Wednesday, July 24, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 8. பிரம்ம ஹத்தி... ஒரு பார்வை

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 8 : பிரம்ம ஹத்தி... ஒரு பார்வை

ஜோதிடத் துறையில் மிகவும் அச்சத்துடன் அணுகப்படும் ஒரு அமைவு. இன்னென்ன கிரகங்கள் ... இந்தெந்த அமைவுடன் அமைந்திருந்தால்... இன்னென்ன விளைவுகள்... என்று ஜோதிட விதிகள் வகுத்திருந்தாலும்... இந்த 'பிரம்ம ஹத்தி' பற்றி மட்டும் பல... வேறுபாடான கருத்துகள்... ஜோதிட ஆர்வலர்கள் மத்தியில் உலவிவருகிறது.

'சனி பகவானையும்'... 'குரு பகவானையுமே'... பல்வேறு நிலைகளில்... இந்த பிரம்ம ஹத்தி அமைவுக்கு காரணமாக குறிப்பிடுவதை காணமுடிகிறது. அடிப்படையில் இது உண்மையான அணுகுமுறையல்ல.

காலபுருஷ இராசியான 'மேஷ இராசிக்கு'... 'தர்மம்' என்ற 'பாக்கிய ஸ்தானத்திற்கு' அதிபதியாகிறார், 'குரு பகவான்'. 'கர்மம்' என்ற 'ஜீவன் ஸ்தானத்திற்கு' அதிபதியாகிறார், 'சனி பகவான்'. இந்த இரு ஸ்தானங்களுக்கு இடையேயான தொடர்பைத்தான்... 'தர்மத்துடன் அணுகப்படும் கர்மம்' என... 'தர்ம-கர்மாதிபதி யோகம்' என்று வருணிக்கிறது ஜோதிட விதி.

கால புருஷ தத்துவத்திற்கு... தர்ம-கர்மாதிபதியாகிற... 'குரு - சனி பகவான்கள்'... ஒரு ஜீவனின் வாழ்வில்... இந்த பிறவிக்கென நிர்ணயிக்கப் பட்டிருக்கிற... அனைத்து கடமைகளையும்... தர்மத்துடன் அணுகி... எந்த எதிர்பார்ப்புமின்றி பூர்த்தி செய்து... நிர்ணயிக்கப்பட்ட வாழ்வு நாட்களை பூர்த்தி செய்வதைத்தான்... பல்வேறு நிலைகளில் உறுதி செய்கிறது. இதைத்தான்... 'குரு பகவான்' மற்றும் 'சனி பகவான்' நிலையைக் கொண்டு உறுதி செய்ய வேண்டும்.

'பிரம்மம்' என்பது... பூரணம். அது எந்த விதத்திலும் குறைபடாதது. என்றும் நிலைத்திருப்பது. அதுதான்... இந்த 'ஜீவனின்' பிறப்பிற்கு மூலமாகிறது. அந்த பிரம்மத்தினின்று தோன்றும்... இந்த 'ஜீவனுக்குத்தான்'... பிறப்பும்... வாழ்வும்... மறைவும்... ஏற்படுகிறது.

இந்த ஜீவன்தான்... தனது பிறப்புக்கு மூலமான... 'வினைகளின் விளைவு' என்ற 'கர்ம வினைகளை' சுமந்து கொண்டு பிறப்பை அடைகிறது. இந்தப் பிறவி... மற்றும் தனது  முந்தைய  பிறவிகள்...  என தனது அனைத்து 'கர்ம வினைகளையும்' அனுபவித்தபின்... இந்த ஜீவன்... பிரம்மத்தை அடைகிறது.

இந்த ஜீவன்... பிரம்மத்தை அடைவதற்குத் தடையாக இருப்பது... அதன் 'கர்ம வினைகளே'. அதைத்தான்... 'தடை' என்ற பொருள்படும் வார்த்தையாக' ஹத்தி' என்ற சொல் வருணிக்கிறது. இப்போது... இந்த ஜீவனுக்குத் தடையாக உள்ளது... தனது வினைகளே என்பது உறுதியாகிறது. இந்த வினைகளை ஜீவன் களையும் போது... அது பிரம்மத்துடன் சேர்வதற்க்கு ஏது தடை...!

அந்தத் தடையையும் இப்போதுள்ள... இந்தப் பிறவியிலேயே நீக்கிக் கொள்ளும் வழியும் உள்ளதே...! தற்போது இந்த ஜீவனின் வாழ்விற்கு மூலமாக... சாட்சியாக... ஆதாரமாக... இருக்கும் பிரம்மத்தை... இந்தப் பிறவியிலேயே அறிந்து கொள்வது மட்டுமல்ல... அதனுடன் கலந்து விடும் வாய்ப்பும் உள்ளதே...!

அந்த வாய்ப்புகளைத்தான்... நமது வேதம்... 'பக்தியாக... கர்மமாக... ஞானம் என்ற யோகமாக'... வகைப்படுத்துகிறது. இதில் நமக்கு வகுக்கப்பட்டிருக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்து...  கடமைகள் அனைத்தையும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி எதிர்கொண்டு... அந்தப் பாதையில் பயணித்து... இறுதியில்... இந்த ஜீவனுக்கு மூலமான பிரம்மத்துடன் ஐக்கியப்படும் போது... பிரம்ம ஹத்தி பற்றி ஏது பயம்...?

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...