Saturday, July 13, 2019

சரணாகதியின் சூட்சுமம்

சரணாகதியின் சூட்சுமம் :

பிரபஞ்சப் பேருணர்வான... பரமாத்ம சொரூபத்தின் மூலத்தைக் கொண்டு... உயிராகி இருக்கும்... அனைத்து ஜீவன்களின் நோக்கமும், பயணமும்... அந்த மூலத்தை நோக்கியதாகவே அமைகிறது.

அந்த பயணத்திற்கு வழிகாட்டும் யுக்திகளாக... வேதம் நமக்கு மூன்று வழிகளை... மார்க்கங்களாக்கியிருக்கிறது. அவை,கர்மம்... பக்தி... யோகமாகிய ஞானம்.

இவற்றில்... பக்தி ஒன்றுதான், மிக எளிதாக இறைவனை அடையும் மார்க்கமாக இருக்கிறது. அது வாழ்வின் வழிமுறைகளினால் ஏற்படும் துன்ப நிலையில் ஆரம்பித்து... இறைவனுடன் ஒன்று கலக்கும் சரணாகதி என்ற உயர் உணர்வில் பூரணமாகிறது.

'விபீஷ்ணன்'... இலங்கை வேந்தனான 'இராவணேஸ்வரனின்' சகோதரன். ராக்ஷத குலத்தில் பிறந்திருந்தாலும்... இறைவனின் மேல் மாறாத பற்று கொண்டவன். அவனது பக்தி... அவனை தர்மம் நிறைந்த ஒரு மானுடனாக மாற்றியிருந்தது. பக்தியின் தன்மைதான் அது.

பக்தி... மனதை தூய்மை அடையச் செய்கிறது. தூய்மையான மனது... அதில் தோன்றும் தனது பூர்வ வினைகளால் தூண்டப்படுகிற... கர்ம வினைகளாகிய எண்ணங்களை... அதன் முளையிலேயே ஆராய்கிறது. அது நல்ல எண்ணங்களாக இருக்கும் பக்ஷத்தில்... அதன் வேருக்கு நீரூற்றி... அதை, ஒரு விருக்ஷமாக வளர்த்துவிடுகிறது. அதுவே, ஒரு தீய எண்ணமாக இருக்கும் பக்ஷத்தில்... அதனை, வேரிலேயே கிள்ளி எறிந்து விடுகிறது.

இராவணேஸ்வரன் எடுத்த ஒரு தவறுதலான முடிவு... அந்த இலங்கை சாம்ராஜ்யத்திற்கே ஒரு பேரழிவாக மாற இருந்தது. அந்த முடிவிலிருந்து... தனது சகோதரனைக் காப்பாற்ற... எண்ணற்ற முயற்சிகளைச் செய்து தோற்றுப் போன... விபீஷ்ணனின் மனதில், அந்த சாம்ராஜ்யத்தையும்... அதன் பிரஜைகளையும் காக்கும் கடமையைச் செய்வதே உத்தமமான செயல் என்ற தூய எண்ணம்... துளிர் விட்டது. இதுதான் பக்தி செய்யும் மாயம்.

அந்த எண்ணம் துளிர் விட்ட உடனேயே... ஸ்ரீ இராம பிரானாரின் வருகையினால்... அதற்கான வழியும் பிறந்து விட்டது. தனது குலத்தையும்... தனது குலத்திற்கான சாம்ராஜ்யத்தையும்... அதன் பிரஜைகளையும் காத்திட... தர்மத்தின் பாதையில் செல்லத் தீர்மானித்தான் விபீஷ்ணன்.

இலங்கையை நோக்கிய படையெடுப்பிற்காக... இராமேஸ்வரத்தில்... தனது பரிவாரங்களுடன் வந்திருக்கும்... ஸ்ரீ இராமபிரானிடம்... சரணாகதிக்காக வந்து தவமிருந்தான் விபீஷ்ணன். பக்தனின் நிலையை பகவான் அறியமாட்டாரா...!. விபீஷ்ணனுக்கு சரணாகதி கொடுத்தது மட்டுமல்ல... அப்போதே, சாம்ராஜ்யத்திற்கான மகுடத்தையும் சூட்டி மகிழ்ந்தார்... ஸ்ரீ இராம பகவான்.

மேலோட்டமாக பார்க்கும் போது... ஒரு உலக நிகழ்வாக இருக்கும் இந்தக் காட்சி... உள்ளுணர்வால் தூண்டப்படும் பக்தி செய்யும் மாயம்தான். அது, அந்த ஜீவனை... இறையின் திருவடியே சரணம் என்று... சரணாகதி அடையும் போது... என்றும் பிறப்பில்லா...உத்தம கதியில் கொண்டு சேர்க்கும்... உபாயமாக மலரும் என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...