கும் போது... பரப்பிரம்மம்... ஒரு 'சத்குருவின்' உருவை ஏற்று வந்து... அல்லல்படும் ஜீவனை... பரப்பிரம்மத்துடன் இணைக்கிறது.

இதைத்தான்... பரப்பிரம்மான ஸ்ரீ இராமபிரானுடன்... ஜீவனாக அல்லல் படும் சீதா தேவியை... சத்குருவான... ஸ்ரீ ஹநுமந்தப் பிரபு... இந்த சுந்தர காண்டத்தில் இணைத்து வைக்கிறார்.

ஸாய்ராம்.






Monday, July 1, 2019

வெண்ணை திருடும் கண்ணன்

வெண்ணை திருடும் கண்ணன் :

'கண்ண பரமாத்மாவின்' அவதார ரகசியம்... தர்ம ஸ்தாபனமும்... அதன் பரிபாலனமும்தான்.

அதை நிகழ்த்த வந்த அவதாரம்... 'கோபால கிருஷ்ண' பால லீலைகளை நிகழ்த்தி... ஆயர் பாடியில் மட்டுமல்ல... அனைத்து ஜீவர்களின் மனத்தையும் கொள்ளை கொண்டது.

அந்த லீலைகளில் பிரதானமானது... 'வெண்ணை திருடும் படலம்'. பால கோபாலனின் கண்களிலும், கைகளிலும்... ஆயர்பாடியில் சேர்த்து வைக்கப்பட்ட... எந்த ஒரு வெண்ணைப் பானை உரியும் தப்பவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு அழகிய குழந்தையாக, ஆயர்பாடியில் வலம் வந்த இந்த கோபாலன் வாயைத் திறந்து கொஞ்சம் வெண்ணை கேட்டால்... ஆயர்பாடியில் யார்தான் மறுத்திருப்பார்...? அவ்வாறு இருக்கும் சூழலில்... கண்ணன் ஏன், வெண்ணையைத் தேடித் திருடி உண்ண வேண்டும்...? தனக்கு ஏன் அவ்வாறான ஒரு அவப் பெயரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்...? தான் மட்டுமல்லாமல். தனது நண்பர் குழாத்துக்கும்... இந்த அவப்பெயரை ஏன் தேடித் தர வேண்டும்...?

அதற்கு... 'வெண்ணை' என்பதன் தன்மையைப் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிறிது நேரத்தில் கெட்டுவிடும் பாலிலிருந்துதான்... எப்போதும் கெட்டுவிடாத 'நெய்யின்' மாற்றம் நிகழ்கிறது. இந்த பாலுக்கும்... நெய்யுக்கும்... இடையிலேயான ஒரு நிலைதான் வெண்ணை என்பதன் தன்மை. இந்த தன்மையைத்தான்... ஒரு ஜீவனது 'ஆன்மீக நிலையின்' மாற்றத்திற்கான படிநிலைகளுக்கு ஒப்பாக நோக்கப் படுகிறது.

இறைவனை அறிந்து கொள்ள முடியாத காலத்தை... பாலுக்கு ஒப்பாகவும்... அவரை அறிந்து... அனுபவித்து... உணர்ந்து... அவருடன் இணைந்து கொள்ளும் காலத்தை... நெய்யுக்கு ஒப்பாகவும் கூறலாம். இதற்கு இடையேயான காலத்தைத்தான் 'பக்தி' என்ற ஒப்பற்ற நிலை ஆள்கிறது. இந்த நிலையைத்தான்... 'வெண்ணைக்கு' ஒப்பாகக் கொள்ள வேண்டும்.

சிறிது நேரத்தில் கெட்டுவிடும் பாலைக் காப்பாற்ற... அந்த பாலைக் காய்ச்சி... ஆற விட்டு அதில் சிறிது உரையைச் சேர்க்க வேண்டியிருக்கிறது. அப்போது அந்த பால்... தயிர் என்ற நிலைக்கு மாறுகிறது. இந்த தயிரும் குறிப்பிட்ட காலத்தில் கெட்டு விடும். இந்த நிலையில் தயிரைக் காப்பாற்ற அதைக் கடைந்து... வெண்ணையாகவும், மோராகவும் மாறுதலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. மோரில் தண்ணீரைக் கலந்து கொஞ்ச காலத்திற்கு அதைக் காப்பாற்றலாம். ஆனால்... வெண்ணையைக் காப்பாற்ற அதை அக்னியை மூலமாகக் கொண்டு உருக்க வேண்டியிருக்கிறது. இப்போது திரண்டிருந்த வெண்ணையிலிருந்து... என்றும் அழியாத நெய் உருவாகிறது.

அதை போலத்தான் மனிதனின் நிலையும். இந்த 'அழியும் மனித உடலில்தான்'... என்றும் 'அழியாத பரமாத்ம சொரூபம்' மறைந்து... உறைந்து இருக்கிறது. இதை வெளிக்கொணரும் ஒரு நிலைதான்... பக்தி என்ற உயர் நிலை. இந்த நிலையை அடைய ஒரு ஜீவன் பெரும் ஆன்மீகப் போராட்டத்தை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.

இந்த உடம்பு என்ற 'பாலைக் காப்பாற்ற'... உன்னதமான மஹான்களின் 'அருளுரைகள் என்ற உரை'... தேவைப்படுகிறது. அதில் பக்குவப்பட்ட இந்த ஜீவனின் மனம்... 'பக்தி' என்ற 'வெண்ணையாகத்' திரள்கிறது. இந்த நிலையிலிருந்து ஜீவன் மேம்பட்டு... அந்த பரமாத்ப சொரூபத்தில் கலந்து விட... இறைவனின் பேரருளின் 'இடைபடுதல்' தேவைப்படுகிறது. அந்த இடைபடுதல்தான்... இறைவனின் கருணை. அது அந்த கனிந்த பக்தியின் மீது படிகிறது. எப்போது ஒரு ஜீவன்... பக்தியின் கனிவுக்கு உயர்கிறதோ... அப்போது அந்த எல்லையில்லா பேரருளும் கருணையும் கொண்ட இறையருள்... 'தானாக உள்வந்து'... அந்த கனிந்த மனதை ஆட்கொள்கிறது.

அவ்வாறு பக்தியால்... கனிந்த மனம் வெண்ணையாகத் திரளும் போது... அதில் வந்து குடிகொள்ள இறைவன் தானாக வருவதைத்தான்... கண்ணன் என்ற மாயன்... அந்த கனிந்த மனதின் பக்தியினை கொள்ளை கொள்ள ஓடி வருவதாக அமைகிறது.  இதுவே... வெண்ணை திருடும் கண்ணனின் லீலை.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...