Monday, July 1, 2019

வெண்ணை திருடும் கண்ணன்

வெண்ணை திருடும் கண்ணன் :

'கண்ண பரமாத்மாவின்' அவதார ரகசியம்... தர்ம ஸ்தாபனமும்... அதன் பரிபாலனமும்தான்.

அதை நிகழ்த்த வந்த அவதாரம்... 'கோபால கிருஷ்ண' பால லீலைகளை நிகழ்த்தி... ஆயர் பாடியில் மட்டுமல்ல... அனைத்து ஜீவர்களின் மனத்தையும் கொள்ளை கொண்டது.

அந்த லீலைகளில் பிரதானமானது... 'வெண்ணை திருடும் படலம்'. பால கோபாலனின் கண்களிலும், கைகளிலும்... ஆயர்பாடியில் சேர்த்து வைக்கப்பட்ட... எந்த ஒரு வெண்ணைப் பானை உரியும் தப்பவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு அழகிய குழந்தையாக, ஆயர்பாடியில் வலம் வந்த இந்த கோபாலன் வாயைத் திறந்து கொஞ்சம் வெண்ணை கேட்டால்... ஆயர்பாடியில் யார்தான் மறுத்திருப்பார்...? அவ்வாறு இருக்கும் சூழலில்... கண்ணன் ஏன், வெண்ணையைத் தேடித் திருடி உண்ண வேண்டும்...? தனக்கு ஏன் அவ்வாறான ஒரு அவப் பெயரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்...? தான் மட்டுமல்லாமல். தனது நண்பர் குழாத்துக்கும்... இந்த அவப்பெயரை ஏன் தேடித் தர வேண்டும்...?

அதற்கு... 'வெண்ணை' என்பதன் தன்மையைப் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிறிது நேரத்தில் கெட்டுவிடும் பாலிலிருந்துதான்... எப்போதும் கெட்டுவிடாத 'நெய்யின்' மாற்றம் நிகழ்கிறது. இந்த பாலுக்கும்... நெய்யுக்கும்... இடையிலேயான ஒரு நிலைதான் வெண்ணை என்பதன் தன்மை. இந்த தன்மையைத்தான்... ஒரு ஜீவனது 'ஆன்மீக நிலையின்' மாற்றத்திற்கான படிநிலைகளுக்கு ஒப்பாக நோக்கப் படுகிறது.

இறைவனை அறிந்து கொள்ள முடியாத காலத்தை... பாலுக்கு ஒப்பாகவும்... அவரை அறிந்து... அனுபவித்து... உணர்ந்து... அவருடன் இணைந்து கொள்ளும் காலத்தை... நெய்யுக்கு ஒப்பாகவும் கூறலாம். இதற்கு இடையேயான காலத்தைத்தான் 'பக்தி' என்ற ஒப்பற்ற நிலை ஆள்கிறது. இந்த நிலையைத்தான்... 'வெண்ணைக்கு' ஒப்பாகக் கொள்ள வேண்டும்.

சிறிது நேரத்தில் கெட்டுவிடும் பாலைக் காப்பாற்ற... அந்த பாலைக் காய்ச்சி... ஆற விட்டு அதில் சிறிது உரையைச் சேர்க்க வேண்டியிருக்கிறது. அப்போது அந்த பால்... தயிர் என்ற நிலைக்கு மாறுகிறது. இந்த தயிரும் குறிப்பிட்ட காலத்தில் கெட்டு விடும். இந்த நிலையில் தயிரைக் காப்பாற்ற அதைக் கடைந்து... வெண்ணையாகவும், மோராகவும் மாறுதலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. மோரில் தண்ணீரைக் கலந்து கொஞ்ச காலத்திற்கு அதைக் காப்பாற்றலாம். ஆனால்... வெண்ணையைக் காப்பாற்ற அதை அக்னியை மூலமாகக் கொண்டு உருக்க வேண்டியிருக்கிறது. இப்போது திரண்டிருந்த வெண்ணையிலிருந்து... என்றும் அழியாத நெய் உருவாகிறது.

அதை போலத்தான் மனிதனின் நிலையும். இந்த 'அழியும் மனித உடலில்தான்'... என்றும் 'அழியாத பரமாத்ம சொரூபம்' மறைந்து... உறைந்து இருக்கிறது. இதை வெளிக்கொணரும் ஒரு நிலைதான்... பக்தி என்ற உயர் நிலை. இந்த நிலையை அடைய ஒரு ஜீவன் பெரும் ஆன்மீகப் போராட்டத்தை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.

இந்த உடம்பு என்ற 'பாலைக் காப்பாற்ற'... உன்னதமான மஹான்களின் 'அருளுரைகள் என்ற உரை'... தேவைப்படுகிறது. அதில் பக்குவப்பட்ட இந்த ஜீவனின் மனம்... 'பக்தி' என்ற 'வெண்ணையாகத்' திரள்கிறது. இந்த நிலையிலிருந்து ஜீவன் மேம்பட்டு... அந்த பரமாத்ப சொரூபத்தில் கலந்து விட... இறைவனின் பேரருளின் 'இடைபடுதல்' தேவைப்படுகிறது. அந்த இடைபடுதல்தான்... இறைவனின் கருணை. அது அந்த கனிந்த பக்தியின் மீது படிகிறது. எப்போது ஒரு ஜீவன்... பக்தியின் கனிவுக்கு உயர்கிறதோ... அப்போது அந்த எல்லையில்லா பேரருளும் கருணையும் கொண்ட இறையருள்... 'தானாக உள்வந்து'... அந்த கனிந்த மனதை ஆட்கொள்கிறது.

அவ்வாறு பக்தியால்... கனிந்த மனம் வெண்ணையாகத் திரளும் போது... அதில் வந்து குடிகொள்ள இறைவன் தானாக வருவதைத்தான்... கண்ணன் என்ற மாயன்... அந்த கனிந்த மனதின் பக்தியினை கொள்ளை கொள்ள ஓடி வருவதாக அமைகிறது.  இதுவே... வெண்ணை திருடும் கண்ணனின் லீலை.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...