Sunday, July 7, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 6. சாரபலனின் சூட்சுமம்.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 6 :

சாரபலனின் சூட்சுமம் :

ஜோதிடம்... கிரகங்களின் அமைவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஜீவனின் வாழ்வு ரகசியத்தை வெளிப்படுத்தும் கலையாகும்.

'சூரிய பகவானை' மையமாகக் கொண்டு... அதைச் சூழ்ந்துள்ள கிரகங்கள் சார்ந்த பிரபஞ்சத்தை ஒரு வட்டமாக்கி... அந்த வட்டத்தை பன்னிரு ராசிகளாகப் பிரித்து... ஒன்பது கிரகங்களை... அந்த ராசியில் அமைந்திருக்கிற ஒன்பது நட்சத்திர சாரங்களில்... பயணிக்க வைத்து... ஒரு ஜீவன் பிறக்கிற நேரத்தை லக்னமாக்கி... அந்த நேரத்தில் கிரகங்களின் அமைவினை அந்தந்த ராசிகளில் அமைத்து... ஒரு ஜோதிடசித்திரத்தை உருவாக்கி... அதன் மூலம் அந்த ஜீவனின் வாழ்வு ரகசியத்தை அற்ந்து கொள்வதே... இந்த கலையின் நோக்கமாகும்.

ஒரு ராசிச் சித்திரத்தை பார்க்கும் போது... லக்னம் முதலான பன்னிரு இராசிக் கட்டங்களில் அமைந்த ஒன்பது கிரகங்களின் அமைவுதான் தெரிகிறது. அந்தக் கிரகங்களின் அமைவுக்கேற்ப... திரிகோணம் (3), கேந்திரம் (4), பணபரம் (2) மற்றும் மறைவு ஸ்தானங்கள் (3) என... பன்னிரண்டு பாவங்களுக்கேற்ப... பலன்களை அறிந்து கொள்வதே அடிப்படை ஜோதிடமாகிறது.

இந்த பலன்கள் யாவும் அந்த ஜீவனின்... இந்தப் பிறவிக்கான கர்ம வினைகளின் மொத்தப் பலன்களாகும். அதில்... எந்த கர்மவினைக்கான பலனை... அந்த ஜீவன்... தற்போது அனுபவிக்கிறது...? என்பதை அறிந்துகொள்ள... மேலும் சில நுட்பமான ஜாதக உப அமைவுகள் தேவைப்படுகிறது.

புரதான ரிஷிகள் இந்த நுட்பமான ஜாதக அமைவுகளுக்கு பதினாறு (16) விதமான, ஜாதகக் கட்டமைப்புகளை... இராசிக் கட்டத்தை மையமாக வைத்து உருவாக்கினார்கள். இன்றைய காலக் கட்டத்தில்... அந்த நுட்ப்மான அமைவுகளின் விரிவாக்கத்தில் முதல் நான்கு (4) அமைவுகளே நடைமுறையில் கையாளப்படுகிறது.

அவை, 1. கிரக பாதசாரம்
                2. நவாம்ஸம்
                3. கர்ப்ப செல் நீக்கி தசா இருப்பு
                4 பாவம்
இதில் கிரக பாதசாரம்... மிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

ஒரு ஆலைக்கு செல்லும் கரும்புக்கு எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது...? கரும்பின் எடையைக் கொண்டா...? கரும்பின் அடர்த்தியைக் கொண்டா...? இவையிரண்டையும் நீக்கி... அதன் 'சாற்றின்' தன்மையைக் கொண்டா...? என்னும் போது... கரும்பிற்கு, அதன் சாற்றின் தன்மையைக் கொண்டே விலை நிரணயம் செய்யப்படுகிறது என்பதே நடைமுறை வழக்கமாகிறது.

அது போலவே... ஜாதகச் சித்திரத்தில் அமைந்திருக்கும்... ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் பலனை அறிந்து கொள்வதற்கு... அந்த கிரகத்தின் காரகத்துவம்... ஆட்சி... உட்சம்... நீசம்... மறைவு... நட்பு... பகை... சேர்க்கை... அது அமைந்த ஸ்தானம் இவை அனைத்த்தையும் விட... அந்தகிரகம் நின்ற 'நட்சத்திரத்தின் சாரமே'...  'உள் பொருள் உரைக்கும்' உண்மையாகிறது.

உதாரணமாக... 'சிம்ம லக்னத்தில்' பிறந்திருக்கிற ஜாதகர் ஒருவர்... தனக்கு தொழில் அமையும் காலத்தில்... தொழிலின் நிலையை அறிந்து கொள்ள... ஜாதகத்தின் துணையை நாடுகிறார். அவரது ஜாதகத்தில்... 'சிம்ம லக்னத்திற்கு' யோகாதிபதியான... 'செவ்வாய் பகவானின்' தசா தனது ஏழு (7) வருட காலங்களை நடத்தப் போகிறது. அந்த 'செவ்வாய் பகவான்'... ஜாதகரின் சுக ஸ்தானத்தில் (4) அமைந்திருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும் போது... இந்த அமைவு மிக நன்றானதாகத் தோன்றுகிறது. சுக ஸ்தானத்தில் (4) அமர்ந்து... தனது பார்வையால்... ஜீவன ஸ்தானத்தை (10) பார்வை செய்வதால்... அவரது தொழில் வெகு சிறப்பாக நடக்கும்... என்றுதான்... சொல்ல வேண்டும்.

மேல்கண்ட அமைவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பலன் கூறுவது நுட்பமானதாக இருக்காது. காரணம் இதில் சறுக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏனெனில்... அந்த 'செவ்வாய் பகவான்'... நான்காம் இடத்தில் (4)... 'கேட்டை நட்சத்திரத்தின்'... நான்காம் (4) பாதத்தில் அமைந்து... அந்த நட்சத்திர நாயகனான 'புத பகவான்'... இராசியில்... எட்டாம் இடத்தில் (8) அமையப் பெற்றால்... 'சிம்ம லக்னத்திற்கு' தன, லாபாதிபதியாகிய...'புத பகவானின்'... 8 ஆமிட மறைவு... 'செவ்வாய் பகவானின்'... ஏழு வருட வாழ்வை மிகக் கடினமாக மாற்றிவிடுவதை அனுபவத்தில்தான் அறிந்து கொள்ள நேரிடும்.

மாறாக... அதே 'சிம்ம லக்ன' ஜாதகருக்கு... நான்காம் (4) இடத்தில் அமைந்த 'செவ்வாய் பகவான்'... 'புத பகவானின்' சாரமான... 'கேட்டை நட்சத்திரத்தின்'... 1 ஆம் பாதத்தில் அமைந்து... இராசியில், 'புத பகவான்' ... 2 ஆமிடமான 'தன ஸ்தானத்தில்' அமையப் பெறும் போது... தன,லாபாதிபதியின் 'உச்ச பலத்தினால்'... 'செவ்வாய் பகவானின்'... ஏழு (7) வருட காலம்... ஜாதகருக்கு... மிக உன்னதமான காலமாக அமையும் என்பதையும் அனுபவத்தில்தான் அறிந்து கொள்ள நேரிடும்.

இந்த இரண்டு மாறுபட்ட நிலைகளையும்... அந்த ஜாதகருக்கு... வருமுன்னர் உரைப்பதற்கு... கிரகங்களின் நட்சத்திர சாரஅமைவே... உறு துணையாக இருக்கும். சாரம் அறிந்து பலனுரைப்பதே... சாலச் சிறந்தது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...